உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது – பொதுப் பாதுகாப்பு அமைச்சு !

வடக்கு-கிழக்கிலுள்ள மக்கள் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இந்த நிலையில், யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவினர்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலுள்ள மக்களுக்கு சுதந்திரம் உள்ளது, எனினும் அவற்றில் விடுதலைப் புலிகளின் சின்னங்களைப் பயன்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நாட்டில் தடை செய்யப்பட்ட அமைப்பாக இருப்பதால், அந்த அமைப்பின் சின்னங்கள், சீருடைகள் அல்லது அங்கத்தவர்களின் படங்களைப் பயன்படுத்தி கொண்டாட்டங்களை நடத்த முடியாது.

எனவே, நினைவுகூருவதற்கான உரிமை மற்றும் நாட்டின் சட்டக் கட்டமைப்பு ஆகிய இரண்டையும் மதித்து, சட்டத்தின் எல்லைக்குள் நினைவேந்தல்களை நடத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுள்ளார்.

கல்கமுவ பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுர குமார திஸாநாயக்கவின் சத்தியப்பிரமாணத்திற்கு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் !

இலங்கையின் புதிய மிக எளிமையாக ஆடம்பரங்களின்றி பதவியேற்ற நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் சத்தியப்பிரமாணத்திற்கு பயன்படுத்தப்படாத 200 மில்லியன் ரூபா பணம் மக்களின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகவலை கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

அண்மையில் ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது சுமார் 200 மில்லியன் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

மேலும், தமது அரசாங்கத்தின் அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் இனி மக்களின் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் நீரியல் மற்றும் கடல் வள பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்தார்.

இதேவேளை அனுர தலைமையிலான என்.பி.பி அரசாங்கம் அரச தலைவர்களின்  முழுமையான செலவுகளையும் கட்டுப்படுத்தி மக்கள் மேல் விழுகின்ற பொருளாதார சுமையை தடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. முன்னாள் ஜனாதிபதிகள் கடந்த மூன்று வருடங்களில் 27 கோடி(270 மில்லியன்) ரூபாவிற்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளதாக மத்திய வங்கி பதிவுகள் தெரிவித்திருந்தமையும் இங்கு கவனத்தில் கொள்ளத்தக்கது.

ஊசி அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

புதிதாக தெரிவு செய்யப்பட்ட யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவம் தொடர்பான வழக்கில் நீதிமன்றில் ஆஜராகத் தவறியதை கருத்திற் கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், கொழும்பு, பேஸ்லைன் வீதியில் வீதி விபத்தொன்றை ஏற்படுத்தியதுடன், மற்றுமொரு வாகன சாரதியை தாக்கி பலத்த காயம் ஏற்படுத்தியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது குறித்த வழக்கு விசாரணையில் இன்று நீதிமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆஜராகத் தவறியதையடுத்து, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க உத்தரவிட்டார்.

முன்னதாக வழக்கு விசாரணை நாளன்று அவருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றத்தால் பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

எனினும், அது நிறைவேற்றப்படவில்லை.

பத்து பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்படுத்திய பிணைமுறி விவகாரம் – அர்ஜுன மகேந்திரனுக்கு நோட்டீஸ் !

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனை பெப்ரவரி 25ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நோட்டீஸ் அனுப்ப கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தினால் அரசாங்கத்திற்கு பத்து பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டில் அவர் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் கோரிக்கையை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் கால பிரச்சாரத்தின் போது கடந்த  ஆகஸ்ட்  19ஆம் திகதி,  கிரிபத்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார, மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நீதிமன்றினால் சிவப்பு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜுன மகேந்திரன், தான் ஜனாதிபதியான பின்னர் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். – விஜித ஹேரத்

அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (22) இடம்பெற்றது.

அங்கு கருத்து வௌியிட்ட அமைச்சர் விஜித ஹேரத், முஸ்லிம் மக்களுக்கு அநீதி இழைக்க இடமளிக்கப்பட மாட்டாது என தெரிவித்தார்.

நாங்கள் ஜாதி அடிப்படையில் அமைச்சரவை அமைச்சு ஒன்றை கேட்கவில்லை எனவும் தங்களது பிரச்சினையை அமைச்சரவையில் தெரிவிக்கும் போது அதை புரிந்துகொள்ள அங்கு யாரும் இருக்க மாட்டார்களே என முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர் இதன்போது அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.

 

அதற்கு அமைச்சர் பதிலளிக்கையில்… “அப்படி கேட்காதீர்கள், அது தவறு…2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன்”

“நாம் அப்படி இல்லை. இவற்றை செய்தவதற்கு முஸ்லிம் அமைச்சர் தேவை இல்லை. மறுபுறம் உங்களுடன் பேசுவதற்கு அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம்” என்றார்.

வேண்டாத மனைவி கை பட்டாலும் குற்றம் கால் பட்டாலும் குற்றம் என்பது போல நடைபெற்று முடிந்த பொது தேர்தலில் மண் கவ்விய தமிழ்தேசிய பரப்பில் உள்ள அரசியல்வாதிகள் முஸ்லிம் அமைச்சர் ஒருவர் இல்லை இது ஓர் இனவாத அரசு என பேசுவது நாட்டை முன்னேற்ற நினைக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முட்டுக்கட்டை போடுவது போல ஓர் செயல் என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தேசம் நெற்க்கு தெரிவித்தார். இதேநேரம் தேசிய மக்கள் சக்தி மீது முன்வைக்கப்பட்ட முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லையே என்ற சமூக வலைத்தளவாசிகளின் கருத்துக்கு அக்குரணை பிரதேச முஸ்லிம் மக்களுடனான சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் பதிலளித்துள்ளார். அங்கு பேசிய அவர் , முஸ்லீம் அமைச்சர் ஒருவர் இல்லை என்று அதைப் பிடித்துக்கொண்டு தொங்காதீர்கள். தேவையான இடங்களில் தேவையானவர்களை நியமித்துள்ளோம்.2004இல் நான் அமைச்சரவை அமைச்சர். இஸ்லாமிய மகளிர் அணியும் ஹிஜாப்பிற்காக துணி வழங்க வேண்டுமென அமைச்சரவையில் யோசனை முன் வைத்தேன். அதை முஸ்லிம் அமைச்சர்கள் செய்யவில்லை, நான்தான் செய்தேன். மேலும் அம்பாறையில் இருந்து எங்களுக்கு ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட வரவில்லை. ஆனால் ஆதம் பாவாவை தேசிய பட்டியலிலிருந்து நியமித்தோம். மேல் மாகாண ஆளுநராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.” என அவர் தெரிவித்துள்ளார்.

கிராம அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக திருமதி மலர்மதி கங்காதரன்!

இரண்டு அமைச்சகங்களில் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க இரண்டு புதிய அமைச்சு செயலாளர்களை நியமித்துள்ளார்.

அது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இதன்படி, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி ஆயிஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கிராம அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளராக  திருமதி மலர்மதி கங்காதரன் என்கின்ற தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழர்களின் தமிழ்தேசிய அரசியல் பரப்பிலும் சரி – வடக்கு கிழக்கு மாகாண நிர்வாக நடவடிக்கைகளிலும் சரி பெண்களுக்கு எப்போதுமே முன்னுரிமை இருந்தது கிடையாது. அது பற்றி கிஞ்சித்தும் இந்த ஆணாதிக்க சமூகத்தின் ஆர்வலர்கள் கவனம் செலுத்தியது கிடையாது. இப்படியான நிலையில் தேசிய இன நல்லிணக்கம் – பால்நிலை சமத்துவம் என அனைத்திலுமே வடக்கின் அரசியல் கட்சிகளை விட தான் ஒரு படி முன்னிலையில் தான் நிற்கிறேன் என்பதை தேசிய மக்கள் சக்தி அரசு செயலிலும் காட்டி வருகின்றது. இந்த நிலையில் மாற்றமான ஓர் நல்லிணக்க அரசியலை முன்னெடுத்து வருகின்ற போதும் கூட தேசிய மக்கள் சக்தி ஓர் இனவாத அரசு என தொடர்ந்தும் தேசிய மக்கள் சக்தி மீது குற்றச்சாட்டுகளை தமிழ் அரசியல் பரப்பில் உள்ளவர்கள் அனைவரும் முன்வைப்பதானது அவர்களை மக்கள் நிராகரித்துவிட்டார்களே என்ற அச்சத்தின் – ஏக்கத்தின் வெளிப்பாடே தவிர வேறொன்றும் இல்லை என மூத்த அரசியல் ஆய்வாளர் சிவலிங்கம் தேசம் நெற்க்கு தெரிவித்தார்.

அத்தானி குழுமம் முன்னைய இலங்கை அரசுக்கு லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க FDC விசாரணை!

இலங்கைத் தமிழ் அகதிகள்: லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்து கடைசியில் உக்ரைன் போர்க்களத்தில்

 

அத்தானி குழுமம் முன்னைய இலங்கை அரசுக்கு லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க FDC விசாரணை!

 

தலைப்புச் செய்திகள்:

 

1. அத்தானி குழுமம் இலங்கையில் லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க நிறுவனம் ஆராய்கின்றது: இலங்கையில் கப்பல் இறங்குதுறையைக் கட்டுவதற்கு அத்தானி குழுமம் இலங்கை அரசுக்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா என்பது பற்றிய விசாரணைகளை அமெரிக்க நிறுவனமான யுஎஸ் இன்ரநஷனல் டெவலப்மன்ற் பினான்ஸ் கோப்பிரேசன் (US International Development Finance Cooperation) ஆரம்பித்துள்ளது.

 

2. வடக்கு மீனவர் பிரச்சினையும் இலங்கை – இந்திய உறவும்: மீனவர் எங்களுடைய பிரச்சினையை ஜனாதிபதி அனுரா தன்னுடைய இந்திய விஜயத்தின் போது பிரதமர் மோடியுடன் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளரும், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவச் சங்கத்தின் பிரதிநிதியுமான மொகமட் அஹாலம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கோரிக்கை வைத்தார்.

 

3. மீனவர் பிரச்சினையில் யாழ் பல்கலைப் பேராசிரியர்: யாழ் பல்கலைக்கழகப் பொருளியல் பேரசிரியர் அகிலன் கதிர்காமர் வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கு ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். இவருடைய ஈடுபாடு குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இலங்கையினதும் தமிழ் மக்களினதும் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

4. யாரோடு யார் இணைவது தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் குழப்பம்: ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, தமிழரசுக் கட்சி ஆகியவை ஒன்றிணைய வேண்டும் என்ற அழுத்தத்திற்குள் யாரோடு யார் சேருவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

 

5. உக்ரைன் போர்க்களத்தில் இலங்கைத் தமிழர்கள்: ஏஜன்சியில் பணம் கட்டி ஐரோப்பா புறப்பட்ட தமிழ் இளைஞர்கள்இ ரஸ்ய இராணுவ சிப்பாய்களாக உக்ரைன் போர்க் களத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

அகதிகளாக தரைமார்க்கமாக ஐரோப்பா வருபவர்கள் உக்ரைன்இ ரஷ்யா ஊடாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கூடாக மேற்கு ஐரோப்பாவுக்கு வருவது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு அதிகமாக நடைபெற்று வருகின்றது. சுற்றுலா விசாவில் ஐரோப்பாவிற்கு அனுப்பிவைப்பதாக போலி வாக்குறுதியளித்த முகவர்கள்இ ரஸ்யாவிற்கு சுற்றுலா விசாவில் இளைஞர்களை வரவழைத்ததோடு விமானநிலையத்திலேயே வைத்து ரஸ்ய ஆமிக்கொமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

விரிவான செய்திகள்:

 

1. அத்தானி குழுமம் இலங்கையில் லஞ்சம் கொடுத்ததா? அமெரிக்க நிறுவனம் ஆராய்கின்றது: இலங்கையில் கப்பல் இறங்குதுறையைக் கட்டுவதற்கு அத்தானி குழுமம் இலங்கை அரசுக்கு, அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததா என்பது பற்றிய விசாரணைகளை அமெரிக்க நிறுவனமான யுஎஸ் இன்ரநஷனல் டெவலப்மன்ற் பினான்ஸ் கோப்பிரேசன் (US International Development Finance Cooperation) ஆரம்பித்துள்ளது.

 

அமெரிக்க நிறுவனங்கள் பலவற்றிடம் போலியான ஆவணங்களைத் தயாரித்து, மில்லியன் கணக்கில் கடன்பெற்று முதலீடுகளை மேற்கொள்ள அத்தானி நிறுவனம் முயற்சி எடுத்து வந்தது. இந்தியாவில் லஞ்சம் கொடுத்துப் பெறப்பட்ட சூரியக் கதிர் திட்டங்களுக்கான ஆவணங்களை வைத்துக் கொண்டே அத்தானி குழுமம் கடன்களைப் பெற்றது. கடன்களுக்கு விண்ணப்பித்தது. ஆனால் இவர்கள் உண்மையான சூரியக் கதிர் சக்தியைப் பயன்படுத்தும் திட்டங்களுக்குப் பதில் லஞ்சம்கொடுத்து இவ்வாறான திட்டங்கள் பற்றிய அனுமதியை சமர்ப்பித்தமை விசாரணைகளில் வெளிவந்தததையடுத்து கௌதம் அத்தானி அவருடைய மருமகள் சகார் உட்பட ஏழு பேருக்கு அமெரிக்க நீதிமன்று பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.

 

தற்போது கொழும்பில் உள்ள துறைமுகக் கட்டுமானப் பணிகளுக்கும் யுஎஸ் இன்ரநஸனல் டெவெலப்பமன்ற் கோப்பிரேசன் (US International Development Finance Cooperation) 550 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டொலர் கடன் வழங்க கொள்கையளவில் ஒத்துக்கொண்டிருந்தது. ஆனால் அது முழுமையான ஒப்பந்தத்திற்குச் செல்லவில்லை. தற்போது அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து அந்தத் திட்டத்திற்கான நிதியை வழங்குவதற்கு முன் இலங்கையிலும் அத்தானி குழுமம் லஞ்சம் பெற்றுத்தான் இக்கட்டுமானப் பொறுப்பை ஏற்றதா என்ற கேள்விக்கு விடைகான அமெரிக்க நிறுவனம் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

 

அத்தானி குழுமத்தின் விமான நிலைய கட்டுமானத் திட்டத்தை கென்ய அரசு ஏற்கனவே இரத்துச் செய்துவிட்டது. கொழும்பு கப்பற் துறைமுகத் திட்டத்தை தற்போதைய அரசு இரத்துச் செய்தால் சர்வதேச அரங்கில் அது இந்தியாவுக்கும் மோடி அரசுக்கும் பெரும் அவமானத்தை ஏற்படுத்தும். அத்தோடு அத்தானி குமுமம் மன்னாரில் காற்றாலை அமைக்கும் திட்டத்தையும் வைத்துள்ளது. அதற்கு சுழலியலாளர்கள் எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர். பிரதமர் ஹருணி அமர சூரிய இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செய்தியில் தாங்கள் ஆட்சிக்கு வருமுன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றி மேற்பார்வை செய்தே அவற்றுக்கான அனுமதிகளை வழங்குவோம் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மன்னார் காற்றாலைத் திட்டம் குப்பையில் வீசப்படும் என்ற வாக்குறுதி தேசிய மக்கள் சக்தியால் வழங்கப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி அனுராவின் விடயத்தில் அத்தானி குழமம் பற்றிய அம்சமும் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என அவதானிகள் கருதுகின்றனர்.

 

தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என அத்தானி குழுமம் தெரிவித்துள்ளது.

 

2. வடக்கு மீனவர் பிரச்சினையும் இலங்கை – இந்திய உறவும்: மீனவர் எங்களுடைய பிரச்சினையை ஜனாதிபதி அனுரா தன்னுடைய இந்திய விஜயத்தின் போது பிரதமர் மோடியுடன் பேசி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளரும், மன்னார் மாவட்ட மீனவர் கூட்டுறவச் சங்கத்தின் பிரதிநிதியுமான மொகமட் அஹாலம் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கோரிக்கை வைத்தார்.

 

வட மாகாண கடற்தொழிலாளர் இணையத்தினரினர் யாழ் வீரசிங்க மண்டபத்தில் கடற்தொழில் அமைச்சருடன் மேற்கொண்ட சந்திப்பிலேயே இந்தக் கோரிக்கை வைக்கப்பட்டது. இச்சந்திப்பில் வட மாகாண கடற்தொழிலாளர்; இணையத்தின் பேச்சாளர் அன்னராசா ஜந்து அம்சக் கோரிக்கையொன்றையும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் கையளித்தார்.

 

இலங்கை – இந்திய உறவு பாதிக்கப்படாத வகையில் இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வந்து வடக்கு கிழக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் என்று அமைச்சர் சந்திரசேகர் மீனவர்களுக்கு உறுதியளித்தார். நேற்றைய தேசம்நெற் செய்திகளில் குறிப்பிட்டது போல் வடக்கு கிழக்கு பகுதிகளில் சர்வதேச நாடுகளின் ஈடுபாடு பற்றித் தெரிவித்த அமைச்சர் இலங்கையை எந்த நாட்டுக்கும் எதிராகப் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்றும் நாங்கள் இந்தியாவினதும் சீனாவினதும் கடன்பொறிக்குள் சிக்கியிருக்கின்றோம் என்பதையும் சுட்டிக்காட்டினார். அமைச்சருடைய உறுதி மொழிகளை தாங்கள் நம்புவதாக கடற்தொழிலாளர் இணையத்தினர் அங்கு தெரிவித்தனர்.

 

3. மீனவர் பிரச்சினையில் யாழ் பல்கலைப் பேராசிரியர்: யாழ் பல்கலைக்கழகப் பொருளியல் பேரசிரியர் அகிலன் கதிர்காமர் வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகருக்கு ஆலோசகராகச் செயற்பட்டு வருகின்றார். இவருடைய ஈடுபாடு குறுகிய காலத்திலும் நீண்ட காலத்திலும் இலங்கையினதும் தமிழ் மக்களினதும் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டும் என தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

 

இவருடைய பாத்திரத்தை மீனவர்கள் வரவேற்றுள்ளனர். அகிலன் கதிர்காமர் நீண்ட காலமாக சிறிலங்கா டெமொகிரசி போர்ரம் என்ற அமைப்பை மேற்கு நாடுகளில் செயற்படுத்தி வந்தவர். அமெரிக்காவில் கல்விகற்று அங்குள்ள வங்கிகளில் பணியாற்றிய இவர் அமெரிக்க, நோர்வே இராஜதந்திரிகளுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றியவர். தற்போது இலங்கைக் கரையோரப் பிரதேசங்களை இந்தியா ஆக்கிரமிப்பு செய்வது பற்றிய பிரச்சினைகளில் அகிலன் கதிரகாமரின் ஈடுபாடு யாருடைய நலனின் அடிப்படையில் அமையும் என்ற கேள்வி தமிழ் அரசியல் அவதானிகள் மத்தியில் எழுந்துள்ளது. அமெரிக்க நலன்சார்ந்து இலங்கைக்கும் – இந்தியாவுக்கும் இடையே முறுகல் நிலையைத் தோற்றுவிப்பதாக இது அமையக் கூடாது எனவும் அவ்அவதானிகள் தெரிவிக்கின்றனர். தற்போது இலங்கையின் வடக்கு கிழக்கு சர்வதேச ஆடுகளமாக மாறியிருப்பதால் யார் யாருடைய நலன்களை உள்ளொன்று வைத்துச் செயற்படுகின்றனர் என்பது முக்கியமானதாக உள்ளது.

 

4. யாரோடு யார் இணைவது தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் குழப்பம்: ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் தேசிய முன்னணி, தமிழரசுக் கட்சி ஆகியவை ஒன்றிணைய வேண்டும் என்ற அழுத்தத்திற்குள் யாரோடு யார் சேருவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.

 

சங்கு, ஜனநாயகக் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஒரே பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் நான் தோற்றுப் போனவர்களோடு சேருவதா, வென்றவர்களோடு சேருவதா இல்லையேல் இப்படியே தனிக்கட்டையாக நிற்பதா என்று புலம்பியுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் வாருங்கள் பேசுவோம் என யூலி சங்கை ஏற்றிக்கொண்டு குடா நாட்டுக்குள் மட்டும் சைக்கிளோடும் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அறிவித்திருக்கிறார். தமிழரசுக் கட்சியில் நின்று வெற்றி பெற்றாலும் வீட்டுக்குள்ளேயே நிம்மதியாய் படுக்க வழியில்லாமல் எல்லோரையும் அணைத்துக் கொண்டு வீட்டுத் திண்ணையில் படுப்போம் வாருங்கள் என்று பா உ எஸ் சிறிதரன் அழைப்பு விடுகிறார். கிளிச்சுக்கொண்டு போனவை இப்ப என்னவாம் என்ற தோரணையில் பாராளுமன்றத்தில் தன்னுடைய சீட்டும் கிளிந்த பின்னும் எம் ஏ சுமந்திரன் வீட்டில் கோலோச்சிக்கொண்டிருக்கிறார். அனுரா அலையில் மிஞ்சினதுகள் வெள்ளம் கொண்டு போகாதோ என மக்கள் பரிகசிக்கின்றனர்.

 

5. உக்ரைன் போர்க்களத்தில் இலங்கைத் தமிழர்கள்: ஏஜன்சியில் பணம் கட்டி ஐரோப்பா புறப்பட்ட தமிழ் இளைஞர்கள், ரஸ்ய இராணுவ சிப்பாய்களாக உக்ரைன் போர்க் களத்தில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

 

அகதிகளாக தரைமார்க்கமாக ஐரோப்பா வருபவர்கள் உக்ரைன், ரஷ்யா ஊடாக கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கூடாக மேற்கு ஐரோப்பாவுக்கு வருவது கடந்த மூன்று தசாப்தங்களுக்கு அதிகமாக நடைபெற்று வருகின்றது. சுற்றுலா விசாவில் ஐரோப்பாவிற்கு அனுப்பிவைப்பதாக போலி வாக்குறுதியளித்த முகவர்கள், ரஸ்யாவிற்கு சுற்றுலா விசாவில் இளைஞர்களை வரவழைத்ததோடு விமானநிலையத்திலேயே வைத்து ரஸ்ய ஆமிக்கொமாண்டரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

 

இதேபோல 2022 ஆம் ஆண்டு ஒரு பெண் அடங்கலாக 7 பேர் கொண்ட இலங்கையைச் சேர்ந்த குழுவினர் ஏஜன்சி மூலம் வெளிநாடு வர முற்பட்ட போது உக்ரைனில் வைத்து ரஸ்ய இராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டிருந்தனர். அவ்வாறு பிடிபட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு மேல் யுத்த முனையில் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதோடு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டார்கள். பின்னர் உக்கிரைன் இராணுவத்தால் அவர்கள் மீட்கப்பட்டனர்.

 

சுற்றுலா விசாவில் மேற்கு ஐரோப்பாவிற்குச் செல்ல முற்பட்ட இளைஞர்கள் ரஸ்யவின் இராணுவ பயிற்றிச் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 14 நாட்கள் இராணுவபயிற்சி முடிவடைந்ததும் உடனடியாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டு உக்கரைன் ரஸ்யப் போரில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் ஆமி அடையாள அட்டை ஒன்று பயணத்திற்கு தேவைப்படுவதால் தான் பயிற்சி என்று கூறப்பட்டு ரஸ்ய மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தில் கையொப்பம் பெறப்பட்டுள்ளது. உடன்படிக்கையின்படி ஒரு வருட காலத்திற்கு அவர்கள் இராணுவத்தில் பணியாற்ற கடமைப்பட்டுள்ளதாக முகவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

ரஸ்ய உக்கிரைன் எல்லையில் நிற்கும் இளைஞர்களின் தொலைபேசித் தொடர்புசாதனங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு அவர்கள் உறவினருடன் தொடர்பு கொள்வதையும் தடுத்துள்ளனர்.

 

இலங்கையிலில் இருக்கும் உறவினர்கள் இது தொடர்பில் முகவர்களை தொடர்பு கொண்ட போது அவர்கள் மிரட்டப்படுவதோடு இப்பயணத்திற்கென பேசப்பட்ட பணத்தையும் முழுமையாக பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருகிறார்கள். இந்த விடயத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க தலையீடு செய்து தங்களது பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும் என பிள்ளைகளின் தாய்மார் கண்ணீரோடு கோரிக்கை வைக்கின்றனர்.

 

இலங்கையில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் உக்ரைன் இஸ்ரேல் யுத்தத்தில் கூலிப்படைகளாக இணைந்துகொண்டதும் அவரில் ஒருவர் உக்ரைனில் பிடிபட்ட காணொலியையும் தேசம்நெற் வெளியிட்டுஇருந்தது. இந்த இராணுவ வீரர்களுடைய பெற்றோரும் அரசு தங்களது பிள்ளைகளை மீட்டுத்தர வேண்டும் என்று கோரியுள்ளனர்.

 

அகதிகளாக நாட்டை விட்டு வெளியேற முற்பபடும் இலங்கையின் வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞ்ர்களில் கணிசமானவர்கள் மரணத்தை தழுவுகின்றனர். இன்னும் அதிகமானவர்கள் அறியப்படாத நாடுகளில் ஒதுங்கி அவர்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. லட்சங்கள், கோடிகள் கொடுத்து அவர்களுடைய எதிர்காலம் சீரழிக்கப்படுகின்றது. டியுகோ கார்ஸியா (Dego Carcia) , இந்தோனேசியா, பர்மா, ரஷ்யா, உக்ரைன் மற்றும் ஆபிரக்க நாடுகளிலும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மாட்டுப்பட்டுள்ளனர். இன்னும் சிலர் பல நாடுகளின் சிறைகளிலும் உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர் மனித உரிமை அமைப்புகள் இவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டி அவர்களது எதிர்காலத்திற்கு ஒரு நம்பிக்கையை வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

தற்போது மேற்கு நாடுகளுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளுடாக வருவதற்கான வாய்ப்பு உள்ள போது இளைஞர்கள் இவ்வாறான சோம்பேறித்தனமான சட்ட விரோத முயற்சிகளில் ஈடுபடக்கூடாது என சமூக செயற்பாட்டாளர் ஒருவர் கடுமையான வார்த்தைகளில் தெரிவித்தார்.

 

 

@⁨L. A VITHUSAJINY 2024 AL⁩ Ready to be read.

ஈழத்து அரசியலில் உண்மையிலேயே மிஸ்டர் பீன்களாக உலா வரும் நிலாந்தன் உள்ளிட்ட பத்தி எழுத்தாளர் குழு !

“பின்னடைவான ஓர் அரசியல் சூழலுக்குள், தமிழ் மக்களின் இறுக்கத்தைத் தளர்த்தி, எல்லாவற்றையும் சிரித்துக் கடக்கும் ஒரு அனுபவத்தைத் தர ஒரு மிஸ்டர் பீன்ஸ் கிடைத்திருக்கிறாரா? சிரிப்போம்.கடப்போம்.” என பத்தி எழுத்தாளர் நிலாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

 

உண்மையிலேயே ஊசி அர்ச்சுனா தமிழ்தேசிய ஆசன பலத்தை உடைத்துவிட்டார் என்கின்ற அவருடைய கருத்து ஒருபுறம் இருக்க நிலாந்தன் உள்ளிட்ட பத்தி எழுத்தாளர் குழுவினர் ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்தேசியத்துக்கான வாக்கெடுப்பு என கூறி லைக்காவின் நிதி உதவியுடன் சங்கு அரியத்தாரை களமிறக்கி அடிவாங்கினர். அதன் தொடர்ச்சியாக தமிழ்தேசிய கூட்டமைப்பை மேலும் உடைத்து சங்கு சின்னத்தை பாராளுமன்ற தேர்தலிலும் களமிறக்கி தமிழர்கள் சார்ந்த ஆசன பலத்தை மேலும் உடைத்தவர்களும் இவர்கள் தான். இந்த நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர் இன்றுவரை ஜனாதிபதி பொதுவேட்பாளர்  பற்றியோ…?  அவருக்கான இரண்டு லட்சம் வாக்களுக்கான முடிவு தொடர்பிலோ..? அல்லது தோல்விக்கான விமர்சன ரீதியான கலந்துரையாடல்களையோ இன்று வரை செய்யவில்லை. அனைத்து தமிழ்தரப்பையும் ஓர் புள்ளியில் இணைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட வைக்க முன்வந்த பொதுக்கட்டமைப்பை நாசமாக்கியது பற்றியோ கிஞ்சித்தும் வாய் திறக்கவில்லை. ” இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை பத்திரிகைகளில் மட்டும் பிறரை மிஸ்டர் பீன் என நக்கலடித்து வரும் நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர்தான் உண்மையான பீன் என பலரும் விமர்சித்து வருகின்றனர். இநே வேளை நிலாந்தன் உள்ளிட்ட குழுவினர் ஹீரோக்கள் என பரப்புரை செய்துவந்த பார் லைசன்ஸ் புகழ் விக்கியரின் மான் சின்னம், சித்தார்த்தன் உள்ளிட்டோரின் சங்கு சின்னம் ஆகியவை தான் மிஸ்டர் பீன்களாகிப்போயுள்ள அதேவேளை நிலாந்தன் பீன் என கூறிய ஊசி அர்ச்சுனா பெற்ற இருபதாயிரம் வாக்குகளின் பக்கத்தில் கூட நிலாந்தன் குழுவினரின் ஹீரோக்களால் நெருங்க முடியவில்லை.

ஈ.பி.டி.பியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் !

முன்னாள் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா நிர்வாக செயலாளருமான குலசிங்கம் திலீபன் கட்சியில் இருந்தும் அதன்அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் வெளியேறுவதாக இன்று அறிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளாதவது

 

ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம், பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020 இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.

 

தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.

 

இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.

 

இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன். என்றுள்ளது.

தமிழர்களுக்கு நினைவேந்தல் நடாத்துவதற்கு முழுமையான அனுமதி உண்டு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதற்கு எந்த வித தடையும் கிடையாது, அவர்கள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த முடியும் என கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்  தெரிவித்தார்.

யாழில் தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்கள் மாவீரர் தினத்தை இம்முறை எவ்விதமான கெடுபிடிகளும் அடக்குமுறைகளும் இல்லாமல் அனுஷ்டிக்க முடியும்.

அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது. மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்பவர்களை ஒளிப்படம் எடுக்க வேண்டாம் என பாதுகாப்புத் தரப்பினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனவே மக்கள் சுதந்திரமான முறையில் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க முடியும். அது அவர்களின் உரிமை. அதற்கு அரசு தடை எதுவும் போடாது“ என தெரிவித்தார்