இந்தி யாவின் உத்திரப் பிரதேச மாநில முதல்வர் மாயாவதி மற்றும் அவருடைய முன்னோடிகளாக கருதப்படும் தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராடிய தலைவர்களின் சிலைகளை அமைக்கும் பணியை மாநில அரசாங்கம் நிறுத்த வேண்டுமென இந்தியாவின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலைகள் அமைக்கப்பட்டுவரும் நினைவகங்களில் கட்டிடப் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை மாலையோடு நிறுத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது.
கட்டிடப்பணி நிறுத்தப்படும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை அன்று மாநில அரசாங்கம் உத்திரவாதம் வழங்கியிருந்தும் பணி நிறுத்தப்பட்டிருக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருந்தது. தலித் சமூகத்தை சேர்ந்தவரான முதல்வர் மாயாவதி, தற்பெருமைக்காக அளவுக்கதிகமாக செலவுசெய்து சிலைகளை அமைக்கிறார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.