செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பட்டாசு கொளுத்தி மக்கள் ஆரவாரமாக கொண்டாட்டம்

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான வாக்குகளால் அமோக வெற்றிபெற்றதையடுத்து நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, தேசியக் கொடிகளை ஏந்திய வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் நேற்று ஈடுபட்டனர்.

இலங்கையின் ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இத்தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அதிகப்படியான விருப்பு வாக்குகளைப் பெற்று அமோக வெற்றிபெற்றுள்ளார்.

இதனையிட்டு நாடெங்கிலும் மக்கள் பட்டாசு கொளுத்தி, இனிப்புக்கள் வழங்கி தேசிய கொடிகளை ஏந்தி அசைத்த வண்ணம் மகிழ்ச்சி ஆரவாரங்களில் ஈடுபட்டனர். மக்கள் சந்திக்கு சந்தி கூடி இருந்து றபான் அடித்து பாற்சோறு பரிமாறி மகிழ்ந்தனர்.

பொன்சேகா, தேர்தல் ஆணையாளரை வீட்டு காவலில் வைத்துள்ளதாக கூறும் செய்தி பொய்யானது – அமைச்சர் சமரசிங்க

எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவையும், தேர்தல் ஆணையாளர் தயானந்த திசாநாயக்கவையும் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையெனவும் அரசாங்கம் அவற்றை முழுமையாக மறுப்பதாகவும் மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.

தனது தோல்வியை தாங்கிக் கொள்ள இயலாத பொன்சேகா சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்ப் பிரசாரங்களைச் செய்து அனுதாபம் தேட முயல்கின்றார். இது போன்ற இழிவான அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் நாட்டின் நற்பெயருக்கு கலங்கத்தையும் அபகீர்த்தியையும் ஏற்படுத்த வேண்டாமெனவும் அமைச்சர் சமரசிங்க பொன்சேக்காவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பொன்சேகா வீட்டுக் காவலில் வைக்கப்படவில்லை. அவர் நினைத்த நேரம் அந்த ஹோட்டலை விட்டு வெளியே செல்லலாம். ஒரு ஜனாதிபதி வேட்பாளரென்ற வகையில் பாதுகாப்பு வழங்குவதற்காக அவ்வீதியில் பாதுகாப்பு படையினர் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர் அதனை தவறாக கருத்தில் கொண்டுள்ளதுடன் ஊடகங்களில் போலி பிரசாரங்களை முன்னெடுத்து வருகிறார்.

மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்று மாலை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட் டார்.

இச்செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த், மைத்திரிபால சிறிசேன, ஜீ. எல். பீரிஸ், பாட்டளி சம்பிக்க ரணவக்க, அனுரபிரியதர்ஷன யாப்பா, ரிஷாட் பதியுதீன், விமல் வீரவன்ச எம்.பி, சட்டத்தரணி காலிங்க இத்ததிஸ்ஸ ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியிருப்பதனை புரிந்து கொண்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்த சதிகார கும்பல், மேற்கூறியது போன்ற கட்டுக்கதைகளை குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள், இணையத் தளங்களினூடாக பரப்பி வருகின்றது.

அது மட்டுமன்றி எதிரணி வேட்பாளரும் கட்சித் தலைவர்களும் சர்வதேச ஊடகங்கள் வாயிலாக பொய்யான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். பொன்சேகாவை யாரும் வீட்டுக் காவலில் வைக்கவில்லை. அவர் இருப்பது வீடு அல்ல அது பல உள்நாட்டு வெளிநாட்டவர்கள் வந்து போகும் பிரபலமான ஹோட்டலாகும் என்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.

எமக்கு கிடைத்த தகவலடிப்படையில் 26ம் திகதி மாலை 4.30 மணியளவில் பொன்சேகாவும் அவருடனிருந்த கட்சித் தலைவர்களும் மற்றும் ஆதரவாளர்களும் குறித்த ஹோட்டலிருந்த இரண்டு மாடிகளிலிருந்த 70 அறைகளை வாடகைக்கு அமர்த்தி தங்கியிருந்துள்ளனர். இவரை அரசாங்கம் அங்கே அழைத்து செல்லவில்லை. தானாக விரும்பியே அவர் அங்கு சென்றுள்ளார்.

குறித்த ஹோட்டல் அமைந்திருக்கும் பகுதி அதியுயர் பாதுகாப்பு வலையம் என்பது சகலரும் அறிந்ததே. ஹோட்டலுக்கு முன்பாகவே விமான படைத் தளம் அமைந்திருப்பதனால் எப்போதுமே அப்பகுதியில் படையினர் குவிக்கப்பட்டிருப்பது வழமை.

அமைதியான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி: ரணில்

ranil.jpgஅமைதி யான முறையில் தேர்தலை நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தல்களை உரிய முறையில் நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள், படையினர் மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஏற்கவில்லை – ஜெனரல் சரத் பொன்சேகா

sa.jpgஇலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றிபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக  அறிவித்துள்ளார். ஆனால் முக்கிய போட்டியாளரான ஜெனரல் சரத் பொன்சேகா,  இந்த முடிவுகளை தான் ஏற்கவில்லை என்றும் அவற்றை தான் எதிர்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொன்சேகா தேர்தல் விதிமுறைகளை மீறியதாக ஐ.ம.சு.மு. தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப் புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா இலத்திரனியல் ஊடகங்களில் தோன்றி பேசியமை தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு உடனடியாக செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த 23ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் சரத் பொன்சேகா இலத்திரனியல் ஊடகங்களில் பேசியுள்ளமை தேர்தல் விதிமுறைகளை பாரிய அளவில் மீறியுள்ளார் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் தெரிவிக்கையில்,

தனக்குரிய வாக்குரிமை கிடைக்காமையை காரணமாக்கிக் கொண்டு செய்துள்ள தவறு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியே தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதம நீதியரசர் ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி இலத்திரனியல் ஊட கங்களில் பேசியுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை முடிவடைந்த குறிப்பிட்ட தினம் நள்ளிரவிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதுவித பிரசார நட வடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இலங்கையின் வரலாற்றில் ஐந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் இருந்த போதிலும் வரலாற்றில் முதல் தடவையாக இது போன்று சம்பளத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எதிரணியினர் நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, தினேஷ் குணவர்தன, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், டாக்டர் ராஜித சேனரத்ன, சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, முன்னாள் அமைச்சர். எஸ். பி. திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தல் முடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் மாத்திரம். – இன்னும் சரத் பொன்சேக்கா வாக்களிக்கவில்லை?

sarath.jpgஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட  ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஆறாவது ஜனாதிபதித் தேர்தல் முடிவதற்கு இன்னும் இரண்டு மணி நேரங்கள் மாத்திரமே உள்ளன. இந்நிலையில்  சரத் பொன்சேக்கா இதுவரை வாக்களிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் இதுவரை பாரிய தேர்தல் வன்முறைகள் எதுவும் நடைபெறவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.  இதுவரை 50 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகியுள்ளன. 

தேர்தல் வன்முறைகளில் ஈடுபடத் திட்டம் – 20 முன்னாள் கொமாண்டோக்கள் கொக்கரெல்லயில் கைது

தேர்தல் தினமான இன்று வன்முறைகளில் ஈடுபடுவதற்கென தயாராகவிருந்த 20 முன்னாள் இராணுவ கொமாண்டோக்கள் ஆயுதங்களுடன் நேற்று கைது செய்யப்பட்டிருப்பதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

காலி, கொக்கரெல்ல பிரதேசத்தில் வைத்தே இவர்கள் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தலின் போது வன்முறைகளை முன்னெடுப்பதற்காக பாரிய திட்டங்களை இவர்கள் தீட்டி வருவதாக கிடைத்த தகவலையடுத்து கொழும்பிலிருந்து சென்ற விசேட இராணுவக் குழுவினரே மேற்படி இருபது முன்னாள் கொமாண்டோக்களை ஆயுதங்களுடன் கைது செய்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள 20 பேரும் இராணுவ பொலிஸார் மற்றும் சி. ஐ. டி.யினரால் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பொலிஸ் பேச்சாளர் ஐ. எம். கருணாரட்ன தெரிவித்தார்.

இவர்கள் முன்னாள் இராணுவ கொமாண்டோ பிரிவினரென தெரியவந்த போதும், இவர்கள் ஒவ்வொருவரும் என்னென்ன தரங்களைச் சேர்ந்தவர்களென்ற விவரம் பூரண விசாரணகளுக்குப் பின்னரே தெரியவருமெனவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.

வாக்கு மோசடி முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள விசேட பிரிவு – அழையுங்கள்: 0112-877629-31

election_box.jpgஇடம்பெறும் வாக்கு மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளவென தேர்தல் திணைக்களத்தினால் விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப் பட்டுள்ளதென அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எந்தப் பிரதேசத்திலும் வாக்கு மோசடிகள் இடம்பெறுவது தொடர்பாக அறிவிக்கும் பட்சத்தில் அதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்க முடியுமென்று தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

0112-877629, 0112-877630, 0112-877631 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.

இன்று காலை 7.00 மணி தொடக்கம் மாலை வரை இந்த பிரிவு செயற்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

எத்தியோப்பிய விமானம் கடலில் வீழ்ந்து விபத்து – 85 பயணிகள் பலி

85 பயணிகளுடன் சென்ற எதியோப்பிய விமானம் விபத்துக்குள்ளானது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து எதியோபியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் நேற்றுக் காலையில் எதியோப்பிய தலைநகர் அடிஸ் அபாபாவுக்கு புறப்பட்டது.

விமானம் புறப்பட்டு சென்ற 45 நிமிடங்களுக்குப் பிறகு விமானத்துக்கும், விமான கட்டுப்பாட்டு அறைக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

விமானம் மத்திய தரைகடல் மேல் பறந்த போது விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என கூறப்படுகிறது. விமானத்தில் இருந்தவர்களில் 54 பேர் லெபனானை சேர்ந்தவர்கள், எஞ்சியவர்களில் பெரும்பாலானோர் 22 பேர் எதியோபியாவை சேர்ந்தவர்கள். ஒருவர் ஈராக்கியர், பிரான்ஸ், சிரியா நாட்டை சேர்ந்த தலா ஒருவரும் உள்ளனர். இவர்களைத்தவிர விமான பைலட்டு உட்பட சிப்பந்திகள் 7 பேர் மொத்தம் 92 பேர் விமானத்தில் இருந்தனர்.

விமானம் நடுவானில் திடீரென தீ பிடித்து எரிந்து விழுந்ததாக மத்திய தரைக்கடல் பகுதி கடலோர மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். விமான விபத்து குறித்து செய்தி அறிந்தவுடன் லெபனான் நாட்டு அதிகாரிகள் ரபீக் ஹரிரி, விமான நிலையம் விரைந்துள்ளார். இங்கு இருந்துதான் அந்த விமானம் புறப்பட்டுள்ளது.

விமானத்தில் இருந்த அனைவரும் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகளில் லெபனான் நாட்டின் இராணுவம், கடற்படை மற்றும் ஐ.நா., பாதுகாப்பு படையினரும் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

ஹெய்ட்டியில் மீண்டும் நிலநடுக்கம்

haitibuidling-pd.jpgஹெயிட் டியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. போர்ட் அப் பிரின்ஸ்  நகருக்கு மேற்கே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிக்ஸ்டர் அளவில் இது 4.7 ஆகும். சேத விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.

ஏற்கனவே போர்ட்-அப்-பிரின்ஸ் நகரில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து கிடக்கின்றன. அவற்றை அகற்றும் பணியில் பன்னாட்டு மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து பிணங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.

இருந்தும் இடிபாடுகளில் பிணங்கள் கருகி கிடப்பதால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், வீடுகளை இழந்த இலட்சக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு போதிய சுகாதார வசதி அங்கு இல்லை எனவே ஹெய்டியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.

இடிபாடுகளில் சிக்கி காயமடைந்தவர்களில் பலர் கண்களை இழந்துள்ளனர். கால், கைகளையும் இழந்து தவிர்க்கின்றனர் தலைக் காயங்களால் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்கள் முகாம்களிலும் ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.