செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அல் ஜெஸிராவை பலஸ்தீன அரசாங்கம் தடை செய்யவில்லை; சட்ட நடவடிக்கைக்கு முயற்சி – பிரதமர் சலாம்பயாத்

அல் ஜெஸிரா தொலைக்காட்சி சேவை ஒளிபரப்புக்கு அனுமதியளிக்கப்படுமெனத் தெரிவித்துள்ள பலஸ்தீன அரசாங்கம் இச் சேவையை முன்னர் தடைசெய்ய வில்லையென்றும் தெரிவித்துள்ளது.

அல் ஜெஸிராவின் தொலைக்காட்சி ஆதாரமில்லாத செய்தியை ஒளிபரப்பியமை தொடர்பாக அந்நிறுவனத்துக் கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படு மெனவும் பலஸ்தீன அரசாங்கம் அறிவித்துள்ளது. பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ் மற்றும் அவரது நிர்வாகம் தொடர்பாக அல் ஜெஸிரா மோசமான செய்தியை கடந்த வாரம் ஒளிபரப்பியது.

இஸ்ரேலுக்கும் அதன் நேச நாடுகளுக்கும் விசுவாசமாக மஃமூத் அப்பாஸ் நடந்து கொள்வார் என்பதே அந்தச் செய்தியாகும். இச் செய்தி வெளியான பின்னர் அல் ஜெஸிரா தொலைக்காட்சிச் சேவை பலஸ்தீனத்தில் தடை செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. இது சம்பந்தமாக பலஸ்தீனப் பிரதமர் சலாம் பயாத் கூறிய தாவது:-

அல் ஜெஸிராவுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். அதைத் தடை செய்வதற்கான முயற்சிகளும் தொடரலாம். ஆனால் இதுவரை அல் ஜெஸிரா ஒளிபரப்பு பலஸ்தீனில் தடை செய்யப்படவில்லையெனக் கூறினார். தொடர்பாடல் அமைச்சர் இது பற்றிக் கூறுகையில், மேற்குக் கரை மக்களை அல் ஜெஸிரா தவறுதலாக வழிநடத்த முற்படுவதாகவும் இந்தச் செய்தியை வாசித்த ஊடகவியலாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென்றார்.

இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தொடராக ஆயுர்வேத சிகிச்சை – ஆயுர்வேத ஆஸ்பத்திரிகள் நிறுவவும் திட்டம்

வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கு தொடராக ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்கு வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன் வடக்கின் வசந்தம் அபிவிருத்தித் திட்டத்துடன் கூடியதாக வட பகுதியில் பல சித்த ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்கப்படும், என சுதேச வைத்தியத்துறை அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.

கலன்பிந்துனுவெவ, படிகாரமடுவ பகுதியில் வசிக்கும் 780 குடும்பங்களுக்கு இலவசமாக மண் பாத்திரங்களை பகிர்ந்தளிக்கும் வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், இன்று நாடு முழுவதும் ஒன்றுபடுத்தப்பட்டுள்ளது. மக்களனைவரும் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பிரபாகரன் இன்னும் உயிருடன் தான் இருக்கின்றார் என சிலர் கூறி வருகின்றனர். எமது நாட்டில் பயங்கரவாதம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்று கூறுவோரே இவ்வாறு கூறிவருகின்றனர். பயங்கரவாதத்தினால் நன்மை பெற்றவர்களே இவ்வாறு பொய்யான பிரசாரங்களைப் பரப்பி வருகின்றவர்களாவர். சிறுநீரக நோயினால் வருடாந்தம் பெருமளவு உயிரிழப்புக்கள் இடம்பெறுகின்றன. ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய அனுராதபுர மாவட்ட வாழ் மக்களுக்கு இலவசமாக மண்பாத்திரங்கள் சுதேச வைத்தியத்துறை அமைச்சினூடாக பகிர்ந்தளிக்கப்பட்டு வருகின்றது. அநுராதபுர மாவட்டத்தில் வாழும் எண்பதாயிரம் (80000) குடும்பங்களுக்கு இதுவரையில் மண் பாத்திரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மைக்கேல் ஜாக்சன் மரணத்தை கொலைக் குற்றமாக பதிவு செய்ய காவல்துறை முடிவு

maical-jak.jpgபாப் இசை உலகின் சக்கரவர்த்தி மைக்கேல் ஜாக்சனின் மரணத்திற்கு காரணமாக அமைந்த ஓவர்-டோஸ் ஊசி மருந்தை அவருக்கு வழங்கிய நபர் மீது கொலைக் குற்றம் பதிவு செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக மைக்கேல் ஜாக்சனுக்கு டிப்ரிவன் எனப்படும் ஓவர்-டோஸ் வலிநிவாரணி மருந்தை அளித்தவர்கள், இன்னும் 2 நாளில் கைது செய்யப்படலாம் என நியூஸ் ஆஃப் தி வேர்ல்ட் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜாக்சனின் குடும்ப நண்பரான டெர்ரி ஹார்வி நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், டிப்ரிவன் என்ற வலிநிவாரணி ஊசி மருந்து மற்றும் சில மாத்திரைகளால்தான் ஜாக்சன் உயிரிழந்தார் என அவரின் பிரேதப் பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து அந்த மருந்தை அவருக்கு வழங்கியவர்கள் மீது கிரிமினல் குற்றம்சுமத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குவைத்துக்கு வேலைவாய்ப்புப் பெற்றுச்செல்ல பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் அவசியம்

housemaids.jpgகுவைத்தில் வேலை வாய்ப்புப் பெற்றுச் செல்பவர்கள் இனிமேல் பொலிஸ் அனுமதிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் முதலாம் திகதி அமுலுக்கு வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க தெரிவித்தார்.

குவைத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் வன்செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று புகார்கள் கிடைத்துள்ளன. எனினும் வன்செயல்களில் ஈடுபடுவர்களை இனங்காண முடியாத நிலை காணப்படுகின்றது. இதன் காரணமாக புதிய நடை முறை கொண்டு வரப்படுவதாக குவைத் உள்துறை அமைச்சு இலங்கை அரசுக்கு அறிவித்தது. அதனை அடுத்தே பெலிஸ் அனுமதி சான்றிதழ் கோரப்படுவதாக பணியகத் தலைவர் ரணவக்க மேலும் தெரிவித்தார்.

டெஸ்ட் போட்டிகளிலிருந்து வாஸ் ஓய்வு

chaminda-vass.jpgஇலங்கை வேகப் பந்து வீச்சாளர் சமிந்தா வாஸ் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுகிறார்.பாகிஸ்தான் அணியுடனான 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் வாஸ்.

இதுகுறித்து 35 வயதாகும் வாஸ் கூறுகையில், பாகிஸ்தான் அணியுடனான 3வது டெஸ்ட் போட்டியுடன் டெஸ்ட் போட்டிகளிலிருந்து முறைப்படி ஓய்வு பெறுகிறேன். இருப்பினும் 2011 உலகக் கோப்பைப் போட்டி வரை ஒருநாள் போட்டிகள், 20-20 போட்டிகளில் தொடர்ந்து ஆடுவேன்.

110 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள வாஸ், 354 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் 1994ம் ஆண்டு கண்டியில் நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட்தான் வாஸின் முதல் டெஸ்ட் போட்டி. 12 முறை ஐந்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். 2 முறை பத்து விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

100 டெஸ்ட்களுக்கு மேல் ஆடியுள்ள 3வது இலங்கை வீரர் வாஸ். மற்ற இருவர்- முரளிதரன், ஜெயசூர்யா.

கிழக்கு வாகன ‘பாஸ்’ நடைமுறையை நீக்குவது குறித்து பேச்சு

அம்பாறையிலிருந்து கொழும்பு திருமலை செல்லும் வாகனங்கள் மீதான ‘பாஸ்’ நடைமுறையை நீக்குவது குறித்து சிவில் பாதுகாப்புக் குழுவின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளுக்கான அபிவிருத் தித் திட்ட ஆலோசகர் இஸட் ஏ. எச். ரஹ்மான் பாதுகாப்புத் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

அம்பாறை விவசாய திணைக்களத்தில் கடந்த வாரம் இச்சந்திப்பு இடம்பெற்று ள்ளது. மருதமுனை மற்றும் சாய்ந்தமருது பிர தேச வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் ஆலோச கர் ரஹ்மானை அண்மையில் சந்தித்து ‘பாஸ்’ நடைமுறையால் தாம் எதிர்நோக் கும் பிரச்சினைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். இதனையடுத்தே சிவில் பாதுகாப்பு குழுவின் அபிவிருத்தி திட்ட ஆலோசகர் ரஹ்மான் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவை சந்தித்து உரையாடினார்.

இவ்விடயத்தை கவனமாக செவிமடு த்த ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, ஜனா திபதி மற்றும் பாதுகாப்புச் செயலகத்தின் நேரடிக் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டுசென்று விரைவாக இப் பாஸ் நடைமுறையை நீக்க நடவடிக்கை எடுப்ப தாக வாக்குறுதியளித்துள்ளார்.

இது குறித்து இப்பிரதேச வர்த்தக பிர முகர்கள் ஆலோசகர் ரஹ்மானுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

தயான் ஜெயதிலகவின் சேவை முடிவுக்கு வருகிறது

ஜெனீவாவுக்கான ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதி கலாநிதி தயான் ஜெயதிலகவின் சேவை முடிவுக்கு வரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2007 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஐ.நா.வின் நிரந்தரப் பிரதிநிதியாக தயான் ஜெயதிலக நியமிக்கப்பட்டார். சுமார் இரண்டு வருடகால சேவையைப் பூர்த்தி செய்த நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதியுடன் இவரது சேவை முடிவுக்கு வரவுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பான கடிதம் அவருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த நிரந்தரப் பிரதிநிதி யார் என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சர்வதேச நாணய நிதிய கடனுதவிக்கு அமெரிக்கா நிபந்தனை

hillary_clinton.jpgஇலங்கை கோரியிருக்கும் 190 கோடி டொலர்கள் கடனுதவியை சர்வதேச நாணயநிதியம் வழங்குவதற்கு ஆதரவளிப்பதற்கு ஒபாமா நிருவாகம் நிபந்தனையொன்றை விதித்திருக்கிறது. உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை இலங்கை அரசாங்கம் சர்வதேச தராதரங்களுக்கு இசைவாக நடத்துகிறது என்று வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் உறுதிப்படுத்தாத பட்சத்தில் இலங்கைக்கான உத்தேச 190 கோடி டொலர் சர்வதேச நாணய நிதியக் கடனுதவிக்கு அமெரிக்கா ஆதரவை அமெரிக்க நிதியமைச்சர் அளிக்க முடியாது.

அமெரிக்க செனட் சபையினால் விரைவில் பரிசீலனைக்கு எடுக்கப்படவிருக்கும் இராஜாங்கத் திணைக்களத்தின் ஒதுக்கீட்டுச் சட்டமூலமொன்றில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தில் முஸ்லிம் பிரிவு அமைக்க நடவடிக்கை

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் அப்பகுதி முஸ்லிம் பாடசாலைகளின் தேவை கருதி முஸ்லிம் பிரிவொன்றை ஆரம்பிக்க மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தில் முன்பு இயங்கி வந்த முஸ்லிம் பிரிவை மீண்டும் ஆரம்பிக்குமாறு விடுத்த கோரிக்கையின் பேரில் முதலமைச்சர் இப்பிரிவை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக ஆராயும் கூட்டமொன்று அண்மையில் மாகாண கல்வித் திணைக்களத்தில் நடைபெற்றது. இம் முஸ்லிம் கல்விப் பிரிவு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மாகாண கல்விப் பணிமனையில் இயங்க ஆரம்பிக்குமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலை நேரங்களில் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்த சுற்றுநிருபம் கொண்டுவரப்பட்டுள்ளது

images-teli.jpgபாடசாலை நேரங்களில் ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் சுற்று நிருபமொன்று கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய மாகாண தமிழ்க் கல்வியமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண தமிழ் மொழிப் பாடசாலைகளின் அதிபர்களுக்கான கூட்டமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; பாடசாலை நேரங்களில் ஆசிரியர்கள் கையடக்கத் தொலைபேசியைப் பாவிப்பது மாணவர்களின் கற்றல் மற்றும் கற்பித்தல் நட வடிக்கைகளைப் பாதிக்கும். எனவே பாடசாலைகளில் கையடக்கத் தொலைபேசி பாவனை தொடர்பாக ஓர் ஒழுங்கு முறையைக் கொண்டுவரவேண்டியுள்ளது. ஆசிரியர்களின் கையடக்கத் தொலைபேசி பாவனை எந்த வகையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கக் கூடாது. எனவே இது தொடர்பில் சுற்று நிருப மொன்றை வெளியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பாடசாலைகளில் ஒழுக்கம் பேணப்பட வேண்டும். அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் நல்லுறவுகள் இருக்க வேண்டும். பாடசாலைகளில் பௌதிக வளங்கள் அதிகரிக்கப்பட்டு கல்வி நிலை உயர்வடைவது போல் ஒழுக்க விழுமியங்களும் வளர்ச்சிகாண வேண்டும்.

இன்று பாடசாலைகளில் மாணவனால் அதிபர் தாக்கப்படுகின்றார். இதனால் ஒழுக்கம் குறித்து தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது. மலையக மாணவர்கள் க.பொ.த.சாதாரணப் பரீட்சையில் சித்தியடையும் சதவீதம் அதிகரிக்குமானால் மட்டுமே உயர்தர வகுப்புக்களில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை மட்டுமன்றி பல்கலைக்கழகம் நுழையும் மாணவர் எண்ணிக்கையும் அதிகரிக்கும். எனவே, இந்திய தூதரகத்தின் உதவியுடன் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்தும் வேலைத்திட்டமொன்று மேற் கொள்ளப்படவுள்ளது.

இவ்வேலைத்திட்டத்தின் கீழ் இவ்வருடம் கணிதம், விஞ்ஞானம் மற்றும் ஆங்கிலம் முதலான பாடங்கள் அமுல்படுத்தப்பட்டாலும் எதிர்காலத்தில் ஏனைய பாடங்களையும் கவனத்தில் கொள்ளப்படும். மத்திய மாகாணப் பாடசாலைகளில் ஆசிரிய இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த இடமாற்றங்கள் மூலம் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படமாட்டாது.

மலையக மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஓர் கூட்டு முயற்சி அவசியமாகும். அதிபர். ஆசிரியர் மற்றும் பெற்றோர் யாவரும் பங்களிப்புச் செய்ய வேண்டும். நாம் அமைச்சு மட்டத்தில் உதவிகளை நல்குவோம் என்றார். இக்கூட்டத்தில் மாகாண தமிழ்க் கல்வி அமைச்சின் உதவிக் செயலாளர் சதீஸ். முன்னாள் மாகாண சபைத் தலைவர் துரைமதியுகராஜா ஆகியோரும் கலந்து கொண்டனர்.