உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பகிடிவதை – 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு வகுப்புத் தடை !

யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பகிடிவதை மற்றும் துன்புறுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்ட 19 சிரேஷ்ட மாணவர்களுக்கு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி ஆண்டுக்கான கற்றல் செயற்பாடுகளுக்காக மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு, பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில், புதுமுக மாணவர்களைப் பகிடி வதைக்குட்படுத்திய சிரேஷ்ட மாணவர்கள் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் இடம்பெற்ற விசாரணைகளின் போது குற்றம் நிரூபிக்கப்பட்ட கலைப்பீடத்தைச் சேர்ந்த 14 பேருக்கு ஆறு மாத கால வகுப்புத் தடையும், தொழில் நுட்ப பீடத்தைச் சேர்ந்த 4 பேருக்கு இரண்டு வருட கால வகுப்புத் தடையும், விஞ்ஞான பீடத்தைத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இரண்டு வருட கால வகுப்புத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பகிடிவதைக் கெதிரான தண்டணைச் சாசனத்தின் படி, குற்றங்களின் தனமைக்கேற்ப விசாரணைக் குழுக்களினால் பரிந்துரைக்கப்பட்ட தண்டனைக் காலத்தை மாணவர் ஒழுக்காற்றுச் சபை சிபார்சு செய்தது.

அந்த சிபார்சுகளுக்கமைய பேரவையினால் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. பேரவையின் தண்டனை குறித்த அறிவிப்பு அந்தந்த பீடாதிபதிகளின் ஊடாகத் துணைவேந்தரால் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தண்டனைக் காலத்தினுள் குறித்த மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், பல்கலைக் கழகத்தின் எந்தவொரு பகுதியினுள்ளும் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும் தண்டனைக்குட்படுத்தப்பட்ட மாணவர்கள் விடுதிகளில் தங்கியிருப்பவராயின் விடுதியை விட்டு உடனடியாக வெளியேறுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை – கலைப்பீடத்துக்குத் தெரிவு செய்யப்பட்டு பதிவு செய்த மாணவர்களுக்கான வகுப்புகள் நாளை 25 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கை நோக்கி மீண்டும் படையெடுக்கும் சுற்றுலா பயணிகள் !

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகளின்படி, இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் 20 ஆயிரத்து 573 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் 7 ஆம் திகதி வரையில் 8 ஆயிரத்து 614 சுற்றுலாப் பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை – களமிறக்கப்பட்ட விசேட படைப்பிரிவு !

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையை குறைக்க விசேட படைப்பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகம் தெரிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதை பாவனை தொடர்பில் பலாலி பாதுகாப்பு தலைமையகம் நேற்று விடுத்துள்ள செய்தி அறிக்கையில் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

” வடக்கில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் கஞ்சா தொகையானது கைப்பற்றபட்டுள்ளது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பாண பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வரும் நிலையில் இளம் சந்ததியினரும் அவற்றுக்கு அடிமையாகும் தன்மை வெகுவாக அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இத் துர்பாக்கிய நிலையை இல்லாதொழிப்பதை நோக்கமாக கொண்டு யாழ்.பாதுகாப்பு படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேய சுந்தரவினுடைய விசேட படைப்பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதனூடாக யாழ் மாவட்டத்தில் போதைப்பொருள் கடத்தல்களை தடுத்தல், கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் மேலும் அதனுடன் தொடர்புடையவர்களை நீதி முன் நிறுத்தல் போன்ற செயற்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

51 ஆவது காலாட் படைபிரிவிற்கு கீழ் காணப்படுகின்ற J 150 கிராமசேவகர் பிரிவின் மாதகல் கிழக்கு பகுதியில் 513 ஆவது காலாட் படைபிரிவின் 16 ஆவது கெமுண ஹேவா படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பின் போது 100kg கஞ்சாவுடன் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக விசேட அதிரடிப் படையினரிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் இந்நடவடிக்கைகளை கட்டுபடுத்தும் முகமாக யாழ் பாதுகாப்பு படைத்தலைமையகத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புக்களையும் பொதுமக்கள் வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன் அவை தொடர்பான மேலதிக தகவல்களை கீழ்க்காணும் முகவரிக்கோ அல்லது தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்பு கொள்ளுமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

பாதுகாப்பு தலைமையகம்,

வயாவிளான் யாழ்ப்பாணம்

தொ.இல : 076 6907751

யாழில் ஹெரோய்ன் போதை பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் எடுத்த விபரீதமான முடிவு !

ஹெரோய்ன் போதை பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், தவறான முடிவெடுத்த உயிரை மாய்த்துள்ளார்.

யாழ். மருதடி – புத்தூர் மேற்கை சேர்ந்த இளைஞரே இவ்வாறு விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

கல்வியில் திறமையாக திகழ்ந்த குறித்த இளைஞன், உயர் தரத்திற்கு தெரிவான பின்னர் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் உள்ள பாடசாலையில் இணைந்துள்ளார். அங்கு அவர் ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, சான்று பெற்ற சிறுவர் பாடசாலையிலும் இளைஞன் சிறிது காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்தான் என அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

குறித்த இளைஞன் கடந்த ஒரு மாத காலமாக ஹெரோய்னை நுகர முடியாமல் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்றைய தினம் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

வீட்டுத்தோட்டத்தில் 53 கஞ்சா செடிகள் – சந்தேக நபர் கைது !

வீடு ஒன்றின் தோட்டத்தில் சூட்சுமமான முறையில் 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்த சந்தேக நபரை சவளக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அன்னமலை பகுதியில் கஞ்சா செடிகள் வளர்க்கப்பட்டு வருவதாக இரகசிய தகவல் ஒன்றை அடுத்து பொலிஸார் இன்று (24) தீபாவளி தினத்தன்று தேடுதல் மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்தனர்.

இவ்வாறு கைதானவர் அன்னமலை பகுதியை சேர்ந்த 58 வயதான சந்தேக நபர் என்பதுடன் வீட்டின் தோட்டத்தில் உள்ள பயிர்களுடன் இணைத்து குறித்த 53 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரிய வந்துள்ளது.

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சான்று பொருட்கள் யாவும் நீதிமன்றத்தில் ஒப்படைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொடரும் மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு – முடங்கும் நிலையில் அரச வைத்தியசாலைகள் !

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து தட்டுப்பாடு காரணமாக, எதிர்வரும் காலங்களில் நாட்டிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளும் செயலிழக்கக் கூடிய அபாயம் காணப்படுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

இதய நோய்கான அஸ்பிரின் மருந்தை, வெளி மருந்தகங்களில் இருந்து பெற வேண்டிய நிலை நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடுமையான மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும், மயக்க மருந்து தட்டுப்பாடு காரணமாக சத்திரசிகிச்சைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, அரச வைத்தியசாலைகளில் பல அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

பென்டேஜ், பஞ்சு உள்ளிட்ட பல மருத்துவப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும்  கடுமையான மயக்க மருந்து தட்டுப்பாடு நிலவுவதாகவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக, தனியார் மருந்தகங்களில் இருந்து மருத்துவப் பொருட்களை கொள்வனவு செய்வதில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது

பகிடிவதை என்பது ஒரு மனநோய் – அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா

எதிர்காலத்தில் பகிடிவதைக்கு எதிராக கடுமையான தீர்மானங்களை எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

புதிய மாணவர்கள் மீதான அடக்குமுறை துன்புறுத்தலுக்கு எதிராக பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மனக் குழப்பத்தின் காரணமாக அறிக்கைகளை வெளியிட்டமை சாதகமான நிலைமை என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பதுளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். பகிடிவதை என்பது ஒருவித மனநோய் எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இரட்டை குடியுரிமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு!

இரட்டைக் குடியுரிமை தொடர்பான முடிவுகளை நீதிமன்றத் தீர்மானங்கள் மூலம் மட்டுமே எடுக்க முடியும் என தேசிய தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.

புதிதாக நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தின் கீழ் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்பட முடியாது.

பாராளுமன்ற உறுப்பினர் இரட்டைக் குடியுரிமை உள்ளவரா இல்லையா என்பது குறித்து உடனடியாக முடிவெடுக்க முடியாது என்று கூறியுள்ள தேர்தல் ஆணைக்குழு, அத்தகைய நபர்கள் உடனடியாக இராஜினாமா செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.
எதிர்வரும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் போது இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் எனவும் அவ்வாறான வேட்பாளர்கள் இது தொடர்பில் அறிக்கையொன்றை வழங்கினால் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

கஞ்சா வளர்ப்பு இலங்கையின் கலாச்சாரத்திற்கு எதிரானது!

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இலங்கையில் கஞ்சா செடி வளர்ப்பை சட்டபூர்வமாக்குவதன் மூலமாக அதிகளவு லாபமிட்ட முடியும் என தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார்.

அதே போல மருத்துவ நோக்கங்களுக்காக கஞ்சாவை வளர்ப்பதற்கான சட்டத்தை உருவாக்கவுள்ளதாக சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி அறிவித்துள்ளார்.

இந்தநிலையில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கும் அதிகாரிகளின் நடவடிக்கையை எதிர்ப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

கஞ்சா ஆயுர்வேத சட்டத்தின் கீழ் வருவதால், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டாது என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் நிதி நலன்களின் அடிப்படையில் மாத்திரம் அதிகாரிகள் தீர்மானங்களை எடுக்க முடியாது என திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இது அந்நியச் செலாவணியை கொண்டு வரும் என்றாலும், இலங்கையின் கலாசாரத்திற்கு எதிரானது என்பதால், இந்த பிரேரணைக்கு உடன்பட முடியாது என தெரிவித்துள்ளார்.

“போதைப்பொருள் பாவனையை தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருக்கிறார்கள்.” – எம்.ஏ.சுமந்திரன்

போதைப்பொருள் பாவனையை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிற நிலையில், அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

போதைப் பொருள் பாவனை தற்போது தலைவிரித்தாடுகின்றது. இதன் காரணமாக 10 இளைஞர்களுக்கு மேல் உயிரிழந்துள்ளார்கள். 140 பேர் வரையிலானோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த காலத்தில் வன்முறை ஒழிப்போம் போதை பொருளை தடுப்போம் எனும் தொனிப்பொருளில் நாம் ஒரு வேலை திட்டத்தை ஆரம்பித்திருந்தோம்.

கொரோனாப் பெருந்தொற்று காரணமாக அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாமல் போய்விட்டது. ஆனாலும் தற்போது போதைப்பொருள் பாவனை என்பது தலைக்கு மேலே சென்று விட்டது. இதன் காரணமாக மீண்டும் அந்த வேலை திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் மூன்று விதமாக மேற்கொள்ளவுள்ளோம்.

முதலாவது – இளையவர்களுக்கு புத்திமதி வழங்கும் ஒரு விழிப்புணர்வு நிகழ்வினை பாடசாலை மட்டத்தில் நடாத்தல், இரண்டாவது – போதைப்பொருள் பாவனையில் சிக்கி உள்ளவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்துவது தொடர்பான விடயங்களை மேற்கொள்ளல், மூன்றாவது – போதைப்பொருள் பாவனையை தடுக்கவேண்டும். இதனை சட்டரீதியாக தடுக்க வேண்டியவர்களே அதற்கு உடந்தையாக இருப்பது தெரிகிறது. அது சம்பந்தமாக மிக உயர்ந்த மட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.