செய்திகள்

செய்திகள்

செய்திகள்

நேற்றைய ‘சூரன்போர்’ நிகழ்வுகளில் நால்வர் காயம். ஓருவர் மரணம்.

Sooran_Boorநேற்று வியாழக்கிழமை யாழ்.செல்வச்சந்நிதி ஆலயத்தில் இடம்பெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் கற்பூரச்சட்டிக்குள் விழுந்து ஐந்து போர் காயமுற்றனர். அதிகளவான சன நெருக்கடி காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு விழுந்தவர்களில் நான்கு பேருக்க சிறு காயங்களும், ஒருவருக்கு படுகாயமும் எற்பட்டுள்ளது. காயமுற்றவர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று நல்லூர் கந்தசுவாமி கோவிலில் நடைபெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வின் போது பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி மரணமானார். நல்லூர் ஆலயத்தில் நடைபெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாக இம்மாணவன் கேணிக்குள் தவறி விழுந்ததால் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கந்தர்மடம் பழம் வீதியைச் சேர்ந்த தர்மகுலசிங்கம் கனுசன் என்ற மாணவனே இவ்வாறு நீரில் முழ்கி மரணமானவராவார். நேற்று யாழ் மாவட்ட ஆலயங்களில் இடம்பெற்ற ‘சூரன்போர்’ நிகழ்வில் அதிகளவிலானவர்கள் கலந்து கொண்டதால் சனநெரிசல்கள் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அளவெட்டியில் இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு!

யாழ். அளவெட்டியில் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டினால் படுகாயமடைந்துள்ளார். அளவெட்டி பிள்ளையார் கோவில் முன்றலில் வைத்து நேற்று மாலை 5.30 மணியளவில் குறிப்பிட்ட இளைஞர் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார். இதனால் படுகாயமடைந்த இளைஞர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அளவெட்டி வடக்கைச் சோந்த கிருஸ்ணமூர்த்தி சஞ்சீவ் என்பவரே தப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி காயமடைந்தவராவார். தனிப்பட்ட காரணங்களுக்காக இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாக காயமடைந்த இளைஞரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து இராணுவத்தினரும் பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எழுத்து மூல சாட்சியங்களை சமர்ப்பிக்கும் கால எல்லை நீடிப்பு

கற்றறிந்த பாடங்கள் நல்லிணக்கம் பற்றிய ஆணைக்குழுவிற்கு எழுத்துமூல சாட்சியங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலஎல்லை டிசம்பர் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால எல்லைக்கு முன்னர் எந்தவொரு தனிநபரோ அல்லது அமைப்புக்களோ தாமாக முன்வந்து சாட்சியமளிக்க வேண்டுமென அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எழுத்துமூல மாக முன்வைக்கப்படும் சாட்சியங்கள் நன்கு ஆராயப்படுமென்றும், அதன் பின்னரே இறுதி அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

மோதல்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர். மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் சாட்சியமளிப்பதற்கு கூடுதல் சந்தர்ப்பம் வழங்க ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. ஆணைக்குழுவின் அமர்வு நேற்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. விரைவில் அம்பாறை, திருகோணமலையில் அமர்வு நடைபெறவுள்ளது.

வடக்கிலுள்ள 9 நீதிமன்றங்களை புனரமைக்க ரூ. 890 மில்லியன்

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 890 மில்லியன் ரூபா கடனுதவியுடன் வடக்கிலுள்ள ஒன்பது நீதிமன்றங்களை மீளமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது. இதன்படி, பருத்தித்துறை, முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, வேலணை, மாங்குளம், சாவகச்சேரி, மல்லாகம் மற்றும் ஊர்காவற்துறை நீதிமன்றங்களுக்கு புதிதாக கட்டடங்கள் அமைக்கவும் புனரமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் ‘கெயா’ திட்டத்தின் கீழ் 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளதோடு அதன் ஒரு பகுதியாகவே இந்த கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஊர்காவற்துறையில் 150 மில்லியன் ரூபா செலவில் நீதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலமும் நிர்மாணிக்கப்படும்.

சட்டவிரோதமாக இரு திருமணம் செய்தவருக்கு சிறைத் தண்டனை

நீர்கொழும்பு நிருபர்: சட்ட விரோதமாக இரண்டு திருமணங்களைச் செய்தவருக்கு 10 வருடங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருடமும் 8 மாத சிறையும் 1500 ரூபா அபராதம் செலுத்துமாறும் நீர்கொழும்பு பிரதான நீதிபதி ஜயகி அல்விஸ் விதித்துள்ளார்.

தூனகஹ, கடவலயைச் சேர்ந்த ஜே.எம்.சன்ஜீவ சம்பத் என்பவருக்கே இத் தண்டவை வழங்கப்பட்டது. இவர் 2001 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் திகதி மட்டக்குளி தேவஸ்தானத்தில் சட்டப்படி மட்டக்குளியை சேர்ந்த என்.சந்திமா நிலுகஷா என்வரே திருமணம் செய்துள்ளார்.

இவர் மீண்டும் 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் மீண்டுமொரு திருமணம் செய்துள்ளதாக முதல் முனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார். இவரின் வழக்கு விசாரணையின் போது இவர் குற்றத்தை ஒப்புக் கொள்ளவே நீதிபதி தண்டனை வழங்கியுள்ளார்.

சூதாட்ட சட்டமூலத்துக்கு 81 மேலதிக வாக்குகளால் சபை அங்கீகாரம்

சபை நிருபர்கள்: சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.  பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை சூதாட்ட விசேட ஏற்பாடுகள் சட்டமூலத்தை பிரதியமைச்சர் சரத் அமுனுகம சமர்ப்பித்து உரையாற்றி அதனை நிறைவேற்ற சபையின் அங்கீகாரத்தைக் கோரினார். இதன் பின் சூடான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

விவாத முடிவில் எதிர்க்கட்சிப் பிரதம கொறடா ஜோன் அமரதுங்க பெயர்கூறிய வாக்கெடுப்பைக் கோரினார். இதையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் சட்டமூலத்துக்கு ஆதரவாக 114 வாக்குகளும் எதிராக 33 வாக்குகளும் கிடைத்தன. இந்த வாக்கெடுப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பனவற்றுடன் அரசதரப்பின் முன்வரிசை அமைச்சர்களில் 9 பேர் உட்பட இன்னும் சிலர் கலந்துகொள்ளவில்லை.

அத்துரலிய ரத்தின தேரர்,எல்லாவெல மேதானந்த தேரர் ஆகியோர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

யாழ். நூலகத்தில் என்ன நடந்தது என்ற சகலருக்குமான ஓர் உண்மை விளக்கம்!

தமிழ் மக்களை மறுபடியும் பதட்டமானதும், குழப்பமானதுமான சூழலுக்குள்  தள்ளிவிடவும், எமது மக்கள் மீது மறுபடியும் அவலங்களைச் சுமத்தி விடவும் வழி வகுக்கும் தவறான வழிமுறையில் செயற்படுவதை இனியாவது நிறுத்தி, எமது மக்கள் நலன் சார்ந்து சிந்திக்கவும், கருத்து வெளியிடவும் முன்வருமாறு சம்பந்தப்பட்ட சகல தரப்பினரை நோக்கியும் நாம் எமது மக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோம் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் அ.இராஜமாணிக்கம் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

அரசியல் சுயலாபங்களுக்காக மட்டும்  கருத்து வெளியிட்டு தமிழ் மக்களிடையே தவறான தகவல்களை திணித்து அவர்களை தொடர்ந்தும் பதட்டமும் குழப்பமுமான ஒரு சூழலுக்குள் தள்ளி விடும் சூழ்ச்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் ஒரு பொறுப்புள்ள அரசியல் தலைமை என்ற வகையில் யாழ். நூலகத்தில் என்ன நடந்தது என்ற உண்மை விளக்கத்தை நாம் சகலருக்கும் தெரியப்படுத்த விரும்புகின்றோம்.

தென்னிலங்கையில் இருந்து சுற்றுலாப்பயணிகளாக யாழ். நோக்கி வருகின்ற மக்கள் தெற்காசியாவின் சிறந்த நூலகமாக கருதப்படும் யாழ். நூலகத்தை தினமும் பார்வையிட்டு வருவது வழமை. நூலகத்தை பார்வையிடுவதற்கான நேரமும் மாலை 5 மணி தொடக்கம் 6 மணி வரை என நூலக நிர்வாகத்தினால் வரையறுக்கப்பட்டிருப்பதையும் சகலரும் அறிவர். அந்த வகையில் கடந்த 21.10.2010 அன்றும் வழமைபோல் நூலகத்தை பார்வையிட தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர்.

ஆனாலும், குறித்த தினத்தில் யாழ். நூலக மண்டபத்தில் அகில இலங்கை மருத்துவர் மாநாடு நடந்து கொண்டிருப்பதாகவும், 23 ஆம் திகதியே நூலகத்தை பார்வையிடுவது சாத்தியம் என்றும் நூலக நிர்வாகத்தால் கருத்து தெரிவிக்கபட்டதை அடுத்து அவர்கள் திரும்பிச் சென்றிருந்தனர்.

இதேபோல், மறுதினமாகிய 22.10.2010 அன்றும் தென்னிலங்கை மக்களில் இன்னொரு பகுதியினர் நூலகத்தைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களுக்கும் முதல் நாளன்று சொல்லப்பட்டது போல் 23 ஆம் திகதி மாலையில் வருமாறு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

நூலக நிர்வாகத்தினர் சொன்னது போல் ஏற்கனவே இரு தினங்களிலும் வந்திருந்த தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகள் 23 ஆம் திகதி மாலை யாழ். நூலகத்தை பார்வையிடும் ஆர்வத்தோடு மறுபடியும் நூலகம் நோக்கி வந்திருந்தனர். அவர்களோடு அன்றைய தினம் புதிதாகவும் இன்னொரு பகுதி மக்களும் அங்கு வந்திருந்தனர்.

ஆனாலும், அன்றைய தினம் மாலை 4.30 க்கு முடிவடைவதாக இருந்த அகில இலங்கை மருத்துவர் மாநாடு குறித்த நேரத்தில் முடிவடையாத காரணத்தினால் அந்த மாநாட்டின் நலன் கருதி, அன்றைய தினமும் குறித்த நேரத்தில் நூலகத்தை பார்வையிட அனுமதிக்க முடியாத ஒரு சூழலில் யாழ் நூலக நிர்வாகத்தினர் சுற்றுலாப்பயணிகளோடு பேசி தமது தவிர்க்க முடியாத சூழலை எடுத்து விளக்கியிருந்தனர்.

ஏற்கனவே நூலகத்தைப் பார்வையிட வந்து முடியாமல் போன தென்னிலங்கை மக்கள் மறுபடியும் குறித்த தினத்திலும் தம்மால் நூலகத்தை பார்வையிட முடியாத ஒரு சூழலில் தாம் ஏமாற்றப்படுவதாகவும், திட்டமிட்ட முறையிலேயே தமக்கு நூலகத்தை பார்வையிடுவதற்கான அனுமதி மறுக்கப்படுவதாகவும் தவறாக எண்ணி நூலக நிர்வாகத்தினர் மீது சந்தேகம் கொண்டவர்களாக தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இது குறித்த வாதப்பிரதிவாதங்கள் தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளுக்கும், யாழ். நூலக நிர்வாகத்தினருக்கும் இடையில் நூலக வாசலில் நடந்து கொண்டிருந்தது. உள்ளே நடந்து கொண்டிருந்த அகில இலங்கை மருத்துவர் மாநாடும் முடிவடைந்து விட்டது.

இந்த இடைவெளிக்குள் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகளும் யாழ். நூலக நிர்வாகத்தினரும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியிலும் சுமுகமானதொரு தீர்மானத்திற்கும் வந்திருந்தனர். குறித்த நேரம் கடந்த போதிலும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள் நேரம் தாமதித்தாவது நூலகத்தினுள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். உள்ளே சென்ற சுற்றுலாப் பயணிகள் யாழ் நூலகத்தை பார்வையிட்ட மகிழ்ச்சியோடு வெளியேறிச் சென்றிருந்தனர்.

இதுவே உண்மையில் நடந்த சம்பவமாகும். ஆனாலும் நடந்ததை நடக்கவில்லை என்றும், நடந்திருக்காததை நடந்தது என்றும் வழமை போல் திட்டமிடப்பட்டு கட்டி விடப்பட்ட கட்டுக்கதைகள் காட்டுத்தீ போல் பரப்பட்டிருந்தன.

திட்டமிட்டு பரப்பி விடப்பட்ட செய்திகளால் தமிழ் மக்களை மறு படியும் பதட்டமானதும் குழப்பமானதுமான ஒரு சூழலுக்குள் தள்ளி விடும் முயற்சிகளை முளையிலேயே கிள்ளிவிடும் பொது நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். நூலகத்தில் சகல தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்றை ஒழுங்கு செய்திருந்தார்.

இதில், யாழ். மாநகர முதல்வர் திருமதி பற்குணராஜா யோகேஸ்வரி உட்பட ஆளும், மற்றும் எதிர்க்கட்சி சார்ந்த மாநகர சபை உறுப்பினர்கள், யாழ். நூலக நிர்வாகத்தினர். பாதுகாப்பு தரப்பினர், பொலிஸார், பொது அமைப்பு பிரதிநிதிகள், நலன் விரும்பிகள், மற்றும் சமூக அக்கறையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

பதட்டமான சூழலை உருவாக்க முனையும் கபடத்தனங்களுக்கு எந்த தரப்பினரும் பலியாகி விடக்கூடாது என்றும், இதில் எவருடைய மனங்களாவது தவறான சந்தேகங்களால் காயப்பட்டிருப்பின், அது தென்னிலங்கை சுற்றுலாப்பயணிகளின் மனங்களாக இருந்தாலென்ன, அல்லது யாழ். நூலகம் சார்ந்தவர்களின் மனங்களாக இருந்தாலென்ன, இரு தரப்பு மன உணர்வுகளையும் புரிந்து கொண்டு ஒரு சம்பவத்தை ஊதிப்பெருப்பிக்கும் சூழ்ச்சியை உடைத்தெறியும் நல்லெண்ணங்களோடு சகலரிடமும் ஒரு அமைச்சர் என்ற வகையில் தான் மன்னிப்பு கோருவதாகவும் பெருந்தன்மையோடு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக கருத்து தெரிவித்திருந்தார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்திருந்த அனுபவம் மிக்க அணுகுமுறையை அந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்த சகல தரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்ததோடு பாராட்டியும் சென்றிருந்தனர். இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் சிங்கள மக்கள் அனுமதியின்றி கொட்டில்களை அமைத்து குடியேறியுள்ளனர்.

தென்பகுதிகளிலிருந்து வந்து யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் தங்கியிருந்த சிங்கள மக்கள் நேற்று நாவற்குழியிலுள்ள தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியேறியுள்ளனர். அக்காணியில் குடில்களை அமைக்கும் நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தங்களை மீள்குடியேற்றுமாறு கோரி யாழ்ப்பாணத்திற்கு வந்து இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் அதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை எனவும், தங்கள் ஊர்களிலிருந்து கொண்டுவந்த மரந்தடிகளைக் கொண்டே தாங்கள் கொட்டில்களை அமைப்பதாகவும், யார் தடுத்தாலும் இங்கேயே தாம் குடியிருக்கப் போவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களால் நேற்று மாலைக்குள் சுமார் 20 இற்கும் மேற்பட்ட கொட்டில்கள் அமைக்கபட்டு விட்டதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நேற்று கருத்துத் தெரிவித்த யாழ்.அரசஅதிபர் திருமதி. இமெல்டா சுகுமார் இம்மக்கள் நாவற்குழியிலுள்ள வீடமைப்பு அதிகாரசபைக்குச் சொந்தமான காணியில் அத்துமீறி குடியமர்ந்துள்ளமை குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனக் குறிப்பட்டார். அது வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணி என்பதால் அவர்கள்தான் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் யாழ். மாவட்ட பொது முகாமையாளர் ஜே.நோயல் ஜெயச்சந்திரன் இது குறித்து தெரிவிக்கையில் சிங்கள மக்கள் இவ்வாறு அக்காணியில் குடியேற முயற்சிப்பதை நேற்றுப் பிற்பகல் அங்கு சென்று நேரில் அவதானித்ததாகவும், தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான அக்காணியில் எவ்வித அனுமதியுமின்றி அவர்கள் கொட்டில்களை அமைத்து வருகின்றமை குறித்து வீடமைப்பு அதிகாரசபையின் கொழும்புத் தலைமையகத்திற்கு தான் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

நாவற்குழியில் தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமாக 90 எக்கர் காணி உள்ளது. அதில் 30 ஏக்கர் காணி ஏற்கனவே 300 வீட்டுத்திட்டத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. ஏனைய 60 ஏக்கர் அதிகாரசபையின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

”கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலை அமைக்கப்பட்டு ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.” – இ. அங்கஜன்

Angajan_Ramanathanகிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதில் ஆயிரம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் எனவும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளரான இ.அங்கஜன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் ஆடைத்தொழிற்சாலை ஒன்றை அமைப்பதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இத்தொழிற்சாலைக்கான அடிக்கல்லை நாட்டி வைத்ததாகவும், வடமாகாண அபிவிருத்திப்பணிகளில் இந்த ஆடைத்தொழிற்சாலை முக்கிய இடத்தை வகிக்கும் எனவும் அங்கஜன் தெரிவித்தார். இத்தொழிற்சாலையில் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள புலி உறுப்பினர்களுக்கும் தொழில்வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் அமையவுள்ள இந்த ஆடைத் தொழிற்சாலையை இயக்குவதற்கு ‘றை ஸ்ரார் அப்பறெல்’ நிறுவனத்தின் தலைவர் குமார் தேவபுர முன்வந்துள்ளதாகவும் அங்கஜன் தெரிவித்துள்ளார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பம்.

படிப்பினைகள் மற்றும், ஜனாபதிபதியினால் நியமிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகள் இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியுள்ளன. ஒவ்வொரு பகுதி மக்களும் இதில் கலந்து கொண்டு தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்காக பிரிவு பிரிவாக இதன் அமர்வுகள் இடம்பெறுகின்றன.

யாழ்.பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக இன்று காலை 9 மணிமுதல் 11 மணிவரை குருநகர் கலாசார மண்டபத்திலும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக முற்பகல் 11.30 மணி தொடக்கம் 1 மணிவரை அரியாலை சரஸ்வதி சனசமூகநிலையத்திலும், கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்காக பிற்பகல் 2மணி தொடக்கம் மாலை 5மணிவரை நீர்வேலி திருமுருகன் திருமண மண்டபத்திலும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்த அமர்வுகளில் தங்கள் சாட்சியங்களை அளிப்பதற்கு 80 வரையானோர் பதிவு செய்துள்ளதாகவும், இவ்வாறு பதிவு செய்யாதவர்களும் தங்கள் சாட்சியங்களை வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.