உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

சட்ட விரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 22 இந்தியர்கள் கைது !

சட்ட விரோதமாக இலங்கையில் தங்கியிருந்த 22 இந்தியர்கள் கைது !

சுற்றுலா விசாவில் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த 25 – 35 வயதுக்குட்பட்ட 22 இந்தியர்கள் விசா முடிவடைந்தும் இந்தியாவிற்கு நாடு திரும்பாது இலங்கையில் சட்ட விரோதமாக தங்கியிருந்து கூலி வேலையில் ஈடுபட்டு வந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 17 பேர் சுற்றுலா விசாவிலும், 4 பேர் குடியிருப்பு விசாவிலும், ஒருவர் வணிக விசாவிலும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் விசாரணைப் பிரிவு சந்தேகத்தின் பெயரில் இரண்டு இந்தியர்களை விசாரணை செய்த பின் ராஜகிரிய எனும் பிரதேசத்தில் அலுவலகம் ஒன்றில் சுற்றிவளைப்பு மேற்கொண்டு இவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், இவர்கள் வெலிசார தற்காலிக தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்தியாவிற்கு விரைவில் அனுப்புவதற்குமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இஸ்ரேலியர்கள் பலரும் இலங்கையில் சட்டவிரோதமாக நீண்டகாலம் தங்கியிருப்பதாக சில குற்றச்சாட்டுகள் உள்ளது. மேலும் வெளிநாட்டவர்கள் இலங்கையில் தங்கியிருந்து சட்டவிரோத செய்றபாடுகளில் ஈடுபடுவதும் பலரின் கவனத்தை ஈர்க்கின்றது.

 

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்போம் ! நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுப்போம் ! நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

‘பயங்கரவாத தடைசட்டம் நீக்கப்பட வேண்டும், தீர்க்கப்படாமலிருக்கும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்போம்’ என நீதி அமைச்சரான ஹர்ஷன நாணயக்கார அவர்கள் தெரிவித்துள்ளார். இவர் புதிய அரசமைப்பு உருவாக்கம் மற்றும் பயங்கர வாத தடைசட்டம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பயங்கரவாத தடைசட்டம் நீக்குவது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அரசகுலரத்ன தலைமையில் குழு ஒன்று கூடியது எனவும், தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு காலம் காலமாக தொடர்ந்து வரும் இனப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் பயங்கரவாத சட்டத்தை நீக்குவதற்கும் புதிய சட்டத்தை இயற்றுவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு நாட்டு மக்களின் கருத்துக்களுக்கு எப்போதும் முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதற்காகவே மக்கள் ஜனாதிபதியாக அனுர குமார திசாநாயக்க அவர்களை தெரிவு செய்துள்ளனர் எனவும் தொடர்ந்து மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் கவனம் செலுத்தியுள்ளதாகவும் நீதி மற்றும் ஒருமைப்பாடு அமைச்சரும் சட்டத்தரணியுமான ஹர்ஷன நாணயக்கார அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாக்குறுதியாக இருந்துள்ளது. மேலும் தற்போது முடிவுக்கு வரவுள்ள ஜிஎஸ்பி வரிச்சலுகையை மீளப்பெறுவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதை நோக்கி அரசு நகர வேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டுள்ளது. அத்தோடு சிறுபான்மைச் சமூகங்களின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ளும் வகையில் உள்ளுராட்சித் தேர்தல் காலத்தில் அதன்கான முனைப்பைக்காட்டுவது தேசிய மக்கள் சக்திக்கு பலத்தைச் சேர்க்கும். அந்த வகையில் ஒரே கல்லில் பல மாங்காய்களை வீழ்த்த நினைக்கின்றார் ஜனாதிபதி அனுரா. அவரின் கற்றப்பொல் சரியாகவே குறிவைக்கின்றது என்பது தெளிவாகத் தெரிகின்றது.

வேலிக்கு ஓணான் சாட்சி’ போல பிள்ளையான் வழக்கிற்கு சட்டத்தரணியாக உதய கம்பன்பில !

வேலிக்கு ஓணான் சாட்சி’ போல பிள்ளையான் வழக்கிற்கு சட்டத்தரணியாக உதய கம்பன்பில !

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ரவீந்திரநாத் சிவசுப்பிரமணியம் வழக்கில் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கைதாகியுள்ளார். தற்சமயம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பிள்ளையான் கைது செய்யப்பட்டு 90 நாட்களுக்கு விசாரணை கைதியாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இந்த வழக்கு தவிர முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலும் பிள்ளையான் கைதாகி 5 வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின்னர் ஆதாரங்கள் இல்லை என காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டும் இருந்தார். அத்துடன் ஈஷ்டர் குண்டுத் தாக்குதலிலும் பிள்ளையானின் பங்களிப்பு இருப்பதாக குற்றஞ் சாட்டப்படுகிறது. இது தொடர்பிலும் பிள்ளையான் இரண்டு தடவைகள் விசாரிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இனவாதியான பிவித்துரு ஹெல உறுமய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்பன்பில பிள்ளையானின் பிரத்யேக சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிள்ளையானுக்கு உதய கம்பன்பில வழக்கறிஞராகியுள்ளமை பிரச்சினையின் தீவிரத்தை காட்டுகின்றது என என்பிபி அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கண்டியில் நடந்த கூட்டத்தில் மக்கள் மத்தியில் தெரிவித்தார்.

கடந்தகாலங்களில் இடம்பெற்ற கொலைகள், ஊழல்கள் மற்றும் மோசடிகள் எவ்வளவு பாரதூரமானவையாக இருந்தால் கம்பன்பில மூக்கை நுழைத்திருப்பார் என்று நளிந்த ஜயதிஸ்ஸ அச்சம் வெளியிட்டார். உதய கம்பன்பில இதுவரை எந்தவொரு வழக்குகளிலும் ஆஜராகி பார்க்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவும் இப்போது சுறுசுறுப்பாக செயற்பட ஆரம்பித்திருக்கிறது. நீதிமன்றம் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் வழக்குகளை பதிந்து விசாரிக்க ஆரம்பித்து விட்டது எனவும் கூறி நளிந்த ஜயதிஸ்ஸ ஊழல், மோசடி மற்றும் குற்றவாளிகளின் வயிற்றில் புளியை கரைத்தார்.

 

தமிழ் மக்கள் எம் பக்கம்” – தமிழ் தலைவர்களுக்கு கடுப்பேத்துகின்றார் வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்

தமிழ் மக்கள் எம் பக்கம்” – தமிழ் தலைவர்களுக்கு கடுப்பேத்துகின்றார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்

‘தமிழ் மக்கள், நாடாளுமன்ற தேர்தலில் திசைகாட்டியை தெரிவு செய்து அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் ஆகவே தமிழ் கட்சிகள் காணும் கனவு பலிக்காது. தமிழர்களை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘தமிழ் மக்களுக்குத் தெரியும் தேசிய மக்கள் சக்தி நல்லதொரு திசையைக் காட்டுகின்றது’ என்றும் அவர்கள் ‘சொன்னதையே செய்வார்கள்’ என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

மேலும் ‘வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சனம் செய்வதால் தமிழ் மக்களின் ஆதரவை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாது’ எனவும் ‘மக்களின் அரசியல் பொருளாதார கோரிக்கைகள் எம்மால் நிறைவேற்றப்படும்’ எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து தெரிவிதுள்ளார்.

வடக்கு கிழக்கில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரத்தை தாங்க முடியாது தமிழ் தேசியக் கட்சிகள் தலைவெட்டப்பட்ட கோழிகள் போல் திக்குத் திசை தெரியாமல் ஓடித்திரிந்து உள்ளடக்கமற்ற உளறல்களை வெளியிடுகின்றனர். உள்ளுராட்சி சபைகளுடன் தொடர்பற்ற விடயங்களைப் பேசி மக்களை இனவாத உசுப்பேத்தலுக்குள் தள்ள எண்ணுகின்றினர்.

ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் ஜேவிபி மன்னாரில் வென்றால் மன்னார் பறிபோய்விடும் என்கிறார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மனிதப்புதைகுழிகள் பற்றிப் பேசுகின்றார். ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளுராட்சித் தேர்தலுக்கு பிரதமர் ஏன் யாழ்ப்பாணம் வருகின்றார், ஜனாதிபதி ஏன் யாழ்ப்பாணம் வருகின்றார் என்று கேள்வி எழுப்புகின்றார். தமிழரசுக் கட்சியும் தன் பங்கிற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. எல்லா தமிழ் கட்சிகளுமே, தேசிய மக்கள் சக்தி தேர்தல் இடம்பெற்று இவ்வளவு காலமாகியும் தேசிய மக்கள் சக்தி ஒரு ஆணியையும் புடுங்கவில்லை எனக் கோரஸ் போடுகின்றனர்.

ஆனால் தாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளுராட்சி சபையை, மாகாணசபையை, பாராளுமன்ற ஆசனத்தை தந்த மக்களுக்கு எந்த ஆணியைப் புடுங்கினார்கள் என்பதைச் சொல்லவில்லை. இனிமேலாவது உள்ளுராட்சி சபையில் எந்த ஆணியைப் புடுங்கபோகிறார்கள் என்பதையும் சொல்லவில்லை.

ஆனால் தமிழ் மக்கள் ஏதோ ஜேவிபியும் என்பிபியும் வெவ்வேறு என்று தவறாக நினைப்பதாக தமிழ் கட்சிகள் முட்டாள்தனமாக நம்புகின்றனர். தமிழ் மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும் என்பிபி இன் மீது ஏறியிருந்து சவாரி செய்வது தமிழ் மக்களுக்குத் தெரியும். கடிவாளம் ஜேவிபியின் கையில் இருப்பதை நன்கு தெரிந்து தான் தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களிக்கின்றனர். இது தெரியாமல் சுரேஸ் பிரேமச்சந்திரன் தான் இதை முதன்முதலில் கண்டு பிடித்து புட்டு புட்டு வைப்பதாக கதைசொல்கின்றார். ஈபிஆர்எல்எவ் போல் சில கட்சிகளுக்கு இது தான் கடைசித் தேர்தலாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஏனெனில் ஜேவிபி மட்டுமே உள்ளுராட்சி சபையில் அவ்வவ் பிரதேசங்களுக்கு என்ன செய்வோம் என்பதை மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றனர். யாழ் மாவட்ட மாநாகர முதல்வருக்கான வேட்பாளராக விரிவுரையாளர் கபிலனை அறிவித்து தங்களது வேலைத்திட்டங்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஏனைய கட்சிகளுக்கு மாநகர முதல்வருக்கான வேட்பாளரை அறிவிக்க முடியாமல் உள்ளனர்.

சுன்னாகம் அன்று ஜேவிபி இன் கோட்டை ! அடுத்த 10 ஆண்டுகள் மக்களது – எங்களது ஆட்சிதான் ! கழிவு ஒயில் ஊழல் மோசடிக் கண்டு பிடிப்போம் ! அமைச்சர் சந்திரசேகர்

சுன்னாகம் அன்று ஜேவிபி இன் கோட்டை ! அடுத்த 10 ஆண்டுகள் மக்களது – எங்களது ஆட்சிதான் ! கழிவு ஒயில் ஊழல் மோசடிக் கண்டு பிடிப்போம் ! அமைச்சர் சந்திரசேகர்

தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஆங்காங்கு குழாயடிச் சண்டையில் மோதிக்கொண்டுள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுக்களில் பின்னிப்பிணைந்திருக்கின்றனர். இந்த இடைவெளியில் தேசிய மக்கள் சக்தி கிராமம் கிராமமாகத் தூள் கிளப்புகின்றது. தமிழ் தேசியத் தலைமைகள் அறியாத சந்துபொந்தெல்லாம் நுழைந்து மக்களோடு மக்களாக உறவாடுகிறார்கள். மக்களிடம் நிம்பிக்கையை விதைக்கின்றார்கள். சுன்னாகத்தில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் உரையாற்றிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் அநீதிக்கு எதிராகப் போராடும்படி அறைகூவல் விடுத்தார்.

அதற்கு முன்பேசிய கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர் மூடிமறைக்கப்பட்ட சுன்னாகம் கழிவு நீர் பிரச்சினைய மூடி மறைத்ததில் இன்றைய தமிழ் தேசியக் கைகள் அணைத்தும் அந்தக் கழிவு எண்ணையில் கை நனைத்திருந்தனர். தற்போது தங்கள் கைகளை மாவீரர்களை வைத்தும் தமிழ் தேசியத்தை வைத்தும் துடைத்தெறிந்துவிட்டு மீண்டும் வாக்கு வேட்டையில் இறங்கி உள்ளனர். சுன்னாகத்தை ஜேவிபியின் கோட்டை எனக் குறிப்பிட்ட அமைச்சர் சந்திரசேகர் எங்களுக்கு உங்கள் வாக்குளைத் தாருங்கள் இந்த மோசடிகளை அம்பலப்படுத்தி உங்கள் தண்ணீர் பிரச்சினையைத் தீர்ப்போம் எனத் தெரிவித்தார்.

சுன்னாகம் கழிவு எண்ணைப் பிரச்சினை வடமாகாண சபையின் ஒப்புதலுடன் மூடி மறைக்கப்பட்டது. அன்றைய அதில் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மற்றும் விவசாய சூழலியல் அமைச்சர் பொன் ஐங்கரநேசன் மீது சரமாரியான குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டது. வடமாகாண சபையில் இன்றைய தேசியக் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்துள்ள அன்றைய வடமாகாண அமைச்சர் பொன் ஐங்கரநேசன் போன்றவர்களின் கரங்கள் கறைபடிந்திருந்தது.

கடந்த காலங்களில் உள்ளுராட்சி சபைகளை வைத்திருந்த கட்சிகளின் ஊழல், மோசடி ஆட்சிக்கு முடிவு கட்டி ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்த தமிழ் மக்கள் முன்வரவேண்டும் என்று அமைச்சர் சந்திரசேகர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.

 

பண்டிகை கால விபத்துகள்: 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

பண்டிகை கால விபத்துகள்: 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி !

ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில் நடைபெற்ற பண்டிகை காலத்தில் விபத்துகள் காரணமாக 412 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்தார்.

அவர்களில் 6 பேர் உயிரிழந்த நிலையில் அனுமதிக்கப்பட்டனர். 110 பேர் வீட்டு விபத்துகள், 94 பேர் வீதி விபத்துகள், மற்றும் 80 பேருக்கு அறுவை சிகிச்சைகள் தேவைப்பட்டது. பட்டாசு விபத்துகள் குறைந்த நிலையில், இரண்டு பேர் மட்டும் இவ்வாறு பாதிக்கப்பட்டனர்.

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கத்துக்கான பரிந்துரைகளை முன்வையுங்கள் – நீதியமைச்சர்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்கத்துக்கான பரிந்துரைகளை முன்வையுங்கள் – நீதியமைச்சர்

பயங்கரவாதத்தடைச்சட்டத்தை (PTA) நீக்கவேண்டும் என்பதே அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாடு என நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இதற்கான பரிந்துரைகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு, ஜனாதிபதி சட்டத்தரணி ரின்ஸி அர்ஸகுலரத்ன தலைமையிலான குழுவுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற ஆரம்பகட்டக் கலந்துரையாடலில் இந்த சட்டத்தால் மனித உரிமைகள் மற்றும் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படக்கூடாது என்றும், புதிய சட்டம் சர்வதேச நியமங்களுக்கு இணங்க அமைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த அரசாங்கங்கள் PTA-வை நீக்க முயற்சிக்காததை விமர்சித்த அமைச்சர் ஹர்ஷன, தற்போது நியமிக்கப்பட்ட குழு குறுகிய காலத்துக்குள் தேவையான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றார். மே மாத தொடக்கத்தில் பொதுமக்கள் மற்றும் சிவில் சமூகக் குழுக்களின் கருத்துகளும் பெறப்படும் எனவும் அவர் கூறினார்.

 

அதிகரிக்கும் வெப்பம் மக்களுக்கு எச்சரிக்கை !

அதிகரிக்கும் வெப்பம் மக்களுக்கு எச்சரிக்கை !

இலங்கையில் கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து காணப்பட்ட போதிலும் நாளைய தினம் வெப்பநிலை, எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டளாவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி வடக்கு வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் இரத்தினபுரி, மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பநிலை உயரக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி, கேகாலை, மாத்தளை, பதுளை, நுவரெலியா, ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு 39 – 45 பாகை செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனவே இந்த வெப்பமான காலநிலையில் நீர்ச்சத்து குறைவடைந்து மயக்கம், தலைவலி, உடல் சோர்வு போன்ற உபாதைகள் ஏற்பட கூடும் எனவும், இதற்கு பொதுமக்கள் போதுமான அளவு நீர் அருந்த வேண்டும் எனவும் சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

 

சூரிய படலங்களை செயலில் இருந்து நீக்குமாறு மின்சாரசபை கோரிக்கை !

சூரிய படலங்களை செயலில் இருந்து நீக்குமாறு மின்சாரசபை கோரிக்கை !

இலங்கை மின்சார சபை மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் வெளியிடும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் பிற்பகல் 3 மணி வரையில் வீட்டின் கூரைகளில் உள்ள சூரிய மின்படலங்களை செயலில் இருந்து நீக்குமாறு மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.

நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

விடுமுறை காலம் என்பதால் பல தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்கள் குறைந்தளவில் மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. இதனால் அதிகளவில் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்பட்டால் அது அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

ஏப்பிரல் மாத இறுதிக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

ஏப்பிரல் மாத இறுதிக்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப்பரீட்சையானது கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3,33,185 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.

நாடு முழுவதும் 2,312 பரீட்சை மையங்களிலும் 319 ஒருங்கிணைப்பு மையங்களிலும் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளானது ஏப்ரல் மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்