செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அடுத்து வரும் இரு மாதங்களும் கடும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை.

fo.jpgதற்போது இலங்கையின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மாதங்களில் கடுமையான மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இக்கடும் மழையினால் பல இடங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படலாம் எனவும் வளிமண்டலத் திணைக்களத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை ஆரம்பிப்பதற்கு முன்பாக இடைமழை பெய்யவிருப்பதாகவும், மலையகத்தில் நுவரெலிய, மற்றும் இரத்தினபுரி பகுதிகளில் அடைமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, பருவமழைக்கு முன்பாக தற்போது பெய்த வரும் மழையினால் வன்னியில் மீளக்குடியமர்த்தப்பட்டுவரும் பொதுமக்கள் அதிகம் பாதிப்படைந்து வரகின்றனர். தற்காலிகக் கூடாரங்களில் தங்கியிருக்கும் மக்கள் பாதிப்படைந்து வருவதோடு வீடமைப்பிற்கான உதவிகளைப் பெற்று வீடுகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மக்களின் பணிகளும் பாதிப்படைந்துள்ளது. இவ்வீடமைக்கும் பணிக்கான பணம் கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வருவதாலும் இரண்டாம் கட்ட பணம் வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டதாலும் வீடமைப்புப்பணிகள் பாதிப்படைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பரவலான மழை – மலையக பகுதிகளில் மண்சரிவு

கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக நேற்றும் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை பெய்ததாக வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவில் ஆகக்கூடிய மழை புத்தளத்தில் 174.5 மி. மீட்டர்கள் அளவில் பெய்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை பிற்பகலிலோ, மாலை வேளையிலோ இடி, மின்னலுடன் மழை பெய்ய முடியும். இச்சமயம் கடும் காற்றும் வீசலாம். அதனால் இடி, மின்னல் பாதிப்பிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதில் ஒவ்வொருவரும் கூடிய கவனம் செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த அவர், இடைப்பருவப் பெயர்ச்சி மழைவீழ்ச்சி கால நிலை அடுத்த வாரம் ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதேவேளை, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்வளம் முகாமைத்துவப் பிரதிப் பணிப்பாளர் ஜானகி மீகால்தென்ன குறிப்பிடுகையில், நேற்றுக் காலை 8.30 மணியுடன் முடிவுற்ற 24 மணி நேர மழை வீழ்ச்சிப் பதிவுப்படி ராஜாங்கனைப் பிரதேசத்தில் 101.00 மி. மீ. மழை பெய்துள்ளது. அத்தோடு மகா இலுப்பள்ளமவில் 128.00 மி. மீ, அனுராதபுரத்தில் 88.090 மி.மீ என்றபடி மழை பெய்திருக்கின்றது. இதன் விளைவாக இராஜாங்கனைக்குளம் நிரம்பி வழியும் கட்டத்தை அடைந்தது. அதனால் இக்குளத்தின் ஆறு வான் கதவுகள் நேற்று முதல் திறந்து விடப்பட்டு நீர் வெளியேற்றப்படுகின்றன.

இதேநேரம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி கூறுகையில், இராஜாங்கனை குளத்தின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டிருப்பதால் எலுவன்குளம் ஊடான மன்னார்- புத்தளம் வீதி நேற்று முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.  மன்னார்- புத்தளம் வீதியில் எலுவன்குளம் பிரதேசத்தில் பல இடங்கள் நீரில் மூழ்கி இருப்பதன் விளைவாகவே இப்பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என்றார்.

காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் தாழ் நிலங்களில் நேற்று முன்தினம் ஏற்பட்டிருந்த வெள்ள நீர் வடிந்து வருவதாக அம் மாவட்டங்களின் அனர்த்த முகாமைத்துவ நிலைய இணைப்பாளர்கள் கூறினர்.

நுவரெலிய – வெலிமட வீதியில் பயணம் செய்வோருக்கு எச்சரிக்கை

தற்போது மழை காலநிலை ஆரம்பமாகியுள்ளதால் நுவரெலியா – வெலிமடை வீதியை மிகுந்த முன்னெச்சரிக்கையோடு வாகனப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் நுவரெலியா மாவட்ட இணைப்பாளர் கிரந்த ஹேமவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நுவரெலியா – வெலிமடை நெடுஞ்சாலை தற்போது புனரமைக்கப்படுகின்றது. இதே நேரம் மழைக் கால நிலையும் ஆரம்பமாகி யுள்ளது. இதன் விளைவாக இப்பாதையின் பல இடங்களில் சேறு ஏற்பட்டிருக்கின்றது.

இதன் காரணத்தினால் இப்பாதையில் முன்னெச்சரிக்கையோடு வாகனங்களைச் செலுத்துவது மிகவும் அவசியம். இல்லாவிட்டால் வாகனங்கள் பாதையை விட்டு சறுக்கி, குடைசாய்ந்து விபத்துக்கள் ஏற்படக் கூடிய அபாயம் நிலவுகின்றன. அண்மையில் பஸ் வண்டயொன்று குடைசாய்ந்ததில் 23 பேர் காயமடைந்தனர்.

‘M, N’ தொடரிலக்கம். புதிய கடவுச்சீட்டை பெற புதிய விண்ணப்பங்கள் அறிமுகம்

pas.jpg‘M, மற்றும் ‘N’ என்ற தொடரிலக்கங்கள் கொண்ட கடவுச் சீட்டுக்களைப் பயன் படுத்துபவர்கள் மீண்டும் புதிய கடவுச் சீட்டை பெற விண்ணப்பிக்கும் வகையில் புதிய நடை முறையொன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.இதற்கென குடிவரவு, குடியகல்வு திணைக்களம் புதிய விண்ணப்பப் படிவமொன்றை அறிமுகம் செய்கிறது.

அக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய விண்ணப்பப் படிவம் நடை முறைக்கு வருகிறது என குடிவரவு குடியகல்வு பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

M மற்றும் N தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டை உடையவர்கள் இரண்டு புகைப்படங்கள், கடவுச்சீட்டின் பிரதி என்பவற்றுடன் ஒரு பக்கத்தையுடைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து கையளித்தால் மட்டும் போதுமானது. சமாதான நீதவானின் சான்று படுத்தவோ, அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சி பத்திரமோ இணைத்தல் அவசியமில்லை.

முதற் தடவையாக கடவுச் சீட்டொன்றை பெறவிரும்பும் ஒருவர் முன்பு போன்று கடவுச்சீட்டுக்கான முன்னைய விண்ணப்பப் படிவத்தை பூர்த்திசெய்வதுடன் அதற்குரிய சகல ஆவணங்களையும் இணைக்க வேண்டும். அத்துடன் சமாதான நீதவானின் சான்றுபடுத்தலும் அவசியமானது.

M மற்றும் N தொடரிலக்கம் கொண்ட கடவுச் சீட்டுகளை பெற்றவர்களின் தரவுகள் ஏற்கனவே திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் மீண்டும் அதே ஆவணங்களை கேட்பதும் தரவுகளை மீண்டும் மீண்டும் பதிவதும் நேரத்தையும் காலத்தையும் வீணாக்கும் வேலை என்பதாலேயே இந்த புதிய நடைமுறை நாளை முதல் அமுலுக்கு கொண்டு வரப்படுவதாக பிரதான கட்டுப்பாட்டாளர் டபிள்யூ. ஏ. சூலானந்த பெரேரா தெரிவித்தார்.

96 ஹஜ் முகவர்களுக்கு திணைக்களம் அங்கீகாரம்

hajj.jpgஇம்முறை ஹஜ் யாத்திரிகர்களை மக்காவுக்கு அழைத்துச் செல்ல 96 ஹஜ் முகவர்களுக்கு முஸ்லிம் மத கலாசாரத் திணைக்களம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அங்கீகரிக்கப்பட்டுள்ள பிரஸ்தாப 96 ஹஜ் முகவர் நிறுவனங்கள் அல்லாத வேறு முகவர் நிறுவனங்களுடன் யாத்திரிகர்கள் செய்யும் தொடர்புகளுக்கு முஸ்லிம், மத கலாசாரத் திணைக்களம் எவ்வித பொறுப்பும் ஏற்காது என்று திணை க்களப் பணிப்பாளர் வை. எல். எம். நவவி அறிவித்துள்ளார். அரசாங்க ஹஜ் குழுவும் ஹஜ் யாத்திரிகர் களின் நலன்கள் தொடர் பாக பல்வேறு அறிவுறுத்தல்களை வழங் கியுள்ளது.

மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா தலைமையிலான இக் குழுவில் பிரதி அமைச்சர் பைஸல் முஸ்தபா, முன்னாள் உப மேயர் அஸாத் சாலி, ஆகியோர் உறுப்பினர்களாகச் சேவையாற்றுகின்றனர்.

ஹஜ் யாத்திரிகர்களிடமிருந்து ஹஜ் முகவர்கள் 3,25,000 ரூபா கட்டணத்தை அறவிட வேண்டு மென அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.

14 வயதில் தாயானமை குறித்து விசாரணை:

கொழும்பு காசல் வைத்தியசாலையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். குறித்த சிறுமியும் அவரது குழந்தையும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குழந்தைபெறும் வைத்தியசாலையில் இருந்து கிடைத்த தகவலொன்றினை அடுத்து சிறுவர் பாதுகாப்பு சபையின் பொலிஸ் அதிகாரிகள் சிலர் சென்று சிறுமி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பெறப்பட்டதாகவும், சிறுவயதில் குழந்தை கிடைத்ததனால் குழந்தை, வைத்தியசாலையின் குழந்தைப் பாதுகாப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குழந்தை பெற்றெடுத்த 14 வயதுடைய சிறுமிக்கு தந்தை இல்லையெனவும், அவருடைய தாய் மனநோயாளி எனவும், சிறுமிக்கு உறவினர்கள் எவரும் இல்லை எனவும் தெரிய வந்துள்ளது. சிறுமியைப் பார்வையிட 28 வயதுடைய இளைஞர் வைத்தியசாலைக்கு வந்து போவதாகவும், சிறுமிக்கு 18 வயதானவுடன் அவரை திருமணம் செய்துகொள்வதாக குறித்த இளைஞன் அறிவித்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. எனினும், 14 வயது சிறுமி குழந்தைப் பெற்றுள்ளதனால் அவரை பாதுகாக்க வேண்டிய கடமை தங்களுக்கு இருப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் அனோமா திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

டென்மார்க் நாட்டில் நூல் அறிமுகமும் புத்தகக் கண்காட்சியும்

Book_Launch_Denmark10Oct10டென்மார்க் நாட்டில் தமிழ் இலக்கிய நூல்களின் அறிமுகவிழாவும், புத்தகக் கண்காட்சியும் நடைபெறவுள்ளன. ஒக்ரோபர் மாதம் 10 -ம் திகதி (10 – 10 – 2010) ஞாயிறு  டென்மார்க் விஜென் (Vejen) நகரில் நடைபெறவுள்ள இவ்விழாவில் கலையரசன் எழுதிய ‘ஆபிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா”, வி. ஜீவகுமாரன் எழுதிய ‘யாவும் கற்பனை அல்ல”, வேதா இலங்காதிலகம் எழுதிய ‘உணர்வுப் பூக்கள்” த. துரைசிங்கம் எழுதிய ‘தமிழ் இலக்கியக் களஞ்சியம்” உட்பட மற்றும் சில நூல்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

எழுத்தாளர்கள் வி. ரி. இளங்கோவன், ஜீவகுமாரன், பௌசர், வேதா இலங்காதிலகம், கரவைதாசன் உட்படப் பலர் கருத்துரை வழங்கவுள்ளனர். ஈழத்து எழுத்தாளர் பலரின் நூல்கள், சஞ்சிகைகள் கண்காட்சியில் இடம்பெறவுள்ளன.

Book_Launch_Denmark10Oct10டென்மார்க் நாட்டிலிருந்து வெளிவரும் ‘இனி” சஞ்சிகை – இணையத்தள வாசகர் வட்டம், நெதர்லாந்து ‘கலையகம்” வாசகர் வட்டம், பாரிஸ் ‘முன்னோடிகள்” இலக்கிய வட்டம் சார்பில் இதற்கான ஒழுங்குகள் மேற் கொள்ளப்பட்டு உள்ளன. ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலிருந்தும் கலை இலக்கிய இரசிகர்கள் இவ்விழாவில் கலந்துகொள்வரென எதிர்பார்க்கப்படுகிறது.

http://kalaiy.blogspot.com/

மருதங்கேணி கடற்றொழிலாளர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழக்கப்படவுள்ளன.

வடமராட்சிக் கிழக்கு மருதங்கேணி பிரதேசத்தில் மீளக்குடியமர்ந்த சுமார் ஆயிரம் கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்ச ருபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களை வழங்க அரசசார்பற்ற நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக கடற்றொழில் நீரியல் வளப் பிரதிப் பணிப்பாளர் க.தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் விசேட செயலணியின் அனுமதி பெற்ற அரசசார்பற்ற நிறுவனங்களும், அரச நிறுவனங்களும் இணைந்து மீள்குடியேறிய இக்கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இவ்வுதவிகளைப் பெறுவதற்கான பயனாளிகள் தெரிவுசெய்யப்பட்டு வருவதாகவும் அவர்களுக்கு விரைவில் இவ்வுதவிகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மேற்கு வைத்தியசாலையை 30 வருடங்களின் பின் மீண்டும் இயங்கவைக்க முயற்சி.

30 வருடங்களாக இயங்காமலுள்ள நெடுந்தீவு மேற்கு வைத்தியசாலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற போர் காரணமாக இவ்வைத்தியசாலை செயலிழந்திருந்தது.

இதன் காரணமாக நெடுந்தீவு மேற்கு மக்கள் தங்கள் வைத்திய தேவைகளுக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இவ்வைத்தியாசாலை மீண்டும் இயங்கத் தொடங்கினால் இம்மக்களின் சிரமங்களை குறைக்க முடியும் எனவும், இதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும். நெடுந்தீவு வைத்தியசாலை வைத்திய அதிகாரி செல்வி மகேஸ்வரி நன்னித்தம்பி தெரிவித்துள்ளார்.

வாய்பேசமுடியாத மற்றும், செவிப்புலனற்றவர்களுக்கு விசேட அடையாள அட்டைகள்.

முற்றிலும் வாய்பேச முடியாத மற்றும், செவிப்புலனற்றவர்களுக்கு விசேட அடையாள அட்டைகளை வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட பிரதேசச் செயலகங்கள் ஊடாக தற்போது இவ்வடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறித்த குறைபாடுடையவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவ நிபுணர்களின் சான்றிதழ்களோடு பிரதேசச் செயலகங்கள் மூலம் இவ்வடையாள அட்டைகளுக்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பங்கள் கொழும்பிலுள்ள சமூக சேவைகள் திணக்களத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டு விசேட அடையாள அட்டைகள் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினரின் சோதனை நடவடிக்ககைகள் மற்றும், பல்வேறு தேவைகளின் போதும் இந்த அடையாள அட்டைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பதால் இதனைப் பெற்றுக்கொள்ள குறித்த குறைபாடுடையவர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

கிளிநொச்சி, மாங்குளம் பகுதிகளில் புதிய பொலிஸ் நிலையக் கட்டங்கள் அமைக்கும் பணிகள் பூர்த்தி.

கிளிநொச்சி மாங்குளம் பகுதிகளில் நிர்மானிக்கப்பட்டு வரும் பொலிஸ் நிலையக் கட்டடங்களின் பணி பூர்த்தியடையும் நிலையிலுள்ளதால் அடுத்த மாதமளவில் இவை பூரணப்படுத்துப்பட்டு இயங்கத் தொடங்கும் என பொலிஸ் மாஅதிபர் மகிந்த பாலசூரிய தெரிவித்துள்ளார். போர் முடிவுற்ற பின்னர் இப்பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படும் பணிகள் ஆரம்பமாகியிருந்தன. வன்னியில் மல்லாவி, ஒட்டுசுட்டான் ஆகிய பகுதிகளிலும் பொலிஸ் நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இப்பகுதிகளில் பணியாற்ற ஐந்து மாதகாலம் பயிற்சியளிக்கப்பட்ட பொலிசார் தயாராகவுள்ளதாகவும், தமிழ், முஸ்லிம் இளைஞர்களை மேலும் பொலிஸில் இணைத்து அவர்களுக்கு பயிற்சிகளை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் நிலையம் ஏற்கனவே இருந்த இலங்கைப் பொலிஸ் நிலைய வளாகத்திலேயே நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் விடுதலைப்புலிகளின் காவல்துறைத் தலைமைப்பணியகம் முன்னர் அமைக்கப்பட்டிருந்தமையும், தற்போது அக்கட்டடம் அகற்றப்பட்டு புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.