செய்திகள்

செய்திகள்

செய்திகள்

100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரராக ஜோரூட் சாதனை !

இந்தியாவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து தலைவராக ஜோரூட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அவர் இரட்டை சதம் அடித்து முத்திரை பதித்தார். 377 பந்துகளில் 19 பவுண்டரி, 3 சிக்சருடன் 218 ஓட்டங்கள் குவித்தார்.

ஜோரூட் இதன்மூலம் பல சாதனைகள் புரிந்தார். அதன் விவரம் வருமாறு:-

* 100-வது டெஸ்டில் இரட்டை சதம் அடித்த முதல் வீரர் ஜோரூட் ஆவார். இதற்கு முன்பு பாகிஸ்தானை சேர்ந்த இன்சமாம் 2005-ம் ஆண்டு பெங்களூர் மைதானத்தில் 184 ஓட்டங்கள் குவித்ததே 100-வது டெஸ்டில் அதிக ஓட்டங்களா இருந்தது.

* 218 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த 3-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோரூட் பெற்றார். 8,467 ஓட்டங்களை குவித்து அவர் ஸ்டூவர்டை முந்தினார். இலங்கை தொடரில் அவர் பாய்காட், பீட்டர்சன், டேவிட் கோவர் ஆகியோரை முந்தி இருந்தார்.

* ஜோரூட்டின் 5-வது இரட்டை சதம் இதுவாகும். இதன்மூலம் அதிக இரட்டை சதம் அடித்த இங்கிலாந்து வீரர்களில் 2-வது இடத்தில் இருந்த குக்குடன் இணைந்தார். ஹேமண்ட் 7 இரட்டை சதத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.

* தலைவர் பதவியில் ஜோரூட்டின் 3-வது இரட்டை சதம் ஆகும். வேறு எந்த இங்கிலாந்து தலைவரும் ஒன்றுக்கு மேல் இரட்டை சதம் அடித்ததில்லை.

* கடந்த 3 டெஸ்டையும் சேர்த்து ஜோரூட் 644 ரன்களை குவித்துள்ளார். அவர் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டில் 229 ஓட்டங்களும்  (228+1), 2-வது டெஸ்டில் 197 ஓட்டங்களும் (186+11) எடுத்தார். இதன் மூலம் 3 டெஸ்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் 3-வது இடத்தை பிடித்தார். கிரகாம் கூச் (779 ஓட்டங்கள்), ஹேமண்ட் (763) ஆகியோர் முதல் 2 இடங்களில் உள்ளனர்.

* சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை சேர்ந்த டீன் ஜோன்ஸ் 210 ஓட்டங்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. இந்த டெஸ்ட் டையில் முடிந்தது. ஒட்டு மொத்தத்தில் சேப்பாக்கத்தில் 5 வெளிநாட்டு வீரர்கள் இரட்டை சதம் பதிவு செய்துள்ளனர்.

* 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் வெளிநாட்டு வீரர் ஒருவர் இரட்டை சதம் அடித்துள்ளார். கடைசியாக 2010-ம் ஆண்டு பிப்ரவரியில் நியூசிலாந்து வீரர் பிரண்டன் மெக்குல்லம் 302 ஓட்டங்கள் (ஐதராபாத்) குவித்திருந்தார்.

3 டெஸ்டிலும் 150 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த 7-வது பேட்ஸ்மேன் ஜோரூட் ஆவார்.

இந்தியா – இங்கிலாந்து முதலாவது டெஸ்ட் – வலுவான நிலையில் இங்கிலாந்து !

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான, முதலாவது டெஸ்ட் போட்டி இன்று சென்னையில் ஆரம்பமாகியுள்ளது.

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, இன்றைய ஆட்டநேர முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 263 ஓட்டங்களைபெற்றுக்கொண்டது.ஜோ ரூட்

இதன்போது இங்கிலாந்து அணி சார்பில், ரொறி பர்ன்ஸ் 33 ஓட்டங்களுடனும் டேனியல் லோரன்ஸ் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர். சிறப்பாக துடுப்பெடுத்தாடி வந்த டோமினிக் சிப்ளி 87 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இன்றைய  ஆட்ட நேர முடிவில் ஆட்டநேர முடிவில், ஜோ ரூட் 128 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில், ஜஸ்பிரிட் பும்ரா 2 இலக்குகளையும் அஸ்வின் 1 இலக்கினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 7 இலக்குகள் வசமுள்ள நிலையில், போட்டியின் இரண்டாவது நாளை, இங்கிலாந்து அணி நாளை தொடரவுள்ளது.

10.53 கோடியைக் கடந்தது கொரோனா பாதிப்பு !

சீனாவின் வுகான் நகரில் 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ ஆரம்பித்த  கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
கொரோனா வைரசுக்கான புதிய தடுப்பசிகள் நடைமுறைக்கு வந்து விட்ட போதிலும் கூட இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 10.53 கோடியைக் கடந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 7.70 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 22.92 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 2.58 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 1.05 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் ஆகியவை முதல் 5 இடங்களில் உள்ளன.

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின் தலைமைப் பயிற்­சியாளர் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா !

இலங்கை அணியின் வீரர் லஹிரு திரிமன்னேவிற்கும் அணியின் தலைமைப் பயிற்­சியாளர் மிக்கி ஆர்தருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இலங்கை வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் சுற்றுப்பயணத்தில் பங்கேற்கத் தயாரான தற்காலிக அணியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து அவர்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இலங்கை அணியின் பயிற்சியாளர்கள், ஊழியர்கள் உட்பட 36 பேர் பேருக்கு நேற்று முன்தினம்  (செவ்வாய்க்கிழமை) பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையில் தொற்று உறுதியான லஹிரு திரிமன்னே மற்றும் தலைமைப் பயிற்­சியாளர் மிக்கி ஆர்தரும் அரசாங்கத்தின் கொரோனா தொற்று தொடர்பான நெறிமுறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

“விவசாயிகள் நாட்டின் ஒரு அங்கத்தினர் – அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சனையை தீர்த்து, முன்னோக்கி செல்வார்கள் என நம்புகிறேன். ’’ – விராட் கோலி

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இரு அணி வீரர்களும் கடுமையான பயிற்சி மேற்கொண்டு வருகின்றன.
நாளை போட்டி குறித்து, விவசாயிகள் போராட்டம் குறித்தும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘ரிஷப் பண்ட் நாளைய போட்டியில் ஆடும் லெவன் அணியில் இடம் பெறுவார். ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அவர் நல்ல மனநிலையில் இருக்கிறார். அவருடன் நாங்கள் போட்டியை தொடங்க விரும்புகிறோம். ஐபிஎல் போட்டிக்குப்பின் கடுமையான பயிற்சி மூலம் சிறப்பாக வந்துள்ளார். அவருடைய சிறப்பான ஆட்டத்தை பார்க்கும்போது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
நாங்கள் கிரிக்கெட் விளையாடும்போது நாட்டில் நடைபெறும் எந்தவொரு பிரச்சனை குறித்தும் பேசுவோம். இந்த பிரச்சனை குறித்து ஒவ்வொருவரும் என்ன சொல்ல வேண்டும் என்பது குறித்த அவர்களுடைய கருத்துக்களை வெளிப்படுதியுள்ளனர். அணிகளுடனான ஆலோசனையில் இதுகுறித்து பேசினோம். அதன்பின் அணியின் திட்டம் குறித்து ஆலோசித்தோம்’’ என்றார்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் ‘‘அனைவரும் ஒன்றாக இணைந்து பிரச்சனையை தீர்த்து, முன்னோக்கி செல்வார்கள் என நம்புகிறேன். விவசாயிகள் நாட்டின் ஒரு அங்கத்தினர்’’ என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

4 ஆண்டுக்கு பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த லியோனல் மெஸ்சி !

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி,  அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த இவர் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா கிளப் அணியில் விளையாடி வருகிறார்.

33 வயதான மெஸ்சி 2004-ம் ஆண்டு முதல் பார்சிலோனா அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார். 30-க்கும் அதிகமான பட்டங்களை வென்று கொடுத்துள்ளார்.

ஆனாலும் அணியின் முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்று அதிருப்தி தெரிவித்து மெஸ்சி பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறப் போவதாக தெரிவித்தார். ஆனாலும் அவரால் பல்வேறு சட்ட சிக்கல்களால் பார்சிலோனா கிளப்பில் இருந்து வேறு கிளப்புக்கு மாற முடியவில்லை.

இந்த நிலையில் மெஸ்சி கடந்த 2017 முதல் 4 ஆண்டுக்கு பார்சிலோனா அணியில் விளையாடுவதற்காக ரூ.4,904 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாக ஸ்பெயினில் இருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.

இதன்மூலம் விளையாட்டு உலகில் தனி ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்ட அதிகபட்ச மதிப்பாகும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

அந்த செய்தியில் உள்ள தகவல்படி ஒரு சீசனுக்கான மெஸ்சியின் ஊதியம் ரூ.1,217 கோடியாகும். இதில் நிர்ணயிக்கப்பட்ட வருவாயுடன் இதர வருவாயும் அடங்கும்.

ஆனாலும் ஸ்பெயின் வரி விதிகளின்படி இந்த தொகையில் பாதியை மெஸ்சி வரியாக செலுத்தி இருக்க வேண்டியது இருக்கும்.

ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பில் சுமார் ரூ.4,500 கோடியை மெஸ்சி ஏற்கனவே பெற்றுவிட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தையின் படத்தை வெளியிட்டு பெயரையும் அறிவித்த விராட் கோலி!

இந்திய அணி கேப்டன் விராட் கோலி – பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு கடந்த மாதம் 11ம் திகதி பெண் குழந்தை பிறந்தது.
அவர்கள் பிறந்த உடன் குழந்தையை வெளியுலகத்திற்கு காட்டவில்லை. தனிமனித உரிமை கடைபிடிக்கப்பட வேண்டும் வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். இதனால் மீடியாக்கள் அவர்கள் பின்தொடரவில்லை.
இந்த இந்நிலையில் அனுஷ்கா ஷர்மா டுவிட்டர் பக்கத்தில் விராட் கோலி, குழந்தையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு, மகளின் பெயர் “வாமிகா’’  எனவும் தெரிவித்துள்ளார்.

பழனி முருகனுக்கு முடிக்காணிக்கை செலுத்திய இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் !

தமிழகத்தின் சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டியைச் சேர்ந்த நடராஜன் இந்திய கிரிக்கெட் அணியில் அண்மையில் இடம்பிடித்து சிறப்பாக அசத்தி வருகிறார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அறிமுகமாகி அசத்தலாக பந்து வீசினார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு சமீபத்தில் தாயகம் திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பழனி தைப்பூச விழாவில் முருகப் பெருமானைத் தரிசிக்க நண்பர்களுடன் நேற்று பழனி வந்தார்.பழனி மலைக்கோயிலுக்குச் சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன், நேர்த்திக் கடனாக மலைக்கோயில் அடிவாரத்தில் முடிக் காணிக்கை செலுத்தினார்.

“கொரோனா தாக்கத்தால் ஆண்மை குறைவு ஏற்படும்“ – ஜேர்மனிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் !

இதுவரை காலமும் கொரோனா தாக்கினால் நுரையீரல் பாதிக்கும், சுவாச பிரச்சனை ஏற்படும். ரத்த நாளங்களில் ரத்தம் உறையும். இதனால் இதயம் செயலிழக்கும் என்று அறிவிக்கப்பட்டு வந்த நிலையில் “கொரோனா வைரஸ் தாக்கிய ஆண்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் என்று ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவி உள்ள கொரோனா வைரஸ் மனித உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பது பற்றி மருத்துவ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெர்மனியில் உள்ள ஜஸ்டஸ்லைபிக் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பெக்சாத் மாலோகி மற்றும் பக்தியார் டார்டிபியன் ஆகிய இருவரும் கொரோனா கருவுறுதலில் நிகழ்த்தும் எதிர்மறையான தாக்கம் தொடர்பாக ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.

கொரோனா தாக்கிய 84 ஆண்களை 60 நாட்களுக்கு 10 நாட்கள் இடைவெளியில் விந்தணுவை பகுப்பாய்வு செய்து 105 ஆரோக்கியமான ஆண்களுக்கான தரவுகளுடன் ஒப்பிட்டு ஆய்வு நடத்தி இருக்கிறார்கள்.

கொரோனா பாதித்த ஆண்களின் விந்து செல்களில் வீக்கம் மற்றும் ஆக்சிஜனேற்ற அழுத்தம் அதிகரித்து காணப்பட்டுள்ளது. இந்த வேதியியல் ஏற்றத்தாழ்வு உடலில் உள்ள டி.என்.ஏ. மற்றும் புரதங்களை சேதப்படுத்தும்.

விந்தணுக்களில் ஏற்பட்டுள்ள இந்த விளைவுகள் அதன் தரம் மற்றும் கருவுறுதல் திறனுடன் தொடர்புடையவை. இது விந்தணு உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆணின் இனப்பெருக்க அமைப்பானது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் பாதையாக கருதப்பட வேண்டும். ஆபத்தான உறுப்பு என்று உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட வேண்டும் என்று விஞ்ஞானிகள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.

கொரோனா வைரசின் தாக்கம் உடலின் முக்கிய உறுப்புகளை பாதிப்பது மட்டுமல்ல நுரையீரல் திசுக்களை அணுகுவதற்கு வைரஸ் பயன்படுத்தும் அதே ஏற்பிகள் விந்தணுக்களிலும் காணப்படுகின்றன. இது ஆணின் இனப்பெருக்க உறுப்புகளையும் பாதிக்கும். விந்து உயிரணுவின் வளர்ச்சியையும் குறைக்கும். இனப்பெருக்க ஹார்மோன்களையும் சீர்குலைக்கலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.

“இலங்கையின் கிரிக்கெட் தரத்தை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் முன்னேற்ற முடியாவிட்டால் வேறு யாராலும் முடியாது” – அர்ஜூன ரணதுங்க

“விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவினால் இலங்கை கிரிக்கெட்டின் தற்போதைய நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியாவிட்டால் வேறு எந்த அமைச்சராலும் எதிர்காலத்தில் முன்னேற்றததை ஏற்படுத்த முடியாது” என முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ,

இலங்கை கிரிக்கெட்டினை வலுப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் நாமல்ராஜபக்சவினை அவதானித்த வண்ணமுள்ளனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் நாமலின் குடும்பத்தவர்கள் என தெரிவித்துள்ள, ரணதுங்க இதன் காரணமாக இலங்கை கிரிக்கெட்டினை முன்னேற்றகரமான நிலைக்கு நாமலால் கொண்டு செல்ல முடியாவிட்டால் வேறு எவராலும் கொண்டு செல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி காலத்தில் கிரிக்கெட்டில் மாற்றங்களை கொண்டுவருவதற்கான முயற்சிகளை தடுப்பதற்காக பலர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆதரவை பெற்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாமல் ராஜபக்சவிற்கு விளையாட்டை பற்றி தெரியும் என்பதாலும் அவர் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதாலும் யாரும் தேவையற்ற விதத்தில் செல்வாக்கு செலுத்த முடியாது என ரணதுங்க தெரிவித்துள்ளார்.