சங்கானைப் பகுதியில் மீண்டும் ஒரு கொள்ளைச்சம்பவம் துப்பாக்கி முனையில் நடைபெற்றுள்ளது. கடந்த திங்கள் நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சங்கானை பிரதான வீதி, 7ஆம் கட்டை என்ற இடத்தில் கணவன் மனைவி இருவர் மட்டுமே வீட்டில் தங்கியிருந்த வேளையில், துப்பாக்கிகளோடு வந்த நான்கு பேர் கதவினைத் திறக்குமாறு வீட்டாரிடம் கூறியுள்ளனர் திருடர்கள் என்பதை உணர்ந்த கணவனும் மனைவியும் கதவைத் திறக்காமலிருந்த போது முன்பக்கமாகவிருந்த நான்கு யன்னல்களை உடைத்து அவர்களிடம் இருந்த நகைகளை துப்பாக்கி முனையில் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
துப்பாக்கியை நீட்டி ‘ஐயருக்கு நடந்தது தெரியம் தானே’ என மிரட்டியபோது உயிர் அச்சம் காரணமாக தங்களிடமிருந்த 15 பவுனுக்கும் அதிகமான நகைகளை கொள்ளயரிடம் கொடுத்துள்ளனர். கொள்ளையர்கள் அவ்விடத்திலிருந்து சென்றதும் பொலிஸாருக்கு தொலைபேசியூடாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
சில தினங்களுக்கு முன்னர் சங்கானையில் குருக்கள் ஒருவர் மீதும், அவரது இரு மகன்மார் மீதும் துப்பாக்கிப்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றது. இதில் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கான குருக்கள் வைத்தியசாலையில் மரணமானார். இச்சம்பவத்திற்குப் பின்னர் சங்கானைப் பகுதியில் மக்கள் மத்தியில் அச்சம் நிலவியது. பின்னர் கொள்ளச்சம்பவத்திலீடுபட்ட இரு இளைஞர்களும் அவர்களுக்கு துப்பாக்கியை வழங்கி உடந்தையாக இருந்த படையினர் இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டனர். இச்சம்வத்தைத் தொடர்ந்து மீண்டும் சங்கானைப் பகுதியிலேயே மேலும் ஒரு கொள்ளைச்சம்பவம் துப்பாக்கி முனையில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, யாழ்.குடாநாட்டு மக்கள் தங்கள் நகைகளை கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக வங்கிகளை நோக்கிச் செல்வதை காணக்கூடியதாகவுள்ளது. ஆனால், அரச வங்கிகளில் பாதுகாப்புப் பெட்டகங்கள் போதாமையாகவுள்ளதாலும், பாதுகாப்புப் பெட்டகம் தொடர்பில் அதிகளாவான காப்புறுதிக் கட்டணங்கள் கோரப்படுவதாலும் மக்கள் வங்கிகளில் தங்கள் நகைகளை பாதுகாப்பிற்காக வைப்பதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.