வவுனியா நகரிலுள்ள தனியார் விடுதி ஒன்று நேற்று நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ளது. இவ்விடுதியில் விபசார நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரியவந்ததையடுத்தே மூடப்பட்டது. இவ்விடுதியில் விபசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக வவுனியா மாவட்ட நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து நீதித்துறை உடனடியாக நடவடிக்கையில் இறங்கியது. இதன்படி அவ்விடுதி உரிமையாளர் உட்பட அங்கு பணிபுரிந்த அனைவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு. விடுதி ‘சீல்’ வைத்து மூடப்பட்டது.
செய்திகள்
செய்திகள்
செய்திகள்
இந்திய உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவின் அழைப்பின் பேரில் இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சரின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியா விற்கு நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இராஜாங்க விஜயத்தை மேற்கொள்ளும் தருணத்தில் இரு நாடுகளுக்குமிடையில் குறைந்தது 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரு நாடுகளுக்குமிடையில் இருதரப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக 11 உடன்படிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஜனாதிபதியின் விஜயத்தின் போது 5 உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஏனைய 6 உடன்படிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றன. அவை இந்த வருட இறுதியில்கைச்சாத்திடப்படக்கூடும்.
செவ்வாய் மாலை புதுடில்லியை ஜனாதிபதி சென்றடைவார். எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடு திரும்பவுள்ளார். புதன்கிழமை இந்திய ஜனாதிபதி மாளிகையின் முன்றிலில் அரச மரியாதையுடனான வரவேற்பு அளிக்கப்படவுள்ளது. இந்த வைபவத்தில் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சிரேஷ்ட அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். அதன் பின்னர் ஜனாதிபதி ராஜபக்ஷ ராஜ்காட்டில் மகாத்மா காந்தியின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவார்.
ஜனாதிபதியும் அவரின் தூதுக் குழுவினரும் தங்கியிருக்கும் ஐ.ரி.சி. மயூரியா ஹோட்டலில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஜனாதிபதியை சந்திப்பார். ஹைதராபாத் இல்லத்தில் இந்தியப் பிரதமருக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும். புதன்கிழமை பிற்பகல் ஜனாதிபதியை காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் சிதம்பரம் உட்பட முக்கியஸ்தர்கள் சந்திக்கவுள்ளனர். ஜனாதிபதியுடன் அவரின் பாரியார் சிரந்தி ராஜபக்ஷ,வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் சஜித்வால் குணவர்தன மற்றும் சிலர் இந்த விஜயத்தில் இடம்பெற்றுள்ளனர். இதேவேளை, வெளிவிவகாரச் செயலாளர் ரொமேஷ் ஜெயசிங்க, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் ஞாயிறு இரவு டில்லிக்கு பயணமாகவிருந்தனர்.
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான ஒத்துழைப்பு உடன்படிக்கை, தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை இடம் மாற்றுவதற்கான உடன்படிக்கை, குற்றவிடயங்களில் பரஸ்பர சட்ட உதவியைப் பெற்றுக்கொள்வது தொடர்பான உடன்படிக்கை, கலாசார ஒத்துழைப்புக்கான உடன்படிக்கை, இலங்கையில் சிறிய அபிவிருத்தித் திட்டங்களுக்கான இந்தியாவின் உதவி தொடர்பான உடன்படிக்கை ஆகியவற்றிலேயே ஜனாதிபதி விஜயத்தில் கைச்சாத்திடப்படவிருப்பதாக ஆங்கிலப் பத்திரிகையொன்று நேற்று தெரிவித்தது.
இதேவேளை, தலைமன்னாருக்கும் தூத்துக்குடிக்குமிடையிலும் மற்றும் கொச்சிக்குமிடையிலான கப்பல் போக்குவரத்துத் தொடர்பான உடன்படிக்கை மேற்கொள்ளப்படுவதில் மேலும் காலமெடுக்குமெனத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடிப்பதுடன், மழையும் அதிகரிக் கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் நந்தலால் பீரிஸ் நேற்றுத் தெரிவித்தார்.
நேற்றுக்காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவுப்படி அதிகூடிய மழைவீழ்ச்சி 90.7 மி. மீ. கினிகத்தேனவில் பதிவானதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய காலநிலை காரணமாக மேல், தென், சப்ரகமுவ, மத்திய ஆகிய மாகாணங்களில் இடையிடையே மழை பெய்யும்.
தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமை தொடர்பிலான பிரச்சினைக்கு உரிய தீர்வை எட்டுதல், மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகள் மற்றும் மக்களின் நாளாந்தப் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கட்சியின் செயலாளர் நாயகம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகள் இன்று மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தும் ஜனாதிபதி, அதன் பின்னர் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
இப்பேச்சுவார்த்தைகளின் பின்னர் நாளை இந்தியா செல்லும் ஜனாதிபதி தலைமையிலான குழுவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துகொள்கிறார். இதன் போது இலங்கை அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இணைந்து கூட்டுப் பிரகடனம் ஒன்றையும் வெளியிடவுள்ளது.
இலங்கை பல்கலைக்கழகங்களில் இவ்வாண்டு மாணவர்களை அனுமதிக்கும் சகல பாடத்துறைகளுக்குமான வெட்டுப்புள்ளிகள் இன்று வெளியிடப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2.30 மணியளவில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறவுள்ள இந்நிகழ்விற்கு அதிதிகளாக உயர்கல்வி அமைச்சர்எஸ்.பி. திசாநாயக்க பிரதி உயர்கல்வி அமைச்சர் என்.எம். ஏக்கநாயக்க ஆகியோர் வருகை தரவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் ஜீ. சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 22,800 பேர் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் எதிர்காலத் தொழில்துறையை மையமாகக்கொண்டதாகவே நிகழ்காலத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாடத்துறைகள் அமையுமெனவும் தெரிவித்துள்ள பேராசிரியர் அந்த வகையில் மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் புதிதாக கணினிக்கற்கைநெறி அறிமுகம் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு யாழ். மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதிக்கப்படும் முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள் அனைவரும் அங்கேயே தமது பாடத்துறையை தொடரவேண்டுமெனவும் எக்காரணம் கொண்டும் வேறு பல்கலைக்கழகங்களுக்கு அவர்கள் இடமாற்றம் அல்லது இணைப்புச் செய்யப்படமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
மலேஷிய, பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனி.ராமசாமி இந்தியா வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வேண்டுகோளை மத்திய உள்துறை அமைச்சுக்கு தமிழக அரசு விடுத்துள்ளது. பேராசிரியர் ராமசாமி விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும்,இந்திய அரசாங்கத்துக்கு எதிராகவும் பேசிவருபவர் என இந்திய அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
இம்மாதம் 23ஆம் திகதி ட்கோவையில் இடம்பெறவுள்ள செம்மொழி மாநாட்டுக்கு பேராசிரியர் ராமசாமி வருகை தருவதற்கு எதிர்ப்புத்தெரிவித்தே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலேசிய முன்னாள் பிரதமர் மஹதிர் மொஹமட் நல்லெண்ண விஜயம் மேற்கொண்டு நாளை செவ்வாய்க்கிழமை இலங்கை வருகிறார். நாளை மாலை 5.45 மணியளவில் இலங்கை வரும் அவரை வரவேற்பதற்காக பிரதி வெளிவிவகார அமைச்சர் கீதாஞ்சன குணவர்தன கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் செல்லவிருப்பதாக வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
விசேட அழைப்பினை ஏற்று இலங்கை வரும் மஹதிர் எதிர்வரும் 10ஆம் திகதி வரை இங்கே தங்கியிருப்பார். அவர் இங்கிருக்கும் காலப் பகுதியில் பிரதமர் தி.மு. ஜயரட்னவை சந்தித்து பேச்சு நடத்துவாரென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேன்மை தங்கிய மகிந்த ராஜபக்ச,
ஜனாதிபதி,
கொழும்பு.
இனப்பிரச்சினைக்கான தீர்வு.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்கட்கு,
இனப்பிரச்சினைக்கு ஓர் திருப்திகரமான தீர்வு காண்பதற்கு வேண்டிய பேச்சுவார்த்தைகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை தாங்கள் மேற்கொள்வதை முன்னிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். முதற்கட்டமாக தாங்கள் புதுடில்லிக்கு மேற்கொள்ளவிருக்கும் விஜயத்தை மக்கள் வரவேற்கின்றார்கள். இத்தனை உயிரிழப்புகள்,சொத்திழப்புகளின் பின் காணப்போகின்ற தீர்வு பல்வேறு மக்களுக்கும் ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, எதிர் காலத்தில் ஏதாவது ஒரு சமூகத்தினருக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வகையில் எவரும் தலையிடாது இருக்கக்கூடியதாக அமைய வேண்டும்.
இது சம்பந்தமான எனது நிலைப்பாடு தாங்கள் அறிந்ததே. ஓற்றையாட்சியின் கீழ் ஒரு தீர்வு காணமுடியாதென்ற கருத்தை நான் பல காலமாக கொண்டுள்ளேன். அதற்கு ஒரேயொரு மாற்றீடாக நாட்டுப் பிரிவினைக்கு இடமளிக்காது, அவசியமேற்படின் இந்தியாவின் உத்தரவாதத்துடன் இந்திய அரசியல் முறையிலான ஒரு தீர்வை ஏற்பதே பொருத்தமாக இருக்கும். சர்வகட்சி குழுவினரின் ஆலோசனையை பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன தங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சியில், 2008ம் ஆண்டு தை மாதம் 23ம் திகதி அலரி மாளிகையில் நான் ஆற்றிய உரையின் ஒரு பகுதியை இங்கு தருகின்றேன்.
“இனப்பிரச்சினைத் தீர்வுக்கு எப்போதும் சமஸ்டி முறைமையே பொருத்தமான தீர்வாக வற்பறுத்தி வந்தமை ஓர் இரகசியமான விடயமல்ல. சமஸ்டி என்ற பதம் சிலருக்கு ஏற்புடையதாக இல்லாமையால், சமஸ்டி அடிப்படையிலான தீர்விற்கு ஒரேயொரு மாற்றாக இந்திய முறையிலான தீர்வை ஏற்பதாக கூறி வந்துள்ளோம். இந்த விடயத்திலும் வடக்கு கிழக்கு இணைப்பு விடயத்திலும் எமது நிலைப்பாட்டில் மாற்றமில்லை. வன்முறையை வெறுத்துத் தள்ளி அகிம்சை முறையிலும், நட்புடனும் எமது நாட்டு மக்களை எமது நிலைப்பாட்டிற்கு சம்மதிக்க வைத்து ஒற்றையாட்சியின் கீழ் நிரந்தரமான ஒரு தீர்வை காணமுடியாது என்பதையும், தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். அத்துடன் நாடு பிரிந்து விடக்கூடும் என்ற அச்சம் கொண்டவர்களுடைய பயத்தைப் போக்க முயற்சிப்போம். எமது மக்கள் மத்தியில் பிரிவினைப் பற்றிய சிந்தனை முற்றாக அழிக்கப்பட்டு, ஐக்கிய இலங்கைக்குள் ஒற்றுமையாக வாழக்கூடிய தன்மையை ஏற்க வைப்போம்.”
நடந்தேறிய தேர்தலில் வடக்கு கிழக்கு மக்களுடைய தீர்ப்பை அரசும் சர்வதேச சமூகமும் ஏற்க வேண்டும் என்ற வேண்டுகோளுக்கு பொருத்தமான பதிலை இத்துடன் இணைத்துள்ளேன். இத்தேர்தலில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என அழைக்கப்படும் இலங்கைத் தமிழரசுக்கட்சி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 65119 ஆகும். இது மொத்த வாக்காளர்களில் 9 வீதத்தினர் மட்டுமே. மேலும், பல்வேறு காரணங்களினால் இடம்பெயர்ந்த மக்கள் முறையாக வாக்களிக்க முடியவில்லை. ஆகவே, தயவு செய்து பாராளுமன்றத்தில் பிரதிநித்துவம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது சம்பந்தமாக சகல தமிழ் கட்சிகளையும் அழைத்து பேச வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன். இத்துடன் 2008ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் திகதி ‘ஐலன்ட’ பத்திரிகையில் வெளியான எனது ஜனவரி 23ஆம் திகதிய உரையை இணைத்துள்ளேன். நன்றி.
அன்புடன்
வீ.ஆனந்தசங்கரி
தலைவர், தமிழர் விடுதலைக்கூட்டணி
பிபிசி தொலைக்காட்சியின் உலக சேவையின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஹாட் ரோக் இலங்கையின் வடபகுதியில் பதிவாக்கப்பட்டு உள்ளது. இன்று யூன் 7 முதல் நான்கு நாட்களுக்கு இலங்கை பற்றிய விசேட நிகழ்ச்சி தயாரிக்கப்பட்டு உள்ளது. கடந்த 30 ஆண்டுகால யுத்தத்தை இலங்கையரசு முடிவுக்கு கொண்டு வந்த முறை யுத்தத்தின் பின்னான சூழல் இனமுரண்பாட்டின் எதிர்காலம் ஆகிய விடயங்கள் இந்நிழ்ச்சியில் ஆராயப்பட இருப்பதாகத் தெரியவருகின்றது.
நான்கு நாள் நிகழ்ச்சியில் முதல் நாள்: ”தமிழர்களும் முறிந்த வடக்கும் – Tamils and the broken north” என்ற பதிவு இடம்பெறுகின்றது. இதில் ஹாட் ரோக் நிகழ்ச்சி வழங்குனர் ஸ்ரிபன் சக்கர் இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் இன்னமும் காடுகளினுள் மறைந்துள்ள விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தப்பி வந்த பொதுமக்கள் ஆகிய பல்வேறு தரப்பினருடனுமான நேர்காணல்களின் தொகுப்பு இடம்பெற இருக்கின்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி: ”அச்சத்தின் கீழ் ஜனநாயகம் – Democracy under threat” என்ற தலைப்பில் ராஜபக்ச சகோதரர்களிடம் குவிந்துள்ள அதிகாரங்கள் பற்றிய பதிவாக இது வருகின்றது.
முன்றாம் நாள் நிகழ்ச்சி ”தனது வாழ்க்கையை மீளக்கட்டமைக்கும் குழந்தைப் போராளி – Former Tiger child soldiers rebuilding their lives.” யின் கதையாக வருகின்றது.
இறுதியாக நான்காம் நாள் நிகழ்ச்சியில் இலங்கையில் மிகுந்த ஆளுமையும் அதிகாரமும் நிறைந்தவரான ஜனாதிபதியின் சகோதரர் பாதுகாப்பு அமைச்சுச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஹாட் ரோக்கின் ஹொட் சீற்றில் அமர்த்தப்படுகிறார். கோதபாய ராஜபக்சவுடனான நேர்காணல்.
இந்நிகழ்ச்சிகளை ஹாட் ரோக் நிகழ்ச்சிக்காக ஸ்ரிபன் சக்கர்க்கு வடக்கே யுத்தம் நடைபெற்ற பகுதிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக பிபிசி தெரிவித்து உள்ளது.
HARDtalk நிகழ்ச்சி நேரம்:
BBC NEWS CHANNEL (UK): Mondays, Tuesdays, Wednesdays and Fridays – 0430 and 2330
BBC WORLD NEWS: Mon to Thurs – 03:30, 08:30, 15:30, 20:30