செய்திகள்

செய்திகள்

செய்திகள்

சமூக வலைத்தளங்களில் தேர்தல் பிரச்சாரத்துக்கு தடை – சுரங்க ரணசிங்க

இலங்கையின் பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றன நிலையில் இன்று நள்ளிரவுடன் சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் யாவும் நிறுத்தப்படவேண்டும். அத்துடன் சமூக ஊடகங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ள பிரசாரங்கள் அனைத்தும் அகற்றப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் முரண்பாடுகள் தீர்வுப்பிரிவின் உதவி ஆணையாளர் சுரங்க ரணசிங்கவின் தகவல்படி சமூக ஊடகங்களின் பிரசாரங்கள் ஆணைக்குழுவினால் இன்று நள்ளிரவுக்கு பின்னர் உடனடியாகவே அகற்றப்படும்.

இதேவேளை கடந்த ஒரு வாரக்காலப்பகுதிக்குள் சமூக ஊடக பிரசாரத்துக்காக வேட்பாளர்கள் 1லட்சம் 50ஆயிரம் டொலர்களை செலவிட்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பின் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் பங்குபற்றிய மக்கள் மீது தாக்குதல்.

கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் பொதுச் சந்தையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கு கொண்ட மக்கள் மீது முன்னாள் ஈ.பி.டி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் பங்கேற்ற பிரச்சார கூட்டம் நேற்று (01.08.2020) மாலை அக்கராயன் பொதுச் சந்தைப் பகுதியில் நடைபெற்றுள்ளது.

அவர் உரையாற்றிக் கொண்டிருந்த போது, சில நபர்கள் அந்தப் பகுதியில் நின்று கூச்சல் இட்டுக் கொண்டிருந்தனர். பளையில் நடைபெறுகின்ற பிரச்சார கூட்டத்திற்காக சிறீதரன் புறப்பட்டுச் சென்ற பின்னர் குறித்த குழு உள்ளே புகுந்து பிரச்சாரத்தில் பங்குபற்றிய மக்கள் மீதும் இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தேர்தல் கடமைக்காக நின்ற பொலிஸார் முன்நிலையிலேயே இடம்பெற்றுள்ளது. இதன்போது தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் தாக்குதல் நடத்தியவர்கள் மதுபோதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களுடைய பிரச்சினை கௌரவத்துடன் தீக்கப்பட வேண்டும் – யாழில் இரா. சம்பந்தன்

இந்த நாட்டில் உரிமையில்லை மக்களுடைய இறையான்மை மதிக்கப்பட்டவில்லை பலவிதமான தவறுகள் இடம்பெறுகின்றன. சிறுபாண்மை மக்களை பொறுத்தவரையில் பிரஜை உரிமை, காணி, மொழி, கல்வி, வேலை வாய்ப்பு, அபிவிருத்தி, பலவிதமான அநீதிகள் ஏற்படுத்தப்படுகின்றனகின்றன. இவற்றினை திருத்த முனைகின்றோம். ஆனால், எமது கையில் அதிகாரம் இல்லை. அதனால் எதனையும் எம்மால் தமிழ் மக்களுக்காக செய்யமுடியவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட வேட்பாளருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நேற்று (01.08.2020) மாலை நெல்லியடி, மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இரா. சம்பந்தன் அவர்கள் இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்.

ஒற்றையட்சி முறை சமஷ்டி ஆட்சி முறையாக மாற்றப்பட்டு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு அந்த பிராந்தியங்களில் வாழ்கின்ற மக்களுக்கு இறையான்மையின் அடிப்படையில் அதிகாரங்கள் ஏற்பட்டால் தான், மக்களுக்கு சமத்துவமான நிலை உருவாகும். அதுவே, எமது நிலைப்பாடு எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

சுமார் 65 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் சிறுபாண்மை தமிழ் மக்கள், அதனை அமோதித்து உள்ளனர். 13 ஆவது சீர்திருத்த யாப்பில் முன்னேற்றம் இருந்தது. ஆனால், தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

கடந்த கால அரசாங்கத்தில் உள்ள ஆட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருக்கின்றோம். தமிழ் மக்களுடைய பிரச்சினை கௌரவத்துடன் தீக்கப்பட வேண்டும். வடக்கு கிழக்கு மாகாண இணைந்த ஒரு அலகு சேர்ந்த அதிகார பகிர்வு கிடைக்கப் பெறவேண்டும். எங்களை நோக்கில் பல சவால் இருக்கின்றது. அதிகாரபூர்வமாக நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் என்ற அரசியல் சாசனம் இப்போது நாட்டில் இல்லை. நாடு இப்போது சட்டம் இல்லமால் செயற்படுகின்றது. இலங்கை பிளவு அடைந்த நாடு அந்த நிலையில் இருக்கின்றது.

இதனை மாற்றி அமைக்க வேண்டும். இதற்கு பலம் பொருந்திய அணியாக செயற்பட வேண்டும். ஒரு வருடத்திற்குள் புதிய அரசியல் சாசனத்தினை தீர்வுடன் சிறுபான்மை தமிழ் மக்களின் உரிமைக்கான தீர்வினை காண வேண்டும் எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

குறித்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அ. சித்தார்த்தன் உள்ளிட்ட வேட்பாளர்கள் பங்கு பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் டிக்டாக் செயலிக்குத் தடை..?

இந்திய எல்லைப்பகுதியான லடாக்  பகுதியில், கடந்த  ஜூன் மாதம் 15-ம் தேதி இந்திய – சீன ராணுவத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் இறந்தனர். இதனால் எல்லையில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து, சீனப் பொருட்களை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்றும் சீன நிறுவனங்களின் செல்போன் செயலிகளை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசுக்குத் தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்தன.

அதன்படி, தேச நலனுக்கு எதிராகவும் தனிநபர் தரவுகள் பகிரப்படும் அபாயம் இருப்பதாகக் கூறி டிக் டாக் உள்ளிட்ட பல  சீன செயலிகளுக்கு இந்தியா தடை விதித்தது.

இந்த நிலையில்,  சீனாவின் செயலியான டிக்டாக்கை தடை செய்வது குறித்து பரிசீலிப்பதாக  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, கொரோனா வைரஸை பரப்பியதாக கூறி, சீனா மீது அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே மோதல் உருவாகி உள்ளது. இந்த நிலையில், சீனாவின் செயலியானா டிக்டோக்கை தடை செய்ய உள்ளதாக டிரம்ப் கூறி இருக்கிறார். டிக் டாக்கிற்கு பதிலாக வேறு மாற்று செயலியை உருவாக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே,   டிக் டாக் நிறுவனத்தின் அமெரிக்க செயல்பாடுகளை மட்டும் வாங்க மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகவும் ஒரு செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அசுர வேகத்தில் பரவும் கொரோனா – 24 மணி நேரத்தில் 50,000க்கும் மேற்பட்ட நோயாளர்கள்.

இந்தியாவில்  கொரோனா பாதிப்பு மின்னல் வேகத்தில் வருகிறது. கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தினம் தினம் உச்சத்தை எட்டி வருகிறது.  இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 57,118 பேருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 16,95,988 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், கடந்த  24 மணி நேரத்தில் 764 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம்  கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36,511- ஆக உள்ளது. 10 97,374  கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் இதுவரை 1,93,58,659-பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று மட்டும் 5.25 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை நிலையங்களை மூட உத்தரவு!

நடைபெறவுள்ள  எதிர்வரும் 05ஆம், 06ஆம் திகதிகளில் நாடு பூராகவும் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களை மூடுமாறு, மதுவரித் திணைக்கள ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தல் காரணமாக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு அமைய, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இத்தீர்மானத்திற்கு அமைய நடந்துகொள்ளாத மதுபான விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தவும், அவர்களின் அனுமதிப்பத்திரங்களை இடைநிறுத்தவும், அவர்களுக்கு எதிராக ‘தொழில் குற்றம்’ எனும் குற்றச்சாட்டை பதிவு செய்யவும், நாடு பூராகவும் மதுவரித் திணைக்கள அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளை 1913 எனும் தொலைபேசி இலக்கத்தின் மூலமாக மதுவரித் திணைக்கள தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள விசேட செயற்பாட்டு நிலையத்திற்கு அறிவிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.- உறுப்பினர்கள் கைலாகுகொடுத்தல், கட்டிப்பிடித்தல் தடை.

 

பாராளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம் (31.07.2020) பிற்பகல்  நடைபெற்றது. இதில் பிரதிச் செயலாளர் நாயகம், உதவிச் செயலாளர் நாயகம் உள்ளிட்ட பாராளுமன்ற திணைக்களப் பிரதானிகளும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க காதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பின் முக்கியமான விடயங்கள் தொடர்பாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த அறிக்கையில்அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் எப்பொழுதும் முகக்கவசத்தை அணிந்திருப்பது அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது ,  அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சபா மண்டபத்திலிருக்கும் நேரத்தில் முகக்கவசத்தை கழற்றவோ அல்லது கீழிறக்கவோ கூடாது என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது ஆசனங்களில் அமர்ந்திருக்க முடியுமாக இருக்கின்றபோதும், அவர்கள் அனைவரும் சபா மண்டபத்திலிருக்கும்போது தமக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்களில் மாத்திரம் அமரவேண்டும் என்பதுடன், சபா மண்டபத்திலிருக்கும் சகல நேரத்திலும் ஒரு மீற்றர் சமூக இடைவெளியைப் பேணுவதற்கு நடவடிக்கையெடுக்க வேண்டும்.

சபா மண்டபத்திலிருக்கும் சகல அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற பணியாளர்களும், கலரியிலிருக்கும் சகல தரப்பினரும் முகக்கவசத்தை அணிந்திருக்க வேண்டும் என்றும் இந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்துக்காக தயாரிக்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்கவினால், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவிடம் நேற்று (31) கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பாராளுமன்ற செயலாளர் நாயகம் இதனைத் தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கையடக்கத்தொலைபேசி மற்றும் பேனை போன்ற தனிப்பட்ட கருவிகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளாதிருப்பதுடன், கைலாகுகொடுத்தல், கட்டிப்பிடித்தல் போன்ற வாழ்த்தும் முறைகளைப் பின்பற்றாதிருத்தல் போன்ற விடயங்களும் இதில் உள்ளடக்கப்பட்டிருப்பதாக செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இங்கு கருத்துத் தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க,  சுகாதாரப் பாதுகாப்பான முறையில் பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இந்த வழிகாட்டல் தொகுப்புத் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற சபா மண்டபத்துக்குள் நுழையும் சகல வாயில்களிலும் கிருமிநாசினி திரவம் வைக்கப்படுவதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சபா மண்டபத்துக்குள் நுழைய முன்னர் தமது கைகளை சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரப் பாதுகாப்பு முறைகளைப் பின்பற்றி தமது ஆசனங்களில் அமரமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, பாராளுமன்றத்தை கொவிட் 19 சவாலிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இது சுகாதார அமைச்சினால் தயாரிக்கப்பட்ட மூன்றாவது வழிகாட்டல் தொகுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற சபாமண்டபம், உறுப்பினர்களின் முகப்புக் கூடம், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் விசேட விருந்தினர்களுக்கான கலரிகள், உறுப்பினர்களின் உணவுக் கூடம், நூலகம் என்பவற்றை உள்ளடக்கும் வகையிலும், போக்குவரத்துப் பிரிவு மற்றும் பராமரிப்புப் பிரிவினர் செயற்படவேண்டிய முறைகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகவும் இந்த சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல் தொகுப்பு தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

யானை தாக்கிய பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி மரணம்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் கடந்த 19.07.2020 அன்று காட்டு  யானை தாக்கியநிலையில், படுகாயமடைந்த பெண் விரிவுரையாளர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதில் தொழில்நுட்ப பீடத்தின், பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் கற்பிக்கும் விரிவுரையாளரான கொழும்பு, களனி பகுதியைச் சேர்ந்த காயத்ரி தில்ருக்ஷி எனும் 32 வயதுடைய பெண் விரிவுரையாளரே உயிரிழந்துள்ளார்.

சஜித் பிரேமதாச ஏழைகளின் தோழன் – பதுளை மாவட்ட வேட்பாளர் அ.அரவிந்தகுமார்.

இந்த தேர்தலில் ஏற்படும் ஆட்சி மாற்றத்தின் ஊடாகவே மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும். எனவே, ஐக்கிய மக்கள் சக்திக்கு பேராதரவை வழங்கி அந்த மாற்றத்தை ஏற்படுத்துமாறு மலையக மக்கள் முன்னணியின் அரசியல் பிரிவு தலைவரும், பதுளை மாவட்ட வேட்பாளருமான அ.அரவிந்தகுமார் அறைகூவல் விடுத்துள்ளார்.

லுணுகலை ஹொப்டன் பகுதியில் இன்று [01.08.2020] நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடும் போது,

” கடும் குளிர், மழை என்பவற்றைக்கூட பொருட்படுத்தாமல் எமக்காக மக்கள் அணிதிரள்கின்றனர். கூட்டம் நடைபெறும் இடங்களிளெல்லாம் இதனைக்காணக்கூடியதாக இருக்கின்றது. இது அன்பால் சேர்ந்த கூட்டம், ஆதரவாளர்களின் ஒருமித்தக் குரலோடு சங்கமித்த கூட்டம். இவ்வாறான ஆதரவும், ஒற்றுமையுமே மலையகத்துக்கு தேவைப்படுகின்றது.

நாம் வெவ்வேறான தொழிற்சங்கங்களில் அங்கம் வகித்தாலும் சமூகம் என வரும்போது இணைந்து பயணித்தால்தான் இலக்கை நோக்கி பயணிக்ககூடியதாக இருக்கும்.

பிரச்சாரங்களுக்காக தோட்டங்களுக்கு செல்லும்போது ஆயிரம் ரூபா தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். இந்த ஆட்சி நீடிக்கும் வரை ஆயிரம் ரூபா கிடைக்கப்போவதில்லை என்பதுதான் எனது பதிலாக இருக்கின்றது. எனவே, கிடைக்காத ஒன்றை கிடைக்கும் என கூறி மக்கள் மத்தியில் ஏமாற்றுகாரனாக வலம் வருவதற்கு நான் தயாரில்லலை.

உண்மையை பேசினால் சிலர் அபசகுணம் என விமர்சிக்கின்றனர், ஆயிரம் ரூபா கிடைக்க வேண்டும் என்றால், மலையகத்தில் மாற்றம் ஏற்படவேண்டும் என்றால் இந்த ஆட்சிமாற வேண்டும். அதன் ஊடாகவே மலையகத்தில் சுபீட்சம் ஏற்படும்.

சஜித் பிரேமதாச என்பவர் ஏழைகளின் தோழன், அனைத்து இன மக்களையும் அரவணைத்துக்கொண்டு பயணிக்க கூடியவர், அவர் பிரதமரானால் மாத்திரமே சிறுபான்மையின மக்களின் அரசியல் இருப்பும் பாதுகாக்கப்படும். ஏனெனில் இன்று இனவாதிகள் பலகோணங்களில் கொக்கரிக்க தொடங்கியுள்ளனர்.

அதேவேளை, இன்று அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. சாதாரண மனிதன் குறித்து சிந்திக்காத கொடூங்கோல் அரசாங்கத்தை வீட்டுக்கு விரட்டவேண்டும். ” – என்றார்.

நாளை நள்ளிரவு முதல் தேர்தலுக்கான அமைதிக்காலம் அமுலுக்கு வருகின்றது – மஹிந்ததேசப்பிரிய

தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நாளை  ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.நாளை இரவு 10.00 மணியின் பின்னர் பிரசாரத்திற்கான பொறிமுறைகளைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து அமைதி காலம் ஆரம்பமாகிறது எனவும்  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய அறிவித்துள்ளார்.

எனவே அமைதி காலத்தில் சட்டத்திற்கு முரணாக செயற்படுபவர்களுக்கு எதிராக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பிரசார கூட்டங்களை நடத்துதல், கிராமங்களிலும் வீடுகளிலும் கூட்டங்களை நடத்துதல், வீடு வீடாகச் சென்று வாக்குகளை கேட்டல், துண்டு பிரசுரங்களை விநியோகித்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அறிவித்தல் கொடுக்கப்பட்ட கிளை அலுவலகங்களில் பிரசார பலகைகளை காட்சிப்படுத்தியிருத்தல் மற்றும் சுவரொட்டிகளையும் அறிவித்தல்களையும் பதாதைகளையும் காட்சிப்படுத்தல் என்பவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவின் பின்னர் ஆரம்பமாகும் அமைதி காலப்பகுதியினுள் அனைத்து அரசியல் கட்சிகள், குழுக்கள், வேட்பாளர்கள் இவற்றை தவிர்த்து சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலொன்றுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.