செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ஐ.தே.மு கொள்கை விளக்கக் கோவை கையளிப்பு ஊர்வலம் ஆரம்பம்

ranil.jpgஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை விளக்கக் கோவையினை கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்கர்களுக்குக் கையளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் சுமார் 250 வாகனங்களுடன் இன்று முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியது. ரணில் விக்கிரமசிங்க, ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர உள்ளிட்ட முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.நாளை விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளனர்

நன்றி ; புகைப்படம் www.dailymirror.lk

நேபால் மாவோயிஸ்ட்டுக்களின் தொடரும் போராட்டம்

Nepal_Maoists_Protestநவம்பர் 12ல் நேபால் மாவோயிஸ்ட்டுக்கள் மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர். தலைநகர் காத்மண்டு வீதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அரச கட்டிடத் தொகுதியை சுற்றி வளைத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதன் அனைத்து நுழைவாயில்களையும் அடைத்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகையையும் குண்டாந்தடி அடியையும் பயன்படுத்தி கடுமையாக நடந்த கொண்டனர். மாணவர்களும் இளையவர்களும் இவ்வார்ப்பாட்டத்தில் பெருமளவில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியுடைய அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

Nepal_Maoists_Protestஆயுதப் போராட்டத்தில் இருந்து சமாதான உடன்பாட்டுக்கு வந்த மாவோயிஸ்ட்டுக்கள் சென்ற தேர்தலில் அதிகப்படியான ஆசனங்களைப் பெற்று கூட்டாட்சியை ஏற்படுத்தினர். தங்களது போராளிகளை நேபாள இராணுவத்தில் இணைப்பதற்கு இராணுவத் தளபதி சம்மதிக்காததால் அவரை பதவிநீக்கம் செய்தனர். அரசியலமைப்புக்கு மாறாக ஜனாதிபதி இப்பதவி நீக்கத்தை நிராகரித்து இராணுவத் தளபதியை மீண்டும் பதவியில் அமர்த்தியதை அடுத்து மாவோயிஸ்ட்டுக்களின் ஆட்சி தடம்புரண்டது.

அண்மைக் காலத்தில் ஆயுதப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி அரசியல் ரீதியாகவும் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஒரு முன்ணுதாரணமாக நேபால் மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம் அமைந்திருந்தது. பிராந்திய மற்றும் சர்வதேச வல்லரசுகளின் பல்வேறுபட்ட நெருக்குவாரங்கள் மத்தியிலும் மாவோயிஸ்ட்டுக்கள் தங்கள் அரசியல் வல்லமையை நிரூபித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு தசாப்தத்திற்குப் பின்னரேயே மாவோயிஸ்ட்டுக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. இலங்கையில் மார்க்ஸிய அமைப்புகள் சில உருவான போதும் அவை போராட்டத்திற்கு தலைமை தாங்கக் கூடிய ஆளுமையைக் கொண்டிருக்கவில்லை. இன்று இலங்கையில் புரட்சி பற்றி பேசுபவர்கள் பெரும்பாலும் இலங்கைக்கு வெளியிலேயே வாழ்கின்றனர். இவர்கள் கீ போட் மார்க்ஸிட்டுக்களாகவே உள்ளனர். ஆனால் நேபாளில் புரட்சி பற்றிப் பேசும் மாவோயிஸ்ட்டுக்கள் காத்மண்டு வீதிகளில் போராட்டத்தை நடத்துகின்றனர். அதனால் அங்கு புரட்சி சாத்தியமாவதற்கான வாய்ப்பும் அதிகம் காணப்பட்டது.

”வன்னி முகாம்கள் நல்லமுறையில் இயங்குகின்றது. மீள்குடியேற்றம் நல்லமுறையில் நடக்கின்றது” அவுஸ் பிரதமரின் விசேட பிரதிநிதி

John_McCarthyநவம்பர் 12ல் மனிக் பாம் முகாமுக்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய பிரதமரின் விசேட பிரதிநிதி ஜோன் மக்காத்தி ”நாங்கள் நேரடியாக நிலைமைகைளப் பார்வையிட்டது பயனுள்ளதாக இருந்தது” என்று தெரிவித்ததுடன் ”அங்கு கண்ட விடயங்கள் தங்களை ஊக்கப்படுத்தி உள்ளது” என்றும் குறிப்பிட்டார். ”முழுமையாகப் பார்க்கையில் முகாம்கள்நல்ல முறையில் இயங்குககின்றது. மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நல்லமுறையில் நடைபெறுகின்றது” என்று தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவை நோக்கி வரும் படகு அகதிகளின் எண்ணிக்கை அதிகரிதுள்ள நிலையில் அவ்வாறு அகதி அந்தஸ்துக் கோரி வருவொரைக் கட்டப்படுத்தும் கூட்டு நடவடிக்கைகள் தொடர்பான உடன்பாட்டில் அவுஸ்திரேலிய இலங்கை அரசுகள் கைச்சாத்து இட்டன. அதற்காகவே அவுஸ்திரேலியப் பிரதமரின் விசேட தூதுவர் இலங்கை வந்திருந்தார்.

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம்கோரி கடந்த ஒரு மாதகாலமாக கடலில் தவிக்கும் இரு தொகுதிப் படகு அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதற்கு அவுஸ்திரேலியா முயற்சி எடுத்து வருகின்றது. அதற்கு பிரித்தானிய பிரதமரின் விசேட தூதுவர் டெஸ் பிரவுணியும் தனது முழுமையான ஆதரவை வழங்கி உள்ளார்.

முல்லை மீள்குடியேற்ற பகுதியில் விவசாய நடவடிக்கை ஆரம்பம்

imalda.jpgமுல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் மீளக் குடியமர்ந்த பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக 17ஆம் திகதி விவசாயக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாக அரச அதிபர் கூறினார். இதன் போது 10 சிறிய குளங்களையும் 10 பெரிய குளங்களையும் புனரமைப்புச் செய்து விவசாயத்துக்குத் தேவையான நீர்ப்பாசனத்தைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்றைய தினத்துடன் 1682 குடும்பங்களைச் சேர்ந்த 5532 பேர் மீளக் குடியமர்த்தப்பட்டுள்ளதாக அரச அதிபர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் 4415 குடும்பங்களைச் சேர்ந்த 16394 பேரை மீளக் குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார். குறித்த காலப் பகுதிக்குள் துணுக்காய் பிரதேசத்தில் 10312 பேரும், மாந்தையில் 4691 பேரும், ஒட்டுச்சுட்டானில் 1391 பேரும் மீளக் குடியமர்த்தப்படுவர் என அரசாங்க அதிபர் மேலும் கூறினார்.

ஐநா பிரதிநிதியின் மற்றுமொரு விஜயம்

John_Holmes_UNஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான மற்றும் அவசர உதவிகளுக்கான இணைப்பாளர் ஜோன் ஹொல்மஸ் நவம்பர் 17 முதல் 19 வரையான மூன்று நாள் பயணத்தை மேற்கொள்ள உள்ளாதாக ஐநா பேச்சாளர் நவம்பர் 12ல் அறிவத்துள்ளார். ஜோன் ஹொல்ம்ஸ் பெப்ரவரி ஏப்ரல் மே மாதங்களில் இலங்கைக்கு சென்று நிலைமைகளைப் பார்வையிட்டு இருந்தார். தற்போது நான்காவது தடவையாக அவர் இலங்கைக்குப் பயணிக்கின்றார்.

சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள் பலர் வன்னி முனாம்களுக்குச் சென்று பார்வையிட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் பொதுவாக மக்கள் விரைவில் மீள் குடியெற்றப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர். வன்னி முகாம்களில் மக்களுடைய வசதிகள் மட்டுப்படுத்தப்பட்டு இருப்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டி இருந்தனர்.

இலங்கையின் தற்போதைய நிலை பற்றி தென் ஆபிரிக்கா. தமிழர்களுக்கு விளக்கப்படும்

இலங்கையைப் பற்றிய பொய்ப் பிரசாரங்களை பரப்புவதன் மூலம் இலங்கையின் கீர்த்திக்கு பங்கம் விளைவிக்கும் நடவடிக்கைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய சிலர் இப்போதும் ஈடுபட்டு வருவதாக தென் ஆபிரிக்காவின் வெளிவிவகார அமைச்சர் திருமதி மெயிட்டே நெகோனா மெஷபானே கூறியுள்ளார்.

இலங்கையில் நிலவும் தற்போதைய நிலை தொடர்பாக தனது நாட்டின் தலைமைத்துவத்துக்கும் மற்றும் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்கும் அறிவுறுத்துவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க விருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் நேற்று காலை ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேசினார். அப்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

ஏ-9 வீதி போக்குவரத்து கட்டுப்பாடுகள் தளர்வு

யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களின் செளகரியம் கருதி ஏ-9 வீதியின் மூலம் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயணிகள் போக்குவரத்துக்கும் இருந்த கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக அரசாங்கம் நேற்று விடுத்த அறிக்கையில் தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள் பற்றி மேலும் கூறப்பட் டுள்ளதாவது,

நாட்டின் வேறு எந்தப் பகுதியிலும் இருப்பதைப் போன்றே யாழ்ப்பாணத்துக்கும் பொருட்களை கொண்டு செல்வதற்கு அல்லது எடுத்து வருவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.

அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் ஏற்கனவே பதிவு செய்யப் பட்டுள்ள வாகனங்கள் பொருட்களை கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

யாழ்ப்பாணத்துக்கு பொருட் களை கொண்டு செல்வதற்கான வாகனங் களை அத்தியாவசிய சேவைகள் ஆணை யாளர் நாயகத்திடம் பதிவு செய்வது 2009 நவம்பர் 30ஆம் திகதி வரை நீடி க்கப்பட்டுள்ளது. அரசாங்க டிப்போக்கள், கூட்டுத்தாபனங்கள் வங்கிகள் மற்றும் உற்பத்திக் கம்பனிகள் தமது சொந்த வாகனங்களில் பொருட்களை 6 மாதகாலத்துக்கு தொடர்ந்து எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.

இதற்கான விண்ணப்பங்களை அந்த நிறுவனங்கள் அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொது மக்கள் தற்போது சேவையிலீடுபடும் பொது போக்குவரத்து மூலம் அல்லது தனியார் பஸ்கள் மூலம் யாழ்ப்பாணம் செல்வதற்கும் அங்கிருந்து திரும்புவதற்கும் அனும திக்கப்படுவர்.

கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் சேவையிலீடுபட விரும்பும் தனியார் பஸ் மற்றும் சொகுசு பஸ்களின் சொந்தக்காரர்கள் அதற்கான வீதி அனுமதிப் பத்திரங்கங்களுக்காக தேசிய போக்குவரத்து ஆணைக் குழுவிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

துறைமுக அதிகார சபையின் கப்பல்களுக்கான அனுமதி மற்றும் சேவைக்கான தேவைகளுக்கு ஏற்றதாக அமையும் வகையிலான தனியார் கப்பல்கள் நாட்டின் எந்தவொரு துறைமுகத்தில் இருந்தும் வட பகுதிக்கு பொருட்களை ஏற்றிச் செல்ல அனுமதிக்கப்படும். இதற்கு அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்தின் அங்கீகாரம் தேவைப்படமாட்டாது.

சரத் பொன்சேகா பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்

031109sarathfonseka.jpgஜெனரல் சரத் பொன்சேகா கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து  ஓய்வு பெறுவதற்கான விண்ணப்பக் கடிதத்தை இன்று பிற்பகல்  ஜனாதிபதியிடம் கையளித்துள்ளார். இதனை ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க உறுதி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக களமிறங்கவிருப்பதாக வெளியான தகவலின் மத்தியிலேயே இந்த கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இவரது பதவிக்காலம் எதிர்வரும் டிசம்பர் 15 ஆந் திகதியோடு நிறைவு பெறுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

அம்பாந்தோட்டையில் புதிய வர்த்தக வலயம்!

0000anura.jpgஅம்பாந் தோட்டையில் புதிதாக சுதந்திர வர்த்தக வலயம் ஒன்றை அமைக்க 200 ஹெக்டர் காணியை ஒதுக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை கைத்தொழில் அபிவிருத்தி  மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு  அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா சமர்பித்திருந்தார்.

மஹிந்தசிந்தனையின் கீழ் புதிதாக 12 சுதந்திர வர்த்தக வலயங்கள் அமைக்கப்படவுள்ளன. அதனடிப்படையில் அம்பாந்தோட்டையில் வர்த்தக வலயம் ஒன்றை அமைக்க குறிப்பிட்ப்பட்ட 200 ஹெக்டர் காணி வழங்கப்பட உள்ளது

மியன்மார் நாட்டின் தலைவர் இன்று இலங்கைக்கு வருகிறார்.

myanmar_president.jpgமியன்மார் அரச சமாதான மற்றும் அபிவிருத்திச் சபை ஒன்றியத்தின் தலைவரும், சிரேஷ்ட உயரதிகாரியுமான தன் சூவி இன்று வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவிருக்கின்றார். அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று,  மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று பிற்பகல் வருகை தருகின்ற தன் சூவியை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹுசைன் பைலா தலைமையிலான வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் வரவேற்பர். இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம மற்றும் உயரதிகாரிகளையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்.