செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கோதுமை மா விலை ரூபா 10.50ஆல் அதிகரிப்பு

கோதுமை தானியம் இறக்குமதிக்கான வரிச் சலுகையை நீக்க நிதி அமைச்சு அனுமதி வழங்கியதை அடுத்து கோதுமை மா நிறுவனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மாவின் விலையை கிலோ ஒன்றுக்கு ரூபா 10.50 ஆல் அதிகரித்துள்ளன.

கோதுமை தானிய இறக்குமதிக்கென வழங்கப்பட்டிருந்த வரிச்சலுகையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நீக்க நிதி அமைச்சு நேற்று அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கமைய கோதுமை தானிய இறக்குமதிக்கான வரி 15 சதவீதத்தால் அல்லது கிலோவொன்றுக்கு 10 ரூபாவால் அதிகரிக்குமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கோதுமை மா கிலோவொன்றின் விலையை ரூபா 10.50 ஆல் அதிகரிக்குமாறு பிறிமா நிறுவனம் தனது முகவர்களுக்கு நேற்று அறிவித்துள்ளது.

கோதுமை மா கிலோவொன்றின் விலை ரூபா 10.50 ஆல் அதிகரிக்கப்பட்டிருப்பதாக பிறிமா நிறுவனமும் செரண்டிப் நிறுவனமும் தங்களுக்கு அறிவித்திருப்பதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே, இதுவரை 63 ரூபாவாக இருந்த கோதுமை மா கிலோவொன்றின் விற்பனை விலை அரசாங்கம் வழங்கிய வரிச் சலுகை நீக்கத்தால் ரூபா 73.50 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பதவி வகிப்பதை இரு தடவையாக மட்டுப்படுத்துவது ஜனநாயக விரோதம்

cadar.jpgபாராளு மன்றத்திற்கு எத்தனை தடவையும் போட்டியிட முடியுமென்றால், ஜனாதிபதி பதவிக்கு ஏன் போட்டியிட முடியாதென்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆர். எம். அப்துல் காதர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிப்பதை இரண்டு தடவையாக மட்டுப்படுத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானதென்றும் காதர் எம். பி. தெரிவித்தார்.

மக்கள் ஆணை கிடைக்கும் வரை ஜனாதிபதியாக இருக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அவ்வாறான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டால், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் மீண்டும் போட்டியிடும் நிலை உருவாகும்’ என்று சுட்டிக்காட்டிய அவர், ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைக்கு மேல் வகிப்பதற்கான அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்ப்பவர்கள் தமது அரசியல் சுயலாபத்திற்காக மக்களைக் குழப்புகிறார்களென்றும், இரண்டு தடவையாக மட்டுப்படுத்தப்பட்டிருக்கும் சரத்தை அரசியலமைப்பில் நீக்க வேண்டுமென்று மங்கள சமரவீர எம். பியும் முன்பு ஒரு தடவை வலியுறுத்தியிருந்தாரென்றும் குறிப்பிட்டார்.

ஐ.தே.க. எம்.பி. ரங்கே பண்டார ஜனாதிபதி மஹிந்தவுடன் சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார நேற்று முன்தினம் தனது பாரியார் மற்றும் மூன்று பிள்ளைகளுடன் அலரி மாளிகைக்கு சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து உரையாடினார்.

பாராளுமன்ற தேர்தல் காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவருடன் இடம்பெற்ற மோதலில் பலத்த காயங்களுக்குள்ளாகிய ரங்கே பண்டார ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு உள்ளானார்.

ஆஸ்பத்திரியில் அவருக்கான சிகிச்சையை துரிதப்படுத்துவதற்கும் அதற்கான டாக்டர்களை ஏற்பாடு செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அவ்வாறான சிகிச்சைகளையடுத்து ரங்கே பண்டார விரைவில் குணமடைந்து வீடு திரும்பினார்.

ஜனாதிபதியின் மேற்படி உதவிக்கு நன்றி கூறும் நோக்கிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார அலரி மாளிகைக்கு விஜயம் செய்திருந்தார்.

செம்மொழி மாநாட்டில் இலங்கைத் தமிழ்கட்சி உறுப்பினர்களுக்கு வரவேற்பு இல்லை.

தமிழகத்தில் நாளை (June 23 2010) நடைபெறவுள்ள செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்தில் 14 பேராளர்களுக்கு அழைப்பு வந்துள்ளது. அவர்களுக்கான அழைப்பிதழ்கள் செம்மொழி மாநாட்டுக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. தமிழக் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் நெறிப்படுத்தலில்  தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரும் ஆய்வரங்கு ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் முனைவர் எம். இராசேந்திரன் அழைப்பிதழ்களை அனுப்பி வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அழைக்கப்பட்டவர்களில் பேராசிரியர் அ.சண்முகதாசன், பேராசிரியர் சி. சிவலிங்கராசா, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ், பேராயர் கலாநிதி எஸ் ஜெபநெசன், கலாநிதி இ. விசாகரூபன், கலாநிதி சி. செல்வரஞ்சிதம் ஈ. குமரன், ஆசிரிய கலாசாரல் நிலைய விரிவரையாளர் அ, லலிசன், பேராசிரியர் மு.புஸ்பரட்ணம், செல்வி. செல்வாம்பிகை நடராசா, ஆசிரியர் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் சு.குகனேஸ்வரன், விரிவுரையாளர்கள் த.அஜந்தகுமார், செ.சுதர்சன், பா.அகிலன், கவிஞர் சோ. பத்மநாதன், ஆகியோர் உள்ளங்கியுள்ளனர்.

இதேவேளை, தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட இலங்கை தமிழ் அரசியல் கட்சிகள் எவற்றிங்கும் அழப்பு கிடைக்கப்பெறவில்லை எனவும்  தெரிவிக்கப்பட்டுள்ளன.

புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் கே.பியை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர். – செல்வம் அடைக்கலநாதன் M.P. (TNA)

Selvam Adaikalanathan TNA_TELOதற்போது அரசாங்கத்திடம் இருக்கும் கே.பி என்கின்ற குமரன் பத்மநாதன் அரசாங்கத்துடன் இணைந்து யுத்தத்தின் பின்னான மக்களின் புனர்வாழ்வு புனரமைப்பு பணிகளில் ஈடுபடப்போவதாகக் கூறினாலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் அவரை ஒரு துரோகியாகவே பார்க்கின்றனர் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளளார்.

யுத்தத்தின் பின்னரான மக்கள் பணிகளில் கே.பி பங்களிப்புச் செய்ய பலர் முன்வருவதை வரவேற்கலாம் என்றாலும், புலம்பெயர்ந்து வாழும் மக்கள் அவருக்கு உதவப் போவதில்லை எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேசப் பொறுப்பாளராக இருந்து குமரன் பத்மநாதன் புலம்பெயர்ந்த நாடுகளில் இயங்கி வந்த ஒன்பது புலி உறுப்பினர்களோடு இணைந்து பணியாற்றப்போவதாக வெளியான செய்திகள் குறித்து கேட்டபோதே செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனை ஒரு துரோகியாகவே பார்க்கின்றார்கள் எனவே, அவரது கருத்துக்களுக்கு இணங்கி புலம்பெயர் மக்கள் செயல்பட மாட்டார்கள் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

புலிகளுக்கு உதவி வழங்குவதற்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு

111usa.jpgதமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

முதலாவது தமிழ் நூல் 1578 இல் பிரசுரிப்பு “தம்பிரான் வணக்கம்”

தமிழில் நூல் அச்சிடப்பட்டு பிரசுரிக்கப்பட்ட வரலாறு சுவாரஸ்யமானது.முதலாவது தமிழ் நூல் 1578 அக்டோபர் 20 ஆம் திகதி வெளிவந்தது. அன்றைய தினம் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடதாசி மூலம் போர்த்துக்கேய மிசனரியான ஹென்ரிக் ஹென்ரிக்குயஸ் (அன்ரிக் அன்ரிக்குயஸ்) “தம்பிரான் வணக்கம்” என்ற நூலை பிரசுரித்துள்ளார்.

16 பக்கங்களுடன் 10   14 செ.மீ. புத்தகம் பிரசுரிக்கப்பட்டதாகவும் அதன் ஒவ்வொரு பக்கமும் 24 வரிகளைக் கொண்டதாக இருந்ததாகவும் அதில் பயன்படுத்தப்பட்ட தமிழ் எழுத்துருவானது ஓலைச்சுவடிகள், கற்களில் பயன்படுத்தப் பட்டவையெனவும் தமிழ் வரலாற்றியலாளரான புலவர் எஸ்.ராஜு கூறியதாக “இந்து” பத்திரிகை நேற்று {21.06.2010 }திங்கட்கிழமை குறிப்பிட்டுள்ளது.

பிரான்ஸிஸ் சேவியர் போர்த்துக்கேய மொழியில் எழுதிய “டொக்ரினா கிறிஸ்தம்” என்ற நூலின் மொழி பெயர்ப்பே இந்த நூலாகும். தமிழில் பிரார்த்தனை நூலொன்று இருக்க வேண்டுமென்ற அருட்தந்தை ஹென்றிகுயஸின் முயற்சியின் பெறுபேறாகவே இந்த நூல் பிரசுரிக்கப்பட்டதாக ராஜு கூறுகிறார்.

1556 இல் போர்த்துக்கல்லிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி கொல்லத்தில் இந்த நூல் அச்சிடப்பட்டது.இந்திய மொழியில் பிரசுரிக்கப்பட்ட முதலாவது நூல் இதுவென ராஜூ சுட்டிக்காட்டுகிறார். விஜயநகர சாம்ராஜ்யத்தின் மன்னர் முதலாம் ஸ்ரீரங்க ராயர் (15781586)இமைசூர் ஆட்சியாளர் ராஜா உடையார் (15781617), மதுரை ஆட்சியாளர் வீரப்பநாயக்கர் (15721595) தஞ்சாவூர் ஆட்சியாளர் அச்சுதப்ப நாயக்கர் (15721614) ஆகியோரின் காலகட்டத்திலேயே இந்த நூல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அச்சமயம் தகவல்களை வெளியிடுவதற்கு செப்புத்தகடுகள், கற்களே பயன்படுத்தப்பட்டு வந்தன.

“தம்பிரான் வணக்கம்” நூலுக்கு முன்னர் தமிழ் நூலொன்று பிரசுரிக்கப்பட்டிருந்ததாயினும் அது போர்த்துக்கேய எழுத்துருவிலேயே இருந்தது. கார்த்திலா, லின்கோயா தமிழ், வோர்த்துக்கேயஸ் என்ற அந்த நூலானது போர்த்துக்கல்லின் தலைநகர் லிஸ்பனில் அச்சிடப்பட்டதாக ராஜு கூறுகிறார்.

அருட்தந்தை ஹென்ரிக்குயஸ் போர்த்துக்கல்லின் விப்பாவிகோ சாவில் 1520 இல் பிறந்தவர். போர்த்துக்கல்லிலுள்ள கொய்ம்பிரா பல்கலைக்கழகத்தில் கற்ற பின்னர் 1546 இல் அவர் இந்தியாவுக்கு வருகை தந்தார். தமிழில் மிகவும் பிரியமுடையவரான அவர் மக்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும்போது “ஆமென்” என்பதனை “ஓம்” என்று மாற்றியதாக ராஜு கூறுகிறார்.

“கிறிஸ்ரியானி வணக்கம்” (1579),”கொன்பெசனாரியோ” (1580), “அடியார் வரலாறு”(1586) ஆகிய நூல்களையும் அவர் எழுதியுள்ளார். புன்னைக்கயலில் 1600 பெப்ரவரி 6 இல் அவர் இறந்தார். அவரின் பூதவுடல் தூத்துக்குடியில் அடக்கம் செய்யப்பட்டது.

இதன் பின்னர் நீண்டகாலம் சென்ற பின்பே அதிகளவு நூல்கள் பிரசுரிக்கப்பட்டதாக ராஜு கூறுகிறார். தமிழில் முதலாவதாகப் பிரசுரிக்கப்பட்ட தமிழ் நூல் திருக்குறளாகும். (1812) இதற்கான முயற்சிகளை மேற்கொண்டவர் அச்சமயம் சென்னை கலெக்டராக இருந்த பிரான்சிஸ் வைற் எலிஸ் என்பவராகும். சென்னை கல்விச் சங்கத்தை ஸ்தாபித்தவரும் அவரேயாகும்.

அச்சுக்கூடங்களை ஸ்தாபிக்க இந்தியர்களுக்கு 1835 இலேயே அனுமதி வழங்கப்பட்டது.

மீளக்குடியேறும் மக்களின் வாழ்வாதாரம் மேம்பாடு; பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் – முல்லைத்தீவில் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய

gotabaye.jpgமுல்லைத் தீவு மாவட்ட மக்களைத் துரிதமாக மீளக் குடியமர்த்தி, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதோடு அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கு மக்கள் மத்தியில் சேவையாற்றும் போது அவர்களின் உள்ளத்தையும் நம்பிக்கையையும் வென்றெடுக்கக் கூடிய வகையில் செயற்படுவது ஒவ்வொருவரினதும் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நேற்று முல்லைத்தீவுக்கு விஜயம் செய்தார். அவர் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் நடை பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்பட்டதன் காரணமாக தற்போது நாட்டின் நிலைமையில் பாரிய மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினால் இம்மாற்றத்திற்கு ஏற்றவகையில் நாமும் எமது செயற்பாடுகளை அமைத்துக்கொண்டு செயற்பட வேண்டும். மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து அவர்களது உள்ளங்களை வெற்றிகொள்ளக்கூடிய வகையில் சேவையாற்ற வேண்டும்.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இடமளிக்க முடியாது. அதற்கு ஏற்றவகையில் நாம் பெற்றிருக்கும் வெற்றியையும் சமாதானத்தயும் நாம் பாதுகாத்து தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும். இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டிருக்கின்றோம்.

மக்களின் உள்ளங்களையும் நம்பிக்கை யையும் வென்றெடுக்கக் கூடியவகையில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் எமது படை வீரர்கள் சிறு தவறுவிட்டாலும் அதனை தூக்கிப் பிடிப்பதற்கு சில வெளிநாட்டு அமைப்புக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அதனால் நீங்கள் மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

நாம் புலிகளிடமிருந்து மீட்டெடுத்துள்ள பெரும்பாலான ஆயுதங்கள் வெளிநாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டவையே. அவை கடல் வழியாகவே இங்க கொண்டு வரப்பட்டிருக்கின்றன. எதிர்காலத்தில் இவ்வாறு ஆயுதங்கள் கடல் வழியாக நாட்டுக்குள் வருவதைத் தடுக்கும் பொறுப்பு கடற்படையினரைச் சார்ந்ததே.

மக்களின் உள்ளத்தையும் நம்பிக்கையையும் வெற்றிகொள்ளும் வகையில் செயற்படும்போது புலனாய்வு தகவல்களையும் அம்மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும். இதனைப் பாதுகாப்பு படையினர் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்.

புலிகளின் தலைமைத்துவமும் இராணுவ கட்டமைப்பும் பயங்கரவாதமும் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன. என்றாலும் ஈழவாதமும் பிரிவினைவாத சிந்தனைகளும் வெளிநாடுகளில் செயற்படுகின்றன. இவற்றின் சிந்தனைகளும் செயற்பாடுகளும் நாட்டுக்குள் வராமல் இருப்பதை தடுப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எமது பாதுகாப்பு கட்டமைப்பு மறு சீரமைக்கப்பட்டு பலப்படுத்தப்படும் என்றார்.

இந்நிகழ்வில் முப்படைகளின் தளபதியும், விமானப்படைத் தளபதியுமான எயார் சீப் மார்ஷல் ரொஷான் குணத்திலக்க, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திஸ்ஸ சமரசிங்க, பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய, முல்லைத்தீவு மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன சில்வா உட்பட பாதுகாப்பு படையதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

“லப்டொப்” பென செங்கட்டி; இலங்கை வர்த்தகரை ஏமாற்றிய சென்னை வியாபாரி

லப்டொப் கணினி வழங்குவதாக 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு செங்கட்டி வைத்துள்ள பொதியை இலங்கை வர்த்தகருக்கு கொடுத்து ஏமாற்றிய குற்றச்சாட்டுகளுக்காக சென்னை விமான நிலையப் பொலிஸார் மண்ணடியைச் சேர்ந்த வர்த்தகரொருவரை கைது செய்துள்ளனர்.

மொஹமட் ஹசன், மொஹமட் றபீ, மொஹமட் பௌஸி ஆகியோர் கொழும்பைச் சேர்ந்த வர்த்தகர்களாகும்.அவர்கள் புடவை மற்றும் பாதணிகள் வியாபாரத்திற்காக அடிக்கடி சென்னைக்கு வந்து செல்வது வழக்கமாகும். கடந்த வியாழக்கிழமை அவர்கள் சென்னைக்கு வந்திருந்தனர். வெள்ளிக்கிழமை அவர்கள் திரும்பிச் செல்லவிருந்தனர். அவர்கள் மண்ணடியிலுள்ள மொஹமட் ஷாபீர் என்ற வர்த்தகருடன் தொடர்பு கொண்டனர். குறைந்த விலையிலான லப்டொப் கணினிகளை தன்னால் வழங்க முடியுமெனவும் அதனை இலங்கையில் அதிக விலையில் விற்கலாம் என்றும் ஷாபீர் ஹசனுக்கு கூறியுள்ளார். ஹசனிடமிருந்து பின்னர் ஷாபீர் 15 ஆயிரம் ரூபாவைப் பெற்றுள்ளார். ஹசன் சென்னை விமான நிலையத்திற்கு வந்தபோது அவருடைய பொதி சோதனையிடப்பட்டது. அதற்குள் சந்தேகமான பொருள் இருந்தது அவதானிக்கப்பட்டது.

சோதனையில் கணினிப்பை பொதிக்குள் வெறும் செங்கட்டியொன்று இருந்துள்ளது. தான் செங்கட்டியைக் கொண்டு செல்வது குறித்து ஹசன் அறிந்திருக்கவில்லையென்று பொலிஸார் இந்து பத்திரிகை நிருபருக்குக் கூறியுள்ளனர். பொதிக்குள் இருந்தது லப்டொப் என அவர் கருதியிருந்தார். கடந்த இரு நாட்களாக விசாரணை இடம்பெற்றபோது மண்ணடி வியாபாரி இலங்கை வர்த்தகரை ஏமாற்றியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாபீர் சனிக்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டுள்ளார்.3 இலங்கை வர்த்தகர்களும் விடுவிக்கப்பட்டு வீடு செல்ல அனுமதி வழங்கப்படவுள்ளனர்.

ஷாபீர் இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் எனவும் பாடசாலையை விட்டு விலகிய பின் இலங்கையில் பல வருடம் இருந்து விட்டு பின்னர் சென்னையிலுள்ள மண்ணடிக்கு வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன், அவருக்கு பல மொழிகள் தெரியும் எனவும் பொலிஸார் கூறினர்.

பிரெட்றிக்காவின் LapTop நீதிமன்ற பாதுகாப்பில்.

pratrika.jpgஜெனரல் சரத் பொன்சேகா வழங்கிய பேட்டி பற்றிய குறிப்புகள் உள்ளடக்கிய குறிப்பேட்டை ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் சம்பா ராஜரட்னவின் உத்தரவின் பேரில் பிரெட்ரிகா ஜான்ஸ் நேற்று நீதிமன்றத்துக்கு சமுகமளித்திருந்தார். சம்பந்தப்பட்ட குறிப்பேட்டை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்ட நீதவான் பிரதம ஆசிரியர் வெளியேறுவதற்கு அனுமதி வழங்கினார்.

சம்பந்தப்பட்ட விடயம் தொடர்பாக பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷவிடம் இருந்து ரகசிய பொலிஸார் அறிக்கையொன்றை பெற்றுக் கொண்டுள்ளதாக பிரதி சட்டமாஅதிபர் வசந்த நவரட்ன நீதிமன்றத்துக்கு கூறினார்.

‘சண்டே லீடர்’ பத்திரிகைக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் ஜென ரல் பொன்சேகாவின் நேர்காணல் தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அந்த சமயத்திலேயே பிரதி சட்டமா அதிபர் மேற்கூறியவாறு தெரிவித்தார். ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் சார்பாக வாதாடிய சட்டத்தரணி என். எம். சஹீட் குறிப்பேட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். சம்பந்தப்பட்ட நேர்காணல் உள்ளடக்கிய குறிப்பேடு மூல ஆவணம் என்பதால் அதனை நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்குமாறு அவர் கூறினார்.

நேர்காணல் இடம்பெற்ற குறிப்பேடு தொடராக இலக்கமிடப்படவில்லை என்று பிரதி சட்டமா அதிபர் கூறியதையடுத்து குறிப்பேட்டில் தொடர்ச்சியாக இலக்கமிடுமாறு நீதவான் உத்தரவிட்டார். ஜெனரல் பொன்சேகாவின் சார்பாக வாதாடிய சட்டத்தரணி நளின் லத்துவ ஹெட்டி குறிப்பேடு மீது நம்பிக்கை இல்லையென்று கூறினார்.

சண்டே லீடர் பத்திரிகையின் செயற்பாடுகள் அவ்வாறான நிலையை தோற்றுவித்துள்ளதாகவும் அப்பத்திரிகை பல்வேறு அரசியல் கட்சிகளிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு சர்ச்சைக்குரிய செய் திகளை பிரசுரிப்பதாகவும், இவ்வாறான ஒரு அறிக்கையை அப்பத்திரிகை வெளியீட்டின் நோக்கம் என்ன என்பதை தனக்கு விளங்கிக் கொள்ள முடியாமல் இருப்பதாகவும் அவர் கூறினார்.

நேர்காணல் இடம்பெற்ற பக்கங்களுக்கு இடையே குறிப்பேட்டில் சில காலி பக்கங்களை காண முடிவதாகவும், பத்திரிகைக்கு வெளியாரிடம் இருந்து பணம் கிடைக்கும் போது ஏதேனும் தேவையானளவு நிறைப்பதற்கு அவை காலியாக விடப்பட்டுள்ளனவா என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அவ்வாறான காலிப் பக்கங்கள் குறிப்பேட்டில் உள்ள விடயத்தை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேலதிக விசாரணையை எதிர்வரும் ஜுலை 12ம் திகதிக்கு ஒத்திவைத்த நீதவான் ஜெனரல் பொன்சேகாவை தொடர்ந்து இராணுவ பாதுகாப்பில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.