செய்திகள்

செய்திகள்

செய்திகள்

ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை டிராக்டரில் கட்டி இழுத்து திருடிச்செல்லும் உக்ரைன் விவசாயி – வைரல் வீடியோ இணைப்பு !

உக்ரைன் மீது ரஷ்ய இராணுவம் கடந்த 6 நாட்களாக போர்தொடுத்து வருகிறது. உக்ரைனை கைப்பற்றும் முயற்சிகளில் ரஷ்யா ஈடுபட்டு உள்ளது. இதற்கு உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

உக்ரைன் நகருக்குள் உள்ள ரஷ்ய இராணுவத்தினர் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் உக்ரைனை சேர்ந்த விவசாயி ஒருவர் கியுவ் எல்லை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை தனது டிராக்டரில் கட்டி இணைத்து இழுத்து திருடி சென்றார்.

இந்த வீடியோவை இங்கிலாந்தின் பிளைமவுத் நாடாளுமன்ற எம்.பி. ஜானி மெர்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அந்த வீடியோவில் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் பீரங்கியை கட்டி இழுத்து செல்ல அதன் பின்னால் இராணுவ வீரர் ஒருவர் ஓடும் காட்சி இடம் பெற்று உள்ளது. இந்த வீடியோவை வெளியிட்டு ஜானி மெர்சர் கூறுகையில், “இந்த வீடியோவின் மூலம் ரஷ்யா சிறந்த நிபுணத்துவம் பெற்ற நாடு இல்லை என்பது தெரிகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாக தெரியவில்லை. உக்ரைன் நாட்டு டிராக்டர், ரஷ்யாவின் பீரங்கி வாகனத்தை திருடி உள்ளது” என்றார்.

இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி உள்ளது. இந்த வீடியோவை இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்து உள்ளனர்.

இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் நாட்டு தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து உள்ளார். அவர் கூறுகையில், “உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள் மிகவும் பலசாலிகள்” என்றார்.

உக்ரைன்- ரஷ்யா இடையே ஆறாவது நாளாக போர் – இந்திய மாணவன் பலி !

உக்ரைன்  ரஷ்யா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீயூவ் போன்ற நகரங்களில் ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக அந்நாட்டு மத்திய அரசு ஒபரேஷன் கங்கா திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிப்பு !

இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வடமத்திய மாகாணத்தில் சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க தெரிவித்தார்.

அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆண்கள் பலியாகி வருவதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்.

மகளிர் பணியகம் நடத்திய கணக்கெடுப்பின்படி, திம்புலாகலை பிரதேச செயலர் பிரிவில் மாத்திரம் சுமார் 500 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன.

தேசிய சமாதானப் பேரவையில் செயற்படும் பொலன்னறுவை மாவட்ட சர்வமதக் குழுவிலுள்ள சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவில் உரையாற்றும் போதே திருமதி கங்கானி திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிலைமையைக் குறைக்கும் வகையில் பொலிஸில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதுடன் தற்போதுள்ள போதைப்பொருள் விதிகளைக் கடுமையாக்கி குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்ய 400கூலிப்படை வீரர்களை அனுப்பியுள்ள புடின் – வெளியாகியுள்ள பரபரப்புத்தகவல் !

நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் திகதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6-வது நாளாக ரஷ்ய இராணுவப் படைகள் தலைநகர் கீயுவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வாக்னர் குழுமத்தில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நடத்தப்படுகிறது.
இந்த கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீயூவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த கூலிப்படையினருக்கு உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபரோடு அவரது மந்திரி சபையில் உள்ள மந்திரிகள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷ்யா உத்தரவிட்டு இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பரிசுத்தொகை விவரம் எதுவும் தெளிவாக தெரிய வில்லை.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின்தான் தனது கூட்டாளியான கூலிப்படை அமைப்புக்கு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு இந்த கூலிப்படையினர் செலன்ஸ்க்கியை கொல்ல திட்டமிட்டுள்ளனர். ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார். தன்னை கொல்வதுதான் ரஷ்யாவின் முதன்மை நோக்கம் என்றும், தன்னையும் தனது குடும்பத்தையும் அழித்துவிட்டால் நாட்டை அழித்து விடலாம் என்று ரஷ்யா கருதுவதாகவும் அவர் கூறி இருந்தமை நோக்கத்தக்கது.

பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை மூடியது அமெரிக்கா !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு ரஷ்யா, உக்ரைன் இடையே பெலாரஸ் நாட்டில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இந்நிலையில், பெலாரஸ் நாட்டில் உள்ள தூதரகத்தை அமெரிக்கா மூடி உள்ளது. மேலும், ரஷ்யாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில், அத்தியாவசிய பணிகள் தொடர்பான ஊழியர்கள் தவிர மற்ற ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.
உக்ரைனில் ரஷ்ய படைகளின் நியாயமற்ற தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு பிரச்சினைகள் உருவாகியிருப்பதால் இந்த நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோணி பிளிங்கன் கூறி உள்ளார்.

“அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

“54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.” என  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், தனது ஆட்சிக் காலத்தில் இவ்வாறான ஒரு துயரமான கதியை மக்கள் எதிர்கொண்டதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் அவர் தெரிவித்த போது,

எனது ஆட்சிக்கு பிறகு பிரச்சனைகள் இல்லாத அழகான நாட்டைக் நான் கையளித்தேன். மக்கள் உணவருந்தி மகிழ்ச்சியாக இருந்தார்கள், விவசாயிகள் நன்றாக விவசாயம் செய்தார்கள், என் காலத்தில் பிரச்சனைகள் இல்லாமல் இருக்கவில்லை, ஆனால் இந்நாட்டு குடிமக்களின் அன்றாட வாழ்க்கை இன்று இருக்கும் நிலைக்கு வீழ்ச்சியடைந்திருக்கவில்லை.

அரசாங்கத்தை குற்றம் சாட்டி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை காப்பாற்ற, சிதைந்து கொண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க இது ஒரு சந்தர்ப்பமாகும். இன்று என்னை அவதூறாக பேசுகின்றனர், இழிவு படுத்துகின்றனர். ஏறக்குறைய 54 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் ஏற்பட்ட அவதூறுகள், அவமானங்கள் அனைத்தும் எனக்கு பழகி விட்டது.

இன்று நம் நாட்டில் பல பிரச்சனைகள் உள்ளன, விவசாயிகள் கண்ணீரில் வாழ்கிறார்கள், நான் கடந்த ஒரு வருடமாக விவசாயிகளின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பேசி வருகிறேன். பொலன்னறுவை மக்களிடம் வாக்குகளைப் பெற்ற மூன்று அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னைத் தவிர. அவர்களில் ஒருவரேனும் நாடாளுமன்றத்திலோ அல்லது அதற்கு வௌியிலோ விவசாய சமூகத்தின் அவல நிலையைப் பற்றிப் பேசுவதில்லை. எல்லாவற்றிற்கும் ஆமாம் சார். ஆமாம் சார். அவ்வளவுதான்.”

ஆரம்பமானது ரஷ்யா – உக்ரைன் இடையேயான பேச்சுவார்த்தை !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தொடர்ந்து 5-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவை கைப்பற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வருகிறது. நாட்டை காப்பாற்றும் முனைப்பில் உள்ள உக்ரைன் படைகள், ரஷ்யாவை முன்னேற விடாமல் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றனர். இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

இரு நாடுகளும் போரை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தின. ஆனால் ரஷ்யாவின் அழைப்பை உக்ரைன் முதலில் ஏற்கவில்லை. பெலாரஸ் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்துவதை உக்ரைன் விரும்பவில்லை. மீண்டும் ரஷ்யா அழைப்பு விடுத்தபோது, பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது.

அதன்படி, ரஷ்யாவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக உக்ரைன் தனது பிரதிநிதிகளை பெலாரசின் கோமல் பகுதிக்கு அனுப்பியது. அந்த குழுவினர், ரஷ்ய பிரதிநிதிகளுடன் இன்று பேச்சுவார்த்தையை தொடங்கினர். இந்த பேச்சுவார்த்தையின்போது உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் போரை முதலில் நிறுத்த வேண்டும் என உக்ரைன் தரப்பில் வலியுறுத்தப்படும். இதேபோல் ரஷ்யா தரப்பில் உக்ரைனுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படும்.

உக்ரைனில் உள்ள ரஷ்ய வீரர்கள் உடனே வெளியேற வேண்டும் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவுறுத்தியதுடன், ‘உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’ என எச்சரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் மீதான படையெடுப்பு – ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்தது சர்வதேச ஒலிம்பிக் சபை !

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

இதனால் உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் ரத்து செய்ய சர்வதேச ஒலிம்பிக் சபை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து சர்வதேச ஒலிம்பிக் சபை , “ரஷ்ய மற்றும் பொலரஸ் அரசாங்கங்கள் ஒலிம்பிக் ஒப்பந்தத்தை மீறியுள்ளன. விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கு முழுமையான முன்னுரிமை கொடுக்க வேண்டும். இதனால் ரஷ்யா மற்றும் பொலரஸில் நடைபெற இருந்த அனைத்து விளையாட்டு போட்டிகளையும் வேறு இடத்துக்கு மாற்றவும் அல்லது ரத்து செய்யவும் அனைத்து விளையாட்டு கூட்டமைப்புக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் பங்கெடுக்கும் உக்ரைன் அழகி அனஸ்தீசியா லென்னா !

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 5-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இரு தரப்பிற்கும் இடையே நடந்து வரும் மோதலில் 5,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.
உக்ரைனை கைப்பற்ற வந்தால் கொலைதான் - மிஸ் உக்ரைன் அழகி போர்க்கொடி..! -  TamilSpark
உக்ரைன் இராணுவத்தில் சேரும்படி அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தனது மக்களிடம் வேண்டுகோள் விடுத்த நிலையில் டென்னிஸ் வீரர், அந்நாட்டின் இளம்  நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் ஆர்வமுடன் படைகளில் சேர்ந்து வருகின்றனர். சொந்த நாட்டில் வசிக்கும் மக்கள் ராணுவத்தினரிடம் பயிற்சி பெறுகின்றனர்.
இந்நிலையில், கடந்த 2005-ம் ஆண்டு மிஸ் உக்ரைன் பட்டம் வென்ற அழகியான அனஸ்தீசியா லென்னா (31) என்பவர் தனது நாட்டை காக்கும் பணியில் இறங்கி உள்ளார்.
இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், படையெடுக்கும் நோக்குடன் உக்ரைன் எல்லையை கடக்கும் ஒவ்வொருவரும் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனுடன் துணை நில்லுங்கள், உக்ரைனுடன் கைசேருங்கள் என இரு ஹேஷ்டேகையும் பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் மீதான படையெடுப்பை நிறுத்தக்கோரி போராடிய 5000திற்கும் அதிகமானோரை ரஷ்யாவில் கைது !

யுத்தத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்திய சுமார் 2000திற்கும் அதிகமானோரை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் சுமார் 50திற்கும் அதிகமான, போராட்டங்கள், யுக்ரேனுக்கு எதிரான யுத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு போராட்டங்களில் ஈடுபட்ட சுமார் 2000 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, யுக்ரேன் படையெடுப்பிற்கு எதிராக தற்போது வரை 5000திற்கும் அதிகமானோரை ரஷ்யா, உள்நாட்டில் கைது செய்துள்ளதாக OVD-Info என்ற அமைப்பின் தரவுகள் கூறுகின்றன.