ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப் புக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா இலத்திரனியல் ஊடகங்களில் தோன்றி பேசியமை தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளதாக ஐ. ம. சு. முன்னணி செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு உடனடியாக செய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் அனைத்தும் கடந்த 23ம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில் சரத் பொன்சேகா இலத்திரனியல் ஊடகங்களில் பேசியுள்ளமை தேர்தல் விதிமுறைகளை பாரிய அளவில் மீறியுள்ளார் என்றும் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.
கொழும்பிலுள்ள தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று இரவு நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேலும் தெரிவிக்கையில்,
தனக்குரிய வாக்குரிமை கிடைக்காமையை காரணமாக்கிக் கொண்டு செய்துள்ள தவறு தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியே தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சரத் பொன்சேகா மட்டுமல்ல எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் பிரதம நீதியரசர் ஆகியோர் தேர்தல் விதிமுறைகளை மீறி இலத்திரனியல் ஊட கங்களில் பேசியுள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கை முடிவடைந்த குறிப்பிட்ட தினம் நள்ளிரவிலிருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதுவித பிரசார நட வடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் வரலாற்றில் ஐந்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் இருந்த போதிலும் வரலாற்றில் முதல் தடவையாக இது போன்று சம்பளத்திற்கு முகம் கொடுக்க நேரிட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் எதிரணியினர் நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
அமைச்சர்களான ரோஹித போகொல்லாகம, தினேஷ் குணவர்தன, பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், டாக்டர் ராஜித சேனரத்ன, சம்பிக்க ரணவக்க, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, முன்னாள் அமைச்சர். எஸ். பி. திசாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.