உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

படலந்த வதைமுகாம் போல யாழ் நூலக எரிப்பு தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஆளுங்கட்சி எம்.பி இளங்குமரன் !

படலந்த வதைமுகாம் போல யாழ் நூலக எரிப்பு தொடர்பிலும் விசாரணை வேண்டும் – ஆளுங்கட்சி எம்.பி இளங்குமரன் !

 

பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை நடத்துவதை போன்று யாழ். நூலகம் எரிக்கப்பட்டமை தொடர்பிலும் குழுவை அமைத்து விசாரணைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என என்.பி.பி யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மிக நெருக்கமான பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த தமிழ் தேசியக் கட்சிகளின் எம்பிக்கள் இவ்விடயத்தில் எதுவும் தெரியாதவர்கள் கேளாதவர்கள் போன்றே இருந்து வந்தனர். மேலும் என்பிபி யை வீழ்த்த சஜித், ரணில் ஆகியோருடன் இணைவதற்கு நேரம் பார்த்து காத்திருக்கின்றனர்.

நாடாளுமன்றத்தில் மேலும் உரையாற்றிய அவர், மழைக்காலத்தில் கத்தித் தானாகவே இறக்கும் தவளை போல வேட்புமனுவை சரியாக நிரப்பத் தெரியாமல் விலக்கப்பட்ட அர்ச்சுனா அணியினர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் இது தொடர்பில் தெளிவான அறிவுறுத்தல்களை பெற வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்

குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் !

குப்பைத் தொட்டிகளில் கிடக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகள் !

கடந்த பத்து ஆண்டுகளில் பல்வேறு அரசாங்கங்களால் நியமிக்கப்பட்ட சுமார் இருபது ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் இன்னும் செயல்படுத்தப்படாமல் குப்பைத் தொட்டியில் வீசப்பட்டதாக பேராசிரியர் மற்றும் வழக்கறிஞர் பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மஹாநாம ஹேவா மேலும் கருத்து தெரிவிக்கையில், உதுலகம ஆணைக்குழு அறிக்கை, மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை, லலித் அதுலத்முதலி கொலை ஆணைக்குழு அறிக்கை, விஜய குமாரதுங்க கொலை ஆணைக்குழு அறிக்கை, மற்றும் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ கொலை ஆணைக்குழு அறிக்கை ஆகியவை செயல்படுத்தப்படாத சில அறிக்கைகள் ஆகும். போதுமான ஆதாரங்கள் இருந்தால், இந்தக் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்த முடியும் என்றும் கூறினார்.

 

பிள்ளையான் குழுவை சேர்ந்த நால்வருக்கு மரணதண்டனை !

பிள்ளையான் குழுவை சேர்ந்த நால்வருக்கு மரணதண்டனை !

மட்டக்களப்பு சந்திவெளியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற குற்றத்துக்காக முன்னாள் அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் தலைமையில் இயங்கிய ஆயுதக் குழுவை சேர்ந்த நால்வருக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மட்டக்களப்பு – சந்திவெளியில் கடந்த 2007 மார்ச் 18ஆம் திகதி சந்திவெளியைச் சேர்ந்த மயில்வாகனம் ரவீந்திரன் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்போது அந்தப் பகுதியில் இயங்கிய பிள்ளையான் தலைமையிலான ஆயுதக் குழு அவரை ரி-56 ரக துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் முடிவில் பிள்ளையான் குழுவை சேர்ந்த நால்வர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். இதையடுத்து நால்வருக்கும் மரண தண்டனை வழங்கி மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி. ஜே. பிரபாகரன் தீர்ப்பளித்தார்.

 

கௌசல்யாவின் அரசியல் நீக்கம் ! அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !

கௌசல்யாவின் அரசியல் நீக்கம் ! அர்ச்சுனாவின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம் !
வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை சந்திக்கும் வரை ஆளுமையோடு இயங்கிய கௌசல்யா நரேந்திரன் தனித்தன்மையை இழந்து பொது வாழ்க்கையிலிருந்து ஓரங்கட்டப்பட்டப்பட்டுள்ளார். பெண்கள் அரசியலில் ஈடுபடுவதிலுள்ள சவால்களை இது காட்டுகின்றது. கௌசல்யா ஏன் தொடர்ந்து அரசியலில் எம்பி அர்ச்சனாவுடன் பயணிக்க மாட்டார் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் நகைப்பிற்கிடமாகவுள்ளது. எம்பி அர்ச்சுனாவின் வழக்கிற்கு உதவி சட்டத்தரணியாக வந்த கௌசல்யா நரேந்திரன் எம்பியின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம். இந்த இடத்தில் கௌசல்யா மீது பரிதாபமே தோன்றுகின்றது.
சிறு வயதில் தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த கௌசல்யா தன்னுடைய கல்வியில் சிறந்து விளங்கியிருக்கின்றார். படித்து முடித்து ஒரு வளர்ந்து வரும் சட்டத்தரணியாகவும் திறமையுடன் தொழில் செய்திருக்கின்றார். அப்படியிருக்க இன்னொருவர் அதாவது அர்ச்சுனா இராமநாதன் தனக்காக முடிவுகள் எடுக்க அனுமதியளிக்கும் வகையில் கௌசல்யா தனது தனித்துவத்தை இழந்து போனது எப்படி?
அதுதான் யாழ்ப்பாணத்து வெள்ளாளிய ஆண் மைய தமிழ்ச் சமுதாயம் கட்டியெழுப்பியுள்ள சமூகவாழ்க்கை. அந்த வாழ்க்கையில் ஒரு தமிழ்ப்பெண் எப்போதும் ஏதோவொரு ஆணின் நிழலில் தான் தன்னுடைய அடையாளத்தை கட்டியமைக்க வேண்டியுள்ளது. அந்த ஆண் தந்தையாகவோ, தனயனாகவோ, கணவனாகவோ அல்லது மகனாகவோ தான் இருக்க முடியும். அப்போது தான் பெண் பாதுகாப்பாக கௌரவமாக வாழமுடியும் என தமிழ்ப் பெண்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனப்பாங்கின் வெளிப்பாடே ”முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும், சேலை தான் கிழியும்“ என்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் கருத்தியல், பழமொழியாக கடத்தப்படுகிறது.
இந்த விடயத்தில் கௌசல்யாவை எடுத்துக் கொண்டால், கௌசல்யா அரசியலுக்கு வருவதையும் அரசியலை விட்டு விலகுவதையும் எம்பியும் வைத்தியருமான அர்ச்சனா இராமநாதன் முடிவு எடுத்துள்ளார். அதனை எம்பி இராமநாதனே தனது வாயால் ஒத்துக்கொள்கிறார். கௌசல்யா அரசியிலிருந்து விலகும் முடிவை தானே எடுத்துள்ளதாக கூறும் அவர் சட்டத்தரணி கௌசல்யா முகநூல் கூட அவரால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதைவிட பெரிய வேடிக்கை கௌசல்யாவிற்கு ஏதும் தகவல் சொல்வதாக இருந்தால் தன்னிடம் அறிவிக்கும்படி கூறுகிறார்.
கௌசல்யாவின் காதலில் குறுக்கிட்டு குழப்பிய போதும் சரி, கௌசல்யாவை தானே திருமணம் செய்வேன் என முழங்கிய போதும் சரி, கௌசல்யாவின் சலத்தை கம்பவாரதி ஜெயராஜ்க்கு பூசக் கொடுப்பேன் என்று கூறும் போதும்சரி, பொது இடத்தில் ஒரு சட்டத்தரணியை ‘தங்கம்‘, ‘ தங்கம்’ என அழைத்து தரம்தாழ்த்திய போது வராத அக்கறை, கௌசல்யா மீது இப்போது ஏன் எம்பி அர்ச்சனாவுக்கு வந்துள்ளது. எல்லை மீறி விட்டது. கௌசல்யாவின் எதிர்காலமும், கௌசல்யாவினது குடும்ப மரியாதையும் இப்போது ஏன் கண்ணுக்கு தெரிகிறது. தனித்துவமாக தன்னுடைய அடையாளத்தோடு வாழ வேண்டிய ஒரு பெண் சட்டத்தரணியின் எதிர்காலத்தை இருட்டாக்கியது எம்பி அர்ச்சுனா இராமநாதன் ஆகும்.
கௌசல்யா செய்ததும் தவறு. தொழில்முறை ரீதியான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுடைய தொடர்பை அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது கௌசல்யா கற்றுக் கொண்ட “சட்டத்தரணி தொழில் நெறிமுறைகளுக்கு“ முரணானது. இந்த விடயம் தனிப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் என்ற இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்ட விடயமாக கடந்து செல்ல முடியாது. மக்களுக்கு சேவை என பொது வெளியில் வந்த இரு நபர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும்.
சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தன்னுடைய தொழிலிலும் முறையான நெறிமுறைகளை பின்பற்றவில்லை. அரசியலிலும் அதையே தான் செய்திருக்கிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரை நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள். மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய இடத்தில் அவர் உள்ளார். கௌசல்யா தானாக முன்வந்து அரசியலை விட்டு விலகினாலும் சரி விலத்தப்பட்டாலும் சரி வாக்குப் போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.
கௌசல்யா மாதிரியான பெண்களை ஈழத்தமிழ்ப் பெண்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆண் மைய, பால்நிலைச் சமத்துவமற்ற மற்றும் வன்முறைகள் நிறைந்த சமூகத்தில்  பெண்கள் அரசியலில் தனித்துவத்தோடு செயற்படுவது மிகச் சிரமம். ஆனால் கௌசல்யா நரேந்திரன், உமாசந்திரப் பிரகாஷ் , சுரேகா பரமநாதன் போன்ற பெண்கள், ஆண்மைய அரசியலின் பிரதிநிதிகளாக இருப்பதும் பெண் உரிமைகளுக்கு மிக ஆபத்தானது.
கௌசல்யா தனக்காகவும் குரல் கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை. ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற போலி அடையாளத்துடன் இயங்கும் முகநூலில் பெண்களின் நிர்வாணப்படங்கள் மற்றும் அவதூறுகள் வலம் வந்த போதும் கௌசல்யா அந்த இழி செயலை செய்பவர்களுக்கு வாக்காளத்து வாங்கினார். இன்று திடீரென பொதுவெளியிலிருந்து ஓடி ஒளித்து விட்டார். இப்படியானவர்களிடம் அதிகாரம் போனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த தமிழ்ச் சமூகத்தில் இது பெரிய பின்னடைவாக இருக்கும்.
உமாசந்திரப் பிரகாஷ் போன்ற பெண்கள் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுக்கு அரசியலில் முகவரியை உருவாக்கிக்கி கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்ல காலம்காலமாக பேரினவாத அரசியலைச் செய்து, தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்சவின் கட்சி எனத் தேசியக் கட்சிகளுக்கு  வாக்கு சேகரித்து கொடுக்கும் இவர்களையும் தமிழ்ப் பெண்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும். போரில் வன்முறைக்குள்ளான பெண்கள் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கப் போவதில்லை. மேட்டுக்குடிப் பெண்களான இவர்களுக்கு அரசியல் அதிகாரம் ஒரு சமூக அந்தஸ்து மட்டுமேயாகும்.
சுரேக்கா பரமநாதன் போன்ற பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேல் நிலைக்கு வரும்போது அவர்கள் தம்மையும் மேட்டுக்குடியாக பாவனை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். தமிழரசுக் கட்சி முன்னாள் தவிசாளர் வீட்டில் தீக்குளித்து இறந்த விஜிதாவுக்கு குரல் கொடுத்த சுரேகா, எப்படி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். எம். ஏ. சுமந்திரன் தமிழரசுக் கட்சியில் நீண்டகாலமாக செயல்பட்ட பெண்களுக்காக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவில்லை. அதேநேரம் சுரேகாவை எம். ஏ . சுமந்திரன் பின்கதவால் தமிழரசுக் கட்சிக்குள் கொண்டு வந்து, சுரேகாவின் வாய்க்கு பூட்டுப் போட்டார். விஜிதாவின் மரணத்திற்கு காரணமானவர் என்று சுரேகாவால் குற்றம்சாட்டப்பட்ட சுகிர்தனோடே இணக்கமாக ஒரே கட்சியில் அரசியலில் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார். தாம் கொண்ட கொள்கையில் நிலையில்லாத பெண்களால் சமூகத்தில் இருக்கின்ற ஏனைய பெண்களின் உரிமைகளுக்காக போராட முடியாது.
பெண்கள் எத்தனை துறைகளில் சரி சமமாக ஆண்களுக்கு நிகராக முன்னேறினாலும், அரசியலில் மட்டும் அவர்களால் தனித்துவமாக செயற்பட முடியவில்லை. அதற்கு பிரதான காரணம் அதிகார அரசியலில் பெண்கள் இடத்தைப் பிடித்தால் பெண்களுக்கெதிரான சட்டங்கள் தொடக்கம் சமூக கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற அச்சமாகும்.
ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்துமே ஆண்களின் தலைமைத்துவதிலேயே செயற்படுகின்றன. அக்கட்சிகளில் பெண்கள் ஆண்களுக்கு விருப்பு வாக்குகளைச் சேர்த்துக் கொடுக்கும் கருவிகளே. பெண்களால் தலைமைதாங்கி நடத்தக் கூடிய அரசியல் கட்சிகள் தோன்றினால் அல்லது பெண்களே தமக்கான கட்சிகளை உருவாக்கிக் கொள்ளும் போது ஒருவேளை பெண்களை அரசியலில் கருவேப்பிலையாக பயன்படுத்தும் நிலைமை மாறலாம்.
அதற்கு அரசியலுக்கு வரும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கருத்தியல் ரீதியான வன்முறைகளை எதிர்த்து நிற்க கூடிய திராணி பெண்களுக்கு உருவாக வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள பெண்களும், ஒடுக்கப்படுகிற பெண்களும் மற்றும் வன்முறைகளிலிருந்து உடைத்துக் கொண்டு வருகிற பெண்களும் அரசியலுக்கு வரும் போது மேட்டுக்குடி அலங்கார பொம்மைகளாக இருந்து கொண்டு போலிப் பெண்ணியம் பேசும் பெண்களை அரசியலில் இருந்து நீக்கலாம். வலிகளைச் சுமப்பவர்களே அந்த வலிகளுக்கு தீர்வை காண முடியும். அந்தவகையில் கௌசல்யா நரேந்திரனின் அரசியல் நீக்கம் தமிழ்ப் பெண்களின் போலி அரசியல்ப் பிரவேசத்தைப் பற்றிய மறுபரிசீலனையை வேண்டி நிற்கின்றது.

காசாவின் நிலைமை குறித்து இலங்கை கவலை ! கண்டிக்க வேண்டும் என்கிறார் எம்.பி ரவூப் ஹக்கீம் !

காசாவின் நிலைமை குறித்து இலங்கை கவலை ! கண்டிக்க வேண்டும் என்கிறார் எம்.பி ரவூப் ஹக்கீம் !

 

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையில், மேலும் மோசமடைய வழிவகுக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டது. பிராந்தியத்தில் விரைவில் நிலையான அமைதி நிலைநாட்டப்படும் என்று இலங்கை நம்புவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நீண்ட காலமாக பாலஸ்தீன மக்களுக்காகக் குரல்கொடுத்து வருகின்ற போராளி. அவர் பாலஸ்தீன மக்கள் மீது தனக்குள்ள கரிசனையை வெளியிட்டு வருபவர். ஆனால் அண்மைக்காலமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சு இஸ்ரேலுக்கு இலங்கையர்களை வேலைக்கு அனுப்பி வைக்கும் ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளன. அதனால் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா இதுதொடர்பில் அடக்கித் தான் வாசிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது.

காசாவில் இஸ்ரேல் இந்த வாரம் வான் மற்றும் தரைவழி நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கிய பின்னர் கடந்த இரண்டு நாட்களில் 700 க்கும் மேற்பட்டவர்களை இஸ்ரேல் கொலை செய்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலுக்கு எதிர்ப்பைத் தெரிவித்தும், பலஸ்தீன தேசிய கொடியை கழுத்தில் அணிந்தபடி இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் நேற்றைய தினம் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

இதன்போது எம்.பி ரவூப் ஹக்கீம், இஸ்ரேலின் மிலேச்சத்தனமான இனப்படுகொலை, தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் நாசகாரச் செயல்களை இலங்கை அரசாங்கம் வெளிப்படையாகக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இஸ்ரேல், இன்று காஸாவில் எவ்வாறு இனப்படுகொலைகளைச் செய்கின்றதோ அதனையே எண்பதுக்களில் ஜே ஆர் ஜெயவர்த்தனவுக்கும் கற்பித்தது. நூறு தமிழர்களைக் கொன்றால் அதில் ஒரு புலியும் இருக்கும் என்றது தான் அவர்களின் தாக்குதல் தந்திரம். இதனையே இவர்கள் ஜேவிபி யை அழிக்கவும் பயன்படுத்தினர். காஸாவில் பிறப்பவர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என வர்ணிக்கும் தற்போது ஆட்சியில் உள்ள தீவிர வலதுசாரிகள், அதற்காக குழந்தைகளையும் பெண்களையும் குறிவைத்து தாக்குதல்களை மேற்கொள்கின்றனர். காஸாவில் நடைபெறுவது ஒரு திட்டமிடப்பட்ட இனப்படுகொலை. அது அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் முழுமையான ஆசீர்வாதத்துடன் நடைபெறுகிறது.

மேற்கு நாடுகளுக்கு ஈடாக இலங்கையில் குடும்ப மருத்துவர் முறை விரைவில் !

மேற்கு நாடுகளுக்கு ஈடாக இலங்கையில் குடும்ப மருத்துவர் முறை விரைவில் !

ஆரம்ப சுகாதார சேவைகளை வலுப்படுத்துவும், பொதுமக்களுக்கு மிகவும் திறமையான சேவைகளை வழங்குவதையும் அடிப்படையாக கொண்டு, குடும்ப மருத்துவர் என்ற கருத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்த, சுகாதார அமைச்சு முடிவு செய்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் ஹன்சக விஜயமுனி தெரிவித்தார்.

இதன் கீழ், மூன்று கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் தலா ஒரு வைத்தியர் நியமிக்கப்படுவார் என்றும் மேலும் இதற்காக ஒரு தனி மையம் நிறுவப்படும் என்றும் கூறினார்.

பாராளுமன்றச் சலுகைகள் அமைச்சுச் சலுகைகள் குறைக்கப்படுகின்றது !

பாராளுமன்றச் சலுகைகள் அமைச்சுச் சலுகைகள் குறைக்கப்படுகின்றது !

 

தனது பாராளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியத்தை நீக்குமாறு பாராளுமன்றத்திற்கு கடிதம் ஒன்றை கையளித்துள்ளதாக நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் விசேட உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சராகும்போது, பாராளுமன்ற உறுப்பினர் சம்பளமும் கிடைக்கிறது, அமைச்சர் சம்பளமும் கிடைக்கிறது. நாங்கள் ஒரு தீர்மானம் எடுத்தோம், அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தை மட்டுமே பெறுவார்கள்.

ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்துடன் அமைச்சர்களுக்கு எரிபொருள் கொடுப்பனவு கிடைக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சம்பளத்தின் இருந்து எரிபொருள் கொடுப்பனவையும் நீக்கி, நாங்கள் அதை வழங்கவுள்ளோம். அதேபோல், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் நீக்குகிறோம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் 1 மில்லியன் ரூபாய் காப்பீட்டு இழப்பீட்டை 25 இலட்சமாக குறைக்க முடிவு செய்துள்ளோம். ஜனாதிபதி சலுகைகள் சட்டத்தையும் திருத்துவோம்.” என்றார்.

த பினேன்ஸ் நிதி நிறுவன மோசடி – நீதி கோருகிறார் கஜேந்திரகுமார் ! 

த பினேன்ஸ் நிதி நிறுவன மோசடி – நீதி கோருகிறார் கஜேந்திரகுமார் !

த பினேன்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மக்களுக்கு உரியத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றைய நாடாளுமன்ற குழுநிலை விவாதத்தில் கருத்துரைத்த எம்.பி கஜேந்திரகுமார், மூடப்பட்ட குறித்த நிறுவனத்தில் பணத்தை வைப்பிலிட்ட மக்களுக்கு இதுவரையில் தீர்வு வழங்கப்படவில்லை. குறித்த நிறுவனம், மூடப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னரும் அந்த நிறுவனத்தினால் சுமார் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. அத்துடன் த பினேன்ஸ் நிறுவனத்தின் சொத்துக்களை ஏலத்தில் செய்வதற்கு நீதிமன்றம் விற்பனை அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போதைய மதிப்பீட்டை விடவும் குறைந்த அளவில் அவை விற்பனை செய்யப்படுவதாக அந்த மக்களுக்குச் சந்தேகம் நிலவுகிறது என தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலை சில நற்செயல்களுக்காகவும் பேசப்படுகின்றது ! 

யாழ் பல்கலை சில நற்செயல்களுக்காகவும் பேசப்படுகின்றது !

யாழ்ப்பாணப் பல்கலைக்கழககக் கலைப்பீடத்தில் கல்வி கற்று, கற்கை நெறியைப் பூர்த்தி செய்த பின்னர் சுகவீனம் காரணமாக மரணமடைந்த மாணவி ஒருவருக்குத் தேகாந்த நிலையில் கலைமாணிப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள், அமர்வின் போது சுபீனா குணரத்னம் என்ற மாணவி கலைமாணிப் பட்டத்துக்கு உரித்துடையவராக்கப்பட்டமையை உறுதிப்படுத்தி தேகாந்த நிலையில் அவரது பட்டம் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது.

இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற சன்னாஸ்கம இந்திரானந்த தேரர் என்ற பெயருடைய பௌத்த மதகுரு, உயர்பட்டப்படிப்புகள் பீடத்தினால் நடாத்தப்பட்ட தமிழில் பட்டப்பின் தகைமைக் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து, நேற்றையதினம் பட்டம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

படுகொலை அரசியல் வரலாறு பாராளுமன்றத்தில் !

படுகொலை அரசியல் வரலாறு பாராளுமன்றத்தில் !

மக்கள் விடுதலை முன்னணியால் (ஜே.வி.பி) படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் 1300 பெயர்களைக் கொண்ட பட்டியலை நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி குமாரி விஜேரத்ன நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பில் மேலும் நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிட்டுள்ள ரோஹிணி குமாரி, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்பே ஜே.வி.பி-யால் சிறுவர் படையினர் உருவாக்கப்பட்டனர் இதற்கு சிறந்த உதாரணம், 70 வயதுடைய ஐக்கிய தேசிய கட்சியின் பெண்ணைக் கொலை செய்ய, 13 வயதான ‘கந்தலே போனிக்கி,” பயன்படுத்தப்பட்டார் என்றார்.

இது குறித்து பதிலளித்துள்ள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், யாழ்ப்பாண நூலகத்தை எரித்து தமிழர்கள் மீது படுகொலை சட்டங்களை ஏவியவர்கள் இன்று கொலைப் பட்டியல் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள் என்றார்.

இந்தப் படுகொலை அரசியல் தெற்குக்கு மட்டுமானதல்ல, வடக்கிலும் மிக நீண்ட காலமாக நடந்தது. வடக்கு கிழக்கில் உருவான நாற்பது வரையான விடுதலை அமைப்புகள் உருவாக்கி ஆயுதங்களால் மட்டுமே பேசிக்கொண்டனர். தமிழ் மக்கள் தியாகிகள் துரோகிகள் ஒட்டுக்குழுக்கள் என முத்திரை குத்தப்பட்டனர்.

இது பற்றி ஈழநாடு பத்திரிகை வருமாறு எழுதியுள்ளது: “தமிழ் அரசியல்வாதிகள், தங்களின் தேவைக்காகவே ஒவ்வொரு கால கட்டங்களில் துரோகி, தியாகி என்னும் சொற்களை பயன்படுத்துகின்றனர். அரசியல்வாதிகளின் ஆடு புலியாட்டத்தின்போது, ஒ ரு குறிப்பிட்ட காலகட்டத்தில் துரோகிகள் என்போர் திடீர் தியாகிகளாகி விடுவதும் பின்னர் தியாகிகள் என்போர் திடீர் துரோகிகளாவதும் சர்வசாதாரணமானது.”

இதனை மழைக்கு முளைக்கும் காளான்கள் போல் தேர்தலை நோக்கி உருவாகும் சந்தர்ப்பவாதக் கூட்டுக்கள் தெளிவாக வெளிப்படுத்துகின்றது.