செய்திகள்

செய்திகள்

செய்திகள்

விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் 160 பேருக்கு தடுப்புக் காவல் நீடிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக் காவலில் உள்ள 160 விடுதலைப்புலிச் சந்தேக நபர்களுக்கு தடுப்புக்காவல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இறுதிக்கட்டப் போரின் போது படையினரிடம் சரணடையாமல் மக்களோடு மக்களாக அகதி முகாம்களுக்குள் இருந்தபோது கைது செய்யப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புப்பிரினரால் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். இவர்களின் தடுப்புக்காவல் நேற்று புதன் கிழமையுடன் முடிவடைவதால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இவர்களை நேற்று கொழும்பு நீதிமன்றில் முற்படுத்தினர். இவர்களை அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தடுப்புக் காவலிலுள்ள இவர்கள் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தவர்கள் என இவர்களை விசாரணை செய்யும் பயங்கரவாத தடுப்புப்பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேர்டோவின் யாழ் கிளை வடமராட்சியில் இயங்க ஆரம்பித்துள்ளது.

NERDO_Logoநேர்டோ அமைப்பினர் தமது யாழ் மாவட்டத்திற்கான செயற்பாடுகளை வடமராட்சி பகுதியில் ஆரம்பித்துள்ளனர். யுத்தம் மற்றும் உயர் பாதுகாப்பு வலயங்களால் இடம்பெயர்ந்து பாதிப்புக்குள்ளான கரையோரப் பகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் இந்த அலுவலகம் ஆரம்பித்துள்ளது. வடமராட்சியில் இன்புருட்டி பகுதியல் 7 பெரிய ஒழுங்கை, வியாபாரிமூலை, பருத்தித்துறையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த அலுவலகம் ஏற்கனவே வன்னி அலவலகத்திலிருந்து பல்வேறு உதவிகளை இந்தப்பகுதி மக்களிற்கு மேற்கொண்டு வந்தனர். பாதிப்புக்குள்ளான மக்கள் பெருமளவில் இந்தப் பகுதியில் வாழ்ந்து வருவதால் அவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யுமுகமாகவே இந்த அலுவலகம் ஆரம்பித்துள்ளதாக நேர்டோவின் யாழ் மாவட்ட செயற்பாட்டாளர் திரு இளங்குமரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேர்டோவின் கிளை அமைப்பான டாக்டர் துரைரட்ணம் ஊனமுற்றோர் மறுவாழ்வு நிலையம் ஒன்றும் கிளிநொச்சிப் பகுதியில் இயங்க ஆரம்பித்துள்ளது. TDRC என்றழைக்கப்படும் இந்த நிறுவனத்திற்கு காலம்சென்ற முன்னை நாள் சுகாதார அமைச்சின் விநியோகப்பிரிவின் இயக்குனர் மருத்துவர் திரு துரைரெட்ணம் நினைவாக அவர்கள் குடும்பத்தினரின் அனுசரனையுடன் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வன்னி யுத்தத்தில் பாதிக்கப்பட்டு ஊனமுற்ற அனைவரிற்கும் உதவுமுகமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், தற்போது உளவியல் சிகிச்சையிலிருந்து செயற்கை அவயவங்கள் பொருத்துவது மற்றும் ஊனமுற்றவர்களிற்கான தொழில் பயிற்சி போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய ஆரம்பித்துள்ளனர். இது பற்றிய மேலதிக விபரங்கள் -http://www.tdrc.anbuillam.org இல் இருந்து பெற முடியும்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலுக்கு வரவேண்டும் என்கிறார் பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத்.

Bazeer_Sekthauthதமிழ் தேசியக் கூட்டமைப்பு இணக்க அரசியலுக்குள் செல்ல வேண்டும் என கூட்டுறவு வர்த்தக பிரதி அமைச்சர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுள்ள கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் நலன் கருதி இணக்க அரசியலுக்குள் சென்று பார்க்க வேண்டும் என அவர் கூறினார். மட்டக்களப்பு குருமன்வெளி சிவசக்தி மகாவித்தியாலத்தில் அண்மையில் நடைபெற்ற நூற்றாண்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், யோகேஸ்வரன் ஆகியோரும் அந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த சில தினங்களாக வடபகுதிகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் நிவாரண வழங்கல் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்றவற்றில் அமைச்சர்கள், அரச அதிகாரிகள் அகியோருடன் கூட்டமைப்பினரும் கலந்து கொண்டு வருகின்றமை இச்சந்தர்ப்பத்தில் குறிப்பிடத்தக்கது.

அம்பாறையில் சுனாமி நினைவு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Tsunami_Rememberanceஎதிர்வரும் 26ஆம் திகதி அம்பாறை கரையோரப் பகுதிகளில் சுனாமி அழிவுகளை நினைவு கூரும் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. சுனாமி ஏற்பட்ட ஆறாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் மக்களால் மேற்கொள்ளப்படவுள்ளன.

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளிலுள்ள தமிழ், முஸ்லிம் கிராமங்களில் இந்நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
அன்றைய தினம் சுனாமியால் உயிரிழந்த உறவுகளுக்கு மக்கள் அஞ்சலி, பிரார்த்தனை ஆகியவற்றில் ஈடுபடுவர்.
அம்பாறை மாவட்டத்தின் கரையோரக் கிராமங்களான மருதமுனை, நீலாவணை. பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, கல்முனை, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, காரைதீவு, நிந்தாவூர், தம்பட்டை, தம்பிலுவில், திருக்கோவில், பொத்துவில் ஆகிய கிராமங்களில் சுனாமியால் அதிகளவு மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஏனைய கரையோரப் பகுதிகளிலும் சுனாமியினால் உயிரிழந்த மக்களை நினைவு கூரும் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடைமழையிலும் வடபகுதிக்கு வரும் தென்னிலங்கை சுற்றுலாப் பயணிகள்.

Jaffna_Touristஇலங்கையின் பல பகுதிகளிலும் அடைமழை பெய்து வருகின்ற நிலையிலும் வடபகுதிக்கான சிங்கள சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்ந்த வண்ணமே உள்ளன. வவுனியாவிற்கு அப்பால் கனகராயன்குளம் தொடக்கம் கிளிநொச்சி, ஆனையிறவு என ஏ-9 பாதையின் பல இடங்களில் இச்சுற்றுலாப்பயணிகள் தங்கி நின்று போரின் எச்சங்களை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

இதேவேளை, வன்னிப் பகுதிகளுக்கு வந்து பாதையோர வியாபாரங்களை மேற்கொண்டு வரும் தென்னிலங்கை வியாபாரிகள் தற்போது தங்கள் மனைவி பிள்ளைகளுடன் வருகை தந்து வியாபாரத்திலீடுபட்டு வருவதை காண முடிகின்றது. பாடசாலை விடுமுறை என்பதால் அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து இடங்களைப் பார்வையிடுவதுடன் வியாபாரத்தையும் மேற்கொண்டு வருகின்றனர்.

சாட்சியங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஐ.நா.நிபுணர் குழுவின் கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது.

UN_Logoஇலங் கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை ஐ.நா. நிபுணர் குழுவிற்கு அனுப்பி வைப்பதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.

வன்னியில் அரசபடைகளால் மேற்கொள்ளப்பட்ட விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றங்கள் தொடர்பான சாட்சியங்களை ஐ.நா.நிபுணர்குழு பல தரப்பினரிடமிருந்தும் பெற்று வருகின்றது. இந்த சாட்சியங்களைப் பெற்றுக் கொள்வதற்கான காலஅவகாசமாக இம்மாதம் 17ஆம் திகதி அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது இக்கால எல்லை இம்மாத இறுதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சங்கானையில் மீண்டும் ஒரு துப்பாக்கிமுனைக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Gun_Crimeசங்கானைப் பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளைச்சம்பவம் துப்பாக்கி முனையில் நடைபெற்றுள்ளது. கடந்த திங்கள் நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சங்கானை பிரதான வீதி, 7ஆம் கட்டை என்ற இடத்தில் கணவன் மனைவி இருவர் மட்டுமே வீட்டில் தங்கியிருந்த வேளையில், துப்பாக்கிகளோடு வந்த நான்கு பேர் கதவினைத் திறக்குமாறு வீட்டாரிடம் கூறியுள்ளனர் திருடர்கள் என்பதை உணர்ந்த கணவனும் மனைவியும் கதவைத் திறக்காமலிருந்த போது முன்பக்கமாகவிருந்த நான்கு யன்னல்களை உடைத்து அவர்களிடம் இருந்த நகைகளை துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

துப்பாக்கியை நீட்டி ‘ஐயருக்கு நடந்தது தெரியம் தானே’ என மிரட்டியபோது உயிர் அச்சம் காரணமாக தங்களிடமிருந்த 15 பவுனுக்கும் அதிகமான நகைகளை கொள்ளயரிடம் கொடுத்துள்ளனர். கொள்ளையர்கள் அவ்விடத்திலிருந்து சென்றதும் பொலிஸாருக்கு தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

சில தினங்களுக்கு முன்னர் சங்கானையில் குருக்கள் ஒருவர் மீதும், அவரது இரு மகன்மார் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான குருக்கள் வைத்தியசாலையில் மரணமானார். இச்சம்பவத்திற்குப் பின்னர் சங்கானைப் பகுதியில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. பின்னர் கொள்ளச்சம்பவத்திலீடுபட்ட இரு இளைஞர்களும் அவர்களுக்கு துப்பாக்கியை வழங்கி உடந்தையாக இருந்த படையினர் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர். இச்சம்வத்தைத் தொடர்ந்து மீண்டும் சங்கானைப் பகுதியிலேயே மேலும் ஒரு கொள்ளைச்சம்பவம் துப்பாக்கி முனையில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, யாழ்.குடாநாட்டு மக்கள் தங்கள் நகைகளை கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக வங்கிகளை நோக்கிச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. ஆனால், அரச வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டகங்கள் போதாமையாகவுள்ளதாலும், பாதுகாப்புப் பெட்டகம் தொடர்பில் அதிகளாவான காப்புறுதிக் கட்டணங்கள் கோரப்படுவதாலும் மக்கள் வங்கிகளில் தங்கள் நகைகளை பாதுகாப்பிற்காக வைப்பதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அமைச்சர்கள் வீரக்கோன், விமல் வீரவன்ச குழுவினர் கிளிநொச்சிக்கு வருகை தந்தனர்.

Chandrakumar_MP_Jaffna_EPDPநேற்று திங்கள் கிழமை கிளிநொச்சிக்கு வருகை தந்த மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் மற்றும், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் வி.முரளிதரன் ஆகியோர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிப்பொருட்களை வழங்கி வைத்தனர்

இதேவேளை, நேற்று கிளிநொச்சிக்கு வருகை தந்திருந்த வீடமைப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ச கிளிநொச்சி மாவட்டத்தின் தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் அலுவலகத்தைத் திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.விநாயகமூர்த்தி, ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரி, கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்புப் படைஅதிகாரி சந்தன ராஜகுரு, மற்றும் திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

வெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பொருட்களை வழங்க வந்த மீள்குடியேற்ற அமைச்சர் வீரக்கோன் தலைமையிலான குழுவினரும். தேசிய வீடமைப்பு அதிகாரசபை அலுவலகத்தைத் திற்நது வைக்க வந்த விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினரும் தனித்தனிக் குழுவினராக இரு நிகழ்வுகளிலும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மூத்த அரசியல்வாதி க.பொ.இரத்தினம் காலமானார்.

மூத்த அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான க.பொ.இரத்தினம் நேற்று திங்கள் கிழமை தனது 96 வது வயதில் காலமானார். நேற்று மாலை 5 மணியளவில் கொழும்பில் வைத்து இவர் காலமானார். இவரது உடல் தற்போது பொறளை மலர்ச்சாலையில் உறவினர், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

வேலணையைப் பிறப்பிடமாக் கொண்ட திரு. க.பொ. இரத்தினம் ஆரம்பத்தில் ஆசிரியராகவும், ஆசிரியர் கலாசாலை வரிவுரையாளராகவும் பணியாற்றினார். பின்னர் மலேசியப் பல்கலைக்கழகத்தில் தனிநாயகம் அடிகளோடு இணைந்து பணிபுரிந்தார். 1960 முதல் தமிழரசுக் கட்சியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டார். 1965 ஆம் ஆண்டு கிளிநொச்சித் தொகுதியிலும், 1970, 1977ஆம் ஆண்டுகளில் ஊர்காவற்றுறைத் தொகுதயிலும் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அரசியல்வாதியாகவும், ஒரு தமிழறிஞராகவும் இவர் தனது ஆற்றலை வெளிப்படுத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டுப் பறவைகள் வருகையால் முல்லைத்தீவில் பறவைக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை.

Bird_Unusual_to_SLமுல்லைத் தீவுப் பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகளின் வருகை அதிகரித்துள்ளதால் அப்பகுதி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும், இராணுவத்தினருக்கும் பறவைக்காய்ச்சல் தடுப்பூசி ஏற்றப்பட்டு வருகின்றது. பொதுமக்களுக்கு இத்தடுப்பூசியை ஏற்றுவதற்கு போதுமான மருந்து கையிருப்பில் இல்லாத காரணத்தினால் முதலில் அரசாங்க ஊழியர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இவற்றை ஏற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவில் பணியாற்றும் பொது சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மருந்துகள் வந்து சேர்ந்ததும் பொதுமக்களுக்கும் தடுப்பூசி ஏற்ப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு பகுதிகளுக்கு வெளிநாட்டுப் பறவைகள் தற்போது வருகின்ற நிலையில் சிலர் அப்பறவைகளைப் பிடித்து இறைச்சிக்காக பயன்படுத்துவதாகவும் இதனால் இப்பகுதிகளில் இத்தடுப்பூசி ஏற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.