உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து விலகி முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய சுசில் பிரேமஜயந்த !

ஜனாதிபதியினால் பதவியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சில் இருந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிரான அவரது சமீபத்திய விமர்சனக் கருத்துகளுக்குப் பின்னர் சுசில் பிரேமஜயந்த உடன் அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் இன்று கல்வி அமைச்சிற்கு சென்றிருந்த அவர், ஆவணங்களை எடுத்துக்கொண்டு அமைச்சில் இருந்து உத்தியோகப்பூர்வமாக வெளியேறினார். இதன்போது இராஜாங்க அமைச்சருக்கு வழங்கப்பட்ட வாகனத்தையும் ஒப்படைத்திருந்த காரணத்தினால் அவர் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை நீக்கும் தீர்மானம் நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முடிவு குறித்து கட்சிக்குள் முன்னர் கலந்துரையாடப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானமோ அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், நெருங்கிய நண்பன் என்ற வகையில் இந்தச் செய்தியை அறிந்ததும் வருத்தமடைந்ததாக கூறினார்.

அரசியலமைப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாகவே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அண்மையில் சுசில் பிரேமஜயந்த முன்வைத்த விமர்சனம் காரணமாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் எம்.ஏ. சுமந்திரன் தான் .” – விவாதத்திற்கு நான் தயார் என்கிறார் எச்.எம்.எம் ஹரீஸ் !

மாகாண சபை தேர்தலை ஒத்திப்போட காரணமாக இருந்தவர் எம்.ஏ. சுமந்திரன் எனவும் அவர் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும் உண்மையை சொல்ல தான் தயங்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (3) மாலை சமகால அரசியல் தொடர்பில் நடாத்திய விசேட செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் குறிப்பிட்டதாவது,

தற்போது தமிழ் பேசும் கட்சிகளினால் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடல் அது தொடர்பில் கையாளப்படும் ஆவணங்கள் கூட எமக்கு காண்பிக்கப்படவில்லை.இவ்வாறு தான் 1987 ஆண்டு கூட இலங்கை இந்திய ஒப்பந்தம் முஸ்லீம் தரப்பிற்கு சரியாக காட்டப்படாது அவ்வொப்பந்தம் செய்யப்பட்டது.

13வது சீர்திருத்த சட்ட மூலத்தை தலைவர் அஸ்ரப் உட்பட கிழக்கு மாகாண முஸ்லீம்களும் முழுமைகாக எதிர்த்த ஒரு சட்ட மூலமாகும்தற்போதைய ஒப்பந்த நகலும் வடகிழக்கில் பிறந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட பார்வைக்காக வழங்கப்படவில்லை. இது பெரும் கவலையை ஏற்படுத்தி இருக்கின்றது.

எனவே இது தொடர்பாக வீண் சந்தேகங்கள் எழுந்துள்ளன.பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முடிந்தால் என்னுடன் விவாதத்திற்கு வரட்டும். இது தொடர்பில் நான் மக்களுக்கு உண்மையை சொல்ல தான் தயங்க மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

பரந்தனில் இளைஞர் படுகொலை – ஏ – 09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் !

பரந்தனில் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி ஏ – 09 நெடுஞ்சாலையில் சடலத்துடன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த புத்தாண்டு தினத்தில் நால்வர் கொண்ட குழுவினரால் இளைஞர் ஒருவர் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு பின்னர் குத்திக் கொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தை அவதானித்த அவருடைய மருமகன் அதனை தடுத்து நிறுத்தச் சென்றபோது அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த தாக்குதல் சந்தேக நபர்கள் பொலிஸாருக்கு நெருக்கமானவர்கள் என்பதால் அவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்று உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குற்றம்சாட்டிவருகின்றனர்.

மருத்துவ பரிசோதனையின் பின்னர் குடும்பத்தாரிடம் சடலம் கையளிக்கப்பட்டிருந்தது.

சடலத்தை சுமந்துவந்த உறவினர்கள் தற்போது பரந்தன் சந்தியில் சடலத்தை வைத்து ஏ – 09 நெடுஞ்சாலையை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டுள்ளதால் பரந்தன் சந்திப் பகுதியில் பெரும் குழப்ப நிலை நீடிக்கிறது.

இதனால் ஏ – 09 நெடுஞ்சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதேவேளை மக்களுடன் சமரசத்தில் ஈடுபடுவதற்காக பொலிஸ் அதிகாரிகள் அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடி வருகின்ற போதிலும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வரும் வரையில் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்று அவர்கள் தெரிவித்துவருகின்றனர்

“நட்புறவு இனிமேல் நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது.” – சீன ஜனாதிபதிக்கு விஜேதாச ராஜபக்ஷ கடிதம் !

“சீனாவுடனான நட்புறவு இனிமேல் நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது.” என நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

45 விடயங்களை சுட்டிக்காட்டி சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்திலேயே விஜேதாச ராஜபக்ஷ இதனை குறிப்பிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதன் படி ,

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான நட்புறவு இனி நேர்மையானதும் உண்மையானதுமாக இருக்காது எனவும் உலக வல்லரசாக மாறுவதற்கான சீனாவின் பயணத்தில் இலங்கையும் போர்க்களங்களில் ஒன்றாக மாறியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையமே 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் அதிக வட்டி விகிதத்தில் இருந்து சீனாவுக்கு பலனளித்த ஒரேயொரு திட்டம். ஏனைய திட்டங்கள் அனைத்தும் வெறும் வீண்செலவுகள் எனவும், சீனா இலங்கையை பாரிய கடன் வலையில் சிக்க வைத்துள்ளதாகவும் விஜேதாச ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் ஜனநாயக முறைமையின் கீழ் நீக்கப்படும் என்றும் இதன்போது கடந்த 15 வருட காலத்தில் சர்வதேச நாடுகள் மற்றும் நிறுவனங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை மீண்டும் ஆராயப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் நடைபெறும் தேர்தல்கள் மக்களின் கருத்துக்கணிப்புடனேயே நடைபெறும் என்றும் இதன் போது ஊழல் மோசடிகள் காணப்படும் அனைத்து உடன்படிக்கைகளும் இரத்துச் செய்யப்படும் என்றும் அவர் சீன ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளார்.

பிள்ளைகளை நிர்வாணமாக்கி முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி துன்புறுத்திய தந்தை !

ஹட்டன்- குடாகம பிரதேசத்தில் சிறுவர்கள் இருவரை துன்புறுத்திய அச்சிறுவர்களின் தந்தை ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 6 வயதுடைய சிறுவனும் அச்சிறுவனின் 7 வயது சகோதரியுமே, இவ்வாறு அவர்களது தந்தையால் துன்புறுத்தப்பட்டுள்ளதுடன், இதன்போது அவர்களது தாயும் அருகிலிருந்துள்ளார்.

அச்சிறுவர்களை நிர்வாணமாக்கி, அவர்களது முகத்திலும் உடலிலும் மிளகாய்த்தூளைப் பூசி, அவர்களது வீட்டுக்கு முன்பாகவுள்ள மரத்தில் கட்டி வைத்தமை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமையவே, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவர்கள் இருவரும் விறகுக் கட்டு ஒன்றை திருடியதாகவும் அதற்கே இவ்வாறு தண்டனை வழங்கிழயதாகவும் அச்சிறுவர்களின் தந்தை பொலிஸில் தெரிவித்துள்ளார். இவ்வாறு துன்புறுத்தல்களுக்கு உள்ளான சிறுவர்கள் இருவரும் சிகிச்சைக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

பரீட்சை மீள் மதிப்பீட்டில் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறிய உயர்தர பெறுபேறு – மொத்தமாக 3000க்கும் அதிகமான மாணவர்களின் பெறுபேறுகளில் மாற்றம் !

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் அண்மையில் வௌியாகியிருந்தன. இப்பெறுபேறின் அடிப்படையில் கண்டி மாணவன் ஒருவனின் பெறுபேறு C யில் இருந்து A யாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு கணித பாடத்தில் தோற்றிய கண்டி தர்மராஜா கல்லூரியின் மாணவன் ருச்சிர நிசங்க அபேவர்தன அந்த பாடத்தில் C சித்தி பெற்றிருந்தார். அத்துடன் வேதியியல் மற்றும் இயற்பியலில் பாடங்களில் அவர் A தேர்ச்சி பெற்றிருந்தார்.

அதனடிப்படையில், குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.0084 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 68 ஆகவும், நாட்டு மதிப்பீடு 966 ஆகவும் இருந்தது.

இந்நிலையில் மீள் மதிப்பீட்டின் ஊடாக அவரது கணிதப்பாட பெறுபேறு C யில் இருந்து A ஆக மாறியதை அடுத்து குறித்த மாணவனின் Z மதிப்பெண் 2.5538 ஆகவும், மாவட்ட மதிப்பீடு 12 ஆகவும், நாட்டு மதிப்பீடு 124 ஆகவும் மாறியுள்ளது.

மீள் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்ட 48,000 இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களில் 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையை பொறுத்தவரை மாணவர்களின் எதிர்கால கனவுகளுக்கான – தொழில் உலகுக்கான கதவுகளை திறக்கும் திறவுகோலாக உயர்தர பரீட்சையே காணப்படுகின்றது. எனினும் இவ்வாறான பெறுபேறுகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள குழறுபடிகள் ஏற்பட்டு 2S ,  W என எதிர்காலத்தை இழந்த எத்தனை மாணவர்கள் இருந்திருப்பார்கள் என இந்த மாற்றம் சிந்திக்க வைக்கிறது. இந்த மாணவன் மீள் திருத்துவதற்கு விண்ணப்பித்ததால் கிடைத்துள்ளது. ஆனால் விண்ணப்பிக்காமல் இது தான் எனது நிலை என எண்ணி எதிர்காலத்தை தொலைத்த மாணவர்களின் நிலையை பற்றியும் இந்தப்புள்ளியில் இருந்து சிந்திக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. 3,329 பெறுபேறுகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள தகவல் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் மேலும் அச்சத்தை மாணவர்களிடையே தோற்றுவித்துள்ளது.

 

இது போன்றதான பிழைகள் இனிமேல் ஏற்படாது பரீட்சைகள் திணைக்களம் முறையாக செயற்படவேண்டும். குறித்த பிழைகளுடன் தொடர்புடைய ஆசிரியர்களுக்கு எதிராக சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இலங்கையில் கிடைக்கின்ற இலவசக்கல்வியின் தரத்தை கல்வி அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும்.

கொலையாளிகளை கண்டுபிடியுங்கள் – பரந்தன் வர்த்தகர்கள் இன்று முழுகடையடைப்பு !

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி குணரட்னம் கார்த்தீபன் எனும் 24 வயதுடைய இளைஞர் படுகொலை செய்ததோடு மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இச்சம்பவத்துடன் தொடர்பு பட்ட எவருமே இதுவரை கைது செய்யப்படவில்லை, எனவும் கொலையாளிகள் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்பு பட்ட துடன் பொலிஸாருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்களாகவுள்ளனர் என்றும் உறவுகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதி வேண்டியும் கொலையுடன் தொடர்புபட்டோரைக் கைது செய்யுமாறும் கோரிக்கை விடும் வகையில் பரந்தன் வர்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி கதவடைப்பை முன்னெடுத்திருந்தனர்.

இந்தியாவிடமிருந்து 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவி இலங்கைக்கு !

இந்தியாவிடமிருந்து 900 மில்லியன் டொலர் பெறுமதியான நிதி உதவி இம்மாதம் இலங்கைக்கு கிடைக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கையுடனான நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் 400 மில்லியன் டொலரும் எரிபொருளுக்காக 500 மில்லியன் கடனுதவியும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறித்த இரு நிதியுதவி திட்டங்களில் ஒன்று ஜனவரி 10 ஆம் திகதி கிடைக்கப்பெறும் என உயர்மட்ட தகவல்களை மேற்கோளிட்டு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் உதய கம்மன்பில கடந்த வாரம் இலங்கையும் இந்தியாவும் இணைந்து எண்ணெய் தாங்கிகளை அபிவிருத்தி செய்வதாக அறிவித்திருந்த அதேவேளை லங்கா இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் தாங்கிகளின் குத்தகை மேலும் 50 வருடங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

400 மில்லியன் டொலர் நாணய பரிமாற்ற ஒப்பந்தத்தை தவிர, எரிபொருளுக்காக 500 மில்லியன் டொலர் கடன் வரியையும், உணவு மற்றும் மருத்துவக் கொள்வனவுகளுக்காக 1 பில்லியன் டொலர் கடனையும் இலங்கை நாடியது.

இந்த நிலையில், நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஜனவரி 10 ஆம் திகதி இந்தியாவிற்கு தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி விலகுகிறாரா பிரதமர் மகிந்தராஜபக்ஷ..,? – பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகும் தகவலை பிரதமர் அலுவலகம் இன்று நிராகரித்துள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் என்றும், புதிய பிரதமராக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நியமிக்கப்படுவார் என்றும் அண்மையில் பல செய்திகள் வெளியாகின.

எவ்வாறாயினும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் பரப்படுவதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோகாதீர்கள்.” – பட்டத்திருவிழா தொடர்பில் கஜேந்திரர்கள் விசனம் !

யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் ‘வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022’ ஆக நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது ‘வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022’ இனை கோலாகலமாக நடத்துவதற்கு இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் முழு ஆதரவை வழங்குவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியானது தொடக்கம்  பல்வேறுபட்ட விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வண்ணம் உள்ளன.

முக்கியமாக,  இனப்படுகொலை அரசின் பிரதிநிதிகளை பட்டத்திருவிழாவுக்கு விருந்தினர்களாக அழைக்கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதன்படி ,

வல்வெட்டித்துறை மண்ணில் இதுவரை காலமும் தமிழர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் வகையில், பட்டத்திருவிழா மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வந்திருந்தது. வழமைக்கு மாறாக, இந்த ஆண்டு தமிழின விரோத சக்திகளின் வழிநடத்தலில், தமிழினத்தின் வாழ்வுரிமையைச் சிதைத்த, இனவழிப்பு அரசின் பிரதிநிதிகளை விருந்தினர்களாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரச முகவர்களின் சதிமுயற்சிக்குள், ஏற்பாட்டுக் குழுவினரை சிக்க வைத்துள்ள இந்த செயற்பாடானது தமிழின பண்பாட்டு அழிப்பின் தொடர் முயற்சி என்றும் அவர்கள் சாடியுள்ளனர்.

தமிழர் வரலாற்றில் பின்னிப்பிணைந்த பாரம்பரிய நிகழ்வான பட்டத்திருவிழாவில், இவ்வாறான கறைபடிந்த வரலாற்றுத் தவறை மேற்கொள்ளத் துணைபோக வேண்டாம் என ஏற்பட்டு குழுவிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.