செய்திகள்

செய்திகள்

செய்திகள்

கத்திக்குத்தில் கொல்லப்பட்ட பெண்ணின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது.

கத்திக்குத்து சம்பவத்தில் கொல்லப்பட்ட இளம் பெண்ணொருவரின் கண்கள் அவரது தாயாரினால் தானமாக வழங்கப்பட்டுள்ளது. இரத்தினபுரி சிறிபாகம என்ற இடத்தைச் சேர்ந்த சமீலா என்ற பெண் அவரது காதலனால் குறித்த பெண்ணின் தாயாருக்கு முன்பாக வைத்து கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்டார். இதன் பின்னர் குறித்த காதலன் பொலிஸில் சரணடைந்தார். இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயாரான மல்காந்தி குணவர்தன தனது மகளின் இரு கண்களையும் தானமாக வழங்கியுள்ளார்.

இலங்கை கண்தானச் சங்கத்தின் சார்பில் இரத்தினபுரி மாவட்ட வைத்திய நிபுணர்களால் கண்கள் அகற்றப்பட்டு பாதுக்கப்பட்டுள்ளன.

கால்களை இழந்த 20 பேருக்கு செயற்கைக் கால்களை மக்கள் வங்கியின் இந்து மாமன்றம் வழங்குகின்றது.

போரினாலும் விபத்துக்களாலும் தமது கால்களை இழந்த 20 பேருக்கு மக்கள் வங்கியின் இந்து மாமன்றம் செயற்கைக் கால்களை வழங்குகின்றது. இன்று திங்கள் கிழமை பிற்பகல் யாழ்ப்பாணத்திலுள்ள ஜெயப்பூர் புனர்வாழ்வு நிலையத்தில இந்நிகழ்வு இடம்பெறுகின்றது.

இந்நிகழ்வில் மக்கள் வங்கயின் தலைமையக இந்துமாமன்றத்தின் உபதலைவர், செயலாளர், யாழ்.மாவட்ட மக்கள் வங்கி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மற்றும், ஜெய்ப்பூர் நிறுவனப் பணியாளர்களும்  கலந்து கொண்டு கால்களை இழந்த 20 பேருக்கு செயற்கை கால்களை வழங்கி வைக்கவுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 2900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவு

sri-lanka.jpgவவுனியா மாவட்டத்தில் புதிதாக 2 ஆயிரத்து 900 வீடுகளை நிர்மாணிக்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது. இதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் தெரிவித்தார்.

இந்திய அரசாங்கத்தின் வடக்கில் 50 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் புதிதாக 7 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கு மேலதிகமாகவே ஐரோப்பிய ஒன்றியம் 2 ஆயிரத்து 900 வீடுகளை வழங்கவிருப்பதாகவும் அரச அதிபர் திருமதி. சார்ள்ஸ் கூறினார்.

ஐரோப்பிய ஒன்றியமானது குறிப்பாக மோதல்களுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டு ஓகஸ்ட்டிலிருந்து வவுனியா மாவட்டத்தில் குடியேறியுள்ள தெரிவு செய்யப்பட்ட 2,900 குடும்பங்களுக்காகவே புதிதாக வீடுகளை வழங்க முன்வந்துள்ளன. மீள்குடியேறியவர்கள் தொடர்ந்தும் அதே பகுதியில் வசித்து வருவது உறுதிப் படுத்தப்படும் பட்சத்திலேயே அவர்களுக்கு வீடு நிர்மாணிப்பதற்கான நிதியுதவி பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

முகமாலை, கிளாலி பிரதேசங்களில் கண்ணிவெடிகள் மிகவும் செறிவு

யுத்த காலத்தில் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளாக விளங்கிய முகமாலை மற்றும் கிளாலி உள்ளிட்ட சில பகுதிகள் கண்ணிவெடிகள் மிகவும் செறிவாக உள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட முகமாலை, கிளாலி இத்தாவில், வேம்படிக்கேணி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் கண்ணிவெடிகள் மிகவும் கூடுதலாகப் புதைக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளதாக பச்சிளைப்பள்ளி (பளை) பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.

இந்தப் பகுதிகளில் கண்ணி வெடிகளை அகற்றுவதற்கு குறைந்தது மூன்று வருட காலம் நீடிக்கலாம் என்று பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பதினெட்டுக் கிராம சேவையாளர் பிரிவுகளில் இதுவரை பதினொரு பிரிவுகளில் மக்கள் மீளக்குடியமர் த்தப்பட்டுள்ளதாகவும் கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு நிறைவு செய்யப்படாததால், முகமாலை, கிளாலி உள்ளிட்ட ஏழு கிராம சேவையாளர் பிரிவுகளில் மீள்குடியேற்றம் தாமதமாகி வருவதாகவும் பிரதேச செயலாளர் முகுந்தன் தெரிவித்தார்.

பச்சிளைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியமர்ந்துள்ள மக்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பிரதேச செயலாளர் முகுந்தன், மக்களின் வாழ் வாதார நிலவரம் மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக ஆணைக்குழுவின் தலைவர் சீ.ஆர்.டி. சில்வாவுக்கு எடுத்துரைத்ததுடன், சில பிரதேசங்களுக்கு நேரில் அழைத்துச் சென்று நிலைமைகளைக் காண்பித்தார்.

பச்சிலைப்பள்ளியில் வைத்தியசாலை மருந்து வசதிகள் இல்லாததால் 20 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சாவகச் சேரிக்குச் செல்ல வேண்டியிருப்பதாகப் பொது மக்கள் சுட்டிக்காட்டினர். அதே நேரம், மாணவர்கள் கல்வி கற்பதற்கான வசதிகள் குறைவாகக் காணப்படுவதாகவும் தெரிவித்தனர்.

இதனையடுத்து, பாடசாலையையும் வைத்தியசாலையையும் பார்வையிட வேண்டும் என்று ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டதால், பிரதேச செயலாளர் முகுந்தன், அந்தப் பகுதிகளுக்கு ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை அழைத்துச் சென்றார். இந்தப் பாடசாலையில் போதிய வசதிகள் இல்லாததால், மரத்துக்குக் கீழ் இருந்து மாணவர்கள் கல்விகற்கும் நிலையைக் காணமுடிந்தது.

அதேநேரம், இந்தப் பிரதேசங்களில் தமிழ் தெரிந்த பொலிஸாரை கடமைகளில் ஈடுபடுத்தினால் சிரமங்களைத் தவிர்க்கக் கூடியதாக இருக்குமென மக்கள், ஆணைக் குழுவிடம் தெரிவித்தனர்.

பாவனைக்கு உதவாத பழங்கள் கொழும்பில்

fruit.jpgகொழும்பு மனிங் சந்தையில் பழங்களை மொத்தமாகவும் சில்லறையாகவும் விற்பனை செய்பவர்கள், அவற்றை பழுக்க வைக்கவும் பாதுகாத்து வைக்கவும் இரசாயன பதார்த்தங்களை சேர்த்து வருவதாக தெரிய வந்துள்ளதையடுத்து கொழும்பு மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் அவதானமாக உள்ளனர். கடந்த வார இறுதியில் மனித பாவனைக்கு ஒவ்வாத 300 கிலோவுக்கு மேற்பட்ட பழ வகைகள் அழிக்கப்பட்டதாக பிரதான மருத்துவ அதிகாரி டொக்டர் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

1980ம் ஆண்டின் உணவு சட்டத்தின் கீழ் இந்த சட்டத்தை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம். அத்துடன் அதனை மீறும் உணவுச் சாலைகளின் சொந்தக்காரர்களையும் நீதிமன்றத்தின் முன்நிறுத்த இந்த சட்டம் வழி வகுகிறது.

இவ்வாறு காலாவதியான உணவுப் பொருட்களை விற்றமை, அயடின் சேர்க்கப்படாத உப்பை விற்றமை, பழுதான பழங்கள், தேயிலை ஆகியவற்றை விற்றமை மற்றும் பழங்களை உரியநேரத்துக்கு முன்னர் பழுக்க வைக்கும் வகையில் சில வகை இரசாயன பொருட்களை பயன்படுத்தியமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 18 வர்த்தகர்கள் நீதிமன்றத்தில் நிறுத்தப்படவுள்ளனர்.  இவர்கள் அனைவரும் புறக்கோட்டையை சேர்ந்தவர்கள் என்று டொக்டர் காரியவசம் மேலும் கூறினார்.

இந்திய பாதுகாப்பு குழு இலங்கை வருகை

இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் குழுவொன்று நேற்று இலங்கை வந்துள்ளது. நான்கு நாள் விஜயமொன்றை மேற் கொண்டு இலங்கை வந்துள்ள இக்குழு வினர் பாதுகாப்பு அமைச்சு, வெளி நாட்டமைச்சு மற்றும் மத்திய வங்கி ஆகியவற்றில் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளனர். அதனையடுத்து முப்படைத் தளபதிகள் மற்றும் பிரதம பாதுகாப்பு அதிகாரியையும் இக்குழுவினர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளனர்.

இவர்கள் கல்விச் சுற்றுலாவொன்றிற்காகவே இலங்கை வந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உபய மெதவெல நேற்றுத் தெரிவித்தார்.

இரண்டொரு தினங்களுக்கு இடி மின்னலுடன் மழை – அவதானத்துடன் இருக்க எச்சரிக்கை

lightning-000.jpgஅடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நாட்டின் வெவ்வேறு பிரதேசங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவித்தாரண நேற்றுத் தெரிவித்தார்.

தென்மேல் பருவ பெயர்ச்சி மழை வீழ்ச்சி காலநிலை பலவீனமடைந்திருப்பதாலேயே இந்நிலமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆகவே இடி, மின்னல் பாதிப்புக்களிலிருந்து தவிர்ந்து கொள்வதில் ஒவ்வொரு வரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறு கையில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது உயரமான மரங்களுக்குக் கீழே இருப்பதையும், திறந்த வெளிகளில் நடமாடுவதையும், விளையாடுவதையும், வீடுகளில் மின்சார பொருட்களைப் பாவிப்பதையும், குளம் மற்றும் ஆறுகளில் நீராடுவதையும் தவிர்த்துக்கொள்ள வேண்டும். இடைப் பருவப் பெயர்ச்சி மழைக் காலம் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு, மூன்று வாரங்கள் எடுக்கும். அதற்குள் இடி, மின்னலுடன் மழை பெய்யக் கூடிய காலநிலை தற்போது திடீரென ஏற்பட்டிருக்கின்றது. இதற்கு தென் மேல் பருவப் பெயர்ச்சி மழை வீழ்ச்சி பலவீனமடைந்திருப்பதே பிரதான காரணம்.

இதேவேளை நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சி பதிவின்படி கெணியன் மற்றும் நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்கப் பிரதேசங்களில் 66 மி. மீ. அதிக மழை பெய்துள்ளது என்றார்.

கிண்ணியாவில் மின்னல் தாக்கி மாணவன் பலி

கிண்ணியா பிரதேசத்தில் ஏற்பட்ட இடி மின்னல் தாக்கத்தினால் பாட சாலை மாணவன் ஒருவன் பரிதாப மாக உயிரிழந்த சம்பவம் ஒன்று நேற்று ஞாயிறு மாலை இடம் பெற்றுள்ளது.

கிண்ணியா மத்திய கல்லூரியில் தரம் 9ல் கல்வி பயிலும் காக்கா முனையை பிறப்பிடமாகக் கொண்ட என். முகம்மது நிக்லாஸ் (வயது 14) என்பவரே மின்னல் தாக்கி உயிரிழ ந்தவராவார்.

கிண்ணியா மத்திய கல்லூரி விளையாட்டு மைதானத்தில் உதை பந்தாட்ட பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில கடும் இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டு ள்ளது.

இந்நிலையில் இப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மாணவர் கள் மைதானத்தை விட்டு வெளி யேறிக் கொண்டிருந்த வேளை இவ் அனர்த்தம் ஏற்பட்டதாக தெரிவிக்கப் படுகின்றது.

கிளிநொச்சி செல்வநகரில் தம் முயற்சியில் வாழ்வதற்கு உதவிக்கரம் கொடுத்தது : நேசக்கரம்

Selvanagar_Nesakkaram_14Sep10கிளி நொச்சி செல்வாநகர் குடியிருப்பில் வாழ்கின்ற 10 குடும்பங்களுக்கான உதவிகள் 14.09.10 அன்று வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவிகளும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டது.

Selvanagar_Nesakkaram_14Sep10இக்குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அங்கவீனர்களாகவும் போரில் பிள்ளைகளை கணவர்களை இழந்தவர்களாகவும் மற்றும் தடுப்பு முகாமிலிருந்து வெளிவந்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் தங்கள் உடல்களில் சன்னங்கள் எறிகணைத்துண்டுகளையும் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை நம்பிக்கை கொடுத்துப் புதுப்பிக்கும் உதவியாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

Selvanagar_Nesakkaram_14Sep10கூரைகள் அற்ற வீடுகளில் தறப்பாள்களோடு வாழ்கின்ற இம்மக்கள் தங்களுக்கான தொழில் வாய்ப்பினைக் கோரியிருந்த போது அவர்களது தரவுகளை அவர்களது நிலமைகளைக் கேட்டு இந்தத் தொழில் வாய்ப்புக்கான உதவிகளை வழங்கிய யேர்மனி டோட்மூண்டிலிருந்து பவானி , யேர்மனி ஸ்ருட்காட்டிலிருந்து மனோகாந்தன், டென்மார்க்கிலிருந்து திரு.திருமதி குணரட்ணம் யோகமலர் மற்றும் டென்மார்க்கிலிருந்து சுஜாதா சண்முகநாதன் அவர்களும் முன்வந்து உதவிகளை வழங்கியிருந்தனர்.

இலங்கை ரூபா ஒருலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவிற்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தையல் மெசின்கள், தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள், சிறுமளிகைக்கடை, சைக்கிள் திருத்தும் கடை, கோழிவளர்ப்பு மற்றும் ஆடுவளர்ப்பு போன்றவற்றுக்கான ஆதாரமாக வழங்கப்பட்டுள்ளது.

ஐ.நா. சபையில் ஜனாதிபதி 23 இல் உரை; அரச தலைவர்கள் பட்டியலில் முதலிடம்

mahinda-rajapaksa.jpgஐக்கிய நாடுகள் சபையின் 65ஆவது உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் 23ம் திகதி வியாழக்கிழமை இலங்கை நேரப்படி காலை 11 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றுகிறார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 192 நாடுகளின் தலைவர்கள் மற்றும் விசேட பிரதிநிதிகள் பங்குபற்றும் இந்த உச்சி மாநாட்டு நிகழ்ச்சி நிரலின்படி, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உரையானது அரச தலைவர்களின் உரைகளின் பட்டியலில் முதலாவது உரையாக இடம்பெறவுள்ளது.

இந்த உச்சி மாநாடு இடம்பெறுவதற்கு முதல்நாளன்று அதாவது எதிர்வரும் 22 ஆம் திகதி இடம்பெறும் புத்தாக்க அபிவிருத்தி இலக்கை நிறைவேற்றுவது தொடர்பான உயர் மட்ட பிரதிநிதிகளின் உச்சி மாநாட்டிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றவுள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா வழங்கும் அரச தலைவர்களுக்கான விருந்து, முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் நிதியத்தின் விசேட கலந்துரையாடல், அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம் நியூயோர்க்கில் ஏற்பாடு செய்யும் வர்த்தக பிரமுகர்களுக்கான கலந்துரையாடல், நியூயோர்க் பெளத்த விஹாரையின் வைபவ நிகழ்வு ஆகியவற்றிலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வார்