செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கை – மேற்கிந்திய தீவுகள் இடையான இரண்டாவது டெஸ்ட் போட்டி – இலங்கை வீரர்களின் நிதான துடுப்பாட்டத்தால் போட்டி சமன் !

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச தீர்மானித்திருந்தது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் சகல விக்கெட்டுக்களை இழந்து 354 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இலங்கை அணி சார்ப்பில் சுரங்க லக்மால் 4 விக்கெட்களையும், துஷ்மந்த சமீர 3 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 4 விக்கெட்டுக்களுக்கு 280 ஒட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. அவ்வணி சார்பாக அணித்தலைவர் பிராத்வெயிட் அதிகபட்சமாக 85 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

அதன்படி, இலங்கை அணிக்கு 377 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதன் அடிப்படையில் தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 5 ஆவது நாள் ஆட்ட நேரம் நிறைவடையும் போது2 விக்கெட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காமல் 66 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 75 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

அதன்படி, இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகனாக பிராத்வெயிட் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தொடராட்ட நாயகனாக சுரங்க லக்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” – ஜீவன் தொண்டமான்

“தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.” என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொட்டகலையில் அமைந்துள்ள சீல்.எல்.எப் கேட்போர் கூடத்தில் நேற்று (3.4.2021) நடைபெற்ற உள்ளுராட்சி மன்றங்களில் காணப்படும் குறைநிறைகளை கண்டவறிதற்கான கலந்துரையாடலில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வு நடைபெற்ற பின்னர் ஆயிரம் ரூபா சம்பள உயர்வு மற்றும் கம்பனிகளின் செயற்பாடுகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் ஜீவன் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ 50 ரூபா, 100 ரூபா என கூறிக்கொண்டு கடந்த ஆட்சியின்போது 5 வருடங்கள் கடத்தப்பட்டன. அதற்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படவில்லை. ஆனால் இன்று கம்பனிகளுக்கு எதிராக நாம் நீதிமன்றம்வரை சென்றுள்ளோம்.

இந்நிலையில் தொழிலாளர்களை உசுப்பேத்துவதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.அரசாங்கத்திடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது, அப்படி இருக்கையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றியாவது ஏன் சம்பள உயர்வை வழங்கமுடியாது எனவும் கேட்கின்றனர். எடுத்த எடுப்பிலேயே எல்லாவற்றையும் செய்துவிடமுடியாது. அதற்கென நடைமுறைகள் உள்ளன.

இதன் முதற்கட்ட நடவடிக்கையாகத்தான் சம்பள நிர்ணய சபை ஊடாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கு எதிராக மேன்முறையிடு செய்யும் உரிமையும், நீதிமன்றம் செல்லும் உரிமைகளும் கம்பனிகளுக்கு இருக்கின்றன. ஆனால் 5 ஆம் திகதி நல்ல முடிவு வரும் என நம்புகின்றோம்.

தொழிற்சங்க ரீதியில் தொழிலாளர்களின் பல பிரச்சினைகளுக்கு நாம் தீர்வுகளை பெற்றுக்கொடுத்துள்ளோம். பெற்றுக்கொடுத்தும் வருகின்றோம். மற்றைய தரப்பினரும் தொழிற்சங்கம் நடத்துகின்றனர்.

அவர்கள் விமர்சனங்களை முன்வைப்பதையே பணியாக முன்னெடுக்கின்றனர். நாம் பொறுமையாக இருக்கின்றோம். அதற்கு பயம் காரணம் அல்ல. நீதிமன்ற தீர்ப்புவரும்வரை காத்திருக்கின்றோம்.

சிலவேளை நீதிமன்ற தீர்ப்பு தொழிலாளர்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், அடுத்து என்ன செய்வது என்பதும் தெரியும். பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும். இது தொடர்பில் தொழில் அமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.” என்றார்.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம் – விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நிதியத்தினால் புலமைப் பரிசில்கள் வழங்கப்படுவதற்காக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இந்தப் புலமைப் பரிசில்கள் க.பொ.த உயர்தரம், பட்டப்படிப்புக் கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்பக் கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில்நுட்பக் கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானவையாகும் என்று கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

க.பொ.த சாதாரண தரத்தில் (குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன்) சித்தியடைந்த அல்லது உயர்தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் இந்தப் புலமைப் பரிசில்களுக்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதியானவர்கள். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பிறப்புச் சான்றிதழ், க.பொ.த சாதாரண தரம் அல்லது உயர் தரப்பரீட்சைப் பெறுபேற்றுத்தாள்கள், பெற்றோர்களது சமீபத்தைய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் பிரதிகளுடன் இணைந்ததாக அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.

விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். விண்ணப்பப் படிவங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம், 36-38 காலி வீதி, கொழும்பு 3 மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயம், இல. 31, ரஜபிகில்ல மாவத்தை, கண்டி ஆகிய இடங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், மே/பா, இந்திய உயர் ஸ்தானிகராலயம், த.பெ எண் 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு இம் மாதம் 30 ஆம் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் கிடைக்கும் வகையில் அனுப்பப்படுதல் வேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் மேலும் தெரிவித்துள்ளது.

ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக ரி‌ஷப் பண்ட் தெரிவு !

ஐ.பி.எல்.போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக இருப்பவர் ஸ்ரேயாஷ் அய்யர். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது அவருக்கு இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஸ்ரேயாஷ் அய்யரால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே ஐ.பி.எல். போட்டியில் டெல்லி அணிக்கு யார் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலக்கு காப்பாளரான இளம் வீரர் ரி‌ஷப் பண்ட் டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்டீவ் சுமித், அஸ்வின், ரகானே போன்ற மூத்த வீரர்கள் இருக்கும் போது டெல்லி அணி நிர்வாகம் ரி‌ஷப் பண்ட் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு தலைவர் பொறுப்பை வழங்கி உள்ளது.

இந்தநிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தலைவர் பதவிக்கு ரி‌ஷப் பண்ட் தகுதியானவர் என்று ஸ்ரேயாஷ் அய்யர் கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் பேசிய போது ,

ரி‌ஷப்பண்ட் சிறந்த மனிதர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. காயம் காரணமாக என்னால் ஐ.பி.எல். போட்டியில் ஆட முடியவில்லை. இதனால் டெல்லி அணிக்கு தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதில் ரி‌ஷப்பண்ட் சிறந்தவர். தலைவர் பதவிக்கு தகுதியானவர். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு ஸ்ரேயாஷ் அய்யர் கூறி உள்ளார்.

ஸ்ரேயாஷ் தலைமையில் டெல்லி அணி கடந்த ஐ.பி.எல். போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டெல்லி அணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ரி‌ஷப்பண்டுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும் சி.எஸ்.கே. அணியை சேர்ந்தவருமான சுரேஷ் ரெய்னா பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த சீசனுக்கு டெல்லி அணியின் தலைவராகக நியமிக்கப்பட்டுள்ள ரி‌ஷப்பண்டுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அவர் சிறந்த தலைவராக உருவாகுவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தனது சிறப்பான பணி மூலம் டெல்லி அணியை அவர் பெருமைப்படுத்துவார்.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை !

ஸ்கேன் மற்றும் ஆலோசகர் மதிப்பாய்வைத் தொடர்ந்து இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது கையில் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவுள்ளார்.

ஜனவரி மாதம் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு சற்று முன்பு தனது வீட்டில் துப்பரவு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்ச்சருக்கு கையில் வெட்டு ஏற்பட்டதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

குறித்த காயம் இந்தியா அணிக்கு எதிரான தொடரில் பிரகாசிக்க தடையாக இருந்த நிலையில் ஆர்ச்சர் குணமடைய இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது என இங்கிலாந்து கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

“அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் மோதல் ஏதுமின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும்.” – நாசா

அடுத்த 100 ஆண்டுகளுக்கு விண்கல் மோதல் ஏதுமின்றி பூமி பாதுகாப்பாக இருக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக Apophis எனும் விண்கல் பூமியை அடுத்த 100 ஆண்டுகளுக்கு தாக்காது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2004 ஆம் ஆண்டு இந்த விண்கல் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

Apophis எனும் விண்கல் பூமிக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடியது என நாசா விஞ்ஞானிகள் கருதியிருந்தனர்.

2029 மற்றும் 2036 ஆம் ஆண்டுகளில் இரண்டு விண்கற்கள் பூமியைத் தாக்கக்கூடும் எனவும் விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டிருந்தது. பின்னர் அவை தடம் மாறிச் சென்றதால், அவற்றினால் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது என நாசா விஞ்ஞானிகள் கூறியிருந்தனர்.

எனினும், Apophis எனும் விண்கல் 2068 ஆம் ஆண்டிற்குள் பூமியை நோக்கி நெருங்கி வரும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது 340 மீட்டர் விட்டம் கொண்ட Apophis எனும் விண்கல்லின் திசை மாறும் நிலையிலுள்ளதால், அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு பூமிக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்” – அமெரிக்கா வேண்டுகோள் !

“இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை மதிக்க வேண்டும்” என அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் முதன்மை துணை செய்தித் தொடர்பாளர் ஜலினா போர்ட்டர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மனித உரிமைகளை ஊக்குவிப்பதற்கான மனித உரிமை பேரவை தீர்மானமொன்றை நிறைவேற்றியுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றே மனித உரிமைகளை மதிப்பதிலும் எதிர்கால அமைதி மற்றும் நல்லிணக்கத்துக்கு அர்ப்பணிப்பதிலுமே இலங்கையின் நீண்டகால பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும் தங்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இன மற்றும் மத சிறுபான்மையினத்தவர்களின் உரிமைகளை பாதுகாக்குமாறு இலங்கையை கேட்டுக்கொள்வதற்காகவே அமெரிக்கா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சிவில் சமூக செயற்பாட்டாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும் கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு தீர்வை காண்பதற்கான நம்பகத்தன்மை மிக்க அர்த்தபூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறும் இலங்கையை கேட்டுக்கொள்வதற்காகவே அமெரிக்கா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியது என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அலுவலகத்தின் அறிக்கையிடும் தேவைகளை தீர்மானம் விஸ்தரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், எதிர்கால பொறுப்புக்கூறும் நடவடிக்கைகளுக்காக ஆதாரங்களை சேகரிப்பதற்கான ஆணையையும் வழங்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி – வெற்றியுடன் ஆரம்பித்தது இந்தியா !

இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதன்படி துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் தவான் 98 ஓட்டங்களையும் , விராட் கோலி 56 ஓட்டங்களையும் , கே.எல் ராகுல் 62 ஓட்டங்களையும் , குருணால் பாண்ட்யா 58 ஓட்டங்களையும் பெற இந்தியா 50 பந்துப்பரிமாற்றங்களில் 5 இலக்கு இழப்பிற்கு 317 ஓட்டங்களை குவித்தது.
பின்னர் 318 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் இந்திய அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. பேர்ஸ்டோவ் 40 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ஜேசன் ராய் 46 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
ஜேசன் ராய்- பேர்ஸ்டோவ் ஜோடி முதல் இலக்குக்கு 135 ஓட்டங்கள் குவித்தது. அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் 1 ஓட்டத்துடன் ஏமாற்றம் அளித்தார்.
இரண்டு இலக்கு வீழ்ந்தாலும் மறுமுனையில் பேர்ஸ்டோவ் வாணவேடிக்கை நிகழ்த்தினார். அவர் 94 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் இங்கிலாந்து இலக்குகள் மளமளவென சரிந்தது. மோர்கன் 22 ஓட்டங்களிலும், பட்லர் 2 ஓட்டங்களிலும், சாம் பில்லிங்ஸ் 18 ஓட்டங்களிலும், மொயீன் அலி 30 ஓட்டங்களிலும், சாம் கர்ரன் 12 ஓட்டங்களிலும் வெளியேற இங்கிலாந்து 42.1 பந்துப்பரிமாற்றங்களில் 251 ஓட்டங்களுக்குள் சுருண்டது. இதனால் இந்தியா 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்திய அணி தரப்பில் பிரசித் கிருஷ்ணா 8.1 பந்துப்பரிமாற்றங்களில் 54 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து சாதித்த பெண் !

தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்து தெலுங்கானாவைச் சேர்ந்த 48 வயதான ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

தலைமன்னாரில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி 10 நிமிடத்தில் அவரது நீந்த ஆரம்பித்து மாலை 5 மணி 50 நிமிடங்களுக்கு நிறைவு செய்தார். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள மணல் திட்டுக்களான ராமர் பாலமும் பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து பிரிக்கிறது.

தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த, அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்களும் நிறைந்த கடற்பகுதி இது. பாக் ஜலசந்தி கடற்பகுதியை இலங்கை வல்வெட்டித்துறையை சேர்ந்த நவரத்தினசாமி என்ற தமிழர் முதன் முதலாக 1954 ஆம் ஆண்டு நீந்திக் கடந்தார். தொடர்ந்து 1966 ஆம் ஆண்டு கொல்கத்தாவை சேர்ந்த மிகிர்சென் என்பவர் பாக் ஜலசந்தியை தலை மன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரை நீந்திக் கடந்தார்.

வல்வெட்டித்துறையை சேர்ந்த நீச்சல் வீரரான குமார் ஆனந்தன் 1971 ஆம் ஆண்டு தலைமன்னாரில் இருந்து தனுஸ் கோடிக்கு நீந்திச் சென்று, மீண்டும் தலைமன்னாருக்கு 51 மணி நேரத்தில் நீந்தி வந்தடைந்து சாதனை படைத்தார்.

இந்நிலையில், பல்வேறு நீச்சல் போட்டிகளில் சாதனை படைத்த தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த சியாமளா கோலி வயது-48, தலைமன்னாரில் இருந்து தனுஸ்கோடி வரையிலான சுமார் 30 கி.மீ. தூரம் கொண்ட பாக் ஜலசந்தி கடற்பகுதியை நீந்தி சாதனை படைத்தார்.

சியாமளா கோலி, தலைமன்னாரிலிருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணி 50 நிமிடங்களில் சுமார் 13 மணி 40 நிமிட நேரத்தில் சென்றடைந்தார்.

இதன் மூலம் பாக் ஜலசந்தியை நீந்தி கடந்த 13ஆவது நீச்சல் வீரராகவும் உலகளவில் இரண்டாவது வீராங்கனையாகவும், இந்திய அளவில் முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார்.

இது தொடர்பில் சியாமளா கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த ஆண்டு பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடப்பதற்கு இந்திய-இலங்கை அரசுகளிடம் அனுமதி கிடைத்தது. ஆனால் கெரோனா பரவல் காரணத்தினால் முடியாமல் போனது.

பாக் ஜலசந்தியை ஒரு பெண்ணாக நான் நீந்தி கடந்ததன் மூலம் பெண்களால் அனைத்து சாதனைகளையும், உயர்ந்த இலக்குகளையும் அடைவதற்கு நம்பிக்கை அளிக்கக் கூடியதாகவும் இருக்கும் என தலைமன்னார் முதல் தனுஸ்கோடி வரையிலான கடலை நீந்தி கடந்த சியாமளா கோலி தெரிவித்தார்.

“ஐ.நா மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் காணப்படுகின்றது” – பிரிட்டனின் நாடாளுமன்றில் சிபோன் மக்டொனாக் !

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை குறித்த தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் காணப்படுகின்றது என பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனாக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஸ் நாடாளுமன்றத்தில்  இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பான விவாதத்தின் மீது கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானம் ஏமாற்றமளிக்கும் வகையில் குறைவானதாக காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிமன்றத்திற்கு இலங்கையை பாரப்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுப்பதன் மூலம் குற்றவியல் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான பரிந்துரைகள் எவையும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டிஸ் அரசாங்கம் பாதுகாப்பு சபையில் போதிய ஆதரவு கிடைக்காது என தெரிவித்ததை என்னால் நம்பவே முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.