உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஒன்பது கட்சி உள்ளுராட்சிக் கூட்டணி ஏழு கட்சிகளாக குறுகியது !

ஒன்பது கட்சி உள்ளுராட்சிக் கூட்டணி ஏழு கட்சிகளாக குறுகியது !

 

ஒன்பது கட்சிகள் இணந்து உருவாகிய உள்ளுராட்சிக் கூட்டணியில் போட்டியிடுவதில்லை என வடக்கு மாகாணசபையில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு பதவி நீக்கம் செய்யப்பட்ட பொன் ஐங்கரநேசன் தலைமையிலான பசுமைக்கட்சி அறிவித்துள்ளது. அதேபோல் பாலியல் காமுகர் பிரேமானந்தாவை வணங்கி வந்த தமிழ் மக்கள் கூட்டணியும் தனித்துப் போட்டியிடப் போவதாக கட்சியின் பிரதிநிதி சட்டத்தரணி மணிவண்ணன் அறிவித்துள்ளார்.

பசுமைக் கட்சியும், தமிழ் மக்கள் கூட்டணியும் வெளியேறியதற்குப் பின்னால் அவர்களுக்கு நிதி வழங்கும் புலம்பெயர் சக்திகளே பின்நிற்பதாகத் தெரிய வருகின்றது. இக்கட்சிகள் தேர்தலை களத்தில் உள்ள மக்களோடு அடையாளப்படுத்தி போட்டியிடுவதற்கு மாறாக புலத்திலிருந்து நிதி வழங்குபவர்களை மையமாக வைத்து கட்சிகளை சுயேட்சைக்குழுக்களை உருவாக்குவதாக குற்றச்சாட்டுகள் வருகின்றது.

பருத்தித்துறையில் கள்ளமணல் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு !

பருத்தித்துறையில் கள்ளமணல் டிப்பர் மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு !

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக கள்ள மணல் ஏற்றிச் சென்ற டிப்பரை பொலிஸார் சோதனைக்காக மறித்தனர். கட்டளையை மதிக்காது டிப்பர் தொடர்ந்து பயணித்த போதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பருத்தித்துறை பொன்னாலை வீதியில் நேற்று March 02 ஆம் திகதி காலையில் இடம்பெற்றுள்ளது. டிப்பரில் பயணித்த ஒருவர் காயமடைந்து பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்னுமொருவர் தப்பியோடி விட்டார். தப்பியோடியவர் பொலிஸாரால் தேடப்பட்டு வருகிறார். சம்பந்தப்பட்ட டிப்பர் தர்மபுரத்தில் வழமையாக கள்ள மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது.

ஊழல் ஒழிப்பு அணி வன்னி சமீபத்தில் தர்மபுரம் கிளிநொச்சி கனிய வள மோசடியில் ஈடுபடுவதாக சில பொலிஸ் பொறுப்பதிகாரிகள் மீதும் தொழில் அதிபர் பெருமாள் கபில்ராஜ் மீதும் அவரின் குழுவினர் மீதும் புகார் புகார் கூறியிருந்தனர். இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டியது பொலிஸாரின் கடமை. வெறுமனே சமூக ஊடகங்களில் பரப்பப்படும் அவதூறாக கடந்து செல்லக் கூடாது. அதற்கமைய பிடிப்பட்டிருக்கின்ற டிப்பர் மூலம் மணல் மாபியாக்களை வெளிக் கொணரலாம். சில மணல் மாபியாக்கள் தமிழ் அரசியல் வாதிகளின் பின்னால் ஒழிந்துள்ளார்கள் எனவும் குற்றம் சாட்டுகிறார்கள்.

யாழில் ஜஸ் போதையுடன் போதை மாத்திரையும் சேர்ந்தது

யாழில் ஜஸ் போதையுடன் போதை மாத்திரையும் சேர்ந்தது

போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட இருவரை யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் மானிப்பாய் பொலிசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து 1600 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்களை வழிமறித்து சோதனையிட்ட போது அவர்களிடம் போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டது.

இருவரையும் பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழில் பாடசாலை மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் மத்தியில் போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிக்க சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டும். பாடசாலைகள் இவ்விடயத்தில் சிறப்பு செயல்த்திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

யாழில் போதைப் பொருளுக்கு எதிரான புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் ! பா உ சிறிபவானந்தராஜா

யாழில் போதைப் பொருளுக்கு எதிரான புனர்வாழ்வு மையம் அமைக்கப்பட வேண்டும் ! பா உ சிறிபவானந்தராஜா

 

யாழ் மாவட்டத்தில் போதைப் பொருட்களின் பாவனை அதிகரித்துள்ளதை நீதி அமைச்சு முப்படைகளின் துணையோடு கட்டுப்படுத்த வேண்டும். போதைவஸ்தால் பெருமளவு யாழ் மாவட்டம் பாதிக்கப்பட்டுள்ளதால் யாழில் போதைப்பொருளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான புனர்வாழ்வு முகாம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என இன்று நடைபெற்ற குழநிலை விவாதத்தில் யாழ் மாவட்ட பா உ சிறி பவானந்தராஜா நீதி அமைச்சரைக் கேட்டுக்கொண்டார். அவர் பேசிக்கொண்டிருக்கின்ற போதே யாழ் சுதுமலையில் மிகப்பெரும் தொகையான போதைப்பொருள் படையினரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை சுதந்திரமடைந்தது முதல் ஆட்சிக்கு வந்தவர்கள் நீதியின்பால் செயற்படாமல் இனவாதங்களைத் தூண்டி நாட்டில் சமாதானத்தையும் ஒற்றுமையையும் அழித்துள்ளனர். எங்களுடைய ஆட்சியில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்றும் இனிமேல் இனங்களிடேயேயான ஒற்றுமையைச் சீர்குலைக்க விடமாட்டோம் என சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

அவர் தனது உரையில் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட வேண்டும், நீதிமன்றங்களில் மொழிபெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும், மனிதப்புதைகுழிகள் பற்றிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும், காணாமலாக்கப்பட்டவர்களுடைய பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் போன்ற விடயங்களையும் தனது உரையில் வலியுறுத்தினார்

அவர் மேலும் தெரிவிக்கையில் வன்முறைக்குளுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளது அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் யாழ் சிறைச்சாலையில் 200 வரையானோர் பணிக்கு தேவையான போதும் 120 வரையானோரே உள்ளனர் என்றும் இந்த வெற்றிடங்களை நிரப்புமாறும் பா சிறிபவானந்தராஜா கேட்டுக்கொண்டார். மேலும் மல்லாகம் நீதிமன்றத்துக்கு இன்னுமொரு நீதிபதியின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

யாழ் நுனிப் புல் மேயும் சட்டத்தரணிகள் வைஷ்ணவிக்கு உமாகரனுக்கு தளபதி கேர்ணல் கிட்டு அன்றே வழங்கிய பதில்

யாழ் நுனிப் புல் மேயும் சட்டத்தரணிகள் வைஷ்ணவிக்கு உமாகரனுக்கு தளபதி கேர்ணல் கிட்டு அன்றே வழங்கிய பதில் !

 

மார்ச் முதலாம் திகதி லண்டன் மெய்வழி ஊடகத்தின் சாம் பிரதீபனுக்கு வழங்கிய நேர்காணலில் பாலியல் குற்றவாளியான பெண்களை அவமதிக்கும் நாம் தமிழர் கட்சி சீமானின் வழிநின்று பெரியாரை அரசியல் நீக்கம் செய்ய வேண்டும் என்று கோருகின்றார். ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தின் அறவழி  கூடத் தெரியாதவர் போல் நேர்காணலில் பதிலளிக்கும் சட்டத்தரணி வைஷ்ணவி பெயரளவில் தமிழ் தேசியம் பற்றி கதைத்த போதும் சாதிய ஒடுக்குமுறைக்கு பெண் அடிமைத்தனத்தை மேற்கொள்பவர்களோடு தன்னை இனம்காட்டி வருகின்றார்.

சட்டத்தரணி வைஷ்ணவிக்கு ஒருபடி மேலே சென்று சீமானுக்கு கற்றுக்கொடுத்ததே தான்தான் என்று கருக்கலைப்பைப் பற்றியல்ல, புளகாங்கிதம் அடைபவர் சட்டத்தரணி உமாகரன்

பெரியாரைப் பற்றி 2009க்கு முன்பு ஈழத்தமிழர்கள் பேசியிருக்கிறார்களா என்று படுமுட்டாள்தனமாகக் கேள்விகட்கும் அளவுக்குதான் யாழ் பல்கலைக்கழகத்தில் கற்ற சட்டத்தரணி வைஷ்ணவியின் அறிவு இருக்கின்றது. இந்தப் பட்டம்பெறாத சாதராணர்கள் பலருக்கே மிகத் தெரிந்த விடயங்கள் கூட சட்டத்தரணி வைஷ்ணவிக்கு விளங்கவில்லை. 1989 இல் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதியான கிட்டு ஆரம்பக் கல்வியைத் தாண்டாதவர், ஆனால் சட்டத்தரணி வைஷ்ணவி சட்டத்தரணி உமாகரன் போல் கவர்ச்சிக்காக தமிழ் தேசியத்தை போர்த்திக்கொள்ளாதவர், பெரியாரைப் பற்றி மிகத் தெளிவாகக் குறிப்பிடுவதைக் கேட்கலாம்:

அண்மையில் யாழ் பல்கலைக்கழகத்தில் பாலியல் லஞ்சம் கோரியதாகக் குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் ரகுராமிற்கு ஆதரவாகவும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துக்கு எதிராகவும் ஐபிசி யில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தன்னுடைய சொந்த நலன்களுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர்களை போதைப்பொருள் பாவனையாளர்கள் என கலைப்பீடாதிபதி ரகுராம் சித்தரித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரன் பாணியில் ஒரு ஒலிப்பதிவையும் வெளியிட்டு இருந்தார். இவ்வாறு ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் இல்லாமல் ஒடுக்குபவர்களின் பக்கம் நிற்கும் இந்த வலதுசாரித் தமிழ் தேசியவாதிகள் தமிழ் தேசியத்தின் புற்றுநோயாகப் பரவி வருகின்றனர்.

ஒரு பெண்ணை ஏழு தடவை கருக்கலைப்புச் செய்ய வைத்து ஏமாற்றிய நாம் தமிழர் சிமானின் கருத்துக்களை தலையில் தூக்கிகொண்டாடுகின்றார் சட்டத்தரணி வைஷ்ணவி. மாறாக யாழ் தாவடியில் சீமானுக்கும் அம்பேக்காருக்கும் சிலை எழுப்பப் போவதாகச் சபதம் போட்டுள்ளார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த்.

வைஷ்ணவி தமிழர்கள் பற்றியும், தமிழர்களின் விடுதலை போராட்டம் பற்றியும் 2010இற்குப் பின் சீமானிடம் மேய்ந்துவிட்டு பன்றியோடு சேர்ந்த கன்றும் பவ்வி உண்ணும் என்பது போல் கருத்துக்களை கக்கி வருகின்றார். மிக மோசமான இனவாதத்தை கக்குகின்றார். பெரியாரை தெலுங்கர் என்கின்றார். பெரியார் தமிழர்களைக் காடையர் என்று கூறிவிட்டார் என்று கதறுகின்றார்.

பிரானிஸில் சுஜூகூல் என்பவரை சிலர் தாக்கியதும் அதனை புலம்பெயர் ஈழத்தமிழ் காடையர்கள் தாக்கினார்கள் என்று எழுதுகின்றோம். குனடா தெருத்திருவிழாவை சிலர் குழப்பிய போது கனடிய ஈழத்தமிழ் காடையர்கள் தெருத் திருவிழாவை குழப்பியதாக எழுதுகின்றோம். 1983ல் நடந்த இனக்கலவரத்தை சிங்கள காடையர்கள் தமிழர்களைத் தாக்கினர் என்று எழுதுகின்றோம்.

அதே போல் பெரியார் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள காடைத்தனங்களைக் கண்டு பொங்கியெழுந்தை, பாலியல் லஞ்சம் கேட்கும் கலாநிதிகளுக்கு வக்காளத்து வாங்கும் வைஷ்ணவி கொதிப்பது ஆச்சரியமல்ல.

சட்டத்தரணி வைஷ்ணவியினதும் அவர் போன்ற குறையறிவுடைய சீமானின் கருத்துக்களால் சீக்குப் பிடித்தவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதி கேர்ணல் கிட்டு மிகத் தெளிவான பதிலை அளித்துள்ளார். கேர்ணல் கிட்டு தமிழீழ விடுதலை இயக்கம் உட்பட ஏனைய இயக்கங்களை அழித்ததில் முன்நின்றவர். ஆனால் பிரித்தானியாவிற்கு வந்த பின் அரசியல் ரீதியாக தன்னை வளர்த்துக் கொண்டதுடன் ஏனைய அமைப்புக்களையும் சந்தித்து உரையாடி நல்லுறவை ஏற்படுத்த முற்பட்டவர். இந்த மாற்றங்களை அவர் தமிழ் நெற்றுக்கு வழங்கிய நேர்காணலிலும் காணலாம்.

உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் – நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் !

உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் – நாடாளுமன்றத்தில் நீதியமைச்சர் !
 உயர்நீதிமன்றம் முதல் நீதிவான் நீதிமன்றம் வரை சுமார் 11 இலட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன எனவும் நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதற்கு தேவையான வசதிகள் நீதிமன்றத்துக்கு வழங்கப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார நேற்றையதினம் பாராளுமன்ற அமர்வின் போது தெரிவித்தார்.
அங்கு நீதியமைச்சர் ஹர்ஷண மேலும் உரையாற்றிய போது,
சட்டத்தின் ஆட்சிக்கு அமைய நாட்டை நிர்வகிப்பது எமது பிரதான இலக்காகும். சட்டத்தின் ஆட்சி மலினப்படுத்தப்படுகின்ற நிலையில் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியாது. ஆகவே நீதித்துறையின் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான கொள்கையாகும்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட நீதிமன்ற கட்டட அபிவிருத்திக்கு போதுமான நிதி ஒதுக்கப்படும். நீதிதுறை சுயாதீனமான முறையில் செயற்படும் என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியும் என்றார்.

ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார் – முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன

ரணில் விக்கிரமசிங்கவே நாட்டை மீட்டெடுத்தார் – முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன
“முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான எமது அரசாங்கம் கடுமையான சூழ்நிலையில் பல புதிய சட்டங்களை இயற்றியதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது என்று முன்னாள் நீதி இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடுமையான சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவால் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டதால் தான் நாடு இன்று பொருளாதார ரீதியில் ஸ்திரமடைந்துள்ளது என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். 90 சட்ட வரைபுகள் குறித்த குழுக்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள. ஆகவே அவற்றை சட்டமாக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம்.
நீதிமன்ற கட்டமைப்பு முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பபட வேண்டும். இதற்கு குறைந்தது 3.2 பில்லியன் ரூபா செலவாகும் என்ற மதிப்பிடப்பட்டது. தற்போதைய பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அது சாத்தியமற்றது என்பதை அறிவோம்.இருப்பினும் நீதிமன்ற கட்டமைப்பை டிஜிட்டல் மயப்படுத்தும் செயற்பாட்டை கட்டம் கட்டமாக முன்னெடுக்க வேண்டும். என தெரிவித்தார்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டோர் வட்டுவாகல் விகாரையில் கீழ் புதைக்கப்பட்டுள்ளனர் – நாடாளுமன்றத்தில் பா.உ ரவிகரன் !

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டோர் வட்டுவாகல் விகாரையில் கீழ் புதைக்கப்பட்டுள்ளனர் – நாடாளுமன்றத்தில் பா.உ ரவிகரன் !
கடந்த 2009ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் படுகொலைசெய்யப்பட்டு, தற்போது முல்லைத்தீவு – வட்டுவாகல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையின்கீழ் பகுதியில் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பலரும் தம்மிடம் முறையிட்டுள்ளதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பாராளுமன்றில் இடம்பெற்ற 2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்ட நீதிமற்றும் தேசிய ஒற்றுமைப்பாடு அமைச்சிற்கான குழுநிலை விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த பா.உ ரவிகரன்,
மடியில் கனமில்லையெனில் விகாரையை அகற்றி அகழ்வினை மேற்கொண்டோ, நவீனமுறையில் ஸ்கேன் கருவிகள் மூலமோ ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய அரசாங்கம் முன்வரவேண்டுமென தெரிவித்துள்ளார்.

தணியாத அனுர அலை – அச்சத்தில் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைக்கின்றனர் வீணை – வீடு – சங்கு குழுவினர் !

தணியாத அனுர அலை – அச்சத்தில் கொள்கை பேதமின்றி கூட்டணி அமைக்கின்றனர் வீணை – வீடு – சங்கு குழுவினர் !
சங்கு சின்னத்தின் பரந்துபட்ட கூட்டணியை அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தொடக்கம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வரை இந்தக் கூட்டணியில் இணைய முடியும் என்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தார். அது போல தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சீ.வி.கே சிவஞானமும் ஈ.பி.டி.யுடன் இணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இதற்கு சாதகமான ஓர் பதிலை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் கட்சிகள் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒன்றிணைந்து எதிர்கொள்வது தொடர்பில் பேசுவதற்கு உத்தியோகபூர்வமாக எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை, மக்கள் நலனுக்காக ஒன்றிணைய அழைப்பு விடுத்தால் எனது பங்களிப்பு நிச்சயமாயிருக்கும் என தெரிவித்தார்.
இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன் கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதும் தமிழர் அரசியல் தரப்பில் பேசுபொருளாக மாறியுள்ளது.
 இதேவேளை வடக்கு – கிழக்கில் இன்னமும் என்.பி.பி கட்சி மீதான மக்கள் அலை தணிந்தபாடில்லை என்கின்றனர் அரசியல் அவதானிகள். கடந்த காலங்களில் மத்தியில் ஆட்சி அமைத்த ரணில் மைத்திரி கூட்டணி, ராஜபக்ச தரப்பு ஆகியோருடன் கூட்டணி அமைத்தும் தமிழ்தேசிய தரப்பினரும், ஈ.பி.டி.பியினரும் தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமைகள் தொடங்கி, அபிவிருத்தி திட்டங்கள் என எந்த ஆக்கப்பூர்வமான விடயங்களையும் மேற்கொண்டிருக்கவில்லை. ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சுமத்தும் அரசியலையே முன்னெடுத்திருந்தனர். இவ்வாறான நிலையிலேயே கடந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களின் முழுமையான ஆதரவும் தேசிய மக்கள் சக்தி மீது திரும்பியிருந்தது. எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான என்.பி.பிக்கு தமிழ் மக்களின் ஆதரவு அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் என்.பி.பி அலையை சமாளிக்க கொள்கை பேதமில்லாமல் வடக்கின் அரசியல் கட்சிகள் செயற்படுவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

காணாமல் போனோர் அறிக்கையும் காணாமல் போய்விட்டது – நளிந்த ஜயதிஸ்ஸ

காணாமல் போனோர் அறிக்கையும் காணாமல் போய்விட்டது – நளிந்த ஜயதிஸ்ஸ

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு அதற்காக 14 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை காணாமலாக்கப்பட்டுள்ளது என ஆளும் தரப்பின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, மேலும் தெரிவித்துள்ளதாவது, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஏதேனும் பிரச்சினைகள் தோற்றம் பெற்றால் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் ஒன்றிணைந்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைப்பார்கள். ஆணைக்குழு அமைக்கப்பட்டது ஒரு செய்தியாக குறிப்பிடப்படும். ஆனால் குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் ஏதும் வெளிவராது.

2016 ஆம் ஆண்டு முதல் பிரதானமாக 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. அரச நிதி மோசடி தொடர்பில் ஆராய்வதற்காக 66 மில்லியன் ரூபா செலவில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டது. இறுதியில் இந்த குழுவின் அறிக்கையும் கிடைக்கப்பெறவில்லை.

காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதற்கும் 15மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆனால் அறிக்கை கிடைக்கவில்லை.அதுவும் காணாமலாக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட 14 ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களுக்காக மொத்தமாக 530 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுக்கள் முறையாக அறிக்கை சமர்ப்பிக்கவில்லை . ஆனால் 2022 மே 09 சம்பவம் தொடர்பில் மாத்திரம் துரிதமாக விசாரணை செய்து, அறிக்கை சமர்ப்பித்து நட்டஈடும் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.