உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தீவிரமடையும் யாழ் குடிநீர் பிரச்சினை – பாலியாற்றில் வடலி வளர்த்து பதநீர் குடிப்போம் என்கிறார் சீ.வி.கே

தீவிரமடையும் யாழ் குடிநீர் பிரச்சினை – பாலியாற்றில் வடலி வளர்த்து பதநீர் குடிப்போம் என்கிறார் சீ.வி.கே

யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின், தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தை வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார். அதன் பின்னர் கடல்நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார். இதன்போது திட்டப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்களால் உரிய விளக்கங்களும் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்னமும் குறுகிய காலப்பகுதியில் மிகப் பாரிய அளவிலான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படவுள்ளதாகவும் நிலத்தடி நீர் அப்பகுதி மக்களின் சனத்தொகைக்கு ஏற்ப பயன்பாட்டுக்கு போதுமானதாக இல்லை எனவும் பொறியியலாளர் சிவகுமார் அண்மையில் தேசம் நெட்டுக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

மேலும் தாளையடியில் அமைந்துள்ள கடல்நீரை நன்னீராகச் சுத்திகரிப்புச் செய்யும் நிலையத்தின் மூலம் தண்ணீர் பெறுவது என்பது இஸ்ரேல், அராபியா போன்ற நாடுகளுக்கே பாரிய பணச்செலவை ஏற்படுத்தும் திட்டமாக உள்ளதால் குறித்த நாடுகளே மாற்று வழியை தேடுகின்றன. அத் திட்டம் யாழ்பாணத்தில் வெற்றியளிக்க வாய்ப்பில்லை எனவும் அதற்கு பதிலாக இரணைமடு குளத்தின் தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே அதிகமாக பூர்த்தியான நிலையில், அரசியல் வறுமையின் வெளிப்பாடாகவே இரணைமடு நீர் யாழுக்கு வர சிரமப்படுகிறது என பொறியியலாளர் சிவகுமார் மேலும் தெரிவித்திருந்தார்.

இதேவேளை அண்மையில் பாலியாறு நீர்வழங்கல் திட்டம் குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கடிதம் மூலம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், கடந்த ஏழு தசாப்தங்களாக யாழ்ப்பாண மாநகர பிரதேச, தீவக மற்றும் தென்மராட்சி மக்கள் குறிப்பாக நியாயமான சுகாதாரமான நீர் விநியோகத்திற்கு ஏங்கியிருக்கிறார்கள். வட மாகாணசபை, யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கான நீர்விநியோகத்துக்கென வருடம் பூராகவும் கடலைச் சென்றடையும் நீரை திசைதிருப்பும் திட்டமாக பாலியாறு நீர்விநியோகத் திட்டத்தை முன்மொழிந்திருந்தது. எனவே இந்தத் திட்டத்தின் நிறைவேற்றலுக்கான போதிய நிதியை தற்போது பரிசீலிக்கப்படும் வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்து அதன் துரித நிறைவேற்றத்திற்கான பணிப்புரையை வழங்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் யாழ்ப்பாண மக்களின் குடி நீர் பிரச்சினை தொடர்பில் தொடர்ச்சியாத கள்ள மௌனம் காத்து வருவதாகவும் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

குட்டி நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுகளும் மரணங்களும் – இராணுவத்திலிருந்து தப்பியோடிய இருவர் கைது !

குட்டி நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கி சூட்டுகளும் மரணங்களும் – இராணுவத்திலிருந்து தப்பியோடிய இருவர் கைது !

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இருவர் கண்டி பிரதேசத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் குருந்துவத்த மற்றும் புபுரஸ்ஸ ஆகிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 33 மற்றும் 35 வயதுடையவர்கள் ஆவர். சந்தேக நபர்கள் இருவரும் இலங்கை இராணுவத்தின் பொலிஸ் படையினரிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை அண்மையில் அதிகரித்துள்ள துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் பின்னணியில் இராணுவத்திலிருந்து தபபியோடியவர்களும் கனிசமாக ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடிய வேர்களை கைதுசெய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகள்: பெயர்பட்டியலைத் தாருங்கள் ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் நீதி அமைச்சர் !

அரசியல் கைதிகள்: பெயர்பட்டியலைத் தாருங்கள் ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் நீதி அமைச்சர் !

அரசியல் கைதிகளின் பெயர் பட்டியலைத் தாருங்கள் அவர்களை விடுவிப்பது பற்றி ஒரு வாரத்தில் பதில் தருகிறேன் என நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை எப்போது விடுதலை செய்வீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் பேசிய சிவஞானம் சிறீதரன், “தமிழ் இளைஞர்கள் பலர் இலங்கையின் சிறைச்சாலைகளில் நீண்டகாலமாக அரசியற் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் குடும்பங்களின் கண்ணீருடனம் கவலையுடனும் அவர்களின் வரவுக்காக காத்திருக்கின்றார்கள். தாயை இழந்த நிலையில் தந்தை பல ஆண்டுகளாக சிறையில் இருக்க தாய், தந்தையின் அரவணைப்பு இல்லாமலே பல பிள்ளைகள் தமது பெற்றோரின் விடுதலைக்காக தவமிருக்கின்றார்கள்.

இந்த நாட்டின் இன ஒற்றுமை, மாற்றம் வேண்டிய புதிய சிந்தனை, சுத்தமான இலங்கை உள்ளிட்ட மகுட வாசகங்கள் சிறைக் கைதிகளும் மனிதர்களே என்ற மகுட வாசக்ததை மனதில் வைத்தாவது பல ஆண்டுகளாக சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியற் கைதிளை விடுவிக்குமாறு அவர் தம் உறவுகள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர்” என குறிப்பிட்டு, இது தொடர்பில் 4 கேள்விகளை எழுப்பிய பா.உ சிறிதரன், நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலரின் பெயர்களையும் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர், ஒரு வார காலத்திற்குள் இதற்குப் பூரணமான பதிலை உங்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் என உறுதியளித்தார். மேற் குறிப்பிட்ட பெயர்களை இன்றைய தினம் எனக்கு வழங்கினால் நான் விசேட கவனம் செலுத்துவதுடன் இதற்குரிய பதிலையும் வழங்குவேன் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

அண்மையில் பா உ சிறிதரனின் வலதுகரமான கரைச்சி பிரதேச சபைத் தவிசாளர் வேழமாளிதன் புலம்பெயர்ந்த கணவனது அரசியல் தஞ்ச வழக்கிற்கு கடிதம் கேட்கச் சென்ற போது அவரை படுக்கையறைக்கு அழைத்த விடயம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. பாதிக்கப்பட்ட பெண்ணை பா உ சிறிதரனின் அலுவலகத்தில் வைத்தே வேழமாளிதன் சீண்டியும் உள்ளார். இவ்விடயங்கள் தொடர்பில் பா உ சிறிதரனது பெயரையும் பாதிக்கப்பட்ட பெண் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான சம்பவங்களால் பா உ சிறிதரன் பாராளுமன்றத்தில் காட்டும் தமிழ் தேசிய முகக்காடு காற்றில் பறக்கின்றது.

 

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்! புதிய சட்டம் உருவாக்கப்படும் ! – நீதி அமைச்சர்

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும்! புதிய சட்டம் உருவாக்கப்படும் ! – நீதி அமைச்சர்

 

பயங்கரவாத தடைச் சட்டம் இல்லாதொழிக்கப்பட்டு உலக பயங்கரவாதம் மற்றும் உலகளாவிய நவீன சவால்களை எதிர்கொள்ளும் வகையில், சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை கோட்பாடுகளுக்கு அமைவாக புதிய சட்டம் உருவாக்கப்படும் எனவும் எதிர்வரும் தேர்தல் வரை அது இழுத்தடிக்கப்பட மாட்டாது என்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார சபையில் தெரிவித்தார்.

தற்போது பாதாள உலகத்தவர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குமாறு தமிழ் தேசியக் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பி வருகின்றனர். அண்மையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 17 பேரில் 15 பேர் பாதாள உலகத்தோடு தொடர்பானவர்கள் இருவர் மட்டுமே தமிழர்கள்.

 

2.3: இந்நிலையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குங்கள் எங்களுடைய சகோதரங்களிடம் சொல்லி நான் உங்களுக்கு பிச்சை போடுகிறேன் எனப் பாராளுமன்றத்தில் குவினார் அர்ச்சுனா. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்காதபடியால் வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தாகத் தெரிவித்தார் பொன்னம்பலம் கஜேந்திர குமார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனும் இக்கோரிக்கையை வைத்தார். உள்ளுராட்சி தேர்தலை மையப்படுத்தி பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முன்னுக்குத் தள்ளுகின்றனர் தமிழ் தேசியவாதிகள்.

 

2.4: இது தொடர்பில் நீதி அமைச்சர் மேலும் நாடாளுமன்றத்தில் தெரிவித்த போது, அரசாங்கமானது தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படவில்லை. பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என அன்றும் குறிப்பிட்டோம்.இன்றும் அதனையே குறிப்பிடுகின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் ஆகியவற்றை மீளாய்வு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதியரசர் ஹர்ஷ குலரத்ன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய அது தொடர்பான உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். எவ்வாறெனினும் இந்த நடவடிக்கைகள் அடுத்த தேர்தல் வரை இழுத்தடிப்புச் செய்யப்பட மாட்டாது என்றார்.

இதேவேளை நேற்றைய தினம் பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இனிமேல் அனுமதிக்கப்படாது. அதேவேளை, புதிய சட்டக் கட்டமைப்பின் மூலம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) ரத்து செய்ய அரசாங்கம் தயாராக இருக்கிறது. அதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

படைகளின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைக்கப்படும் ! ஜனாதிபதி அனுரா; வடக்கு கிழக்கில் காணிகள், பாதைகள் விடுவிக்கப்படும் !

படைகளின் எண்ணிக்கை 30 வீதமாகக் குறைக்கப்படும் ! ஜனாதிபதி அனுரா; வடக்கு கிழக்கில் காணிகள், பாதைகள் விடுவிக்கப்படும் !

 

இலங்கை பாதுகாப்புப் படைகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்படும், வடக்கு கிழக்கில் உள்ள காணிகள் விடுவிக்கப்டும், பாதைகள் திறக்கப்படும் என்பதை இவ்வாண்டு முற்பகுதியில் தேசம்நெற் சுட்டிக்காட்டியிருந்தது. இதனை ஜனாதிபதி அனுரா உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதிகள் ஊடாக ஒத்துழைப்பு வழங்கும் இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களின் மூன்றாவது மீளாய்வு அறிக்கையை இன்றைய தினம் குறித்த நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். நேற்று மாலை பாராளுமன்றத்திற்கு வருகை தந்து உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்டார். இதனூடாக சாதகமான பிரதிபலன்கள் கிடைக்குமென தான் நம்புவதாகவும் ஸ்திரமான பொருளாதாரத்துடன் நாடு பயணிப்பதாகவும் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடிகள் ஊடாக அதிகாரத்தை கட்டியெழுப்பு நீங்கள் சிந்திப்பதாயின் அது இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளது. நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்புக்கு பல காரணங்கள் அடிப்படையாக இருந்தன. பொருளாதார நெருக்கடி காரணமாக அரசாங்கத்தை கவிழ்ப்பதென்பது கனவு மாத்திரமே. அது ஒருபோதும் நிறைவேறாது என்றார்.

இதேவேளை, பொருளாதாரம் இப்போது நிலையாக உள்ளது. பயங்கரவாதமும் இனவாதமும் மீண்டும் தலைதூக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் இலங்கை இராணுவத்தின் பணியாளர்கள் 100,000 ஆகவும், இலங்கை கடற்படை 40,000 ஆகவும், இலங்கை விமானப்படை 18,000 ஆகவும் குறைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரச பணியாளர்களை 50 வீதமாகக் குறைக்க வேண்டும் எனச் சிபாரிசு செய்துள்ளது. இந்த அரச பணியாளர்களில் படையினரும் கணிசமான பங்கினர். இலங்கையின் சனத்தொகைக்கு இலங்கையில் உள்ள படையினரின் எண்ணிக்கை மிக அதிகம். அந்த அடிப்படையில் படைகளை 1,00,000 கக் குறைக்க வேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் தேசிய மக்கள் சக்தியாலும் முன்னெடுக்கபடும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.

அதன் அடிப்படையிலேயே வடக்கு கிழக்கில் இராணுவத்தின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்து வருகின்றது. பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் – பொதுத் தேர்தலுக்கு முன் வடக்கு கிழக்கில் படையினரின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைக்கப்படும். மேலும் படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படும் போது அவர்களுக்கு காணிகளும் அவசியமில்லாமல் போகும். இந்தப் பின்னணியில் இப்போதே காணிகள் விடுவிக்கப்பட்டு வருவதையும் பாதைகள் திறக்கப்படுவதையும் காணலாம்.

இது பற்றி தேசம்நெற்க்குத் தெரியவருவதாவது, பிரித்தானிய போன்ற மேற்குநாடுகள் போல் தேசிய மக்கள் சக்தி அரசும் தன்னுடைய இராணுவத்தை வினைத்திறன் மிக்க இராணுவமாக்கும் முயற்சிகளில் இறங்கியுள்ளது. இராணுவத்தின் எண்ணிக்கையைக் குறைத்து வினைத்திறன் மிக்க ‘ஸ்மாட்’ படையணிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது என பாதுகாப்புச் செயலர் ஓய்வுபெற்ற வைஸ் மார்சல் சம்பத் துயகொந்த தெரிவித்துள்ளார். டிசம்பர் 28இல் திருகோணமலையில் உள்ள நவல் அன் மரிரைம் அக்கடமியின் அணிவகுப்பை ஏற்று டிசம்பர் 31இல் ஓய்வுபெற்ற இராணுவ, கடற்படை மற்றும் விமானப்படை கொமான்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 

கோத்தபாயாவின் மந்திரவாதி ஞானக்காவுக்கு 28 மில்லியன் இழப்பீடு

கோத்தபாயாவின் மந்திரவாதி ஞானக்காவுக்கு 28 மில்லியன் இழப்பீடு

 

கோத்தாவின் ஆஸ்தான சோதிடர் ஞானக்காவுக்கு 28 மில்லியன் அள்ளி வீசிய ரணில் . 2022 ஆம் ஆண்டில் மக்கள் போராட்டத்தின் போது வீடுகள் அழிக்கப்பட்ட அரசியல்வாதிகள் அல்லாத தனிநபர்களுக்கான இழப்பீடாக முந்தைய அரசாங்கம் மேலும் 1,125 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் பிரதம கொறடா அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அத்தொகை அரசியல்வாதிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட ரூ.1,221 மில்லியனுக்கு மேலதிகமானதாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஆதரவாளரும் அவர்களின் ஆஸ்தான சோதிடருமான ஞானாக்காவுக்கும் அனுராதபுரத்தில் உள்ள அவரது வழிபாட்டுத்தலம் அழிக்கப்பட்டதற்காக 28 மில்லியன் ரூபா இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தியுள்ளார்.

பொதுஜன பெரமுனவின் ஆதரவாளரும் அவர்களின் ஆஸ்தான சோதிடருமான அநுராதபுரத்திலுள்ள ஞானக்காவின் வீடு, கோவில், ஹோட்டல் என்பன அரகலய போராட்டத்தில் மக்களால் முற்றுகையிடப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டன.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு நாட்டுமக்கள் மீது திடீர் பாசம்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுக்கு நாட்டுமக்கள் மீது திடீர் பாசம்

 

மக்களை பற்றி யோசிக்காத அரசியல் கட்சிகளே நாட்டில் உள்ளன – முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கவலை. தற்போதுள்ள அரசியல் கட்சிகள் பொறுப்பற்றவையாகவும், தேசிய நலன்கள் தொடர்பில் சிந்திக்காதவையாகவும், அடுத்த தேர்தலில் என்ன செய்யலாம்? வெல்வோமா, தோற்போமா என சிந்திப்பவையாகவும் உள்ளன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், பொறுப்பற்ற அரசியல் கட்சிகள் உள்ள இந்த இலங்கையை பொறுத்தமட்டில் முதலாவதாக அரசியல் நெறிமுறைகள் மாற்றமடைய வேண்டும். அரகலயவின் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட மிக வலுவான செய்தியை இன்னமும் பாரம்பரிய அரசியல் கட்சிகள் சரிவர புரிந்துணரவில்லை என்றே தெரிகிறது.

நாம் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முன்னெடுத்த முயற்சிகள் யாவும் பாராளுமன்றத்துக்குள்ளிருந்து தூக்கியெறியப்பட்டன. எனவே வேறெதனையும் செய்வதற்கு முன்பதாக, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பல அரசியலமைப்பு வரைபுகள் நிலுவையில் உள்ளன. அவற்றை ஒன்றிணைத்து, தற்கால சூழ்நிலைக்கு பொருத்தமானதொரு வரைபை தயாரிப்பது இலகுவானதாக இருக்கும். எந்தவொரு அரசியலமைப்பு மறுசீரமைப்பையும் மேற்கொள்வதற்கு முன்னதாக நாட்டின் அரசியல் சூழ்நிலையிலும் தலைவர்களின் அரசியல் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட வேண்டும்.

இப்போது பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்போரில் பெரும்பான்மையானோர் அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகளை நிராகரித்துள்ளனர். இல்லாவிடின் அவர்களது கட்சி அதனை நிராகரித்துள்ளது. அவ்வாறிருக்கையில் தற்போது மாத்திரம் அவர்களால் இதனை எவ்வாறு செய்ய முடியும் என எனக்குத் தெரியவில்லை என்றார். தற்போது அதிகாரத்திலிருக்கும் என்பிபி அரசிற்கு மக்கள் அறுதிப்பெரும்பான்மையை வழங்கியுள்ளதால் சந்திரிக்கா அம்மையார் கவலைப்படத் தேவையில்லை என அரகல்ய போராட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.

ஜனாதிபதி அநுர ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்களே ஓய்வெடுக்கிறார்

ஜனாதிபதி அநுர ஒரு நாளைக்கு 6 மணித்தியாலங்களே ஓய்வெடுக்கிறார்

 

ஜனாதிபதி அனுர திஸாநாயக்க ஒரு நாளைக்கு 18 மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக பணியாற்றுவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால குறிப்பிடுகின்றார்.

ஜனாதிபதி முன்னுதாரணமான தலைமைத்துவத்தை வழங்கியுள்ளதாகவும், அதற்கேற்ப அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் அந்த முன்னுதாரணத்தை கொண்டு வந்துள்ளதாகவும் அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.

“நாமல் ராஜபக்ச தொடங்கி யார் மீதும் நாம் அரசியல் பழிவாங்கல் நோக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை – எடுக்கவும் மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

நாமல் ராஜபக்ச தொடங்கி யார் மீதும் நாம் அரசியல் பழிவாங்கல் நோக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை – எடுக்கவும் மாட்டோம்” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு !

 

நாட்டில் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த நாம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.

 

நாம் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ளவில்லை. எதிர்காலத்திலும் அது இடம்பெறாது.விசாரணை நடவடிக்கைகள் அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை. எனவே தற்போது முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு அமையவே அதன் தொடர்புடைய தரப்பினர் அழைக்கப்படுகிறார்கள். இதில் பெரிதாக அலட்டிக் கொள்ள ஒன்றுமில்லை.இது தொடர்ச்சியாக இடம்பெறும்.அரசியல் நோக்கத்தை கொண்ட அந்த பழைய அரசியல் முறைமை இங்கு இருக்காது.அது நாமல் ராஜபக்ஷவோ அல்லது வேறு ஒருவராக கூட இருக்கலாம். பொலிஸார் தமது கடமைகளை நிறைவேற்றுவர்.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தல்களும் கிடையாது.அதனை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளுக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் இருப்பார்களாயின் அது தொடர்பில் நாம் உரிய சட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்றார்.

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் ! 

தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படும் தமிழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

 

இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பணிபுரியும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் தொடர் வன்முறைகள் மற்றும் கண்காணிப்புக்கு உள்ளாவதுடன் தீவிரவாதிகள் என முத்திரை குத்தப்படுவதாக மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் சுட்டிக்காட்டியுள்ளார். அதேநேரம் சுவிஸ் அரசாங்கம் மனத் உரிமைச் செயற்பாட்டாளர் மரியதாஸ் பொஸ்கோவை ஆள்கடத்தல் முகவர் என முத்திரை குத்துகிறது.

மேலும், பல பெண் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் அரசுக்கு எதிரானவர்கள் என முத்திரை குத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், அவர்கள் அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுக்கும்போது தாக்குதலுக்கு உள்ளாவதாகவும், சமூகத்திலிருந்து ஒதுக்கப்படுவதாகவும் விசனம் வெளியிட்டுள்ளார்.

உலகளாவிய ரீதியில் மனித உரிமைகள் பாதுகாவலர்களுக்கு எதிராகப் பிரயோகிக்கப்பட்டுவரும் ஒடுக்குமுறைகள் மற்றும் மீறல்கள் பற்றிய விபரங்களை உள்ளடக்கிய மனித உரிமைகள் பாதுகாவலர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் விசேட அறிக்கையாளர் மேரி லோலரின் அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 6 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. திறந்த வெளிச் சிறச்சாலையான ஹாசாவில் நாற்பதினாயிரத்துக்கு மேற்பட்ட சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட்ட பாலஸ்தீனமக்கள் இனப்படுகொலை செய்யப்படுகின்ற போது அதனை தடுக்க முடியாத காலாவதியாகிப் போன அமைப்பு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அமைப்பு. ஈழத்தமிழர்கள் இனியும் இந்த அமைப்பை நம்புவதில் கால விரயமே. உபாயங்களை மாற்றிக் கொண்டு உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.