செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“ஆப்கான் இராணுவமே நாட்டை பாதுகாக்காத போது அமெரிக்கா ஏன் ஆப்கானை காக்க வேண்டும்.” – ஜோபைடன் காட்டம் !

ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் மீண்டும் கைப்பற்றுவதற்கு அந்நாட்டு அரசும், அந்நாட்டுப் படைகளுமே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள்  கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ஆப்கனில் நடந்த ஆயுதப் போரில் தலிபான்கள்  வென்றுள்ளதாக ஆப்கன் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஆப்கன் ஜனாதிபதி  அஷ்ரப் கானி ஆப்கன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவுக்கான தூதரக அதிகாரிகளும் வெளியேறியுள்ளனர்.

இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் கூறியதாவது:

”ஆப்கனில் நாட்டைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்கப் படைகள் அங்கு செல்லவில்லை. அது எங்கள் வேலையும் இல்லை. அல்கொய்தா அமைப்பை அழிக்கவும், ஒசாமா பின்லேடனைப் பிடிக்கவும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இறங்கின. படைகளை எப்போது வாபஸ் வாங்கினாலும் இதுதான் நடந்திருக்கும்.

ஆப்கன் அரசும், படைகளும் தலிபான்களை முழு மூச்சுடன் எதிர்க்கவில்லை. அவர்களே எதிர்க்காதபோது அமெரிக்கா ஏன் அவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்? ஆப்கன் படைகளே தங்கள் நாட்டைக் காக்காதபோது, அப்படி ஒரு போரை நடத்த வேண்டிய அவசியம் அமெரிக்கப் படைகளுக்குக் கிடையாது.

ஆப்கனில் நடக்கும் விஷயங்களைப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்” இவ்வாறு அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்  தெரிவித்தார்.

“பொது மன்னிப்பு வழங்குகிறோம்; அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்புங்கள்.” – தலிபான்கள் அறிக்கை !

பொது மன்னிப்பு வழங்குகிறோம்; அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான்களுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வந்தது. இதில் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளைத் தலிபான்கள்  கைப்பற்றிய நிலையில் தலைநகர் காபூலையும் கைப்பற்றினர்.

தற்போது தலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன்காரணமாக ஆப்கன் மக்களிடத்தில் பதற்றம் நிலவுகிறது. இந்த நிலையில் தலிபான்கள் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

தலிபான்கள் வெளியிட்ட அறிக்கையில், “அனைத்து அரசு ஊழியர்களுக்கு பொதுமன்னிப்புவழங்கப்படுகிறது. உங்களது வழக்கமான வாழ்வை நம்பிக்கையுடன் தொடங்குங்கள்.அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலிபான்கள் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாகின், ”மக்களின் உயிரும், சொத்துகளும் பாதுகாப்பாக இருக்கும். ஆப்கானிஸ்தான் மக்களைப் பழிவாங்க மாட்டோம். நாங்கள் மக்களின் சேவகர்கள். எங்களது தலைமை காபூலில் தொந்தரவுகள் ஏற்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில் தாலிபான்கள் தங்களது ஆட்சியில் பழைய இஸ்லாமிய சட்டங்களை மீண்டும் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. தலிபான்கள் 90-களில் அமுல்படுத்திய கடுமையான சட்டங்களை மீண்டும் கடைப்பிடிப்பார்களா என மக்கள் அச்சம் கொண்டுள்ளனர்.

10 வயதுக்குமேல் பெண் குழந்தைகள் பள்ளி சென்று படிக்கக் கூடாது, அவர்கள் தங்கள் முகம் மற்றும் உடலை முழுவதுமாக மூடும் ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும், திருடக் கூடாது, குற்றவாளிகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் தூக்கு தண்டனை நிறைவேற்றுதல், பிரம்படி கொடுத்தால் உள்ளிட்ட பல இஸ்லாமிய சட்டங்களை தாலிபான்கள் அமுல்படுத்தலாம் என்ற அச்சத்தில் மக்கள்  உள்ளனர்.

நான்கு கார்களில் பணத்தை கட்டுக்காட்டாக திணித்துக்கொண்டு தப்பியோடிய ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி !

ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரஃப் கனி கட்டுக்கட்டாக பணம், நான்கு கார்கள், ஒரு ஹெலிகாப்டர் உடன் ஓமனுக்கு சென்று தஞ்சம் அடைந்து விட்டார் என காபுலில் உள்ள ரஷ்ய தூதரக அதிகாரிகள்  தகவல் அளித்துள்ளனர்.

முன்னதாக தலைநகர் காபூலின் அனைத்து பகுதிகளையும் தாலிபான்கள் கட்டுப்படுத்த துவங்கியபோது வன்முறையையும் போராட்டத்தையும் தவிர்க்கத் தான் பதவி விலகுவதாக அறிவித்த அஷ்ரப் கனி அண்டை நாடான தஜிகிஸ்தானில் குடி ஏற முயன்றார். ஆனால் அவரை நாட்டுக்குள் அனுமதிக்க அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்தது.

இதனை அடுத்து அவர் நான்கு கார்களில் கட்டுக்கட்டாக பணத்தை அடைத்து திணித்து அதுபோதாமல் ஹெலிகாப்டர் ஒன்று பணக்கட்டுகளை வைத்து ஓமனுக்கு சென்று குடியேறி விட்டார் என்று ரஷ்ய அதிகாரிகள் கூறினர். கனியின் அலுவலகத்தில் மேலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தாலும் அதனை எடுத்துச் செல்ல முடியாததால் பணக்கட்டுகள் ஆங்காங்கே சிதறிக்கிடந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

உயிரைக்காப்பாற்ற தப்பிச்சென்ற ஆப்கான் இராணுவ வீரர்களின் விமானத்தை சுட்டு வீழ்த்திய உஸ்பெகிஸ்தான் !

ஆப்கானிஸ்தானின் முக்கிய பகுதிகளை கைப்பற்றி முன்னேறிய தலிபான்கள், கடைசியாக தலைநகரை நேற்று கைப்பற்றினர். இதன்மூலம் ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. தலிபான்கள் காபூல் நகருக்குள் நுழையத் தொடங்கியதும் ஆப்கானிஸ்தான் படைகள் பின்வாங்கத் தொடங்கின. ராணுவ வீரர்கள் பலர் தலைமறைவாகினர்.
இந்நிலையில், உஸ்பெகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஆப்கானிஸ்தான் ராணுவ விமானத்தை, உஸ்பெகிஸ்தான் வான் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. சர்க்சான்டார்யோ மாகாணத்தில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. இத்தகவலை உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக எல்லையை கடந்து நுழைந்ததால் தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டதாக உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். ஆனால் விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர்? யாராவது உயிர்பிழைத்தார்களா? என்ற தகவலை அவர் தெரிவிக்கவில்லை.
இதேபோல் எல்லை தாண்டி வந்து மருத்துவ உதவி கேட்ட ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் 84 பேர் சிறைபிடிக்கப்பட்டதாக உஸ்பெகிஸ்தான் நேற்று கூறியது குறிப்பிடத்தக்கது.

“ஆப்கானிஸ்தானில் அடிமைத்தனத்தின் சங்கிலி உடைக்கப்பட்டுள்ளது.” – பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலை  கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர் அஷ்ரப் கனி மாளிகையில் இல்லை. அவர் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பி சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் முழு கட்டுப்பாடும் தலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியது பற்றி கருத்து தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அடிமைச் சங்கிலிகள் உடைக்கப்படுகின்றன, என்றார்.
ஆங்கில வழிக்கல்வி மற்றும் அதைத் தொடர்ந்து கலாச்சாரத்தை உள்வாங்கிக் கொள்வதைப் பற்றி பேசிய இம்ரான் கான்,
“நீங்கள் மற்ற கலாச்சாரத்தை எடுத்துக்கொண்டு உளவியல் ரீதியாக அடிபணிந்தீர்கள். அவ்வாறு நடக்கும் போது, உண்மையான அடிமைத்தனத்தை விட மோசமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். கலாச்சார அடிமைத்தனத்தின் சங்கிலிகளை தூக்கி எறிவது கடினம். ஆப்கானிஸ்தானில் இப்போது என்ன நடக்கிறது என்று பாருங்கள். அவர்கள் அடிமைத்தனத்தின் சங்கிலியை உடைத்துள்ளனர்” என்றார்.

தலிபான்களிடம் இருந்து உயிரை காப்பாற்ற ஆகாயவிமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற மூவர் பலி !

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளனர். நேற்று தலைநகரம் காபூலை  கைப்பற்றிய அவர்கள், அதிபர் மாளிகையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
நாட்டின் முழு கட்டுப்பாடும் தலிபான்கள் கையில் வந்ததையடுத்து, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் வெளியேறி வருகின்றனர். தலிபான்கள் ஆட்சியில் என்ன நடக்குமோ? என்ற பீதியில் ஏராளமான ஆப்கான் மக்களும் நாட்டை விட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் காபூல் விமான நிலையத்தை தலிபான் அமைப்பு மூடியுள்ளதுடன் விமான சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்... விமானத்தில் தொங்கிக்கொண்டு சென்ற 3  பேர் கீழே விழுந்து பலி || 3 Fall Off Plane, Some Huddled On Aircraft Wing  In Kabul
இந்நிலையில் அங்கிருந்து குறைந்த அளவிலான விமானங்களே இயக்கப்படுகின்றன. அந்த விமானங்களில் ஏறி எப்படியாவது தப்பி செல்ல வேண்டும் என பலர் முண்டியடிக்கின்றனர். இதற்காக உயிரைப் பயணம் வைக்கின்றனர். காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானம் ஒன்றை சுற்றி பலர் ஓடி வருவதும், அதன் மீது ஏறுவதுமான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதேபோல் அமெரிக்க விமானப்படை விமானத்தில் ஏற இடம் கிடைக்காததால் சிலர் தொங்கிக்கொண்டு பயணம் செய்துள்ளனர். இவ்வாறு பயணித்தவர்களில் 3 பேர் விமானத்தில் கீழே விழுந்து உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி உள்ளது. நெஞ்சை பதற வைக்கும் இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
https://youtu.be/ss3HhiynoqI

“ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமையும்.” – வல்லரசுகளுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரத்தானியா !

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கிய நிலையில், அந்நாட்டில் தலிபான்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த சில தினங்களாக, தலிபான்கள் தங்களின் தாக்குதல்களை அதிகப்படுத்தி உள்ளனர். இதனால் பல முக்கிய நகரங்களை தலிபான்கள் அடுத்தடுத்து தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையே, அதிபர் அஷ்ரப் கனி பதவியை ராஜினாமா செய்ததுடன் காபுலை விட்டு வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Afghan President leaves Kabul, may transfer power to Ali Ahmad Jalali -  World News
மேலும் துணை அதிபர் அம்ருல்லா சலேவும் நாட்டை விட்டு வெளியேறியதாகவும், இடைக்கால அதிபராக அலி அகமது ஜலாலி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கம் அமையும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்த அவர்,
தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்தைக் கைப்பற்றுவார்கள் என்று எதிர்பார்த்ததாகவும், அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொண்டதன் மூலம் நிலவரம் தீவிரமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய அரசாங்கம் அமையும் அல்லது அதிகாரப் பகிர்வு ஏற்படும் என்று தெரிவித்த அவர், ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஹெய்டி நிலநடுக்கம் – உயிரிழப்பு 1300 ஆக அதிகரிப்பு !

ஹெய்டி நாட்டில் நேற்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 7.2 ஆக பதிவானது. மேலும் இது போர்ட் ஆஃப் பிரின்சில் இருந்து 118 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் என்ணிக்கை தற்போது வரை 1297 ஆக அதிகரித்துள்ளது. பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
பல உயரமான கட்டடங்கள் இடிந்து தரை மட்டமானது. அதன் இடிபாடுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் எழுந்துள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நிலநடுக்கத்தால் கட்டிய இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

பதவியை இராஜினாமா செய்கிறார் மலேசியாவின் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் !

மலேசியாவின் பிரதமர் முஹ்யித்தீன் யாசின் நாளை திங்கட்கிழமை தனது பதவியை இராஜினாமா செய்வார் என மலேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மலேசியாவில் தற்போது கொரோனா தொற்றினால் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை இராஜினாமா செய்தால் மேலும் ஸ்திரமற்ற நிலை ஏற்படும் என கூறப்படுகிறது.

அரசாங்கத்தை தக்கவைத்துக்கொள் அவர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகிவிட்ட நிலையில் தனது இராஜினாமா முடிவை கட்சி உறுப்பினர்களிடம் அறிவித்துள்ளார்.

2020 மார்ச் மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் சிறிய பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்று முஹ்யித்தீன் யாசின் பிரதமரானார்.

இந்நிலையில், ஆளும் கட்சி கூட்டணியில் இருக்கும் UMNO கட்சியின் சில உறுப்பினர் ஆதரவை மீளப்பெற்றுள்ள நிலையில் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இந்நிலையில், செப்டம்பரில் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதாக முஹ்யித்தீன் யாசின் கூறினார். இருப்பினும் கடந்த வெள்ளிக்கிழமை, தனக்கு பெரும்பான்மை இல்லை என முஹ்யித்தீன் ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலிபான்கள் கையில் ஆப்கானிஸ்தான் – பெண்கள், சிறுபான்மையினர் குறித்து கவலை கொள்கிறேன்.” – மலாலா கவலை !

தலிபான் ஆதிக்கம் அதிர்ச்சியளிக்கிறது. பெண்கள், சிறுபான்மையினரை நினைத்து கவலை கொள்கிறேன் என மலாலா தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகத் தெரிகிறது. ஆப்கான் அதிபர் பதவி விலகுவதாகவும், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹூல்லா முஜாஹித் வெளியிட்டுள்ள அறிக்கையில், காபூலை அமைதியான முறையில் ஒப்படைக்கும்படி அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அமைதியான வழியில் அதிகார மாற்றம் ஏற்படும் வரை காபூல் நுழைவாயில்கள் காத்திக்க தலிபான்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளாது என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், “ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்தது கவலையளிக்கிறது. இதனை அதிர்ச்சியுடன் கவனிக்கிறேன். அங்குள்ள பெண்கள், சிறுபான்மையினர், மனித உரிமை செயற்பாட்டாளர்களை நினைத்து கவலை கொள்கிறேன்.

உள்ளூர் தலைவர்கள், பிராந்திய தலைவர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் ஆப்கனில் உனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வழிவகை செய்ய வேண்டும்.

அங்கு மனிதாபிமான ரீதியிலான உதவிகளை உலக நாடுகள் செய்ய வேண்டும். அகதிகளையும், பொதுமக்களையும் பாதுகாக்க வேண்டும்” என்று ட்வீட் மூலம் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.