தலிபான்கள் நடத்திய தாக்குதலில் இறந்த டேனிஷ் சித்திக் – ஐ.நா இரங்கல் – மன்னிப்புக்கேட்ட தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் காந்தகார் பிராந்தியத்தில் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஸ்பின் போல்டாக் பகுதியை தலிபான்களிடம் இருந்து மீட்பதற்காக அரசு படைகள் கடும் சண்டையை நடத்தி வருகின்றன.
இரு தரப்புக்கு இடையிலான இந்த மோதல் குறித்த செய்திகள் மற்றும் படங்களை சேகரிக்கும் பணியில், ராய்ட்டர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றி வந்த இந்திய புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக்கி ஈடுபட்டிருந்தார். அப்போது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் சிக்கி டேனிஷ் சித்திக் மற்றும் ஆப்கன் அதிகாரி ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
40 வயதை கடந்துள்ள டேனிஷ் சித்திக் மும்பையைச் சேர்ந்தவர். ஊடகத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் புலிட்சர் விருதை கடந்த 2018-ம் ஆண்டு அவர் பெற்றிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புகைப்பட பத்திரிகையாளர் சித்திக்கின் மரணம் ஆப்கானிஸ்தானில் ஊடகங்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களை வெளிக்காட்டியுள்ளது. ஆப்கானிஸ்தானில் பணியாற்றி வரும் ஊடகத்தினர் தொடர்ந்து அச்சுறுத்தல்களுக்கு ஆளாகி வருகின்றனர். தலிபான்களின் தாக்குதலால் பலியான சித்திக் மறைவிற்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது.
மேலும், ஐ.நா. சபை பொது செயலாளர் ஆண்டோனியோ குட்டரஸ் டேனிஷ் மறைவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது தாலிபன்கள் தரப்பிலிருந்து டேனிஷின் மரணம் தொடர்பாக அதிகாரபூர்வ இரங்கல் வெளியாகியிருக்கிறது. டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டது குறித்து செய்தி நிறுவனங்களுக்குப் பேட்டியளித்துள்ள தாலிபன் செய்தி தொடர்பாளர் சபிமுல்லா முஜாகிதீன், “புகைப்படப் செய்தியாளர் யாருடைய தாக்குதலின்போது துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார் என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எப்படி இறந்தார் என்பதும் எங்களுக்குத் தெரியாது. டேனிஷ் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. எங்களை மன்னித்துவிடுங்கள். போர்ப் பகுதிகளில் நுழையும் பத்திரிகையாளர்கள் எங்களிடம் அதனைத் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த தனிப்பட்ட நபருக்கான பாதுகாப்பில் நாங்கள் கவனம்கொள்ள இயலும். முறையாக அறிவிக்காமல் போர் பகுதிகளுக்கு வருவதால் தான் இது போன்ற சம்பவங்கள் நடந்து விடுகிறது” என்று கூறியிருக்கிறார்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *