செய்திகள்
செய்திகள்
செய்திகள்
சீனாவில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், வெள்ள பாதிப்பில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சீனாவின் ஹென்னான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கனமழை காரணமாக கயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஒரு வருடத்தில் பெய்யும் மழை, மூன்று நாட்களில் கொட்டித் தீர்த்ததால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஷெங்ஷெள நகரில் மட்டும் மூன்று நாட்களில் 62 சென்டி மீட்டர் மழை பதிவானது.
இந்நிலையில், மழை பாதிப்பில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33ஐக் கடந்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் மூன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்கா மற்றும் மதினாவில் இராணுவத்தில் உள்ள பெண்கள் பாதுகாவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சவுதி அரேபியாவின் இளவரசர் முஹம்மது பின் சல்மான். இவர், தனது நாட்டில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளார். பழமைவாதத்திலிருந்து விடுபடுவதன் மூலம் சர்வதேச முதலீட்டை ஈர்க்கலாம் என அவர் நம்புகிறார். அதனால், விஷன் 2030 என்ற பெயரில் அவர் அவ்வப்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
பெண்களுக்கு கார் ஓட்ட அனுமதி, 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தங்களின் பாதுகாவலர்கள் அனுமதியில்லாமல் பயணம் செய்ய அனுமதி, சொத்துரிமையில் கூடுதல் கட்டுப்பாடு, இராணுவத்தில் பெண் படை போன்றவற்றை அறிவித்தார்.
அந்த வரிசையில் மெக்கா, மெதினா புனிதத் தலங்களின் பாதுகாப்புப் பணியில் பெண் வீராங்கனைகளைப் பணியமர்த்தும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளார்.
மெக்காவின் முதல் பெண் பாதுகாப்பு வீரர் என்ற அந்தஸ்த்தைப் பெற்றுள்ளார் மோனா என்ற இளம் பெண். ராணுவத்தின் காக்கி நிற சீருடை தான் அவர் அணிந்திருந்தார். ஆனால், அவரின் மேல்சட்டை இடுப்பு அளவுக்கு நீண்டிருந்தது, சற்றே தளர்வான கால்சட்டை, கறுப்பு தொப்பி, முகத்தை மறைக்க துணி என்று மோனா காட்சியளித்தார்.
மோனா அளித்தப் பேட்டியில், “நான் எனது தந்தையின் பாதையில் பயணிக்கிறேன். இன்று மிகவும் புனிதமான மெக்கா பெரு மசூதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளேன். புனித யாத்திரிகர்களுக்கு சேவை செய்வது மாண்புமிகு பணி” என்று கூறினார்.
சுட்டுக் கொல்லப்பட்ட ஜனாதிபதி ஜோவனெல் மொய்ஸ் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஹெய்ட்டி நாட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென்ரி பதவியேற்றுள்ளார். எனினும், அந்நாட்களில் இடைக்கால பிரதமராகவிருந்த கிளாட் ஜோசப் உடன் காணப்பட்ட அரசியல் மோதலில் ஹென்ரி அப்பதவியை நிராகரித்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் கிளாட் ஜோசப் தனது பதவியை இராஜினாமா செய்ததை அடுத்து ஹெய்ட்டின் புதிய பிரதமராக ஏரியல் ஹென் இன்று (புதன்கிழமை) பதவியேற்றுள்ளார்.
ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ், கடந்த 07ஆம் திகதி அடையாளம் தெரியாத குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து வருகிறது. இதில் சமீபத்திய மாறுபாடாக டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதை கட்டுப்படுத்தும் பணிகளில் உலக நாடுகள் முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கும் நிலையில், டெல்டா மாறுபாட்டை விட அதிக வீரியம் மற்றும் ஆபத்து நிறைந்த மற்றொரு மாறுபாடு விரைவில் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் கேப்ரியேசஸ், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் 138-வது அமர்வில் பேசும்போது இது தொடர்பாக கூறியதாவது:-
இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமானது, அனைவருக்கும் சமமான அளவுக்கு தடுப்பூசி கிடைக்காதது ஆகும். குறிப்பாக குறைந்த வருவாய் கொண்ட நாடுகளில் வெறும் 1 சதவீத மக்களே குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றிருக்கிறார்கள். ஆனால் வளர்ந்த நாடுகளில் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
சோதனைகள் மற்றும் சிகிச்சைகள் உட்பட தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசிகள் மற்றும் பிற வழிகளைப் பகிர்ந்து கொள்வதில் தற்போதைய உலகளாவிய அநீதி ‘‘சமூக மற்றும் பொருளாதார கொந்தளிப்புக்கு’’ மட்டுமின்றி, வைரஸ் மேலும் பரவுவதற்கும் வழிவகுக்கிறது. இதில் ஒரு திருப்புமுனையை காண வேண்டுமென்றால், உலக சுகாதார அமைப்பு, சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை இதற்கு முன்னர் கோடிட்டுக்காட்டிய பல்வேறு இலக்குகளை அடைய வேண்டியது முக்கியம் ஆகும்.
இதில் முக்கியமாக ஒவ்வொரு நாட்டிலும் வருகிற செப்டம்பர் மாதத்துக்குள் குறைந்தபட்சம் 10 சதவீத மக்கள் தொகைக்காவது தடுப்பூசி சென்றடைந்திருக்க வேண்டும். ஆண்டிறுதிக்குள் 40 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு மத்திய பகுதிக்குள் 70 சதவீதமாக உயர்ந்திருக்க வேண்டும். ” இவ்வாறு டெட்ரோஸ் கேப்ரியேசஸ் கூறினார்.
வடக்கின் பிரமதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன்பந்துலசேன அவர்கள் ஜனாதிபதியால் நேற்று நியமிக்கப்பட்டார். அந்தவகையில், வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன்பந்துலசேன அவர்களே வடக்கின் பிரமதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்றுச் சென்ற நிலையில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்டது. வெற்றிடமான இப் பதவிக்கு வடக்கைச் சேர்ந்த பலரும் போட்டியிட்டனர். இந்நிலையிலேயே வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றும் எஸ்.எம்.சமன்பந்துலசேன பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பில் தமிழ்தேசிய கட்சிகளினுடைய உறுப்பினர்கள் இது தொடர்பில் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். தமிழ் மாகாணமான வடக்கில் பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவரை நியமித்துள்ளமை இலங்கை அரசாங்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தனது கடுமையான கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
“ஒரு சிங்களவரை பிரதம செயலாளராக நியமனம் செய்வதென்பது நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயமாகும். இன்னும் சொல்லப்போனால் அவருக்கு தமிழை எழுதவோ வாசிக்கவோ தெரியாத சூழ்நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள மக்கள் அவருக்கு சிங்களத்திலோ ஆங்கிலத்திலோ கடிதம் எழுதவேண்டிய சூழ்நிலையும் இல்லாவிட்டால் அவர் உடனடியாக அதை வாசித்து அறிந்து கொள்ளமுடியுமா என்ற பல்வேறான பிரச்சினைகளை இந்த நியமனம் என்பது உருவாக்கியிருக்கின்றது.” என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இவர்கள் அதிருப்தி வெளியிட்டிருக்கும் எஸ்.எம்.சமன்பந்துலசேன வவுனியாவின் அரச அதிபராக கடமையாற்றிய போது எந்த எதிர்ப்பையும் இந்த தமிழ்தேசியவாதிகள் வெளியிடவில்லை. ஆனால் யாழ்ப்பாணமும் உள்ளடங்கியதாக ஏதாவது பிரச்சினை என்றால் துள்ளிக்குதிக்கிறார்கள். ஏன் வவுனியாவும் இவர்கள் கூறிய தமிழ்தேசிய எல்லைக்குள் தானே வருகிறது. இவர்கள் எஸ்.எம்.சமன்பந்துலசேன வடமாகாணத்துக்குரிய பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டதால் கோவப்படுகிறார்களா..? அல்லது யாழ்ப்பாணத்துக்குள்ளும் சிங்கள ஆதிக்கம் வந்துவிடுமோ என்பதால் கோபப்படுகிறார்களா என தெரியவில்லை.
இங்கு மாற்றப்படவேண்டியது இந்த மனோநிலைதான். யாழ்ப்பாணத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் தான் இலங்கை வாழ் தமிழர்கள் எல்லோருக்கும் பிரச்சினை என போல காட்டி கூக்குரலிடுவதை முதலில் நிறுத்துங்கள். உண்மையிலேயே பிரச்சினை என்றால் அந்த பிரச்சினை ஒரு பகுதிக்கு வரும்போதே எதிர்த்திருக்க வேண்டும். அதை விடுத்து உங்களுடைய தலைக்கு பிரச்சினை வந்தால் மட்டும் தான் எதிர்ப்போம் என்றால் என்ன மாதிரியான மனோநிலை என்று தான் விளங்கவில்லை.
உண்மையான மக்கள் தலைவர்கள் என்றால் முதலில் மக்களுக்கான அரசியலை இதய சுத்தியுடன் மேற்கொள்ள ஆரம்பியுங்கள். முதலில் ஒரு பகுதியை மையப்படுத்திய அரசியல் நீரோட்டத்தில் இருந்து விலகி மக்களுக்கான தேசிய நீரோட்டத்தில் இயங்க முன்வாருங்கள். அப்படி இயங்கியாவது ஏதேனும் மக்களுக்காக ஆக்கபூர்வமாக செய்யுங்கள்.
பிரித்தானியாவில் சுதந்திர நாள்! வறுமைப்பட்ட நாடுகளில் மரண ஓலம்!
அமெரிக்க – பிரித்தானிய கூட்டு வக்சீன் உற்பத்தியை தடுக்கின்றது!!!
தனது நாட்டு மக்களுக்கு வக்சீனை வழங்கி கோவிட்-19 தாக்கத்தை கட்டுப்படுத்தி உள்ள அமெரிக்க – பிரித்தானியா அரசுகள் வக்சீனை ஏனைய நாடுகள் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தை சிறிது காலத்திற்கு விட்டுக்கொடுப்பதற்கு மறுத்து வருகின்றது. அதனால் உலகில் பல்லாயிரம் கோவிட் மரணங்கள் சம்பவிக்க உள்ளது. இன்று முற்றிலும் களியாட்டங்களுக்கு நாட்டைத் திறந்துவிட்டுள்ள பிரித்தானிய அரசு உலகின் பல்வேறு பாகங்களிலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் மரணமாவதைப் பற்றி எவ்வித கரிசனையும் கொள்ளவில்லை.
நுனிநாக்கில் மனித உரிமை பேசி தங்களை மனித உரிமைகளின் ஜனநாயகத்தின் காவலர்களாகக் காட்டிக்கொள்ளும் அமெரிக்க – பிரித்தானிய நாடுகள் கோவிட் வக்சீன் உரிமத்தை முற்றிலும் லாபநோக்கத்திற்காக தனியார் நிறுவனங்களிடம் கையளித்து உற்பத்தியை தடுப்பதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மரணங்களுக்கு வழிகோலுகின்றனர். எவ்வித மனிநேயமும் அற்று செயற்படுகின்ற அமெரிக்க – பிரித்தானிய கூட்டு எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கு வழிகாட்டவோ தலைமையேற்கவோ தகுதயற்றவையாகி வருகின்றன.
பிரித்தானியா ப்ரீடம்டே – சுதந்திரநாள் என்று அறிவிப்பதற்கு 48 மணிநேரங்களிற்கு முன்னரே சுகாதார அமைச்சர், நிதி அமைச்சர், பிரதம மந்திரி மூவருமே தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியேற்பட்டு விட்டது. தற்போதைய டெல்டா வேரியன் மிகவேகமாகப் பரவி வருகின்றது. ஆனால் நாட்டில் வயது வந்தவர்களுக்கு பெரும்பாலும் வக்சீன் போடப்பட்டு இருப்பதால் பாதிப்பு வீதம் மிக மிகக் குறைவான நிலையிலேயே காணப்படுகிறது. மேலும் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் வரும் இரு மாதங்களுக்குள் வக்சீன் போடப்பட்டு விடும் என பிரதமர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். இந்த வக்சீன் காரணமாக கோவிட் பாதிப்பும் மரணங்களும் பெரும்பாலும் முற்றாக தடுக்கப்படுகின்ற நிலைக்கு மேற்கு நாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் சனத்தொகை அதிகமான வறிய மற்றும் வளர்ந்துவரும் நாடுகளில் கோவிட் பாதிப்பும் மரணமும் அதிகரித்து வருகின்றது.
இதனைத் தடுப்பதற்கு தேவையான வக்சீனை உற்பத்தி செய்வதற்கு வக்சீன் உற்பத்தி உரிமத்தை அமெரிக்க – பிரித்தானிய அரசுகள் தற்காலிகமாகவேனும் வழங்கினால் உற்பத்தியயை வேறுநாடுகளிலும் வக்சீன் உற்பத்தி செய்து கோவிட் பாதிப்பையும் மரணத்தையும் கட்டுப்படுத்தலாம். வறிய நாடுகளில் ஒரு வீதமான சன்தொகைக்கு கூட வக்சீன் போடப்படவில்லை. அமெரிக்க – பிரித்தானிய அரசுகளின் சுயநலமிக்க முற்றிலும் லாபத்தையீட்டும் நிறுவனங்களுக்கு சாதகமாகச் செயற்படுவது மனித குலத்தை பெரும் அவலத்திற்குள் தள்ளவுள்ளது.

செய்தி 1- பாலியல் தேவைக்காக 15 வயது சிறுமி விற்பனை
மிகிந்தலை பிரதேச சபை உப தவிசாளர் உள்ளிட்ட மூவர் கைது.
செய்தி 2 – ஆலய முன்றலில் வாள்வெட்டு – வலி மேற்குப் பிரதேச சபை உறுப்பினர் கைது
செய்தி 3 – சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் தற்கொலை!
இவையெல்லாம் கடந்த சில வாரங்களில் கண்ணில் பட்ட செய்திகள். இவற்றில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள். அதிலும் இறுதி இரண்டு செய்திகளும் யாழ்ப்பாண மாவட்டத்தோடு தொடர்புபட்டவை.
பொதுவாகவே மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதில் மக்கள் மிகுந்த அசமந்தப் போக்குடன் செயற்படுவது வழமை. அதிலும் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளைத் தெரிவதில் அது மிகவும் அதிகம்.
உள்ளூராட்சி சபைகளின் முக்கியத்துவம் அவற்றின் வகிபங்கு தொடர்பில் அவர்கள் கரிசனை கொள்வதில்லை. அவை தொடர்பில் அவர்கள் அறிந்துள்ளனரா என்பதும் கேள்விக்குரிய விடயமே.
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மக்கள் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் போது வேட்பாளருடைய தகமை, திறமை, அவர் தன்னுடைய சமூகத்துக்கு என்ன செய்வார், சமூகப் பொறுப்புள்ளவரா, தனிப்பட்ட ரீதியில் சிறந்த நடத்தையைக் கொண்டிருப்பவரா என்று எல்லாம் யோசிப்பதில்லை.
மாறாக அவர் தெரிந்தவரா, சொந்தக்காரரா, எந்த சமூகத்தைச் சேர்ந்தவர், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர், வேலை எடுத்துத் தருவாரா, செலவு இல்லாமல் வேலை முடித்துத் தருவாரா என்று சிந்தித்தே பெரும்பாலான மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்கின்றனர்.
உள்ளூராட்சி சபைகள் நாட்டின் மிக அடிப்படைக் கட்டமைப்புகள். மக்களுடன் நேரடித் தொடர்பைக் கொண்டிருப்பவர்கள் இவற்றின் பிரதிநிதிகளே. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள், சமூக அபிவிருத்தி தொடக்கம் கழிவகற்றல் முகாமைத்துவம் வரை நாட்டில் அடிப்படை வசதிகளுடன் தொடர்புபட்டு பணியாற்றுபவர்கள் இவர்களே. பிரதேசத்தின் சகல விதமான அபிவிருத்திகள், தேவைகள் என்பவற்றைக் கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்குரிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுத்த வேண்டியவர்கள் இவர்களே.
உள்ளூராட்சி சபைகள் மக்கள் நலன் சார்ந்து உரிய வகையில் செயற்பட்டால் மட்டுமே குறித்த பிரதேசம் வளம் பெற முடியும். ஆனால் எமது சமூகத்தில் மட்டுமல்ல இலங்கையிலும் உள்ளூராட்சி சபைகளை மக்கள் தெரிவு செய்வதில் காட்டிய அசமந்தப் போக்கு ஒட்டுமொத்த சமூகத்தின், நாட்டின் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ளது.
ஒரு மக்கள் பிரதிநிதி தன்னுடைய தனிப்பட்ட வாழ்வில் உள்ள பிரச்சினையை எதிர்கொள்ள முடியாது உயிரை மாய்த்துக்கொள்கின்றார் என்றால் அவரால் எவ்வாறு சமூகத்தின் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண முடியும்? இங்கு சுட்டிக் காட்ட வேண்டிய மற்றொரு விடயம் ஒரு வருடத்துக்கு முன்பும் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அவருடைய மரணமும் தற்கொலை என்றே தெரிவிக்கப்பட்டது.
ஒருவரால் தன் ஊரில் ஒரு கோவில் பிரச்சினையைக் கூட சுமூகமாகக் கையாள முடியாமல் வாளெடுத்து வெட்டப் போகிறார் எனில் அவரால் சமூகத்தில் நிநோக்கற்றகழும் வன்முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்? அதற்குப் பதிலாக இவர்களே வன்முறைகளைத் தூண்டுவோராக உள்ளனர். தம்முடைய மனவெழுச்சிகளையே கையாள முடியாத கையறு நிலையில் உள்ளவர்கள் எப்படி சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த தகுதி உடையவர்களாக இருக்க முடியும்? இவ்வாறானவர்களைத் தெரிவு செய்தது மக்களின் தவறல்லவா?
நாட்டில் மீண்டுமொரு தேர்தலுக்கான ஆயத்தங்கள் திரைமறைவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மக்களும் தம் மாகாண சநோக்கற்றபைகளுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு தயாராக வேண்டிய காலம் நெருங்கியுள்ளது. வெறுமனே தேர்தல் கால பிரச்சாரங்களை மட்டும் கொண்டு வாக்களிக்காமல், நீண்ட கால அவதானத்தின் அடிப்படையில் சரியானவர்களைத் தெரிவு செய்ய மக்கள் முன்வரவேண்டும்.









