செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வன்னியில் மீள்குடியேறிய மக்கள் தங்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதில் தாமதங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

வன்னியில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தங்களின் அழிவடைந்த வீடுகளை அமைத்துக் கொள்வதிலும், சேதமுற்ற விடுகளை திருத்திக்கொள்வதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு; வருகின்றனர்.

வீடுகள் முற்றாக அழிவுற்ற மக்களுக்கு  வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகளை சில நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. இதனடிப்படையில் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியமர்ந்த மக்கள் வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான உதவிகள் சில பகுதிகளில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றரை இலட்ச ரூபா செலவில் சிறிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான பணம் கட்டம் கட்டமாக வழஙகப்படுகின்றன. வீட்டு அத்திவாரம் இடுவதற்காக முதற்கட்டமாக ஐம்பதினாயிரம் ரூபா வழங்கப்பட்டு அதற்கான வேலைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்த கட்ட கொடுப்பனவிற்காக சம்பந்தப்பட்ட மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மூன்று மாதங்களில் வீடமைப்புப் பணிகள் முற்றாக நிறைவடைய வேண்டுமென குறித்த நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால், அதன்படி தாங்கள் வீட்டு அத்திவார வேலைகள் முடித்து ஒரு மாதமாகியும் அடுத்த கட்ட வேலைக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என மக்கள் எம்மிடம் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை, வீட்டின் சுவர்கள் எஞ்சியுள்ள நிலையில், கூரைகள் கதவு, யன்னல்களற்ற விடுகளுக்கு திருத்த வேலைகளுக்காக ஒன்றரை இலட்ச ரூபா வழங்குவதாக இன்னொரு நிறுவனம் பதிவுகளை மேற்கொண்டுள்ள நிலையிலும் அதற்கான வேலைத்திட்டங்கள் மிகவும் தாமதமாகி வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். அடுத்து வரும் மாதங்களில் பருவமழை பெய்ய விருப்பதால் தங்களின் சிறுபிள்ளைகள் அடங்கிய குடும்பத்தினரோடு எவ்வாறு தங்கள் காணிகளில் தங்கியிருப்பது என்கிற கவலைகள் அம்மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடபகுதி பஸ்களில் பயணிக்கும் பெண்கள் படையினரால் தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர்

வடபகுதிகளில் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் படையினரால் பெரும் சிரமத்திற்கும் அச்சத்திற்கும் உள்ளாகி வருகின்றனர். இளம்பெண்களுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்யும் படையினர் சிலர் அப்பெண்களுடன் அங்க சேட்டைகளில் ஈடுபடுகின்றனர். சீருடையில் பயணம் செய்கின்ற படையினர் பெரும்பாலும் மக்களுடன் இருக்கையில் அமர்ந்து பிரயாணம் செய்வதில்லை. ஆனால், சிவில் உடைகளில் பயணம் செய்யும் படையினர் மக்களோடு மக்களாக அவர்களின் அருகில் இருக்கைகளில் அமர்ந்து பிரயாணம் செய்கின்றனர். இவ்வாறான வேளைகளில் அருகில் இளம் பெண்கள் அமர்ந்திருந்தால் அவர்கள் மீது அங்க சேட்டைகளில் ஈடுபடுகின்றனர்.

இதற்கெதிராக பாதிக்கப்படும் பெண்ணோ அல்லது. அதனைக் கவனிக்கின்ற ஏனையொரோ எதுவும் செய்ய முடியாத நிலையிலுள்ளனர். படையினர் என்பதால் அவர்கள் கண்டும் காணாதவர்கள் போல் இருக்கும் கொள்ளும் நிலை ஏற்படுகின்றது. குறிப்பாக யாழப்பாணத்திலிருந்து கிளிநொச்சி. வவுனியா செல்லும் பஸ்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் இடம்பெறுகின்றன.

‘உலக நாடுகளின் குப்பைகளை கொட்டும் இடமாக எமது நாட்டை வைத்திருக்க முடியாது’ – ஜனாதிபதி

h-tota03.jpgமேட் இன் ஸ்ரீலங்கா எனும் மகுடத்தின் கீழ் உலகம் வியக்கும் உற்பத்தி கேந்திர மையமாக இலங்கை கட்டியெழுப்பப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

சர்வதேச நாடுகளின் கழிவுகளை குவிக்கும் நாடகவன்றி இனி இலங்கையை உலக முன்னிலையில் மாபெரும் உற்பத்தி நாடாகத் திகழ வைப்பதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலகிலேயே கடலல்லாத பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் முதல் துறைமுகமென வர்ணிக்கப்படும் அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்திற்கு கடல் நீர் நிரப்பும் நிகழ்வை உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைத்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் மேலும் உரை நிகழ்த்திய ஜனாதிபதி :

இற்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னர் எம்மைவிட மிக மிக பின்னடைவாகவிருந்த நாடுகள் இன்று பெரும் முன்னேற்றமடைந்துள்ளன. அதனைப் பார்த்து ஆதங்கப்படுவதற்கான நேரம் இதுவல்ல. தாய்நாட்டை பொருளாதாரத்திலும் அபிவிருத்தியிலும் கட்டியெழுப்பி உற்பத்தியின் கேந்திர நிலையமாக மாற்றும் எமது இலக் கினை வெற்றி கொள்ள சகலரும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம்.

பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் இத்தகைய அபிவிருத்தித் திட்டங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. அம்பாந் தோட்டைத் துறைமுகத்தைப் பொறுத்தவரை பல தடைகள் சவால்கள் விமர்சனங்களுக்குப் பின்னர் வெற்றிகரமாக தற்போது நடைமுறைப் படுத்தப்படுகிது. எமது நாட்டின் வரலாற்றில் பல துறைமுகங்கள் இருந்துள்ளன. எனினும் இந்த துறைமுகமானது உலக வரைபடத்தில் இலங்கையைக் குறித்துக் காட்டும் ஒன்றாகத் திகழ்கிறது. சர்வதேசத்துக்கும் இலங்கைக்குமான தொடர்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் இது அமைகிறது.

நாட்டுக்கான சுதந்திரத்தினைப் பெற்றுக் கொடுத்துள்ள எமக்கு அபிவிருத்தி மற்றும் பொருளாதார ரீதியில் நாட்டைக் கட்டியெழுப்பும் பாரிய பொறுப்பும் உள்ளது. கடந்த வருடம் மே மாதம் நம் நாட்டை சுதந்திரமாக்கினோம். நாம் இன்று அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிரப்பும் கடல் நீர் சகல பலவீன சிந்தனைகளையும் கழுவிவிடும் என்பது உறுதி.

தொடர்ந்தும் சர்வதேசத்தின் வர்த்தக கேந்திர நிலையமாகவே இலங்கை இருந்து வந்துள்ளது. எனினும் இந்த துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதனால் எமது தாய்நாடு உலகளாவிய ரீதியில் பிரசித்தமடைகிறது. எமது நாட்டில் சுதந்திர பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நோக்கிலேயே மஹிந்த சிந்தனை திட்டத்தின் கீழ் பஞ்சமகா திட்டங்களை வகுத்துச் செயற்படுத்தி வருகிறோம். இதன் மூலம் ஐந்து முக்கிய துறைமுகங்களையும் நிர்மாணித்து வருகிறோம்.

உலக நாடுகளின் குப்பைகளைக் கொட்டுகின்ற இடமாக எமது நாட்டை வைத்திருக்க முடியாது. ‘மேட் இன் ஸ்ரீலங்கா’ என்ற பெயருடன் சர்வதேசமெங்கும் புகழ்பெறும் உற்பத்திப் பொருட்களைத் தயாரிக்கின்ற பொருளாதார மையமாக இந்நாடு இனி திகழ வேண்டும். வரட்சியான மாவட்டமாக வர்ணிக்கப்பட்ட அம்பாந்தோட்டையில் தற்போது சர்வதேச துறைமுகம், விமான நிலையம், சர்வதேச விளையாட்டரங்கு, அதிவேக பாதைகள் புதிய ரயில் பாதைகள் என பாரிய அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன. இந்த துறைமுகம் மூலம் முழு நாட்டினதும் பொருளாதார மையமாக இது திகழும்.

எமது கண்ணுக்குப் புலப்படும் வகையில் நாளாந்தம் நூற்றுக்கணக்கான கப்பல்கள் எமது பிரதேசத்தை ஊடறுத்துச் செல்கின்றன. மத்திய கிழக்கு ஆபிரிக்க வலயங்களைப் போன்று ஆசிய நாடுகளைச் சேர்ந்த கப்பல்களும் இதிலடங்குகின்றன. இவற்றுக்கான எரிபொருள் சேவைகளை வழங்குவதுடன் பெரும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் மையமாகவும் இத்துறைமுகம் விளங்குகிறது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

லக்ஷபானா கெனியன் நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு

லக்ஷபான மற்றும் கெனியன் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வதைத் தவிர்ப்பதற்காக அவற்றின் வான்கதவுகள் நேற்று திறந்துவிடப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி தெரிவித்தார்.

லக்ஷபான நீர்த்தேக்கத்தின் மூன்றுவான் கதவுகள் ஒரு அடி வீதமும், கெனியன் நீருத்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் ஆறு அங்குலப்படியும் திறக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். லக்ஷபான நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் நேற்று காலை 10.00 மணியளவிலும் கெனியன் நீர்த்தேக்க வான் கதவுகள் முற்பகல் 10.50 மணியளவிலும் திறக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2 கோடி டொலருக்கு மேல் கொடுத்து ஸன் ஸீ அகதிகள் கனடா வந்துள்ளனர்’

son-k.jpgஸன் ஸீ கப்பலில் கனடாவை சென்றடைந்துள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர்களை கடத்தல்காரர்களுக்கு கொடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இவர்கள் செலுத்தியதன் பின்னரே தமது 3மாத கடற்பிரயாணத்தை தாய்லாந்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டோஸ் கூறியுள்ளார். இந்தக் கப்பலில் பயணித்த பெண்கள் மற்றும் சிறார்களுக்கு கட்டண சலுகை ஏதாவது கடத்தல்காரர்களால் வழங்கப்பட்டதா என்பது குறித்து தமக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்படியான ஆட்கடத்தல்கள் மூலம் கடத்தல்காரர்கள் பெருந்தொகையான பணத்தை இலகுவாகப் பெறுவதற்கு ஸன் ஸீ கப்பல் ஒரு நல்ல உதாரணம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த 3 மாதங்கள் கடினமான கடற்பயணத்தை மேற்கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பிராந்தியத்திற்கு சென்ற இந்தக் கப்பலை கனேடிய அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட குடிவரவு அதிகாரிகள் தற்போது 490 அகதிகளில் பலரை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியுள்ளதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கப்பலில் பயணித்த இலங்கையர்களின் பெயர் விபரங்கள் எதுவும் கனேடிய அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. பிலிப்பைன்ஸ¤க்கும் ஜப்பானுக்கும் இடையிலான தாய்லாந்து வளைகுடாவில் இருந்து இந்தக் கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. 10 மாதங்களுக்கு முன்னர் கனடாவை வந்தடைந்த ஓசியன் லேடி கப்பல் பயணித்த வழியாக ஆனால் சிறிது மாறுபட்ட பாதையில் ஸன் ஸீ கப்பல் பயணித்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கப்பல் தாய்லாந்தில் இருந்தே பயணத்தை ஆரம்பித்தது என்ற விடயம் கப்பல் பயணிகளின் அகதி அந்தஸ்து பரிசீலனையின் போது கவனத்திற் கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் கூறினர்.

இரத்தினபுரி மின்சாரம் தாக்கிய சம்பவம்; மூன்றாவது யுவதியும் உயிரிழப்பு

இரத்தினபுரி, பத்துல்ஹத்தவில் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது யுவதியும் உயிரிழந்துள்ளார். சந்தமாலி ஆட்டிக்கல எனும் 15வயது யுவதி மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டிருந்தார்.

அவரது சகோதரன் மதுக சாரங்க ஆட்டிகலயும் ஒன்று விட்ட சகோதரியான சந்துனி உபேக்க ஆட்டிகலயும் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் பத்து வயதுடையவர்களாவர்.

இரத்தினபுரி பத்துல்ஹத்தயில் உள்ள அவர்களது வீட்டுக்கு அருகே இருந்த ரம்புட்டான் மரத்தில் ரம்புட்டான் பழங்களை பறிக்க கம்பியொன்றை பயன்படுத்திய சமயம் அந்தக் கம்பி ரம்புட்டான் மரத்துடன் சென்று கொண்டிருந்த அதிக மின்சார ஓட்டத்துடன் கூடிய மின்சாரக் கம்பியில் பட்டதால் அவர்கள் மூவரும் மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகினர். சந்தமாலியின் மற்றொரு சகோதரர் டியூசன் வகுப்புக்கு சென்றிருந்ததால் சம்பவம் இடம்பெற்ற சமயம் வீட்டில் இருக்கவில்லை.

ஒருநாள் கிரிக்கெட்டிலும் இன்னிங்ஸ்முறை: அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முடிவு

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் இன்னிங்ஸ் நடைமுறையை கொண்டு வர அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை முடி வெடுத்துள்ளது.

இதற்கு அவுஸ்திரேலிய வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். எனினும் இந்த முறையை சச்சின் டெண்டுல்கர் வரவேற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் இனிமேல் நடை பெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி கள் 2 இன்னிங்ஸ் முறையில் நடைபெறும் என அந்த நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்து உள்ளது.

தன்படி ஒரு நாள் ஆட்டத்தில் இரு அணிகளும் 45 ஓவர்கள் விளையாட வேண்டும். முதல் இன்னிங்ஸ் 20 ஓவர் களைக் கொண்டதாக இருக்கும். இரண் டாவது இன்னிங்ஸ் 25 ஓவர்களைக் கொண்டதாக இருக்கும். அவுஸ்திரேலி யாவில் நடைபெற உள்ள மாகாணங்களுக்கு இடையேயான தேசிய கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமுள்ள 31 ஆட்டங்களும் இந்த முறையிலேயே நடைபெறும் என அந்தநாட்டு கிரிக்கெட் சபை கூறியுள்ளது.

இந்த முறைக்கு ரிக்கி பொண்டிங், மைக் ஹசி உள்ளிட்ட அவுஸ்திரேலிய வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த முறையால் அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் எதிர்காலத்தில் பெரிய ஆபத்து ஏற்படும் என்றும் 20 ஓவர் போட்டிக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி முறையை ஒழிக்கவே இந்தமுறை கொண்டுவரப்படுவதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.

எனினும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்த முறையை வரவேற்றுள்ளார்.

இது குறித்து மும்பையில் வெள்ளிக் கிழமை அவர் கூறியது: அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபையின் முயற்சி வரவேற்கத் தக்கது.

ஒரு நாள் போட்டிகளில் 2 இன்னிங்ஸ் முறையை அமுல்படுத்தும் யோசனை எனக்கு 2002ம் ஆண்டிலேயே தோன்றியது. அதை 2009ம் ஆண்டு வெளிப்படுத்தினேன்.

ஒரு நாள் போட்டிகளின் போது ஆட் டத்தின் பிற்பகுதியில் மழை குறுக்கிட்டால் 2வதாக துடுப்பெடுத்தாட்டம் செய்யும் அணி அதிகம் பாதிக்கப்படுகிறது. அதே போல பகல் இரவு ஆட்டமாக நடைபெறும் போட்டிகளில் முதலில் துடுப்பெடுத்தாட்டம் செய்யும் அணி பகலில் துடுப்பெடுத்தாடு வதை முடித்து விடுகிறது. மற்றொரு அணி இரவில் விளக்கு வெளிச்சத்தில் விளையாட வேண்டி உள்ளது. இன்னிங்ஸ் முறை கொண்டுவரப்பட்டால் இரு அணிகளுமே பகலிலும், விளக்கு வெளிச்சத்திலும் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்ப டும் இது வரவேற்கத்தக்கதே. சர்வதேச போட்டிகளிலும் இந்த முறை கொண்டு வரப்பட வேண்டும் என்றார் டெண்டுல்கர்.

நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் இலங்கையில்… : பி எம் புன்னியாமீன்

hambantota1.jpgஇலங்கையில், தென் மாகாணத்தில் ஹம்பாந்தோட்டை “வெறும் வறுமையும் வரட்சியும் கொண்ட பிரதேசம்” என்ற கருத்தியலை மாற்றியமைக்கத்தக்க வகையில், நிலத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதலாவது சர்வதேச துறைமுகம் என்ற பெருமைக்குரிய இலங்கை ஹம்பாந்தோட்டை ‘மாகம்புர’ துறைமுகத்திற்கு நீர் நிரப்பும் முக்கிய நிகழ்வு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று ஆகஸ்ட் 15. 2010 இல் இடம்பெற்றது. இத்துறைமுகம் ‘தெற்காசியாவின் ஆழமான துறைமுகம்’ எனவும் கருதப்படுகிறது.

ஹம்பாந்தோட்டை ‘கரசன்லேவாய’களப்பின் ஒரு பகுதியைச் சூழ அணைகள் அமைத்து அதனை ஆழமாக்கி 21 மீற்றர் உயரத்தினை கொண்ட இரண்டு இறங்குதுறைகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இதன் முதலாவது கட்டத்தின் கீழ் கிழக்கிலிருந்து மேற்காக 14 கிலோ மீற்றர்களைக் கொண்ட இரு அலை தாங்கிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி கப்பல்கள் மூலம் ஆழமாக்கப்பட்டு அங்கிருந்து புதிய துறைமுகத்துக்குள் தண்ணீர் நிரப்பப்பகிடுகின்றன.

h-tota01.jpgஇத்துறைமுக முதல்கட்ட நிர்மாணப்பணிகள் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் திகதி சீனக் கப்பல் பொருளியல் கூட்டுத்தாபனத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. 39 மாதத்தில் நிறைவு செய்யப்படவிருந்த இத்திட்டம் இலங்கை துறைமுக அதிகார சபையின் உள்ளுர் பொருளியலாளர்களின் ஒத்துழைப்புடன் 30 மாதங்களில் பூர்த்தி செய்யப்பட்டது. எதிர்வரும் நவம்பர் மாதம் ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகத்தை முதல் கப்பல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் நிர்மாணப்பணிகளுக்காக சீன எக்ஸிம் வங்கி 85 சதவீத நிதியை இலங்கைக்கு வழங்கியது. மிகுதி 15 சதவீத நிதியை இலங்கை துறைமுக அதிகார சபை வழங்கியிருந்தது. மொத்தம் 360 மில்லியன் அமெரிக்க டொலர் முதலாவது கட்டப் பணிகளுக்கு செலவிடப்பட்டுள்ளது. இரண்டாவது கட்ட நிர்மாணப்பணிகளுக்கு உதவ சீன அரசாங்கம் முன்வந்துள்ளதோடு நவம்பர் மாதம் முதல்கட்டம் நிறைவுபெறும் போது இரண்டாம்கட்ட நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச துறைமுக கப்பல் பாதைக்கு ஆறு கிலோ மீற்றர் தூரத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. துபாய் மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களைப் போல இத்துறை முகத்தை வரிகளற்ற ஒரு தொழில் நுட்ப துறைமுகமாக அபிவிருத்தி செய்யும் திட்டம் அரசிடம் உள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் டென்மார்க் ரெம்போல் கம்பனியின் வளப்பங்களிப்புடன் 2005 ஆம் ஆண்டில் அடிப்படை திட்டம் தயாரிக்கப்பட்டது. திட்டத்தின் நில அளவு 2000 ஹெக்டயார்

ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்மாணிப்பு (முதற்கட்டம்)

*  துறைமுக நிர்மாணிப்பு பணிகள் ஆரம்பம் 2008 ஜனவரி 15  முதற்கட்டவேலைகள் பூர்த்தி செய்யப்பட்ட தினம் : 2010  ஆகஸ்ட் 15

*.  மேற்கு நீர்தடுப்புச் சுவர் 988 மீட்டர்

*  கிழக்கு நீர்தடுப்புச் சுவர் 312 மீட்டர்

*  கப்பல் முனையம் 600 மீட்டர்

*  சேவைகள் நடைபெறும் முனையம் 105 மீட்டர்

*  எண்ணெய் முனையம் 310 மீட்டர்

*.  கப்பல் திசை திருப்பும் தடாகம் 600 மீட்டர்

*  தடாகத்தின் ஆழம் 17 மீட்டர்

*  துறைமுக உட்புகு கால்வாயின் அகலம் 210 மீட்டர்

*.  துறைமுக உட்புகு கால்வாயின் ஆழம் 17 மீட்டர்

*  முதல் கட்டத்தில் ஆழமாக்கப்பட்ட நில அளவு 43 ஹெக்டயார்

*   கொள்ளளவு 100,000 DWT அளவினையுடைய கப்பல்களுக்கு  வசதிகள் செய்து கொடுக்கப்படும்.

*  எண்ணெய் முனையம், ஆரம்பம் 07.10.2009, ஆகு செலவு 76  மில்லியன்,   அமெரிக்க டொலர்கள், நிர்மாணிப்புக் கம்பனி சீன ஹவான் கிவ் (HUWAN QUI)  இஞ்சினியரிங்.

*   எண்ணெய்த் தாங்கிகளைக் கொண்ட தொகுதியொன்று  நிர்மாணிக்கப்படுகிறது. அதன் மொத்தக் கொள்ளளவு 80000 m3.

*  கப்பல் எரிபொருள் தாங்கிகள் 08

*  விமான எரிபொருள் தாங்கிகள் 03

*   L. P. வாயு தாங்கிகள் 03 (திரவ பெற்றோலிய வாயு)

*  நிர்வாகக் கட்டடம், ஆரம்பம் 2009.10.07, நிர்மாணிப்பு சைனா ஹாபர் இஞ்சினியரிங் மற்றும் ஸைனோ ஹயிட்ரோ கோபரேஸன். 75000 சதுர அடியைக் கொண்ட 15 மாடிகளையுடைய 200 அடி உயரமான கட்டடமாகும்.

ஹம்பாந்தோட்டை  துறைமுகத்தால் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படும் சேவைகள்.

  *  பொதுவான கப்பல் சரக்குகள் எனும் சம்பிரதாய கப்பல்  சரக்குகள் (சிமெந்து, உரம், மா,இரும்பு, பலகை போன்றன)
 
  *  Raw  வசதிகள் – வாகன போக்குவரத்து வசதிகள், கப்பலின்   இயக்கச் செயற்பாடுகள் (இறக்குமதி / மீள்ஏற்றுமதி)
 
 *  கப்பல் நிறுத்துமிட வசதிகளை அளித்தல்.
  
 *  கப்பல்களுக்கான மரக்கறி உட்பட உணவுப் பொருட்களை (Ship Stores)  வழங்குதல்,  மருத்துவ வசதியினை வழங்குதல்.
 
 *  நீர் வழங்கல்
 
 *  கப்பல் பணியாளர்களை வழங்குதல், பணியாளர் பரிமாற்று  மத்திய நிலையமாக செயற்படல்.
 
 *  கப்பல் கட்டுதல் மற்றும் திருத்துதல்  (Dry Doc)  
 
 *  நடவடிக்கைகளுக்கு உலர் தடாக வசதிகளினை வழங்குதல்.
 
 *  துறைமுக வளாகத்தினுள் தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கான வசதிகளை அளித்தல்.
  
 *  கொள்கலன் கையாளும் முனையம் உருவாக்குதல்.  நிலக்கரி, மின் உற்பத்தி பயன்பாடு தொடர்பில் வசதி அளித்தல்.

எதிர்பார்க்கப்படும் இலக்குகள்.

ஹம்பாந்தோட்டை துறைமுகமூடாக உள்நாடு, சர்வதேச ரீதியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகள் பின்வருமாறு.

சர்வதேச இலக்குகள்.

 * இலங்கையை உலகில் முன்னணி கப்பல் மத்திய  நிலையமாக மாற்றுதல்.
 * கப்பல் துறை பற்றி வலய மட்டத்தில் மேல் எழும் சவால்களுக்கு துணிச்சலுடன் முகங்கொடுத்தல்.
 * இலங்கை கடல் வலயத்திலிருந்து கிடைக்கப்பெறும் பாரிய அந்நிய நாட்டுச் செலாவணியை இலங்கை பொருளாதாரத்தின் மீது கவரவைத்தல்.
  * வெளிநாட்டு முதலீடுகளை வரவழைத்தல்.

தேசிய இலக்குகள்.

  * வெளிநாட்டு செலாவணியை நாட்டினுள் கொண்டு வருதல்.
  * தொழிலில்லா பிரச்சினைகளுக்கு தீர்வு காணல்.
  * 25000 – 30000 அளவிலான சுற்றாக தொழில் வாய்ப்புகள்  உருவாதலினால் பிரதேசத்தின் நிதிப் புழக்கம் அதிகரித்தல்.
  * பயிற்சி தொழில் முயற்சியாளர்களை உருவாக்கிக்  கொள்ளல்.
  * பிரதேச அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை  மேம்படுத்துதல்.
  * பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துதல்.
  * அரச ஆதாயத்தினை கூட்டுதல், புது நிதி கிடைக்கும்  வழிமுறைகள்  உருவாதல்

ஹம்பாந்தோட்டை துறைமுக ஒன்றிணைந்த அபிவிருத்தித் திட்டம்.

ஹம்பந்தோட்டை கரகங்லேவாய சுற்றுப் புறத்தில் 450 குடும்பங்கள் வசிக்கின்றன. 2000 ஹெக்டயார் காணி துறைமுகத் திட்டத்திற்காக சுவீகரிக்கப்பட்டது. நில உரிமையாளர்களுக்கு நட்டஈட்டுக் கொடுப்பனவு மற்றும் மாற்று நிலங்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. அவற்றிற்கு சகல உட்கட்டமைப்பு வசதிகளும் துறைமுக அதிகார சபையினால் செய்து கொடுக்கப்பட்டது. ஹம்பாந்தோட்டை கரகங்லேவாய பழைய பாதைக்கு பதிலாக புதுப்பாதையொன்று நிர்மாணிக்கப்பட்டதுடன் துறைமுக அடிப்படை அமைவிடம் தொடர்பான சகல இடர்பாடுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளன. பிரதேச மக்களுக்கு திட்டம் பற்றியும் சகல பிரிவுகள் பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. விசேடமாக பிரதேச பாடசாலைகள் ஊடாக நடத்தப்பட்ட துறைமுகம் பற்றிய கருத்தரங்கு அபிவிருத்தியின் நேர் சிந்தனையின் பால் ஹம்பாந்தோட்டை மக்களை கவரச் செய்துள்ளது.

உலக வரைபடத்தினை அவதானிக்கும் போது இலங்கையின் அமைவிடம் ஒரு முக்கிய கேந்திர இடத்தில் அமைந்துள்ளது. கடுகு சிறிதாயினும் காரம் பெரிது என்பது போல எமது நாடு சிறியதாயினும் சகல வளங்களும் மிக்க ஒரு நாடாக விளங்குகிறது.

உலக கடற் போக்குவரத்துத் துறையினை விரிவாக ஆராயும் போது ஏறக்குறைய 34,000 வெளிநாட்டுக் கப்பல்கள் இலங்கை நாட்டை சுற்றிச் செல்வதை நாம் காண்கின்றோம். எமது கண்தூரத்திற்கு அருகாமையில் எமது நாட்டை தவிர்ந்து செல்லும் இக்கப்பல்களில் ஏறக்குறைய 10,000 கப்பல்கள் மட்டுமே கொழும்புத் துறைமுகத்தை வந்தடைகின்றன.

ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் திறக்கப்பட்டதும் பெரும்பாலான கப்பல்கள் இத்துறைமுகத்தை அண்மித்தே தமது பயணத்தை மேற்கொள்ளும். அப்போது இக்கப்பல்கள் இத்துறைமுகத்தை வந்து அடைவது இலகுவானதும் தவிர்க்க முடியாததுமாக இருக்கும் என்பதை நாம் கப்பல் போக்குவரத்து வரைபடத்தை அவதானித்தால் புரியும்.

தகவல்: இலங்கை துறைமுக அதிகார சபை

h-tota02.jpg

h-tota03.jpg

யுவராஜ் டெங்கு நோயினால் பாதிப்பு

yuvraj.jpgஇந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான யுவராஜ் சிங் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் நாளை திங்கட்கிழமை தம்ப்புள்ளையில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் சர்வதேச முக்கோண ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

மடு மாதா ஆவணி திருவிழா இன்று

madu.jpgமடு மாதாவின் ஆவணித் திருவிழாவின் இறுதிநாள் திருப்பலிப் பூஜைகள் இன்று காலை மன்னார் மறை மாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகையின் தலைமையில் நடைபெறு கிறது.

இன்று காலை 5.15 க்கு தமிழ், சிங் கள மொழிகளில் முதல் திருப்பலி பூஜையும் காலை 6.30 க்கு திருவிழா திருப்பலிப் பூஜையும் ஒப்புக் கொடுக்கப் படும். மன்னார் மறை மாவட்ட ஆயரின் தலைமையில் நடைபெறும் திருப்பலி பூஜையின் போது கொழும்பு பேராயர் அதிவந்தனைக்குரிய மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையுடன் ஏனைய மறை மாவட்ட ஆயர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர். இதனைத் தொடர்ந்து மடு மாதாவின் திருச் சொரூப பவனியும் இடம்பெறும் என அருட்தந்தை அலெக்ஸாண்டர் பெனோ அடிகளார் தெரிவித்தார்.