செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இந்தியாவில் புதிய தெலுங்கானா மாநிலம் உருவாகிறது!

india_map_telangana.gifஆந்திர மாநிலத்தைப் பிரித்து புதிய மாநிலம் ஒன்றை ஏற்படுத்தப்போவதாக இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது. பல நாட்கள் தொடர்ந்த வன்செயல் மிகுந்த போராட்டங்களை அடுத்து தெலுங்கானா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஆந்திரபிரதேசத்தின் 10 வடமாவட்டங்களை உள்ளடக்கி உருவாக்கப்படவுள்ள இந்த மாநிலத்தில் மூன்றரைக் கோடி மக்கள் இருப்பார்கள். இந்த முடிவு அறிவிக்கப்பட்டதை அடுத்து அதற்கு ஆதரவானவர்கள் பட்டாசுக்களை வெடித்து,  தலைநகர் ஹைதராபாத்தில் நடனமாடிக் கொண்டாடினார்கள். அதேவேளை, புதிய மாநிலம் ஏற்படுத்தப்படுவதை கண்டித்து ஆந்திர மாநிலத்தின் பல சட்டமன்ற உறுப்பினர்கள் தமது பதவிகளை இராஜினாமாச் செய்துள்ளனர். 

கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு அரசு ரூ. 3011 மில்லியன் ஒதுக்கீடு – 3885 அபிவிருத்தி திட்டங்கள் நிறைவு

கிழக்கின் உதயம் 180 நாள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களின் அபிவிருத்தித் திட்டங்களுக்கென 3011 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதுடன் இதுவரை 1797 மில்லியன் ரூபா செலவில் 3885 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேச நிர்மாண அமைச்சு தெரிவித்தது.

அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 1113 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டதுடன் 675 மில்லியன் ரூபா செலவில் 1215 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 300 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது-

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்திக்கென 923 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 566 மில்லியன் ரூபா செலவில் 1373 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 160 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கென 974 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 556 மில்லியன் ரூபா செலவில் 1294 அபிவிருத்தித் திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன. மேலும் 119 அபிவிருத்தித் திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தா

ஸ்ரீலங்கா ஜம்இய்யத்துல் உலமா அமைப்பை உருவாக்க உதவுங்கள் – அலவி, அஸ்வரிடம் உலமாக்கள் கோரிக்கை

macca.jpgஸ்ரீலங்கா ஜம்இய்யத் துல் உலமா என்ற புது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி பக்கச் சார்பற்ற முறையில் அதனை இயங்க வைக்க உதவிகள் செய்ய வேண்டுமென ஆளுநர் எஸ். அலவி மெளலானா, ஜனாதிபதி ஆலோசகர் ஏ. எச். எம். அஸ்வர் ஆகியோரை நேற்றுக் காலை கொழும்பில் சந்தித்த உலமாக்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நடுநிலையான அமைப்பு. அரசியல் கட்சிக்கோ அல்லது ஒரு வேட்பாளருக்கோ இந்தமைப்பு அதன் சரித்திரத்திலேயே ஆதரவளித்தது கிடையாது.

உலமா சபைக்கு ஒரு கட்டடம் வேண்டு மென்ற வேண்டுகோளு க்கமைய கொழும்பில் பெறுமதிமிக்க காணித் துண்டை பெற்றுக் கொடு த்து அதில் நிர்வாகக் கட்டடம் அமைத்துக் கொடுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை முஸ்லிம் சமுதாயம் ஒருபோதும் மறக்காது என்றும் இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தலைமைகள் விடும் தவறுகளுக்காக முழு உலமா சமுதாயமும் பொறுப்பாகாது. நிதான மாக சிந்தித்து நடுநிலை வகித்து முஸ்லிம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஏராளமான உலமாக்கள் இந்நாட்டில் இருக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டினர்.

வோக்கரில் நடைபழகிய பாலகன் நீரில் மூழ்கி பலி

வெள்ளத்தில் விளையாடிக் கொண்டிருந்த 10 மாத பாலகனை பலியெடுத்த சம்பவம் கல்முனையில் நேற்று இடம்பெற்றுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த மழையினால் பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. குறித்த சம்பவம் இடம்பெற்ற கல்முனை – 3 மாதவன் வீதியில் உள்ள வீடும் வெள்ள நீரில் அமிழ்ந்துள்ளது.

வீட்டுக்குள் வோக்கரில் நடைபழகி விளையாடிக் கொண்டிருந்த பாலகன் படிக்கட்டிலிருந்து தவறுதலாக நீருக்குள் விழுந்ததனால் மூச்சுத் திணறியுள்ளது. அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட சிறுவனை செயற்கை சுவாசம் வழங்கி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதிலும் இடைநடுவில் அந்த பாலகனின் உயிர் பிரிந்தது.

எதிர்வரும் தேர்தலில் ராதிகா சிற்சபேசன் புதிய ஜனநாயகக் கட்சியின்(NDP) சார்பில் Scarborough- Rouge River தொகுதி வேட்பாளர்: முரளி

rathika.jpgகடந்த வாரம் 5ம்தேதி புதிய ஜனநாயகக்கட்சியின்(NDP) சார்பில் Scarborough- Rouge River (ஒட்டாவா மத்திய அரசின்) நாடாளுமன்றத் தொகுதிக்காக எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக செல்வி ராதிகா சிற்சபேசன் அக்கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

05.12.2009 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு Loblaws (Community Room), Scarborough Town Centre, 1775 Brimley இல் புதிய ஜனநாயகக் கட்சியின்(NDP) Scarborough / Rouge River Riding Association அங்கத்தவர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் எதிர்வரும் தேர்தலில் Scarborough- Rouge River தொகுதியில் போட்டியிடுவதற்கான புதிய வேட்பாளரை நியமனம் செய்வதற்கான வேட்பாளர் நியமனக் கூட்டமாகவே NDP கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. இவரது நியமனம் முன்மொழியப் பட்டபோது Scarborough / Rouge River Riding Association நியமனக் கூட்டத்திற்கு வந்திருந்த அங்கத்தவர்கள் அனைவரும் ஏகமனதாக ஆதரவளித்தனர். இறுதியில் சபையோரால் முழுமனதோடு ஏற்றுக் கொள்ளப்பட்ட அத்தீர்மானம் வழிமொழியப்பட்டு நிறைவேறியது.

மேற்படி இந்நியமனக் கூட்டத்திற்கு எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான திரு ராம் சிவதாசன் தலைமை தாங்கியிருந்தார்.

மற்றும் மத்திய அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Olivia Chow (Trinity-Spadina), மாகாண அரசின் நாடாளுமன்ற உறுப்பினர் Michael Prue (Beaches-East York) ஆகியோரும் இக்கூட்டத்திற்கு சமூகமளித்து ராதிகாவுக்கான ஆதரவு உரைகளை வழங்கியிருந்தனர். விரைவில் கனடிய நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் அறிவிப்பு விடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பரவலாகப் பேசப்படுகின்றது. அவ்வாறான வேளையில் இளம் தலைமுறையைச் சேர்ந்த துடிப்பான தமிழ் பெண்மணி ஒருவர் தேர்தல் அரசியலுக்குத் தன்னைத் தயார்படுத்துகிறார். பெருமளவு தமிழர்கள் வாழும் இத்தொகுதியில் அடுத்துவரும் தேர்தல் சூடு பிடிக்குமென எதிர்பார்க்கலாம்.

பொன்சேகாவின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூற்று நகைப்புக்குரியது – அமைச்சர் மைத்திரிபால தெரிவிப்பு

msri-sens.jpgதாம் பதவிக்கு வந்தால் அரசாங்க ஊழியர்களுக்கு 10000 ரூபா சம்பள அதிகரிப்பு வழிங்குவதாக ஓய்வுபெற்ற சரத் பொன்சேகா தெரிவித்திருப்பது நகைப்புக்குரிய ஒரு விடயமாகும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் மைத்திர்பால சிறிசேன தெரிவித்ததார். மஹாவலி கேந்திர நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி ஆகியவற்றின் தேவைக்காகவல்ல அவருக்குப் பின்னால் இயங்கும் மற்றுமொரு சக்தியின் அழுத்தத்துக்காகவே.

சரத்பொன்சேகா கட்சி பேதம் அற்றவர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஜே.வீ.பி கூட்டத்துக்கு வராத அவர்  ஐ.தே.க கூட்டத்துக்கு யானைச் சின்னத்துடன் வந்தார். இன்னும் இரண்டு வாரங்களில் ஐ.தே.க மற்றும் ஜே.வீ.பி கட்சிகள் மத்தியில் பிளவு ஏற்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்

பரீட்சை எழுத பன்றிக் காய்ச்சல் தடையில்லை – கல்வி அமைச்சு தகவல்

stu.jpgபன்றிக் காயச்சலால் பீடிக்கப்பட்ட மாணவர்களுக்கு இம்முறை க.பொ.த. பரீட்சை எழுதத் தடை விதிக்கப்படடுள்ளதாகத் தெரிவிக்கப்படும் தகவலில் எவ்வித உன்மையும் இல்லை என்று கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது. பரீட்சைக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சை எழுத அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் கூறுகிறது.

இவ்வருடத்துக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம்திகதி வரை நடைபெறவுள்ளது. விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளை இம்மாதம் 31 ஆம் திகதி ஆரம்பித்து எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி வரை மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவிக்கின்றது.

சரத் பொன்சேகா இன்று கட்டுப்பணம் செலுத்தினார்

sarath-pon.jpgஎதிர்க் கட்சிகளின் சார்பில் பிரதான ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா இன்று முற்பகல் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.  இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

நிவாரணக் கிராமங்களில் க. பொ. த (சா/த) பரீட்சை

schools_stu.jpg2009ஆம் ஆண்டுக்கான க. பொ. த. சாதாரண தர பரீட்சைகள் இன்று 11 ஆம் திகதி ஆரம்பமாகிறது.  வவுனியா நிவாரணக் கிராமங்களில் இம்முறை 4944 பேர் தோற்றவுள்ளனர். இவர்களுக்கென 51 பரீட்சை நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பரீட்சை மண்டப மேற்பார்வைக்கென 726 ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாதுகாப்பு பிரிவினரால் வழங்கப்பட்ட ஆளடையாளத்தை பயன்படுத்த முடியும்.

இடம்பெயர்ந்தவர்களுக்கெனவும் விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பலாத்காரமாக புலிகள் இயக்கத்துக்கு இணைக்கப்பட்டு சரணடைந்தவர்களுள் 432 பேரும் இன்று பரீட்சைக்கு தோற்றுகின்றனர். பம்பைமடு புனர்வாழ்வு முகாம், பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம், காமினி வித்தியாலயம் ஆகியவற்றில் தலா ஒவ்வொரு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

புனர்வாழ்வு முகாமிலிருந்து கற்றல் நடவடிக்கைகளுக்காக இரத்மலானை இந்து கல்லூரிக்கு அழைத்துவரப்பட்டவர்களுள் பரீட்சைக்குத் தோற்றுபவர்களுக்கென விசேட பரீட்சை நிலையமொன்றும் அமைக்கப்பட்டுள்ளன.

மகசின் சிறைச்சாலையில் கைதிகளாக இருக்கும் பரீட்சார்த்திகளுக்கென ஒரு விசேட பரீட்சை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

மீளக்குடியமர்த்தப்பட்ட முல்லைத்தீவு துணுக்காய் பகுதி மற்றும் முழங்காவில் பகுதிக்கென ஒரு விசேட பரீட்சை நிலையமும், புளியங்குளம் மீளக்குடியமர்த் தப்பட்ட பகுதியில் ஒரு பரீட்சை நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது.

 நிவாரணக் கிராமம் – 51 நிலையங்கள் / 4944 பரீட்சார்த்திகள் / 726 பணியாளர்கள்
சரணடைந்தவர்கள் – 3 விசேட நிலையங்கள் / 432 பரீட்சார்த்திகள்
நாடு முழுவதும் – 4098 நிலையங்கள்
மீளக்குடியமர்த்தப்பட்டவர்களுக்கு 3 விசேட நிலையங்கள்

ரூபா 10 ஆயிரம் அரசாங்க ஊழியருக்கு சம்பள உயர்வு ஜெனரல் பொன்சேகா

pr-can.jpgஇந்நாட்டின் ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்றவுடன் அரச ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுப்பதுடன், தனியார் துறை ஊழியர்கள், தோட்டத் தொழிலாளர், ஓய்வூதியர்களின் கஷ்டங்களைப் போக்கும் வகையில் நிவாரணமளிக்கக் கூடிய நடவடிக்கைகளையும் எடுப்பேனென எதிர்க் கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா உறுதியளித்தார்.

சிறீ கொத்தாவிலுள்ள ஐ.தே.கட்சியின் தலைமையகத்தில் அதன் தொழிற்சங்கமான தேசிய சேவைகள் சங்கம் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு திரட்டும்முகமாக நடத்திய விசேட கூட்டத்தில் பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்;நாட்டின் ஜனநாயகத்துக்கு சக்தியளிப்பது தொழிற்சங்கங்களாகும். இந்நிலையில் தொழிற்சங்கங்களின் செயற்பாட்டுக்கு அரச பலம் பிரயோகிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. யுத்த வெற்றியை காண்பித்தே தொழிலாளர்களின் உரிமைக்கான போராட்டங்கள் தடுக்கப்பட்டன. எனவே தொழிலாளர்களின் எதிர்காலத்தைப் பாதுகாத்து ஜனநாயகத்தை உருவாக்கவே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்.

அத்துடன் நாட்டிலுள்ள ஊழல் மோசடிகளை ஒழித்து நீதியையும் சமாதானத்தையும் உருவாக்கி பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி சிறந்ததொரு நாட்டை எதிர்காலத்திடம் கையளிப்பதே எனது கடமை. நான் தொடர்ந்து இரு வருடங்களுக்கு அரச உயர் அதிகாரியாக 600 பேரின் பாதுகாப்புடனும் 25 வாகனங்களுடனும் சுக போகமாக வாழ்ந்திருக்க முடியும். யுத்தம் முடிவடைந்த நிலையில் நாட்டை முன்கொண்டு செல்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதுபோல் தமிழ் மக்கள் முகாம்களில் கஷ்டத்தின் மத்தியில் வாழ்கையில் இயல்பு வாழ்க்கையைக் கொடுக்க நடவடிக்கையெடுக்கப்படவில்லை. இதனை கருத்தில் கொண்டே அரசியலுக்கு வந்துள்ளேன். நான் பதவியேற்றதும் சுகபோகங்களை அனுபவிக்கப் போவதில்லை. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து ஜனநாயகத்தை எதிர்கால சந்ததியிடம் கையளிப்பேன். எனது அதிகாரங்களைப் பாராளுமன்றத்திடம் கையளித்து மக்கள் அரசை உருவாக்குவேன். அதேவேளை, நாடு ஜனநாயக முறையில் செயற்படுகின்றதா என்பதைப் பார்த்து நடவடிக்கையெடுக்குமுகமாகக் பாராளுமன்றத்தின் மூலம் எனக்கு வழங்கப்படும் அதிகாரத்தைக் கொண்டு நடவடிக்கையெடுப்பேன்.

நான் அரச சேவையில் 40 வருட காலம் பணியாற்றியுள்ளேன். அதிக காலம் இராணுவத்தில் பணியாற்றியவன் என்பதனால் இராணுவம், பொலிஸ் மற்றும் அரச சேவையிலுள்ள அரசியலை இல்லாதொழித்து ஊழியரின் உரிமையை வழங்குவேன். குறிப்பாக பொலிஸ் சேவையிலுள்ள அரசியலை இல்லாதொழித்து அதன் அதிகாரிகள் சுதந்திரமாக செயற்பட வழிவகுத்து நாட்டில் நீதியை ஏற்படுத்த சிறந்ததொரு எதிர்காலத்தை நாட்டில் ஏற்படுத்துவேன். இதற்கான பணியையே நான் பொறுப்பெடுத்துள்ளேன்.அத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினைக்கு கண்ணீர்ப் புகையே பதிலளிக்கப்படுகின்ற நிலையில் அவர்களது பிரச்சினை பட்டதாரிகளின் பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களது குடும்பத்துக்கு சக்தியளிப்பேன். இதற்கு நீங்கள் எனக்கு சக்தியளிப்பீர்கள் என நம்புகிறேன் என்றார்.