செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கிளிநொச்சி பாரதிபுரத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை மீள்குடியேற்றப்படவுள்ளனர்.

கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 320 குடும்பங்கள் நாளை செவ்வாய் கிழமை அவர்களது சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். வவுனியா நலன்புரி முகாமிலிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்படவுள்ளனர். நலன்புரி நிலையத்திலிருந்து இன்று அழைத்து வரப்பட்ட இம்மக்கள் கிளிநொச்சி மத்திய கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களுக்கான பதிவுகள், சில நடைமுறைகள் முடிவடைந்ததும் நாளை அவர்களது சொந்தக் காணிகளில் மீள்குடியேற்றப்படவுள்ளனர். பாரதிபரம் பாடசாலை சில மாதங்களாக இயங்கி வருகின்ற போதும் அக்கிராமத்து மக்கள் தற்போதே மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, வெளிமாவட்டங்களில் உறவினர் நண்பர்கள் வீடுகளில் வசிக்கும் வன்னி மக்களின் மீள்குடியேற்றப் பதிவுகள் இம்மாதத்தில் நடைபெற மாட்டாது என கிளிநொச்சி மாவட்டச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன, மத நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் – ஜனாதிபதி அதிர்ச்சி; கவலை

p.jpgஇன, மதங்களுக்கிடையில் நட்புறவை வளர்ப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட நியாஸ் மெளலவி மனித நேயமிக்க ஒரு மதத் தலைவராவாரென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது:

இஸ்லாமிய மதத் தலைவர் நியாஸ் மெளலவியின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டதும் நான் பெரும் அதிர்ச்சியும் கவலையுமடைந்தேன். அவர் ஜனாதிபதி ஆலோசகராக மட்டுமன்றி நெருங்கிய நண்பராகவும் திகழ்ந்தார்.  அவருக்கு எனது கெளரவ அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இஹ்ஸானிய்யா அரபுக் கல்லூரியின் ஸ்தாபக பணிப்பாளராக நீண்டகாலமாக பதவி வகித்து இஸ்லாமிய இளஞ் சந்ததியினருக்கு அவர்செய்த சேவையை நான் கெளரவத்துடன் நினைவுகூருகிறேன்.

இஸ்லாமிய மதம் தொடர்பான அவரது அறிவு, அனுபவங்கள், திறமைகளை அவர் எப்போதும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக உபயோகித்தார். மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் மதங்களுக்கிடையில் சகோதரத்துவத்தை வளர் ப்பதற்கு அவரது அர்ப்பணிப்பு மகத்தானது.

இஸ்லாமிய மதத்தின் புனித நூலான திருக்குர்ஆன் பற்றிய சிறந்த அறிவைக் கொண்டிருந்த அவர் இந்நாட்டிலுள்ள ஏனைய மதங்கள் பற்றிய தெளிவையும் கொண்டு விளங்கினார். இன, மத, குலங்களுக்கப்பால் மனிதத் தன்மையை மதிக்கும் அவர், சகல மதத்தவரதும் அன்பிற்கும் மரியாதைக்கும் பாத்திரமானவர். மனித நேயத்தைக் கொண்டவர்களுக்கே இத்தகைய கெளரவம் கிடைக்கின்றது.

இந்நாட்டில் இன, மத, குலபேதமின்றி அனைவரும் நட்புறவுடன் வாழவேண்டும் என்பதே அவரது விருப்பமாக இருக்கிறது. இந்த வகையில் நியாஸ் மெளலவியின் மரணத்தை ஒரு அன்புமிக்க நண்பனின் பிரிவாகக் கருதுவதோடு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள் கிறேன் எனவும் ஜனாதிபதி தமது அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்களை ஓரங்கட்டிய செம்மொழி மாநாடு

semmoli.jpgதமிழுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்த இஸ்லாமியத் தமிழ்க் கல்விமான்கள் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் ஓரங்கட்டப்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த மாநாட்டின் ஆய்வரங்க அமர்வுகளின்போது புலவர்கள் மற்றும் பாவலர்கள் ஆற்றிய சேவைகள் குறித்து குறிப்பிடப்படவில்லையென தமிழ் ஆர்வலரான ஸ்ரீநிவாசன் பழனிச்சாமி என்பவர் கூறியுள்ளார். பல்வேறு விடயங்களில் தமிழை மேம்படுத்துவதற்கு அவர்கள் தமது உயிர் மூச்சை இறுதிவரை கொடுத்திருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். காய்த் இ மில்லத் என்றுபரிவுடன் அழைக்கப்படும் முஹமத் இஸ்மாயில் சாகிப்,1949 செப்டம்பர் 14 இல் அரசியல் நிர்ணய சபையில் தமிழை உத்தியோகபூர்வ மொழியாக்குமாறு பேசியிருந்ததை ஓய்வுவெற்ற வங்கியதிகாரி எம்.கோபாலகிருஷ்ணன் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்குச் சுட்டிக்காட்டியுள்ளார்.

வரலாறு மறந்துவிட்டது. காய்த் இ மில்லத் மறைக்கப்பட்டுள்ளார் என்று அவர் கூறியுள்ளார். தமிழ், இஸ்லாமிய இலக்கியத்தில் உமறுப்புலவரின் சீறாப்புராணம் பாரிய வெற்றியாக 17 ஆம் நூற்றாண்டில் கணிக்கப்பட்டது. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அது புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்று ஓய்வுபெற்ற தமிழ்ப் பண்டிதர் ஜோசப் சந்திரகுமார் கூறியுள்ளார்.

தோனிக்கு திருமணம்

doni.jpgஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி. இவருக்கும், இவரது பாடசாலைத் தோழி சாக்ஷிராவத்துக்கும் இடையே டேராடூனில் உள்ள ஹோட்டல் பாகீரதியில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இவ்விழாவில் டோனியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய கிரிக்கெட் நண்பர்கள் கலந்து கொண்டனர். சாக்ஷிராவத், ராஞ்சி ஷாமிலியில் உள்ள டி. ஏ. வி. பாடசாலையில் படித்தவர். தோனியும் இதே பள்ளியில் படித்தவர் தான். பாடசாலை காலத்தில் இருந்தே இருவரும் நண்பர்கள். தோனி மற்றும் சாக்ஷி ஆகியோரின் தந்தைகள் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் ஒன்றாக பணிபுரிந்தவர்கள். சாக்ஷியின் தந்தை ஓய்வுபெற்றபின் அவர்களது குடும்பம் டேராடூனுக்கு இடம்பெயர்ந்து விட்டது.

இருவருக்கும் இடையே திருமண திகதி நிச்சயிக்கப்பட்டு விட்டதா என தோனியின் நண்பரிடம் விசாரித்த போது, அது முடிவாகவில்லை என்றும் அநேகமாக ஆஸி., தொடருக்குப் பின் இருக்கலாம் என அவர் தெரிவித்தார். இந்நிலையில் இன்னும் 2 நாளில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முதலில் தொவிக்கப்பட்டது. பின்பு திடீரென நேற்றிரவு திருமணம் நடக்குமென அறிவிக்கப்பட்டது.

தோனியின் நிச்சயதார்த்தம் குறித்த செய்தியறிந்து அவரது ரசிகர்கள் பட்டாசு கொளுத்தி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கால்பந்து ரசிகரான தோனியின் நிச்சயதார்த்தம், உலக கோப்பை கால்பந்து நடந்துவரும் வேளையில் நடந்திருப்பது மென்மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அவரது ரசிகர்கள் தெரிவித்தனர்.

வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதம் இன்று ஆரம்பம்

parliament.gifவரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான குழுநிலை விவாதம் இன்று ஆரம்பமாகின்றது.

இன்று 5ம் திகதி முதல் எதிர்வரும் 9 ம்திகதி வெள்ளிக்கிழமை வரை குழுநிலை விவாதம் இடம்பெறுவதுடன் வெள்ளிக் கிழமை மாலை 6. 00 மணிக்கு விவாதத்தின் முடிவில் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

தினமும் காலை 9.30 மணி முதல் இரவு 9.00 மணிவரை விவாதம் இடம்பெறுவதுடன் அமைச்சர்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

11,590 உயர் கல்வி மாணவருக்கு புலமைப்பரிசில்

மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 11,590 உயர் கல்வி மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளன. மஹாபொல புலமைப்பரிசில் வழங்கும் 29வது வருட நிகழ்வு நேற்று முன்தினம் பிரதமர் டி. எம். ஜயரட்னவின் தலைமையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர்கள் எஸ். பி. திசாநாயக்க, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோர் கலந்துகொண்ட இந்நிகழ்வில் முதற்கட்டமாக நாடளாவிய ரீதியில் க.பொ.த உயர்தரப் பரீட்சையில் அதி கூடிய புள்ளிகளைப் பெற்ற 24 மாணவர்களுக்குப் புலமைப் பரிசில்கள் வழங்கப்பட்டன.

மஹாபொல புலமைப்பரிசிலாக மாதாந்தம் 2,500 ரூபா வழங்கப்பட்டு வருகிறது. 422 பேருக்குப் புலமைப்பரிசிலை வழங்கி 1981ம் ஆண்டு அன்றைய உயர் கல்வி அமைச்சர் அதுலத்முதலி இத்திட்டத்தை ஆரம்பித்துவைத்தார். அதனையடுத்து இவ்வருடம் வரை 1,60,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச இந்து மத பீடம் அனுதாபம்

niyaz.jpgமெளலவி நியாஸின் மரணம் குறித்து சர்வதேச இந்து மதபீடம் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்துமத பீடத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் இந்து சமய விவகார ஆலோசகருமான இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

போர்ச் சூழல் காலங்களில் மிகவும் துணிகரமாக சமாதானத்துக்காக குரல் கொடுத்த நியாஸ் மெளலவி, இஸ்லாமிய தர்மத்தின்படி ஒழுங்கி, சகல மக்களுடனும் மிகவும் அந்நியோன்யமாக வாழ்ந்தவர்.

நாடு சமாதானம் பெற்ற சூழலில் அவர் எம்மை விட்டுப் பிரிந்திருப்பது எமக்கு ஆறாத்துயரை ஏற்படுத்தியிருக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றோம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுவினர் இன்று இந்தியா சென்றுள்ளனர்.

TNAஇந்தியாவின் அழைப்பின் பேரில் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அறுவர் அடங்கிய குழுவினர் இன்று  ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கையிலிருந்து புறப்பட்டு இந்தியா சென்றுள்ளனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலமையிலான இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், அ.விநாயகமூர்த்தி, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

மூன்று நாள் பயணமாக செல்லும் இக்குழுவினர் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமாராவ், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து கலந்தரையாடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் இந்தியப் பிரதமரையும் சந்திக்கும் வாயப்பு கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான இந்தியாவின் பங்களிப்பு, இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் அகிய விடயங்களுக்கே இச்சந்திப்பில் முதன்மை கவனம் செலுத்தப்படும் என கூட்டமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

வடமாகாண நிர்வாக செயலகங்கள் ஓகஸ்ட் 1 முதல் கிளிநொச்சியில் இயங்கும்.

வடமாகாண ஆளுநர் அலுவலகமும், வடமாகாண பொது நிர்வாக செயலகமும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கிளிநொச்சியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, பிரதம செயலாளர் அலுவலகமும், அமைச்சுக்களின் உப பிரிவுகளும், கிளிநொச்சி நகருக்கு மாற்றப்படும் எனவும், வடமாகாணத்தின் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் வடமாகாண அளுநர் அலுவலகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறியின் நெறிப்படுத்தலில் வடமாகாண பொது நிர்வாக அமைச்சின் பிரதிப் பிரதம செயலாளரும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னாள் அரசாங்க அதிபராக கடமையற்றியவருமான தி.இராசநாயகம் இந்நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

வடமாகாணத்திற்கான அனைத்து நிர்வாக அலகுகளும், அடுத்த மாதம் கிளிநொச்சி அறிவியல் நகரிற்கு மாற்றப்படும் எனவும், அதற்கான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.

லண்டனிலிருந்து யாழ்ப்பாணம் வந்தவர் விபத்தில் மரணம்!

லண்டனில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தனது உறவினர்களைப் பார்ப்பதற்காக வந்தவர் விபத்தொன்றில் சிக்கி மரணமடைந்துள்ளார். நேற்று முன்தினம் (July 01 2010) ஏழாலைப் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏழாலையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பி.றொபின் (வயது36) என்பவரே மரணமடைந்தவர்.

நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, அவரது மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரமொன்றுடன் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. இவரின் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் மரண விசாரணைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. இவர் லண்டனிலிருந்து அண்மையில் யாழப்பாணத்திற்கு உறிவினரைப் பார்ப்பதற்காக வருகை தந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.