செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சம்பூர், நீர்கொழும்பில் வெடிபொருட்கள்

சம்பூர் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் களில் பல வெடிபொருட்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சம்பூர் கைமுந்தகுளத்திற்கு அருகில் புலிகள் இயக்கத்தின் பங்கர் ஒன்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய 7 சிறிய பக்கெட்டுகள், 10 மிதிவெடிகள், ஒரு சயனைட் குப்பி என்பன மீட்கப்பட்டன. நீர்கொழும்பு கொப்பரா சந்தியில் வைத்து மன்னாரில் இருந்து மீன் எடுத்து வந்த லொறியில் இருந்து ஆயிரம் டெடனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கிளிநொச்சியில் பாதிக்கப்பட்ட பகுதியில் புதிதாக பாடசாலை அமைக்கக் கோரிக்கை

கிளிநொச்சி, மலையாளபுரம், பொன்னகர், பாரதிபுரம் கிராமங்களிற்கென தனியான பாடசாலையொன்றை விரைவில் அமைத்துத் தருமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தப் பகுதிகளிற்கென தற்போது பாரதிபுர வித்தியாலயமே இயங்கி வருகின்றது. எனினும் தற்போது இந்தப்பாடசாலையில் மாணவர்கள் தொகை அதிகரித்துள்ளதனால் பல மாணவர்கள் நகரை அண்டியுள்ள பாடசாலைகளிற்குச் செல்கின்றனர்.முற்றாக போக்குவரத்து வசதிகள் இல்லாத இந்தப் பகுதியிலிருந்து மாணவர்கள் வெளியில் செல்வதனால் பல்வேறு இடர்களையும் எதிர்கொள்கின்றனர்.

குறிப்பாக பெரும்பாலான மாணவர்கள் நடந்தே பாடசாலைகளிற்குச் செல்கின்றனர்.எனவே தற்போதைய சூழலில் இது மிகவும் கஷ்டமாயிருப்பதாக மாணவர்களும் பெற்றோரும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்தப் பகுதிகளுக்கு அருகிலுள்ள குஞ்சுக்குளம் பகுதியில் மக்கள் இன்மையால் அந்தப் பகுதியில் இயங்கி வந்த பாடசாலையை மலையாளபுரம் பகுதியில் இயக்குவதற்கான நடவடிக்கைகள் சில தரப்புகளால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்றது. அதனையாவது உரிய முறையில் முன்னெடுத்து மாணவர்களின் கல்வி மேம்பாட்டிலும் சுமுகமான கல்விச் செயற்பாட்டிலும் உரியவர்கள் கூடிய கவனமெடுக்க வேண்டுமென மக்கள் கேட்டுள்ளனர்.

அரசின் துரித நடவடிக்கை கண்டு ஜேர்மன் குழு மகிழ்ச்சி

வடக்கு, கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யவும் புனரமைக்கவும் அரசாங் கம் மேற்கொண்டுவரும் துரித நடவடிக்கை குறித்து ஜேர்மன் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பீட்டர் ஏர்னஸ்ட்பேர்கர் தலைமையிலான 6 பேரடங்கிய ஜேர்மன் பாராளுமன்ற உறுப் பினர்கள் குழு நேற்று முன்தினம் மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தது. இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்துத் தெரிவித்த ஜேர்மன் தூதுக்குழு, தங்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சென்று பார்வையிட அனுமதி வழங்கியது குறித்து ஜனாதிபதிக்கு விசேட நன்றியைத் தெரிவித்தது.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட நிலையில் நாட்டை அபிவிருத்தி செய்யும் சவாலை வெற்றிகொள்வதே எமது அடுத்த இலக்கு என்று தான் நம்புவதாகவும் ஜனாதிபதி குழுவினரிடம் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்தோருக்கான வீடமைப்பை துரிதப்படுத்துமாறு இந்தியா வலியுறுத்தல் -சிதம்பரம் தெரிவிப்பு

இடம் பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கையை இந்தியா கேட்டிருக்கிறது. புனர்வாழ்வு நடவடிக்கைகளின் ஓரங்கமான வீடமைப்புப்பணிகளை விரைவுபடுத்துமாறு இந்தியா கேட்டுள்ள நிலையில் மழைகாலத்தின் பின்னர் இதனை மேற்கொள்வதாக கொழும்பு உறுதியளித்திருப்பதாக இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் நேற்று சனிக்கிழமை சென்னையில் தமிழக முதல்வர் கருணாநிதியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். கோபாலபுரத்தில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் நடந்த இச்சந்திப்பின்போது தமிழக அரசியல் நிலைவரம், கூட்டணி விவகாரம், இலங்கைத் தமிழர்கள் மீள்குடியேற்றப்பிரச்சினை ஆகியவை குறித்து இருவரும் பேசினர். டில்லிக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வருகை தந்தபோது போரினால் குடிபெயர்ந்து முகாம்களில் வசிக்கும் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இப்போது கொஞ்சம் தொய்வு ஏற்பட்டிருப்பதாலும் மழைக்குப்பின் இந்தப்பணி வேகப்படுத்தப்படும் என்று உறுதியளித்ததாக இச்சந்திப்பின்போது கருணாநிதியிடம் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

இலங்கையின் வடகிழக்கு கடற்பரப்பின் ஊடாக ‘ஜல்’ சூறாவளி இன்று கரையை கடக்கிறது

jal.jpgவங்கக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் ‘ஜல்’ சூறாவளியாக உருமாறி இன்று மாலை அல்லது இரவு இலங்கையின் வடக்கே தமிழக கரை நோக்கி செல்லும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது. நேற்று காலை நிலவரப்படி யாழ்ப்பாணத்திலிருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள ‘ஜல்’ சூறாவளி மணிக்கு 15 கிலோ மீற்றர் வேகத்தில் நகர்ந்து வருவதுடன் சூறாவளிக் காற்றின் வேகம் மணிக்கு 90 முதல் 100 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் எனவும் வானிலை அவதான நிலையத்தின் கடமைநேர அதிகாரியான கயனா ஹெந்த விதாரண தெரிவித்தார்.

‘ஜல்’ புயலின் தாக்கம் காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியான மழை பெய்வதுடன் கடல் பரப்பிலும் கொந்தளிப்பு ஏற்படும். நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மழை பெய்வதுடன் அது தொடர்ச்சியான மழையாக இருக்க மாட்டாது.

காலநிலை மந்தமாகவே காணப்படும். யாழ்ப்பாணம், மன்னார், முல்லைதீவு, அம்பாறை மாவட்ட கரையோர மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், இப்பகுதிகளில் இடைவிடாத கடும் மழை பெய்வதுடன் இடி மின்னலின் தாக்கமும் அதிகமாக காணப்படுவதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுக்கிறது.

‘ஜல்’ புயல் இலங்கையை அண்மிப்பதற்கு முன்னரேயே நேற்று வடக்கு, கிழக்கு கடற்பகுதி கொந்தளிப்பாகவே காணப்பட்டதுடன் மழை பெய்யவும் ஆரம்பித்தது. ‘ஜல்’ புயல் காற்று இலங்கைக்கு வடக்கே நகரும் போது இன்று மாலை அல்லது இரவு வடக்கு, கிழக்கில் கடும் மழையுடன் பலத்த காற்றும் வீசும் எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.

தமிழகத்தை நோக்கி புயல்காற்று நகர்ந்து செல்வதால் தமிழக வாநிலை அவதான நிலையம் தமிழக மக்களையும் உஷார் நிலையில் வைத்துள்ளது. இது தொடர்பாக சென்னை காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கையில், கடும் புயலாக உருவெடுத்துள்ள ‘ஜல்’ நேற்றுக்காலை நிலவரப்படி வங்கக் கடலில் சென்னையிலிருந்து 650 கி. மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று மாலை அல்லது இரவு புதுச்சேரி, நெல்லூருக்கு இடையே சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை வாநிலை ஆய்வு நிலையம் கூறுகிறது. இன்று அதிகாலை முதல் காற்றின் வேகம் மேலும் அதிகரித்து 120 முதல் 140 கி. மீ. வரை புயல் காற்று வீசும். புயல் காரணமாக அடுத்த 24 மணி நேரத்துக்கு கடலோர வடக்கு, தெற்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவில் மிக பலத்த கன மழை பெய்யும். கடல் மிக மிக கொந்தளிப்பாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப் பட்டுள்ளனர்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் தாழ்வான கடலோரப் பகுதிகளில் அலைகள் புகவும் வாய்ப்புண்டு. இப் பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். என சென்னை வானிலை ஆய்வு நிலையமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

பராக் ஒபாமா இந்தியா வருகை

obama.jpgஅமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நான்கு நாள் பயணமாக இன்று மும்பை வந்தார். முதல் முறையாக இந்தியா வரும் ஒபாமாவுக்கு, மும்பை நகர் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவர் தங்கும் மும்பை தாஜ் ஹோட்டல் மற்றும் அருகே உள்ள கேட் வே ஆப் இந்தியா பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு, வாஷிங்டன் ஆன்ட்ரூஸ் விமானப்படை தளத்திலிருந்து ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் தனது மனைவி மிஷெல், இரு மகள்கள், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஒபாமா. இந்தியா புறப்பட்டார் வழியில் ஜெர்மனியில் அவரது விமானம், எரிபொருள் நிரப்புவதற்காக தரையிறங்கியது.

இன்று பகல் 1 மணிக்கு மும்பை விமான நிலையம் வந்தடைந்த ஒபாமாவுக்கு மிகச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரது வருகையையொட்டி மும்பையில் மிக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பயணத்தின்போது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையிலும், அணு சக்தி்த் துறையிலும் மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. 12 பில்லியன் டாலர் அளவுக்கான இந்த ஒப்பந்தங்கள் மூலம் அந்த நாட்டிடமிருந்து இந்தியா போர் விமானங்கள் உள்ளிட்ட ஏராளமான ஆயுதங்களை வாங்கவுள்ளது. மேலும் அந் நாட்டின் எரிசக்தித் துறை நிறுவனங்கள் இந்தியாவில் அணு உலைகளை அமைக்கவுள்ளன. இதனால் அமெரிக்காவில் புதிதாக 60,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று தெரிகிறது.

ஒபாமாவுடன் உயர்மட்ட பிரதிநிதிகள், வெள்ளை மாளிகை அதிகாரிகள், தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள் என சுமார் 3,000 பேர் பல விமானங்களில் வந்துள்ளனர்.

வன்னிப் பாடசாலைகளில் வளப்பற்றாக் குறைகள்.

வன்னியில் மக்கள் மீள்குடியமர்த்தப்பட்டு வரும் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் வளப்பற்றாக்குறைகள் காணப்படுவதோடு பாடங்களைக் கற்பிக்கும் ஆசிரியர்களும் பற்றாக்குறையாகவுள்ளனர்.

இதனால், போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களின் கல்வியை மேம்படுத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சியில் அமைந்துள்ள முக்கிய பாடசாலைகளில் கூட ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களைக் கற்பிக்க ஆசிரியர்கள் தட்டுப்பாடாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போரின்பின் மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வரும் நிலையில் வன்னிப்பகுதி பாடசாலைகளில் கற்பிக்கும் பல ஆசிரியர்கள் தினமும் யாழப்பாணத்திலிருந்தே வன்னிப்பகுதிக்கு கடமைக்கு பஸ்ஸில் வந்து செல்வதாகவும் இதனால் இவர்களின் கற்பித்தல் பங்களிப்பு குறைவாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தென்மராட்சிப் பகுதிகளில் மக்களை மீள்குடியேற்றுமாறு அம்மக்கள் கோரிக்கை!

தென்மராட்சியின் எழுதுமட்டுவாழ் தெற்கு, வடக்கு. கரம்பகம், தனங்கிளப்பு, ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படாமலுள்ளதால் தங்களை விரைவில் தங்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பிட்ட பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள மிதி வெடிகளை அகற்றி மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறு இப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பிட்ட இப்பகுதிகளில் மக்கள் மீள்குடியேற பாதுகாப்புத்தரப்பினர் இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வன்னியில் மீன்குடியேற்றப்பட்ட மக்களில் ஊனமுற்றவர்களின் விபரங்கள் சமூகசேவைகள் திணைக்களத்தினால் திரட்டப்பட்டு வருகின்றன.

பிரதேசச் செயலர் பிரிவுகள் தோறும் மக்களின் பிறப்பு, விபத்து, வன்செயல், நோய் போன்றவற்றினால் பாதிப்படைந்த ஊனமுற்றோர்களின் விபரங்கள் தற்போது திரட்டபட்டு வருகின்றன. நான்கு பக்க படிவங்கள் நிரப்பப்பட்டு ஊனமுற்றவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டு வருகின்றதோடு, ஊனத்தின் தன்மைக்கேற்ப ஆறு வகை அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு எதிர்காலத்தில் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் இதன்மூலம் ஊனமுற்றோர் பல நன்மைகளை அடைவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைந்த விடுதலைப்புலிப் போராளிகளிகளுக்காக 40 இலட்சம் ரூபா செலவு.

போரின் போது சரணடைந்த முன்னாள் விடுதலைப்புலிப் பேராளிகளிகளின் புனர்வாழ்வுக்கென ஐ.நா. அபிவிருத்தித்திட்டம் 40 இலட்சம் அமெரிக்க டொலர்களை செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப்புனர்வாழ்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

கல்வி, தகவல் தொழில்நுட்பம், போன்ற பல்வேறு துறைகளில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் பயிற்சியளிக்கப் பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.