உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“சுமந்திரனுக்கு தமிழ்தேசிய பற்று இல்லை. அவர் அனைத்தையும் மூளையால்தான் பார்க்கிறார்” – சி.வி விக்னேஸ்வரன் 

சுமந்திரனுக்கு தமிழ் தேசிய உணர்ச்சி இல்லையென்றும் அவர் எல்லாவற்றையும் மூளையால்தான் பார்ப்பாரே தவிர உணர்ச்சியால் அல்ல என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (20) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமிழ் தேசிய கட்சி என்ற முறையிலும், தமிழ் தேசிய உணர்வுகளை கொண்டவர் என்ற முறையிலும், எங்களுக்கும் சிறீதரனுக்கும் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.

எனவே தமிழரசுக்கட்சியின் தலைவராக சிவஞானம் சிறீதரனே வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் தமிழ் தொடர்பிலும் கருத்து வெளியிட்டார்.

தமிழ்த் தேசிய கட்சிகள் என்ற முறையிலும் தமிழ்த் தேசிய உணா்வுகளை கொண்டவர்கள் என்ற முறையிலும் எங்களுக்கும் சிறிதரனுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது.

அந்த விதத்தில் தமிழரசுக் கட்சியினுடைய தலைவராக சிறிதரன் வருவதைத் தான் நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அதனையே வரவேற்கின்றோம்.

ஆனால் இதுரை காலமும் தமிழ்த் தேசியத்திற்கு குரல் கொடுத்து வருகின்ற ஒருவர் என்ற முறையிலேயே அவரை நாங்கள் அழைத்திருக்கின்றோம். அதேபோன்று தான் பேராசிரியர் கணேசலிங்கத்தையும் அழைத்திருக்கிறோம்.

 

ஆகவே தமிழ்த் தேசியத்தின் அடிப்படையிலே நாங்கள் முன்செல்ல வேண்டும் என்பதால் அதில் எந்தவிதமான மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை” என சி.வி.விக்கினேஸ்வரன் மேலும் தொிவித்தாா்.

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் – புதிய சட்டமூலம் கோரி கையெழுத்து!

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும் என வலியுறுத்தி கையெழுத்து பெறும் வேலைத் திட்டமொன்று யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பிரதான பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும், அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.

தேர்தல் காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்படும் வாக்குறுதிகள் வழக்கமாக நிறைவேற்றப்படுவது இல்லை என்றும் எனவே

அவ்வாறான கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில்; இயற்றப்பட வேண்டும் என தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் பொய் வாக்குறுதிகள் வழங்கப்படுவதாகவும் அதனால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு நாட்டில் புதிய சட்டம் ஒன்று அவசியம் என்றும்

இதனை வலியுறுத்தி கையெழுத்து பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வேலைத்திட்டம் நாட்டிலுள்ள 17 மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் என்றும் தேசிய மீன ஒத்துழைப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது !

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் விடுதி ஒன்றில் பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனையின் போது, விபச்சாரத்தில் ஈடுபட்டதாக 4 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இரவு விசேட கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது , தேக்கவத்தைப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை செய்த வேளை அங்கு முறையான அனுமதியின்றி விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்டவர்கள் வவுனியா மற்றும் காலி ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். குறித்த விவகாரம் தொடர்பில் மேலதிக விசாரணைகளின் பின் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சவுதிக்கு பணிப்பெண்ணாக சென்ற தமிழ்பெண்ணுக்கு நடந்த கொடூரம் !

பணிப்பெண்ணாக சவுதிக்கு சென்ற எனக்கு இரண்டு மாத சம்பளம் தரவில்லை. பேசியதை விட அதிகமாக வேலை வாங்கி துன்பப்படுத்திவிட்டு நாட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அங்குள்ள விசேட தேவைக்குட்பட்ட பிள்ளையையும் மீளுங்கள் என துணுக்காய், ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த கலாநாதன் கிருஸ்ணவேணி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

தனது அவல நிலை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள் குடியேறிய பின்னர் குடும்ப வறுமை காரணமாக பணிப்பெண்ணாக வெளிநாடு சென்றேன். அதுவும் மன்னராட்சி நடந்த, சட்டம் நிறைந்த இஸ்லாமிய நாடு என சவுதியை தெரிவு செய்தேன். ஏஜென்சி மூலமாக சட்ட பூர்வமாகவே சென்றேன்.

 

நான் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் வீட்டு வேலைக்கு தான் சென்றேன். மேலதிக வேலை செய்ய என்னால் முடியாது. போகும் போது எனக்கு 49 வயது. ஆரம்ப சம்பளம் அவர்களது பணத்தில் 900 தந்தார்கள். முதல் மாத சம்பளம் இன்னும் தரவில்லை. பின்னர் எனக்கு மேதிலக சமையல் வேலைகள் தந்தார்கள்.

 

தோட்டம் வேலை உட்பட பல வேலைகளை அவர்களது தாய் இறந்ததும் செய்தேன். நான் சிரமப்பட்டேன். என்னை துன்பப்படுத்தினார்கள். காலில் அடித்தார்கள். இரண்டு வருடத்தில் திரும்பி வருவதாகவே சென்றிருந்தேன். ஆனால் என்னை வர அவர்கள் விடவில்லை. 2015 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் போன நான் கடைசியாக என்னை துன்பப்படுத்தி அங்கு பொலிசில் நிறுத்தி இறுதியாக அரசாங்கத்தால் 2024 ஆம் ஆண்டு தான் அழைத்து வந்தனர்.

 

எனக்கு இறுதி மாத சம்பளமும் தரவில்லை. நான் உழைக்க சென்று தற்போது பணமும் இல்லை. உடலும் இயலாத நிலையில் உள்ளேன். அந்த குடும்பத்தில் விசேட தேவையுடைய ஒரு பிள்ளை உள்ளது. அதுவும் அங்கு துன்பப்படுகிறது. அதனையும் காப்பாற்ற வேண்டும். எனது இரண்டு மாத சம்பளமும் தேவை எனத் தெரிவித்தார்.

இலங்கை சிறுவர்கள் இடையே வேகமெடுக்கும் எச்.ஐ.வி !

கடந்த 2023 ஆம் ஆண்டில் 40 சிறுவர்கள் எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பால்வினை நோய்கள் மற்றும் எயிட்ஸ் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் வினோ தர்மகுலசிங்க தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டில் 607 ஆகவும் 2023 ஆம் ஆண்டில் 694 ஆகவும் அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்ட 694 பேரில் 613 ஆண்கள் உள்ளடங்குகின்றனர்.

 

இந்நிலையில், 15 முதல் 24 வயதுக்குட்பட்டவர்கள் மத்தியில் எச்.ஐ.வி. தொற்று அதிகரித்து வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விஷ ஜந்து கடிக்குள்ளான நபருக்கு சிகிச்சை செய்ய யாருமில்லாத நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

விஷ ஜந்து கடிக்குள்ளான தனது தந்தையை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு (Chavakachcheri Base Hospital) கொண்டு சென்ற வேளை அங்கு சிகிச்சை வழங்குவதற்கு யாரும் இருக்கவில்லை என நபர் ஒருவர் சமூக வலைதளத்தில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (Sri Lanka Human Rights Commission) யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் கடந்த 17.07.2024 அன்று இரவு விஷ ஜந்து கடிக்குள்ளான தனது தந்தையினை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளையில் மருத்துவமனையில் இரவு மருத்துவர்களோ, தாதியர்களோ இருக்கவில்லை.

இந்நிலையில் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் செய்திகள் பிரசுரிக்கப்பட்டன.

செய்தி தொடர்பில் 1996 ஆம் ஆண்டு 21 இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14 இற்கு அமைய, ஆணைக்குழுவின் சொந்த பிரேரணையாக பதிவுசெய்யப்பட்டு சாவகச்சரி ஆதார வைத்திசாலையின் பதில் மருத்துவ அத்தியட்சகர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் யாழ்ப்பாணம், மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடக்கு மாகாணம் ஆகியோரிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த விளக்க அறிக்கையை எதிர்வரும் 22.07.2024 இற்கு முன் சமர்ப்பிக்க பணிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளார்.

மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு !

பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் உள்ள இலங்கையின் வரலாற்றின் முக்கிய ஆதாரமான மகாவன்ச வரலாற்று நூல்கள் அடங்கிய தொகுப்பு உலக பாரம்பரியச் சின்னமாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த விழாவுக்கு பிரதம விருந்தினராக யுனெஸ்கோவின் பணிப்பாளர் நாயகம் ஒட்ரே அசுலே (Audrey Azoulay) கலந்து கொண்டார்.

யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகத்தினால் மகாவன்சத்தை உலக மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான சான்றிதழ் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் பேராசிரியர் ஜி.எச்.பீரிஸிடம் கையளிக்கப்பட்டது.

 

அத்துடன், பல்கலைக்கழகத்துகு்கு விஜயம் செய்ததைக் குறிக்கும் வகையில் பிரதி வேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச, பணிப்பாளர் நாயகத்திற்கு நினைவுச் சின்னம் ஒன்றையும் வழங்கி வைத்தார்.

மகாவம்சம் நூலானது பல பாகங்களை கொண்ட இலங்கையின் தொடர்ச்சியான வரலாற்று மூலதாரமாகும். அதேவேளை மகாவம்சத்தில் கூறப்படும் ஒருபக்க சார்பான – பௌத்த மதத்திற்கு ஆதரவான கருத்துக்களே இன்று வரை இலங்கையில் நீளும் தமிழர் – சிங்களவர் பிரச்சினைகளுக்கான அடிப்படையை இட்டுக்கொடுத்தது என தமிழ் வரலாற்று பேராசிரியர்கள் குறிப்பிடுவதும் கவனிக்கத்தக்கது.

புலிப்பயங்கரவாதிகள் கூட போர்க்காலத்தில் பாடசாலைகளை மூடவில்லை ஆனால் இன்று ஆசிரியர் சங்கங்கள் கண்மூடித்தனமாக பாடசாலைகளை மூடுகிறது – அமைச்சர் மனுஷ நாணயக்கார

 

இந்த நாட்டில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்த போதிலும், முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை, ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள்.

 

இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவது வீரமாக கருதுகின்றனர் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்

 

களுத்துறை மாவட்டத்துக்கான ஜயகமு ஸ்ரீலங்கா மக்கள் நடமாடும் சேவையின் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று (18) மத்துகம பொது விளையாட்டரங்கில் அமைச்சர் தலைமையில் நடைபெற்றது .

 

இங்கு தொடர்ந்தும் பேசிய அமைச்சர்

 

வடக்கில் விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்து 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்ற போதும் பாடசாலைகளை மூட அனுமதிக்கவில்லை. ஆசிரியர்கள் வடிகால்களை வெட்டி பீப்பாய்களுக்குள் வைத்து குழந்தைகளுக்கு கற்பித்தார்கள்.

 

தற்போதைய சூழலில் ஆசிரியர்களாகவும் தெய்வங்களாகவும் கருதப்பட்ட ஆசிரியர்களின் கௌரமும் மரியாதையும் கெட்டுவிட்டது.

 

பாடசாலைக்குச் சென்றிடாத அகில இலங்கை ஆசிரியர் சங்கங்களின் தலைவர் ஸ்டாலின், மஹிந்த ஜயசிங்கவின் அரசியல் நலன்களுக்காக கௌரவமான அதிபர்களையும் ஆசிரியர்களையும் பயன்படுத்தி இலவசக் கல்விக்கு பாரிய களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார் நாட்டில் 10,000 பாடசாலைகளை மூடியதுதான் இவர்களின் செயற்திறமையாகும் .

“இன்று நாங்கள் நிற, கட்சி வேறுபாடின்றி ஒரே அரசில் இணைந்து செயற்படுகின்றோம் அவ்வாறே இன்று அரச உத்தியோகத்தர்கள் அனைவரும் அரசியல் பற்றி சிந்திக்காமல் ஒன்றிணைந்துள்ளனர் – நாட்டையும் வீழ்ந்த நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்கு முழு நாட்டு மக்களும் பாரிய இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளனர் அன்றே அந்தக் கொள்கைகளை மாற்றிய பிறகு, கொரியா மீண்டும் IMF க்கு செல்லாத நாடாக முன் வந்தது.

 

இன்று இலங்கையும் அந்தப் பயணமும் ஆரம்பமாகிவிட்டது. எங்களுக்கு கட்சி அரசியல், இனம், மதம், சாதி, நிறம் எதுவும் வேண்டாம். நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்துக்கு நாடு வந்துள்ளது ஆனால் இன்று இந்த மக்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் தம்மைத் தியாகம் செய்து, சிரேஷ்ட அமைச்சர்கள் தமது அமைச்சுக்களைக் கூட தியாகம் செய்து, நாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்த ஒரு பயணமாகும்

 

புலம்பெயர்ந்த தொழிலாளிகள் பன்னிரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்து வீழ்ந்த பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப ஒரு பாரிய பங்களிப்பை செய்தார்கள்.

 

இவ்வாறு நாட்டுக்கு பங்களிப்பு செய்துள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடையே 100,000 தொழில்முனைவோரை நாம் உருவாக்குவோம்.அதற்கான வாய்ப்பு தற்போது எமக்கு கிடைத்துள்ளது அதாவது எமது நாட்டில் முதலீடு செய்ய கொரியா, ஜப்பான், இஸ்ரேல், மத்திய கிழக்கு மற்றும் துபாய் ஆகிய நாடுகளில் இருந்து தொழில் முனைவோர் வந்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.

இலங்கையில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் நாளாந்த உணவுக்கு திண்டாடுகின்றன – ஐக்கிய நாடுகள் சபை

பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டுவருகின்ற போதிலும், நாடளாவிய ரீதியில் 10 குடும்பங்களில் 4 குடும்பங்கள் தமது அன்றாட வாழ்வாதார மற்றும் உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு பல்வேறுபட்ட மாற்று வழிமுறைகளைக் கையாண்டு வரும் நிலை தொடர்வதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இலங்கை அண்மைக்காலமாக காலநிலைமாற்ற சவால்களுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், அதிகரித்த வெப்பநிலை மற்றும் உயர்வான வெப்பம் என்பன மக்களின் ஆரோக்கியத்திலும், விவசாய நடவடிக்கைகளிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாகவும் உலக உணவுத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின்  சம்பளப் பணத்தின் மிகுதியை வழங்க மறுக்கும் யாழ். மாவட்ட வைத்திய பணிப்பாளர் !

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனின்  சம்பளப் பணத்தின் மிகுதியை யாழ். மாவட்ட வைத்திய பணிப்பாளர் தரமறுப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய விசேட காணொளி ஒன்றில் வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தன்னுடைய மேலதிக கொடுப்பனவானது இன்றுவரை வழங்கப்படவில்லை என்றும் அதற்கான தரவுகளை யாழ் மாவட்ட வைத்திய பணிப்பாளர் கேதீஸ்வரன் பெற்றுக்கொள்ள மறுப்பதாகவும் அர்ச்சுனா குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு தமிழ் அரசியல்வாதிகள் இருக்கும் பிரதேசங்களில் ஒரு போதும் சேவையை தொடரமாட்டேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அரசினால் வழங்கப்பட்டுள்ள விடுதியை மூன்று மாதகாலம் தனது பாவனைக்காக வைத்திருப்பதாகவும் அதனை உடைக்கவோ வேறு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அர்ச்சுனா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.