செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மஹேல – பிரசன்ன உலக சாதனை;

mahela_prasanna.jpgஅகமதா பாத் டெஸ்டில் இலங்கை அணியின் 6வது விக்கெட்டான மஹேல – பிரசன்னா ஜயவர்தன ஜோடி புதிய உலக சாதனை படைத்தது. இந்த ஜோடி 351 ஓட்டம் குவித்தது. இதன் மூலம் 72 ஆண்டுகால சாதனை முறியடிக்கப்பட்டது. இதற்கு முன்பு 1937ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பிங்கின்டன் – பிராட்மேன் ஜோடி 346 ஓட்டம் குவித்ததே சாதனையாக இருந்தது.

mahela-jayawardene.jpgமஹேல 275 ஓட்டங்களை குவித்து இந்தியாவுக்கு எதிராக சாதனை புரிந்தார். இதற்கு முன்பு 1999ம் ஆண்டு கொழும்பில் இந்தியாவுக்கு எதிராக 242 ஓட்டம் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக 2வது அதிகபட்ச எண்ணிக்கை எடுத்தது. 1997ம் ஆண்டு அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 952 ஓட்டம் குவித்து இருந்தது.

இலங்கை அணியின் முன்னாள் தலைவரும் சிரேஷ்ட துடுப் பாட்ட வீரருமான மஹேல ஜயவர்தன டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 ஆயிரம் ஓட்டங்களைத் தாண்டிய முதல் இலங்கை வீரர் என்ற பெருமையை தட்டிக் கொண்டார்.

இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அஹமதாபாத் சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இந்திய அணி சார்பாக காம்பீர் ஆட்ட மிழக்காமல் 74 ஓட்டங்களுடனும் மிஸ்ரா ஆட்ட மிழக்காமல் 12 ஓட்டங்களையும் பெற்று துடுப்பெடுத்தாடினர்.

இதேவேளை ஷெவாக் 51 ஓட்டங்களுடன் டிராவிட் 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து சென்றனர். பந்து வீச்சில் வெலகெதர, ஹேரத் தலா ஒரு விக்கெட்டை யும் வீழ்த்தினர். இன்று 5வது நாள் ஆட்டம் இன்று தொடரும்.

இலங்கைக்கு மருந்து விநியோகிக்கும் நான்கு இந்திய கம்பனிகளுக்கு தடை

இந்தியாவிலுள்ள நான்கு மருந்து உற்பத்தி கம்பனிகளின் உற்பத்திகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

இந்தக் கம்பனிகளின் உற்பத்திகள் யாவும் அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதுடன், அக்கம்பனிகளின் உற்பத்திகளைத் தனியார் ஆஸ்பத்திரிகள் பயன்படுத்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத் துறை அமைச்சின் அதிகாரி ஒருவர் நேற்றுத் தெரிவித்தார்.

அரசாங்க ஆஸ்பத்திரிகளின் பாவனையிலிருந்து நீக்கப்பட்டுள்ள மருந்துப் பொருட்களின் பெறுமதியை அடுத்துவரும் மூன்று மாதங்களுக்குள் மீளப் பெற நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

நோயாளர்களுக்குப் பயன்படுத்தப்படவிருந்த ஊசி மருந்து குப்பிகளுக்குள்ளும், சேலைன் போத்தலினுள்ளும், கண்ணாடித் துகள்களும், பிளாஸ்ரிக் துண்டுகளும் இருந்தமை அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டதையடுத்து நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையிட்டு சுகாதாரப் பராமரிப்பு, போஷாக்குத்துறை அமைச்சு இந்த ஊசி மருந்து குப்பிகளையும், சேலைன் போத்த லையும் உற்பத்தி செய்து இலங்கைக்கு விநியோகித்த இந்தியாவின் ஆறு கம்பனி களின் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளை உடனடியாக வரவழைத்து விசாரணை நடத்தியது.

இந்த விசாரணையின் அடிப்படையில் இந்தியாவின் நான்கு மருந்துப் பொருள் உற்பத்தி கம்பனிகளிலிருந்து அடுத்த இரு வருடங்களுக்கு எந்தவொரு மருந்துப் பொருளையும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதற் கேற்ப அக்கம்பனிகள் உற்பத்தி செய்யும் மருந்துப் பொருட்களின் இலங்கை பதிவுகளும் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இக்காலப் பகுதிக்குள் இக்கம்பனியினர் தங்களது உற்பத்திகளின் தரத்தை உறுதி ப்படுத்துவது அவசியம் என அமைச்சு குறித்த கம்பனிகளிடம் கேட்டிருக்கின்றது.

பெல்கோ பார்மா, வின்ஸ் பயோ புரடெக்ட் லிமிட்டட், கிளிச் மருந்து பொருள் கம்பனி, யுமெடிகா லெபோரட்டரி தனியார் நிறுவனம் ஆகிய நான்கு கம்பனிகளின் உற்பத்திகளே இந்நாட்டுக்கு இறக்குமதி செய்யத்தடை விதிக்கப்பட்டுள்ளது.  இதன்படி பெல்கோ பார்மா நிறுவனத்தின் 18 வகையான ஊசி மருந்துகள் பாவனையிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாகவும் சுகாதார அமைச்சின் அதிகாரி கூறினார்.

ஊ. சே. நிதி: மாவட்ட காரியாலயங்களிலும் விண்ணப்பிக்கலாம்

ஊழியர் சேம இலாப நிதியத்திற்கென தனியான புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருவதால் ஊழியர் சேமலாப நிதியினைப் பெற்றுக் கொள்ள விண்ணப்பிப்பவர்கள் தத்தமது மாவட்டக் காரியாலயங்களில் தமது விண்ணப்பங்களை ஒப்படைக்குமாறு தொழிலமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

ஊழியர் சேமலாப நிதிய அலுவலகம் கொழும்பு கொள்ளுப்பிட்டியிலும் பின்னர் அது நாரஹேன்பிட்டியிலும் இயங்கி வந்ததுடன் தற்போது தற்காலிக மாகத் தொழிலமைச்சில் சிறிய தொரு பிரிவில் இயங்கி வருகிறது.புதிய கட்டட நிர்மாணம் முடியும் வரை மாவட்ட அலுவலகங்களில் நமது சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவித்துள்ளார்.

180 நாட்கள் தொடர் பணி புரிந்த அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் – தற்காலிக, சமயாசமய, ஒப்பந்த அடிப்படையில் சேவையாற்றுவோர் தகுதி

anura.jpg180 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பணிபுரிந்துள்ள தற்காலிக, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு அரசாங்க துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இவர்கள் அரச மற்றும் மாகாண பொதுச் சேவையில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நியமிக்கப்படுவார்கள்.

அமைச்சரவை பேச்சாளரும் தகவல் ஊடகத் துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சருமான அநுர பிரியதர்ஷன யாப்பா இதனை தெரிவித்தார்.

அரசாங்கத்தின் இந்த அறிவிப்பின் மூலம் சுமார் 25 ஆயிரம் தற்காலிக ஊழியர்கள் நன்மை அடையவுள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் நிரந்தர நியமனங்கள் வழங்கப்படும் என நிதி மற்றும் அரச வருவாய்த்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக நிரந்தர நியமனம் வழங்கப்படாது உள்ள அரசாங்க ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி திட்டமிடல் அமைச்சர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் நேற்று (19) கருத்துத் தெரிவித்த அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா, இது குறித்து மேலும் கூறியதாவது,

அரசாங்கத்தின் பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக பல்வேறு ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும், அவற்றில் சில ஆட்சேர்ப்புகள் திறைசேரியின் முழுமையான அனுமதியின்றியே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே தற்காலிக சமயாசமய, மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கும் அரச துறையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்காக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினூடாக சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்படும்.

இதன்படி, 2009 ஒக்டோபர் 31ம் திகதியாகும்போது தொடர்ச்சியாக 180 நாட்கள் பணிபுரிந்த, குறித்த பதவிக்குரிய தகைமைகளைக் கொண்ட 45 வயதுக்கு குறைவான ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும்.

குறித்த நிறுவனங்களில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் இவர்களுக்கு நியமனம் வழங்கப்படும். எதிர்வரும் காலங்களில் ஏற்படும் வெற்றி டங்களுக்கு ஏற்ப இவர்களுக்கு நியமனம் வழங்கி, மேலதிகமாக உள்ள ஊழியர் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

அரச கூட்டுத்தாபனங்கள், சபைகள் என்பவற்றில் பணிபுரியும் தற்காலிக, சமயா சமய மற்றும் ஒப்பந்த அடிப் படையிலான ஊழியர்களுக்கு நிரந்த நியமனம் வழங்குவதற்கான அதிகாரம் முகாமைத்துவ சேவைத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர, இனிமேல் திரைசேறியின் உரிய அனுமதியின்றி தற்காலிக, சமயாசமய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை நியமிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் நெருங்குவதால் அரசியல் நோக்கத்திற்காக அரசாங்க ஊழியர் களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவோ அல்லது கொடுப்பனவுகளை அதிகரிக்கவோ அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. ஒவ்வொரு காலப்பகுதியிலும் அரசாங்க அத்தியாவசிய தேவைகளுக்காக சேர்க்கப்பட்ட ஊழியர்களுக்கு பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படுவது வழமையானது. இதில் அரசியல் நோக்கம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மீள்குடியேற்ற மக்களின் சுகாதாரம்; தொற்று நோய்த் தடுப்பு நடவடிக்கைக்கு வடக்கு ஆளுநர் உத்தரவு

chandrasiri_governer.jpgவடபகுதியில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களின் சுகாதாரத்தை பேணும் வகையிலும், மழை காலமாதலால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி வடமாகாண சுகாதார அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வவுனியாவிலுள்ள உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் போதே ஆளுநர் இந்த பணிப்புரையை வழங்கினார். மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும், மீள்குடியேற்றம், அபிவிருத்தி உட்கட்டமைப்பு, நீர்ப்பாசனம், விவசாய நடவடிக்கைககளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கான கூட்டம் நேற்று வவுனியாவில் நடைபெற்றது.

மாந்தை மேற்கு பகுதியில் உடனடியாக 7000 வீடுகளை கட்டுவதற்கான துரித வேலைத்திட்டமொன்றையும் ஆரம்பிக்குமாறும் அதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார். அத்துடன் விவசாயம், சுகாதாரம், கல்வி, கூட்டுறவு, நீர்ப்பாசனம், நீர்வழங்கல், மின்சாரம், போன்ற சகல துறைகளிலும் கவனம் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

வடமாகாணத்திலுள்ள சகல அரச ஊழியர்களும் தத்தமது பிரதேசத்திற்கு திரும்பும் வகையில் போக்குவரத்து ஏற்பாடுகளும், அனுமதிகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

மீளக்குடியமர்தப்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள், தமது பொருட்களை கொண்டு செல்வதற்காக கெண்டர் ரக 2 வாகனங்களும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. அரச ஊழியர்களின் தேவைகளுக்கென 700 துவிச்சக்கர வண்டிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

அடம்பன் மற்றும் திருக்கேதிஸ்வரம் ஆஸ்பத்திரிக்கு தாதியர் மற்றும் ஊழியர்கள் வந்து செல்வதற்கென துவிச்சக்கர வண்டிகளும் பெற்றுக் கொடுக்கப் படவுள்ளன. அத்துடன் இப்பகுதியில் டெங்கு, மலேரியா தடுப்புக்கென நடமாடும் நோய்த்தடுப்பு பிரிவொன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாக ஆளுநர் தெரிவித்தார்.

ஆளுநரின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தின் போது வடமாகாண பிரதம செயலாளர் வீ. சிவசாமி, கிளிநொச்சி அரச அதிபர் ரூபவதி கேதிஸ்வரன் உட்பட வடமாகாண அமைச்சுக்களின் செயலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நுரைச்சோலை மின் நிலைய 2ம் கட்ட பணிக்கு சீனா கடனுதவி

நுரைச்சோலை அனல் மின் நிலைய இரண்டாம் கட்டப் பணி சீன அரசின் 891 மில்லியன் டொலர் இலகு கடனுதவியுடன் ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இரண்டாம் கட்டத்தின் கீழ் 600 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை நிதி, திட்டமிடல் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமர்ப்பித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின் நிலைய முதலாம் கட்டப் பணிகள் 2010ல் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இதன் மூலம் 300 மெகா வோட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட வுள்ளது. முதலாம் கட்டத்திற்கு 455 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளது.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் ஒத்திவைப்பு

janka.jpgஉள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைப்பதற்குத் தீர்மானித்திருப்பதாக உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் தெரிவித்தார். 2010ம் ஆண்டின் ஏப்ரல் மாதத்திற்குள் இரண்டு பிரதான தேர்தல்கள் நடாத்தப் படவிருப்பதால்தான் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்க முடிவு செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்திற்குள் பொதுத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். இதேவேளை, ஜனாதிபதி தேர்தலும் நடாத்தப்படவுள்ளது. அதேநேரம், உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவடையவிருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இரண்டு பிரதான தேர்தல்கள் எப்ரல் மாதத்திற்குள் நடைபெறவிருப்பதால் உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஏப்ரல் மாதம் முதல் ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பதற்கு முடிவு செய்துள்ளேன். இது விடயமாக கலந்துரையாடி வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என்றார்.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு இறுதியாக 2005ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடாத்தப்பட்டது. அதன்படியே 2010ம் ஆண்டு மார்ச் மாதம் உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக் காலம் நிறைவடைகின்றது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டப்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒரு வருட காலத்திற்கு ஒத்திவைக்க அமைச்சருக்கு அதிகாரமுள்ளது.

கூட்டமைப்பு பிரதிநிதிகளுடன் ஜோன் ஹோம்ஸ் சந்திப்பு

இலங்கை வந்துள்ள ஐ. நா. மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான செயலாளர் நாயகம் ஜோன் ஹோம்ஸை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி.க்கள் நேற்று சந்தித்து பேச்சு நடத்தினர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா, ஏ. செல்வம் அடைக்கலநாதன், திருமதி பத்மினி சிதம்பரநாதன், பி. அரியநேத்திரன், விலியம் தோமஸ் ஆகியோர் சந்தித்து பேச்சு நடத்தினர்.

நேற்றுக் காலை 10.30 மணி முதல் 11.15 வரையில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மீளக் குடிய மர்த்தப்படும் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உடனடி நிவாரணம், புனர்வாழ்வு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேச்சு நடத்தினர்.

தொடர் மழையால் 58,000 பேர் பாதிப்பு; 40 குடும்பங்கள் இடம்பெயர்வு

srilanka-today.jpgநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பெய்துவரும் கடும் மழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவு காரணமாக நேற்றுவரை 58,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.

இவ்வனர்த்தங்களில் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள் ளதுடன் கண்டி மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து 40 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாகவும் மேற்படி நிலையத்தின் உயரதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.

இதேவேளை நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலும் பெய்துவரும் மழை தொடரும் எனவும் இரவு நேரத்தில் இடி, மின்னல் காற்றுடன் கூடிய மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுவதால் மின்னலிலிருந்து பொதுமக்கள் தம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்தது.

பன்றிக் காய்ச்சல் – மத்திய மாகாண பாடசாலைகள் 23ம் திகதி முதல் காலவரையறையின்றி பூட்டு.

influenza-a.jpgஇதுவரை  பல உலக நாடுகளில் அச்சுறுத்தலாக இருந்து வந்த  இன்புளுயன்சா ஏ/ எச்1என்1 வைரஸ்  இலங்கையிலும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது.  இலங்கையில் முதல் தடவையாக இன்புளுயன்சா ஏ/ எச்1என்1  நோய்த்தாக்கத்தின் காரணமாக  கண்டியைச் சேர்ந்த 16 வயது மாணவரொருவர்  நவம்பர் 04, 2009ஆம் திகதி  உயிரிழந்தார்.

தற்போது 10 பேர் அளவில், ஏ/ எச்1என்1  நோய்த்தாக்கத்தின் காரணமாக இறந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.  இதையடுத்து,  மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மத்திய மாகாணத்திலுள்ள 1470 பாடசாலைகளையும் 23ம் திகதி முதல் காலவரையறையின்றி மூடும்படி உத்தரவு பிறப்பித்துள்ளார்.