ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 18 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, பாதிக்கப்பட்ட குடும்பமே மன்னித்துள்ள நிலையில், தன்னை விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார். நளினி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 18 வருடமாக நான் சிறையில் உள்ளேன்.
இதற்கிடையே 14 ஆண்டுகள் முடிந்த பிறகு ஆயுள் தண்டனை கைதியான என்னை விடுதலை செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றில் வழக்கு தொடர்ந்தேன். ஆனால் எனது விடுதலை குறித்து மறு ஆய்வு செய்யும்படி ஆலோசனை வாரியத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஆயுள் கைதிகளுக்கான ஆலோசனை வாரியத்தை மறுசீரமைப்பு செய்யும்படி உத்தரவிட்டது. இந்த உத்தரவு பிறப்பித்து ஒரு வருடமாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. என்னை விடுதலை செய்யவும் இல்லை. நான் ஏற்கனவே சோனியாகாந்திக்கு இது குறித்து கோரிக்கை மனு அனுப்பியுள்ளேன்.
இதற்கிடையே ராஜீவ்காந்தியின் மகள் பிரியங்கா என்னை வேலூர் சிறையில் நேரில் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவங்களை மறந்து என்னை மன்னித்து விட்டதாக கூறினார். பாதிக்கப்பட்ட குடும்பமே என்னை மன்னித்துள்ள நிலையில் விடுதலை செய்ய மறுக்கின்றனர். 43 வயதான எனக்கு 18 ஆண்டுகள் சிறை வாழ்க்கை கழிந்து விட்டது. எனவே ஆலோசனை வாரியம் நியமிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமுல் படுத்த வேண்டும். என்னை முன் கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று நளினி தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 14 ம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது