செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நிதிக்கம்பனிகள் சட்டத்தை நீக்கிவிட நடவடிக்கை

நாட்டில் சட்டவிரோதமாக இயங்கும் நிதி நிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக நடைமுறையில் உள்ள நிதிக்கம்பனிகளின் சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை மத்திய வங்கி மேற்கொள்ளவுள்ளது.

இந்த வருடம் டிசம்பரில் நடைமுறையிலுள்ள நிதிக் கம்பனிகள் சட்டத்தை மத்திய வங்கி அகற்றிவிடும் என்று விபரங்களை வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்படாத அதிகாரியொருவர் டெய்லிமிரர் இணையத்தளத்திற்குக் கூறியுள்ளார்.

உத்தேச நிதி,வர்த்தக சட்டமூலமானது சட்டவிரோதமாக இயங்கும் நிதிநிறுவனங்களுக்கு எதிராகக் கடுமையான விதத்தில் செயற்படுவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டதாக அமையும். சக்விதி போன்ற மோசடி நிறுவனங்களிலிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

முரளிதரன் பந்து வீச்சில் குறையில்லை வோர்ன் தெரிவிப்பு

muralitharan.jpgஇலங்கை சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் பந்து வீச்சில் எந்தக் குறையும் இல்லை அவர் முறையாகவே பந்து வீசுகிறார் என்றார் அவுஸ்திரேலியாவின் வோர்ன்.

இலங்கை அணியின் சுழல் மன்னன் முத்தையா முரளிதரன் உலக அரங்கில் டெஸ்ட் (132 போட்டி, 792 விக்.) மற்றும் ஒரு நாள் (337 போட்டி 515 விக்.) போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். இவர் வரும் 18ம் திகதி காலியில் நடக்க உள்ள இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற உள்ளார்.

பந்து வீச்சு சர்ச்சை கடந்த 1995ல் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது, முரளிதரன் பந்தை எறிவதாக நடுவர் டெரல் ஹேயர் குற்றம் சாட்டினார்.

களுவாஞ்சிக்குடியில் தேசிய சேமிப்பு வங்கியின் 30 இலட்சம் ரூபா கொள்ளை

களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணம் நேற்று வியாழக்கிழமை காலை களுவாஞ்சிக்குடியில் வைத்துக் கொள்ளையிடப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடிக் கிளையின் உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிக்குடியிலுள்ள இலங்கை வங்கியிலிருந்து தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான முப்பது இலட்சம் ரூபா பணத்தை எடுத்துக் கொண்டு முச்சக்கர வண்டியில் தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடி கிளையை நோக்கி சென்றுகொண்டிருந்த போது மணல் வீதி எனுமிடத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் முச்சக்கரவண்டியை மறித்துத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி முப்பது இலட்சம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் விசாரணைகளை நடத்தியதோடு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.மணல் வீதி என்னுமிடத்தில் ஏற்கனவே பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்று இருந்து பின்னர் அது அகற்றப்பட்டது.இச்சம்பவம் தொடர்பாக வங்கி உத்தியோகத்தர்கள் களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை – துடுப்பாட்டத்தில் டோனி பந்துவீச்சில் விட்டோரி முதலிடம்

dhoni.jpgசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ. சி. சி.) ஒரு நாள் போட்டியின் அடிப்படையில் வீரர்களின் தர வரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்திய அணி கப்டன் டோனி 807 புள்ளிகள் பெற்று தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார்.

தென்னாபிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் அவரை நெருங்கிய நிலையில் உள்ளார். டிவில்லியர்ஸ் 805 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், மைக்ஹசி (அவுஸ்திரேலியா) 792 புள்ளிகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளனர்.

மற்ற இந்திய வீரர்களில் தெண்டுல்கர் 6வது இடத்திலும் கோலி 16வது இடத்திலும், யுவராஜ் சிங் 17வது இடத்திலும் ஷெவாக் 18வது இடத்திலும் உள்ளனர். பந்துவீச்சில் நியூசிலாந்து கப்டன் வெட்டோரி முதல் இடத்திலும் பங்களாதேஷ் வீரர் சகீப் அல்-ஹசன் 2வது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்களில் ஹர்பஜன்சிங் 11வது இடத்திலும் பிரவின்குமார் 15வது இடத்திலும் உள்ளனர்.

போலி நாணயத் தாள் அச்சிட்ட 2 பேர் கைது

ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்ட இருவர் கிளிநொச்சியில் வைத்து கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிசாந்த ஜயக்கொடி தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்களிட மிருந்து ஒரு இலட்சத்து 77 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

விஸ்வமடு, முல்லைத்தீவைச் சேர்ந்த இருவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபா பெறுமதியான போலி நாணயத் தாள்களை அச்சிட்டு பல்வேறு இடங்களுக்கும் விநியோகித்து வந்துள்ளனர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து இவர்கள் வவுனியாவில் வைத்தே போலி நாணயத் தாள்களை அச்சிட்ட பின்னர் கிளிநொச்சிக்கு எடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

”வன்னியில் 13 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அமைக்கப்படும்.” பாராளுமன்றப் பிரதித் தலைவர் சந்திரகுமார்

Chandrakumar_MP_Jaffna_EPDPவன்னிப் பகுதிகளில் தற்போதுள்ளதை விடவும் மேலும் 13 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வுள்ளதாக ஈ.பி.டி.பியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கரடிப்போக்குச் சந்தியில் எரிபொருள் நிரப்பும் நிலையம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வன்னிப் பெரு நிலப்பரப்பில் வசிக்கும் மக்களின் அத்தியாவசிய தேவைகள் தற்போது சீர் செய்யப்பட்டு வருவதாகவும், அவற்றில் எரிபொருள் தேவைகள் ஓரளவிற்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 13 எரிபொருள் நிரப்பும் நிலையங்களை அமைக்க அமைச்சர் சுசில் பிறெம்ஜெயந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

”காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை எந்த நாட்டிற்கும் வழங்கப்பட மாட்டாது” அமைச்சர் பி.தயாரட்ண

KKS_Cement_Factoryகாங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை இந்தியாவிற்கோ அல்லது வேறு எந்தவொரு நாட்டிற்கோ வழங்கப்பட மாட்டாது என அரச சொத்துடமைகள் மற்றும் கைத்தொழில் அமைச்சர் பி.தயாரட்ண தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணம் விஜயம் செய்த அமைச்சர் ஐக்கிய தேசியக்கட்சியின் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் வைத்து செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தினார். அவ்வேளையிலேயெ இவ்வாறு அவர்  தெரிவித்தார். வெகு விரைவில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை கட்டம் கட்டமாக இயங்கச் செய்யப்படும் எனவும், உடனடியாக இதனை இயங்கச்செய்ய முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

அடுத்து வரும் சந்ததியும் இத்தொழிற்சாலையை பயன்படுத்த வேண்டும். இத்தொழிற்சாலை இந்தியாவிற்கு விற்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என தெரிவித்ததோடு, எந்தவொரு நாட்டிற்கும் இத்தொழிற்சாலை வழங்கப்படப் போவதில்லை எனவும் அமைச்சர் தெரவித்துள்ளார்.  பல வருடங்களாக பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டுக்குள்ளிருக்கும் காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையை பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்பு கொண்டு மீளவும் இயங்கவைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மலையகம் நாவலப்பிட்டியில் போக்குவரத்துப் பயணிகள் திடீர் சோதனைக்குட்பட்டனர்!

கண்டி மாவட்டத்திலுள்ள நாலப்பிட்டியில் நேற்று பாதுகாப்புப் படையினரின் திடீர் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. நாவலப்பிட்டி நகரூடாகச் சென்ற சகல போக்குவரத்து வாகனங்களும் இடைநிறுத்தப்பட்டு, பயணிகள் சோதனை நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். பயணிகளின் தேசிய அடையாள அட்டைகள் இராணுவத்தினரால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

போர் முடிவிற்கு வந்ததன் பின்னர் தென்னிலங்கைப் பகுதிகளிலோ, மலையகப் பகுதிகளிலோ போக்குவரத்து வாகனங்கள் இடைமறிக்கப்பட்டு பயணிகள் சோதனையிடப்படும் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டிருந்தன. தற்போது சிறிது சிறிதாக இந்நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக தெரிய வருகின்றது.  இது பொதுமக்கள் மத்தியில் மீண்டும் ஒரு அச்ச நிலையை எற்படுத்துவதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைகோ, நெடுமாறன் சிறையில் அடைப்பு

yko_03.jpgதமிழக மீனவர்களை இலங்கைப் படையினர் தொடர் கொலை செய்து வருவதைக் கண்டித்தும், இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதரகங்களை மூடக்கோரியும் போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பழ. நெடுமாறன் உள்ளிட்டோரை போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மயிலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து இலங்கை தூரதகத்தை மூடக் கோரி ஊர்வலமாக அனைவரும் துணைத் தூதரகத்தை நோக்கி கிளம்பினர். இதையடுத்து போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். பின்னர், வைகோ, பழ.நெடுமாறன், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் விடுதலை ராஜேந்திரன், புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் உள்ளிட்ட 282 பேரை மட்டும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மீது, 188, 341, 153(A), 143, 7 I (A), 145,285,506(I), ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வைகோ, நெடுமாறன், விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவர முடியாதபடி வழக்குப் போடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரையும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். வைகோ உள்ளிட்ட சிலரை திருச்சிக்கும், நெடுமாறன் உள்ளிட்ட சிலரை கடலூருக்கும், நடராஜன் உள்ளிட்ட சிலரை மதுரைக்கும் கொண்டு சென்று சிறையில் அடைத்தனர். பெண்களை வேலூர் சிறைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியர் நதீகாவின் மரணம்; அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிப்பு

mosquito.jpgடெங்கு நோய்க்கு உள்ளாகி உயரிழந்த பதுளை ஆஸ்பத்திரி வைத்தியரின் மரணம் தொடர்பாக தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

பதுளை பொது வைத்தியசாலையின் சிறுவர் சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய வைத்தியர் நதீகா லக்மாலி விஜயநாயக்க டெங்கு நோய்க்கு உள்ளாகி பதுளை ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் கடந்த ஞாயிறன்று உயிரிழந்தார். இவ்வாறான நிலையில் இவரது தந்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நேற்று முன்தினம் தொலைபேசி ஊடாகத் தொடர்பு கொண்டு பதுளை ஆஸ்பத்திரியில் தமது மகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாததன் விளைவாகவே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்தே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வைத்தியர் நதீகாவின் மரணம் தொடர்பாக தமக்கு உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். டெங்கு நோய்க்கு உள்ளான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்ட்டுக்குப் பொறுப்பான வைத்தியரான நதீகா அந்த ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்றுள்ளார்.  இருப்பினும் இவரது ஆரோக்கியத்தில் அங்கு பணியாற்றும் சுகாதாரத் துறை ஊழியர்கள் உரிய கவனம் செலுத்தினார்களாக என உடனடியாக ஆராயுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இதேநேரம் டெங்கு ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி டெங்கு ஒழிப்பு தொடர்பான துரித வேலைகளை ஆரம்பித்திருக்கின்றது. “இவ்வேலைத்திட்டம் தொடர்பான பொறுப்புக்கள் மாகாண சபை களுக்கும், உள்ளூராட்சி மன்றங் களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் பொறுப்புக்களை எவரும் தவிர்ந்து நடக்க முடியாது.  டெங்கு நோயை ஒழிப்பதற்காக எல்லோரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார்.

இதேவேளை டெங்கு நுளம்பு ஒழிப்புக்கென பி.ரி.ஐ. பக்aரியா நுண்ணங்கியைப் பாவிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் துரிதமாக மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுகாதார அமைச்சின் மேலதிக செய லாளருக்கு அறிவுறுத்தல் வழங்கி யுள்ளார்.