செய்திகள்

செய்திகள்

செய்திகள்

மூடிய அறைக்குள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள்

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது தனது அமர்வுகளை மூடிய அறைக்குள்ளேயே நடத்தவுள்ளது.ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் கடந்த வாரம் அமைக்கப்பட்ட முன்னாள் சட்ட மா அதிபர் சி.ஆர்.டி.சில்வா தலைமையிலான இந்த நல்லிணக்க ஆணைக்குழுவானது அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், ஆயுதப்படை அதிகாரிகள் என அதிகளவு எண்ணிக்கையானவர்களை நேர்காணவுள்ள நிலையில், அந்த அமர்வுகளைப் பார்வையிட,பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அமர்வுகளுக்கான ஏற்பாடுகள் இல்லை. “மூடிய அறைக்குள்ளேயே சகல பதிவுகளையும் நாம் மேற்கொள்வோம்”  என்று சி.ஆர்.டி.சில்வா தெரிவித்திருக்கிறார்.

2002 பெப்ரவரி 21 இல் கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை தோல்வியடைந்ததற்கான காரணங்கள் மற்றும் மேயில் போர் முடிவு வரையிலான நிகழ்வுகள் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நல்லிணக்க ஆணைக்குழு உறுப்பினர்களை கேட்டுள்ளõர்.

மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையையும் மேற்கொள்ளுமாறு பணிக்கிறேன். பகிரங்கமாக நடத்தப்படமாட்டாது என்ற தீர்மானத்தை நீங்கள் மேற்கொள்ளக்கூடும் என்று இந்த அறிவித்தல் மூலம் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி கூறியுள்ளார்.

தனது அறிவித்தல் மூலம் அமர்வுகளின் தன்மையை ஆணைக்குழு தீர்மானித்துக்கொள்வதற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளதாகத் தென்படுகிறது.இதேவேளை, ஆணைக்குழுவானது எவரிடம் நேர்காணலை மேற்கொள்ளப்போகின்றது என்பது தொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள சி.ஆர்.டி.சில்வா பலர்

ஆணைக்குழு முன் ஆஜராக ஆர்வம் கொண்டிருப்பார்கள்” என்று தான் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். “ஜனாதிபதியின் அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த காலப்பகுதியில் இடம்பெற்ற விடயங்களுடன் தொடர்புபட்டவர்கள் குறித்து மட்டுமே நாம் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் விடுதலைப்புலிகளுக்குமிடையில் 2002 பெப்ரவரி 22 இல் நிரந்தர யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருந்தது. விசாரணைக்குக் கடந்த 7 ஆண்டுகள் மட்டுமே தெரிவு செய்யப்பட்டது ஏன் என்று கேட்கப்பட்டபோது, “இது அரசின் கொள்கை சம்பந்தப்பட்ட விடயம். என்னால் பதில் கூற முடியாது” என்று சி.ஆர்.டி.சில்வா கூறியுள்ளார்.

இந்த வருடம் நவம்பர் 15 இற்கு முன்னர் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை கையாள்வது குறித்து அரசுக்கு ஏற்பட்டுள்ள சர்வதேச மட்டத்திலான அழுத்தங்களையடுத்தா இந்த உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று சி.ஆர்.டி.சில்வாவிடம் கேட்கப்பட்டபோது, “ஆணைக்குழுவானது இவையாவற்றையும் உள்ளடக்க வேண்டியிருக்கிறது என்று கூறியுள்ளார்.

இறக்குவானையில் கைக்குண்டுத் தாக்குதல்; பத்துப் பேர் காயம்

hand-bomb.jpgஇறக்கு வானை டெல்வீன் ‘பி’ பிரிவில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதலில் காமயடைந்த 10 பேர் இறக்குவானை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மாலை 3.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர்களை இறக்குவானை பொலிஸார் தேடி வலை விரித்துள்ளனர். கைக்குண்டு தாக்குதல் இடம்பெற்ற லயன் அறைகள் பலத்த சேதமடைந்துள்ளன.

தனிப்பட்ட குரோதம் காரணமாக ஒருவரை சந்தேக நபர்கள் தாக்கிய போது அவ்விடத்துக்கு தொழிலாளர்கள், இளைஞர்கள் விரைந்த போதே அக்கும்பல் கைக்குண்டை வீசியுள்ளது. எட்டு ஆண்களும் 2 பெண்களும் காயமடைந்துள்ளார்கள்.

கம்பஹாவுக்கு வவுனியாவிலிருந்து நிவாரணப் பொருட்கள்

கடும் மழை காரணமாக வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கம்பஹா மாவட் டத்திற்கென வவுனியா அரச அதிபர் திருமதி சார்ள்ஸ் தலைமையில் சேகரிக்கப்பட்ட உலர் உணவுப் பொருட்கள் இரண்டு லொறிகளில் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் வெள்ள நிலைமையை கேற்வியுற்றதும் வவுனியா மாவட்டத்திலிருந்தே முதன் முதலாக நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவுப் பிரதேசத்திலேயே அதிகளவு மிதிவெடிகள் புலிகளால் புதைக்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது!

தற்போது மீளக்குடியமர்த்தப் படுவதற்காக எஞ்சியுள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் முல்லைத்தீவுப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகள் தம்மிடமிருந்த அனைத்து மிதி வெடிகளையும் இப்பகுதியிலேயெ புதைத்துள்ளனர் எனவும். இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தள்ளார். இதன் காரணமாகவே மக்களை அப்பகுதிகளில் மீள் குடியமர்த்துவது தாமதமாகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்பகுதிகளில் மிதிவெடிகளை அகற்றுவதற்கு 1200 இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாகவும்,  முழுமையாக மதிவெடிகள் அகற்றப்படாமல் மக்கள் அங்கு மீள்குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனவும் ஊடகவியலார்கள் எவருக்கும் அப்பகுதிகளுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாதெனவும் தெரிவித்தள்ள அவர்,  நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களை ஊடகவியலாளர்கள் சென்று பார்வையிடலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மேயரும் அவரது செயலரும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.!

Jaffna_Mayor_Yogeswari_Patkunamநீதி மன்றத்தை அவமதித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பாக நேற்று (May 21 2010) விசாரணைகளுக் குட்படுத்தப்பட்ட யாழ். மேயர் திருமதி ப. யோகேஸ்வரி மற்றும் அவரது செயலாளர் திரு கு.பற்கணராசா இருவரும் நீதிமன்றத்தால் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவ்விருவர் மீதான வழக்குகள் தனித்தனியே யாழ். நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டன. நீதவானின் சமாதான அறையில் மேயருக்கெதிரான வழக்கு விசாரணை நடைபெற்றது.

மேயரின் செயலாளர் மீதான வழக்கு திறந்த நீதி மன்றத்தில் நடைபெற்றது.

நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக வழக்கைத் தொடர்ந்து நடத்தி குற்றவாளியாகக் காணப்பட்டால் 7 வருடங்களுக்கு சிவில் உரிமையை இழக்க  வேண்டி வரும் என தெரிவித்த நீதவான்  மன்னிப்புக் கேட்டு வழக்கிலிருந்து விடுபடப்போகிறிர்களா அல்லது வழக்கினைத் தொடர்ந்து நடத்தப் போகிறீர்களா என கேட்ட போது வழக்கிலிருந்து விடுபடவிரும்பவதாகத்  தெரிவித்த மேயர் நீதிமன்றத்திடம் பகிரங்க மன்னிப்பைக் கோரினார். இதனையடுத்து அவரை வழக்கிலிருந்து விடுவிடுவிக்க நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

மேயருக்குத் தெரிவித்த அதே கருத்தை மேயரின் செயலாளருக்கும் நீதவான் தெரிவித்தார். அவரும் மன்னிப்புக் கோரியதன் பின்னர் எச்சரிக்கை செய்யப்பட்டு வழக்கிலிருந்து அவரும்  விடுவிக்கப்படுவதாக நிதவான் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து கண்காணிப்புப் பணிகளில் அதிகளவு பொலிஸார் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்

யாழ்ப்பாணத்தில் போக்குவரத்து கண்காணிப்பு நடைமுறைகள் தற்போது கடுமையாக நடைமுறைப் படுத்தப்படுகின்றன. வழமையை விடவும் அதிகளவிலான பொலிஸார் கடமையிலீபடுத்தப்பட்டு.  யாழ்.நகரின் வீதிகள் அனைத்திலும் வீதி ஒழுங்கு நடவடிக்கைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதன் ஆவணங்கள் பரிசோனைக்குட்படுத்தப்படுவதோடு, போக்குவரத்து வீதி ஒழுங்ககளைக் கவனத்தில் கொள்ளாத சாரதிகள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு தண்டப்பணமும் அறவிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் தலைக் கவசத்திற்குள் கைத்தொலைபேசியை செருகிய படி உரையாடிக்கொண்டு செல்வது யாழ்ப்பாணத்தில் வழக்கமாகவுள்ளது. தற்பொது அவ்வாறு செல்பவர்களுக்கு தண்டம் அறிவிடப்படும் நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடத்தல் சம்பவங்களையடுத்து வான் முதலான வாகனங்களும் சோதனைகளுக்குட்படுத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்படத்தக்கது.

கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோருக்கு யாழ்ப்பாணத்திலிருந்து நிவாரண உதவி!

coio.jpgவடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் கம்பஹா மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, யாழ்ப்பாணத்திலிருந்து நிவாரண உதவி கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது  வட மாகாண சபையூடாக இவ்வுதவி அனுப்பப்பட்டுள்ளதாக ஆளுநர் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

திருகோணமலை, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலிருந்து வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்கள் ஆறு லொறிகளில் கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

நீர்த்தாங்கிகள், தண்ணீர் போத்தல்கள், மற்றும் உலருணவுப் பொருட்களே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து மேலும் இரு லொறிகளில் நாளை நிவாரணப் பொருட்கள் கம்பஹாவுக்கு அனுப்பப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அண்மையில் மீள் குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் மக்களே இந்த நிவாரண உதவிகளை வழங்கியுள்ளதாக வடமாகாண ஆளுனர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் கண்டாவளை, கரைச்சி பிரதேச மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்!

வவுனியா ‘மெனிக்பாம்’ நலன்புரி முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள 62.810 இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 7,350 பேர் எதிர்வரும் 11 நாட்களில் அவர்களின் சொந்த ஊர்களில் மீள்குடியேற்றம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்திற்குட்பட்ட கரைச்சி மற்றும், கண்டாவளை முதலான பிரதேச மக்களே இவ்வாறு மீள் குடியேற்றப்படவுள்ளனர். நேற்று 20ஆம் திகதி ஆரம்பமான இந்நடவடிக்கை 31ஆம் திகதி வரை நடைபெறும் என இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான  இணைப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

 ‘மெனிக்பாம்’ முகாமில் 11 வரையான நிலையங்களில் தங்கியுள்ள மக்களில் ஒரு தொகையினரே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர். இதனையடுத்து நலன்புரி நலையங்களின் எண்ணிக்கை ஆறாகக் குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்முகாம்களில் தங்கியுள்ள மக்களின் எண்ணிக்கையும் 55,460 அக குறைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்.மேயரையும் அவரது செயலாளரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு!

நீதிமன்றத்தை அவமதித்ததான குற்றச்சாட்டு தொடர்பாக யாழ்ப்பாண மேயர் திருமதி ப.யோகேஸ்வரி, மேயரின் செயலாளரான திரு. கு.பற்குணரஜா ஆகியோரை இன்று (21.05.2010) நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்.குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் விதத்தில் உள்ளுர் பத்திரிகைகளில் விளம்பரங்களைப் பிரசுரித்தமை தொடர்பாக யாழ்.குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணைகள் குறித்த அறிக்கை யாழ். நீதிமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது. இவ்வறிக்கையை ஆராயந்த  நீதிமன்றம் யாழ். மேயரையும் அவரது செயலரையும் இன்று யாழ். நீதிமன்றத்தில் முற்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் குறித்த விளம்பரங்களை பிரசுரித்த, யாழ். குடாநாட்டிலிருந்து வெளிவரும் பத்திரிகைகளான ‘உதயன்’ ‘யாழ்.தினக்குரல்’ ‘வலம்புரி’ ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர்களை பத்திரிகைகளில் வெளியான விளம்பரங்களின் மூலப்பிரதிகளுடன் நீதிமன்றில் பிரசன்னமாக இருக்கமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செனல் 4 குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ள மாட்டாது! ஊடகத்துறை அமைச்சர் தகவல்

kahiliya.jpgசெனல் 4 தொலைக்காட்சியில் அண்மையில் ஒளிபரப்பப்பட்ட வீடியோ காட்சி குறித்து அரசாங்கம் அலட்டிக்கொள்ளப் போவதில்லை என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல தெரிவித்தார். தகவல் திணைக்களத்தில் நேற்று காலை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

செனல் 4 புதிய நிகழ்ச்சி குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். கடந்த வருடமும் அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் செனல் 4 தொலைக்காட்சி வீடியோ காட்சி ஒன்றை ஒளிபரப்பியது. அந்தக்காட்சி முற்றிலும் பொய்யானது என விஞ்ஞான ரீதியிலாக பரிசோதனை மூலம் நிருபிக்கப்பட்டதுடன் அந்தத் தொலைக்காட்சி சேவைக்கு எதிராக அரசாங்கம் சவால் விடுத்தது.

எனினும் இதுவரை அந்த தொலைக்காட்சிச் சேவை அந்த சவாலுக்கு எவ்வித பதிலையும் அளிக்கவில்லை. எனவே இவ்வாறான செயற்பாட்டை அந்த தொலைக்காட்சி நிலையம் ஒரு வாடிக்கையாக செய்து வருவதாகவே அரசாங்கம் கருதுகிறது. முதலில் கேட்ட கேள்விக்கே பதில் அளிக்காத போது மீண்டும் மீண்டும் நாம் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.