புதிய தேசிய போக்குவரத்து கொள்கை விரைவில் அமுல் – அடுத்தவாரம் அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பு

26parliament.jpgபுதிய தேசிய போக்குவரத்துக் கொள்கையொன்றை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக பயணிகள் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவன்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இதுதொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர், அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் அதனைப் பாராளுமன்றத்திற்குக் கொண்டு வந்து நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டாரவின் தலைமையில் கூடியது. வழமையான நடவடிக்கைகளுக்குப்பின் வாய் மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஜே. வி. பி. எம். பி. ரணவீர பதிரண எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்:- மேல் மாகாணத்தில் வாகன நெரிசல்களைத் தவிர்ப்பதற்காக ‘சிட்டிலிங்’ சேவை எனும் பஸ் சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக காலி வீதியூடாக கொழும்புக்குள் பிரவேசிக்கும் தனியார் வாகனங்கள் மொரட்டுவையில் தமது வாகனங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து எமது பஸ் சேவையை உபயோகப்படுத்த முடியும்.

முச்சக்கரவண்டி சேவை தொடர்பில் எடுத்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்வகையில் அதற்கான தனியான நிறுவனமொன்றை அமைத்து செயற்படுவது அவசியம். தற்போது நாடளாவிய ரீதியில் நான்கு இலட்சத்து இருபதினாயிரம் முச்சக்கரவண்டிகள் உள்ளன. இதற்கு முறையான நிர்வாகம் ஒன்று தேவை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *