செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும்.” – சாணக்கியன்

“மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும்.” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (6) ஒழுங்குப் பிரச்சினை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் பேசிய போது,

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலக பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் சுபீகரிக்கப்பட போவதாக 05 ஆம் திகதி திங்கட்கிழமை போராட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த விடயம் தொடர்பில் எடுத்துள்ள நடவடிக்கை என்ன?

இதன்போது எழுந்து உரையாற்றிய விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, தகுதியான தரப்பினரை தெரிவு செய்யுமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலருக்கு பணிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் விவசாயத்துறையை மேம்படுத்தாவிட்டால் உணவு பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

6 ஆயிரம் ஏக்கர் காணியில் அனுமதியில்லாத வகையில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முறையான வழிமுறையில் அனுமதி வழங்காத காரணத்தால் தான் ஒரு தரப்பினர் அனுமதியில்லாமல் விவசாய நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளார்கள். ஆகவே இவ்விடயம் தொடர்பில் உரிய மாவட்ட மக்கள் பிரதிநிகளுடன் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தில் விவசாயத்திற்காக காணிகள் வழங்கப்படும். அது சிறந்ததாக அமையும் என்றார்.

இதன்போது எழுந்த உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம், மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான காணிகள் தேசிய இன விகிதாசார அடிப்படையில் பிரிக்கப்பட வேண்டும் என மகாவலி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார். சட்டத்தின் பிரகாரம் விகிதாசார அடிப்படையில் காணிகள் பிரிக்கப்படாவிட்டால் சட்ட நடவடிக்கை முன்னெடுப்போம் என்றார்.

5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை !

தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதனை படைத்துள்ளார்.

இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது இடத்தினை பெற்று, வரலாற்றில் முதன் முறையாக தேசிய மட்டத்தில் சாதனை படைத்துள்ளார்.

இந்த வீரன் அவரது வெற்றிக்கு உறுதுணையாய் உழைத்த பயிற்றுவிப்பாளர்களுக்கும், அவரது பெற்றோர்களுக்கும் கற்ற பாடசாலைக்கும் பெருமையை தேடி கொடுத்துள்ளார்.

தென்கொரிய நாடகம் பார்த்த இரு சிறுவர்களுக்கு மரண தண்டனை கொடுத்த வடகொரியா – அதிர்ச்சியான தகவலை வெளியிட்ட தென்கொரியா !

தென் கொரிய, நாடகம் பார்த்ததாக இரு சிறுவர்களுக்கு வடகொரிய இராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சியோல் வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளது.

வடகொரியாவில் உள்ள அரசு ஊடகம் சொல்வது தான் செய்தி என்கிற நிலை உள்ளது. ஆனால் பக்கத்து நாடான தென்கொரிய  ஊடகங்கள்  வடகொரியாவில் நடப்பதை பெரும்பாலும் உலகிற்கு அம்பலப்படுத்தி வருகின்றன.

இத்தகைய நிலையில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜங் உன் கடந்த ஆண்டு கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார். அதில் தென் கொரிய திரைப்படங்கள், நாடகங்கள், இசை ஆகியவற்றின் ‘வீடியோ, சிடி’க்களை விற்பனை செய்தது அல்லது அப்படங்களை பார்த்த குற்றங்களுக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடகெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரு சிறுவர்கள் தென்கொரியா டி.வி. நாடகம் பார்த்ததாக கடந்த அக்டோபர் மாதம் அந்நாட்டு இராணுவத்திடம் சிக்கினர். இவர்கள் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில் குற்றச்சாட்டு சமீபத்தில் நிருபனமானது. இதையடுத்து ரியாங்க்காங் மாகாணத்தில் வைத்து பொதுமக்கள் மத்தியில் இரு சிறுவர்களும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். வட கொரியாவின் இச்செயலுக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜி20 அமைப்பின் தலைமை இந்தியாவிற்கு – பிரான்ஸ் வாழ்த்துச் செய்தி !

இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் முடிவில் ஜி20 அமைப்பிற்கு, இந்த ஆண்டு இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த ஆண்டு தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, ஜி 20 மாநாடு அடுத்த ஆண்டு நடந்து முடியும் வரை இந்த தலைமை பொறுப்பு நம் வசம் இருக்கும். இந்நிலையில், ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஒரு பூமி. ஒரு குடும்பம். ஒரு எதிர்காலம். எனது நண்பர் நரேந்திர மோடி, உலகில் சமாதானத்தை உருவாக்கிட, அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

இலங்கையர் ஒருவரை சுட்டுக்கொலை செய்த அமெரிக்க பொலிசார்!

இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை !

இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு அமைப்பிற்காக பணியாற்றியதாக ஹொசைன் ஓர்துகான்சாதே, ஷாஹின் இமானி, மிலாட் அஷ்ரபி மற்றும் மனோச்சேர் ஷாபந்தி ஆகியோர் மீது ஈரானில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

உளவாளிகள் என்று கூறப்படும் அவர்களிடம் இருந்து ஆயுதங்களை காவல்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக ஈரான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் மொசாட் அமைப்பிடம் இருந்து கிரிப்டோகரன்சி வடிவில் ஊதியம் பெற்றதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது.

தனியார் மற்றும் பொது சொத்துக்களை திருடியதாகவும், தனிநபர்களை கடத்தி விசாரித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு பேருக்கு இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டதாக ஈரான் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தாயான தனது மனைவியைக் கொலை செய்த இலங்கையர் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது !

மூன்று பிள்ளைகளின் தாயான தனது மனைவியைக் கொலை செய்தமை தொடர்பில் 45 வயதுடைய இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள Sandhurst பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நெலோமி பெரேரா என்ற 44 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கத்தியால் குத்தப்பட்ட போது அவரது மகள் வீட்டிற்கு வெளியே வந்து, அண்டை வீட்டுக் கதவைத் தட்டி உதவி கோரியமை அருகில் இருந்த சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்த பெண்ணின் இளம் மகள் அவர்களிடம் வந்து, “என் அம்மா இறந்துவிட்டார், என் அம்மா இறந்துவிட்டார்” என்று கூறியதாக அயலவர்கள் தெரிவித்தாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

குறித்த சந்தேக நபர் தனது மகனையும் தாக்கியதில் மகனின் தலையில் காயம் ஏற்பட்டு தற்போது வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

சிறுவனின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்த பெண்ணும் கொலையை செய்த அவரது கணவரும் தற்போது பிரிந்து வாழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மனித மூளைக்குள் சிப் (Brain Chip) பொருத்தி கணினியின் துணைகொண்டு இயக்கும் முயற்சி – ஆரம்ப கட்ட முயற்சிகள் வெற்றி என்கிறார் எலான் மஸ்க் !

மனித மூளைக்குள் சிப் (Brain Chip) ஒன்றை பொருத்தி மனிதர்கள் மத்தியில் சோதனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அந்த சிப்களில் ஒன்றை தானே செலுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.

இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மனிதர்கள் மத்தியில் சோதனை செய்யப்படவுள்ளது.

இதன் மூலம், மனதில் நினைப்பதை கணினி மூலம் செயற்படுத்த முடியும். இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

என்னுடைய Start up நிறுவனமான Neuralink இதனை மேற்கொள்கிறது. இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் Neuralink சோதனையை தொடங்கும். இந்த சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவில் காணப்படுகின்றது.

Neuralink 2021ஆம் ஆண்டில் ஒரு வீடியோவை வெளியிட்டது, அதில் ஒரு குரங்கு தனது மூளையில் பொருத்திய சிப்பை பயன்படுத்தி இணையத்தில் விளையாடுவதைக் காண முடிந்தது. இந்த சிப் மூலம் மனிதர்கள் இழந்த பார்வையை பெற முடியும்.

முதுகுத் தண்டு எலும்பு முறிவு அல்லது பக்கவாதத்தால் முற்றிலுமாக ஊனமுற்றவர்களுக்கு மறுவாழ்வு வழங்குவதிலும் Neuralink-இன் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும். மூளையில் எந்த நியூரான் செயலிழந்ததோ அதனை இந்த சிப் மூலம் தூண்டிவிட்டு வேலை செய்யவைக்க முடியும்.

Neuralink நிறுவனத்தின் இந்த சோதனை வெற்றியடைந்தால், சிப் உதவியுடன் கணினியைக் கட்டுப்படுத்த முடியும். சிப் பொருத்தப்பட்டவரின் மனதில் நினைக்கும் வேலையை கணினி செய்யும்.என தெரிவித்திருந்தார்.

உறுதி கொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடு – காணொளி இணைப்பு !

கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது: ஹர்த்தாயினி ராஜேஸ்கண்ணா; உறுதிகொண்ட நெஞ்சினாள் நூல் வெளியீடு

ஹம்சகௌரி சிவஜோதியின் ‘உறுதிகொண்ட நெஞ்சினாள்’ என்ற பத்து பெண் ஆளுமைகள் பற்றிய நூல் வெளியீடு மிகச்சிறப்பாக கிளிநொச்சி லிற்றில் எய்ட் அரங்கில் நடைபெற்றது. இந்நூல் வெளியீடு முற்றிலும் இளம் தலைமுறைப் பெண்களினாலேயே நடாத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழகத்தின் மாணவர்களின் ‘மனிதம்’ குழவைச் சேர்ந்த இளம் பெண்கள் (படம்) இந்நிகழ்வை திறப்பட நடத்தினர்.

புத்தக வெளியீட்டுக்கு தலைமையேற்ற செல்வி வர்ஷனா வரதராசா இந்நூல் தன்னுள் ஏற்படுத்திய மாற்றத்தையும் இந்தப் பெண் ஆளுமைகள் பற்றிய அனுபவம் தன்னுள் ஏற்படுத்திய தாக்கத்தையும் சுட்டிக்காட்டினார்.

இப்பெண் ஆளுமைகள் பல்துறைசார்ந்த பன்முக ஆளுமைகள். பெண்ணியம் (செல்வி திருச்சந்திரன்), கல்வி (ஜெயா மாணிக்க வாசகன், சசிகலா குகமூர்த்தி, வலன்ரீனா இளங்கோவன்) இலக்கியம் (தாமரைச்செல்வி), பொறியியல்துறை (பிரேமளா சிவசேகரம்), கலைத்துறை (பார்வதி சிவபாதம், வலன்ரீனா இளங்கோவன்), அரசியல், கலை, இலக்கியம் (கலாலக்ஷ்மி தேவராஜா), விளையாட்டுத் துறை (அகிலத்திருநாயகி சிறிசெயானந்தபவன்) இவர்களோடு பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டு இனவெறியர்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு போராடியவர் நாகம்மா செல்லமுத்து. இவர்கள் யாரும் சமூகத்தில் இருந்து அந்நியப்பட்டு வாழவில்லை. தங்களையும் சமூகத்தில் ஒருவராகப் பிணைத்துக்கொண்டு தங்களது நாளாந்த வாழ்வியலோடு சமூகத்திற்கான சேவையை வழங்கி வந்தனர் அல்லது வழங்கி வருகின்றனர்.

கிரேக்க தத்துவஞானிகள் பிளேட்டோ, சோக்கிரட்டீஸ் ஆகியோர் தங்கள் கருத்துக்களை உரைநடையூடாகவே எடுத்துச் சென்றது போல் இந்நூலாசிரியர் ஹம்சகௌரியும் தன்னுடைய கருத்துக்களை உரைநடையூடாகவே எங்களைப் போன்ற இளம் சந்ததியினருக்கு கொண்டு சென்றுள்ளார் என நூலின் வெளியீட்டுரையை வழங்கிய செல்வி விராஜினி காயத்திரி இராஜேந்திரன் தெரிவித்தார்.

இந்நூல் ஒருவரில் அல்ல எம்போன்ற பலரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்த காயத்திரியின் கருத்துக்கள் ஏனைய ஆய்வாளர்களின் உரைகளிலும் எதிரொலித்தது. இந்நூலின் முதற் பிரதி, இந்நூலில் குறிப்பிடப்பட்ட ஆளுமைகளில் ஒருவரான அமரத்துவமடைந்த கலாலக்ஷ்மி தேவராஜா அவர்களுடைய மகள் அபிலாஷா தேவராஜாவுக்கு வழங்கப்பட்டது.

கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது: ஹர்த்தாயினி ராஜேஸ்கண்ணா

‘உறுதிகொண்ட நெஞ்சினாள் பிரதிபலிக்கும் பெண்ணியம்’ என்ற தலைப்பில் செல்வி ஹர்த்தாயினி இராஜேஸ்கண்ணா தனது நூலாய்வை மேற்கொண்டார். ‘பெண்ணியம் சார்ந்து பேசுவதை பெண்ணியம் பற்றிப் பேசுவதை விரோதமாகப் பார்க்கின்ற போக்கு இன்னமும் காணப்படுகின்றது. பெண்ணியம் பற்றிய விழிப்புணர்வு சில பெண்களுக்கே போதாமையாகவுள்ளது. போதைவஸ்துவுக்கும் மதுவுக்கும் அடிமைப்பட்டுள்ள இன்றைய நிலையிலும் அதனைச் செய்வதை பெண்ணியம் என்று வியாக்கியானப்படுத்துபவர்களும் எம்மத்தியில் உள்ளனர்’ என உணர்ச்சி பூர்வமாக உரையாற்றிய ஹர்த்தாயினி ‘சமத்துவமின்மையின் மூலங்கள் கண்டறியப்பட்டு அவை களையப்பட வேண்டும்’ என ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

‘இந்த ஆடை அணிந்தால் தான் நீ என் காதலியாகலாம், மனைவியாகலாம் என்ற வரைக்கும் அன்பின் பேரில் கட்டளையிடும் ஆண்கள் இன்னும் இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் நாங்கள் பெண்கள் தான். நாங்கள் ஏன் அதற்குப் பணிய வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பிய ஹர்த்தாயினி ‘பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியம் வேண்டும்’ என்பதை வலியுறுத்தினார். ‘இந்த நூலில் உள்ள பெண்கள், ஒரு தலைமுறைக்கு முன்னதாக பெண்கள் வெளியே செல்லவே தடைகள் இருந்த காலத்தில் சாதித்திருக்கின்றார்கள் என்றால் ஏன் எங்களால் முடியாது?’ என அவர் சபையில் இருந்த இளம் தலைமுறையினரை நோக்கி கேள்வி எழுப்பினார்.

தனதுரையில் ‘சாதாரணமான எங்கள் தாய்மாரை சகோதரிகளை பிள்ளைகளை ஏன் எங்களால் மாற்ற முடியாது?’ என்ற கேட்ட ஹர்த்தாயினி சமூகம் பாதிக்கப்பட்ட நலிந்த பெண்களுக்கே பாதிப்புகளைக் கொடுக்கின்றது. கணவரை இழந்து அல்லது கைவிடப்பட்ட பெண்கள் வாழும் அயல்வீடுகளைக் கேட்டால், இந்த சமூகம் இவர்களை எப்படிப்பார்க்கின்றது என்பதை தெரிந்துகொள்ளலாம். அப்படியிருந்தும் அப்பெண்கள் சவாலாக வாழ்கின்றனர். கட்டிய கணவன் கைவிட்டாலும் கற்ற கல்வி கைவிடாது’ என ஆக்கிரோசமாக பெண்கள் தங்கள் சுயத்தில் நிற்பதற்கு கல்வியை வலியுறுத்தினார்.

அவர் தனது உரையின் இறுதியில் இதில் உள்ள பத்தது பெண் ஆளுமைகள் மட்டுமல்ல நூலாசிரியர் ஹம்சகௌரியோடு 11 பெண் ஆளுமைகளும் திருமணத்துக்கும் பின்னும் தங்கள் அடையாளத்தை இழந்துவிடவில்லை. அவர்கள் உண்மையிலேயே முன்னுதாரணமானவர்கள். பெண்களுக்கு திருமணம் ஒரு தடையல்ல. எனது அடையாளத்தை தக்க வைக்க எனது பெண்ணியத்தை முன்னெடுக்க எனக்கு திருமணம் ஒரு தடையாக அனுமதிக்க மாட்டேன்’ எனத் தெரிவித்து தன்னுடைய விறுவிறுப்பான உரையை நிறைவு செய்தார்.

சாதியம் உணர்வு நிலையில் மாற்றம் நிகழவில்லை செல்வி மயூரகா ஸ்ரீஸ்கந்தராசா:

உறுதிகொண்ட நெஞ்சினாள் பேசும் பெண் கல்வியும் அதன் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் செல்வி மயூரகா ஸ்ரீகந்தராசா உரையாற்றினார். பெண்களது நிலையென்பது கயிற்றில் கட்டப்பட்ட பட்டத்திற்கு ஒப்பானதாக இன்னும் சுதந்திரம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருப்பதைச் சுட்டிக்காட்டடினார். ‘பிரேமளா சிவசேகம் அவர்கள் அன்றைய சுழலில் இலங்கையின் முதலாவது பெண் பொறியியலாளராக ஆனாது ஆச்சரியமானதாகவும் அதே சமயம் நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதை எங்களையே நாங்கள் கேட்க வைப்பதாகவும் இருக்கின்றது என மயூரகா தெரிவித்தார்.

இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்ட ஒவ்வொரு ஆளுமையுமே ஒவ்வொரு நூல்கள். அவர்களுடைய அனுபவங்களை நூலாசிரியர் பகிர்ந்துகொள்ள எடுத்த முயற்சி அளப்பெரியது என விதந்துரைத்தார் மயூரகா. ‘புத்தக மூலமான இந்தப் பயணம் எங்களைப் போன்ற பெண்களை எங்கள் comfort zone கொம்போர்ட் சூனில் இருந்து வெளியே வர வைக்கின்றது. செல்வி திருச்சந்திரன் குறிப்பிட்ட சாதியம் பற்றிய குறிப்புகள் மிக அருமையான பதிவு. சாதியம் எவ்வாறு சமநிலையைக் குழப்புகின்றது என்பதை அது துல்லியமாகக் காட்டுகின்றது. நாங்கள் இதனையெல்லாம் கடந்துவந்துவிட்டோமா?’ என்று கேள்வி எழுப்பிய மயூரகா ‘உணர்வுநிலையில் மாற்றம் நிகழவில்லை’ என்ற உண்மையை ஆணித்தரமாகத் தெரிவித்தார்.

‘தங்கைகளா எங்களாலும் முடியும். எழுந்து வாருங்கள்’ செல்வி நிவேதா சிவராஜா:

‘உறுதிகொண்ட நெஞ்சினரின் சமூகப் பார்வை’ என்ற தலைப்பில் செல்வி நிவேதா சிவராஜா நூல்பற்றிய தன்னுடைய ஆய்வை மேற்கொண்டார். தன்னை சமூகத்தின் மீது காதல் கொண்டவளாக ஒரு சமூகக் காதலியாக அறிமுகப்படுத்திய அவர் இந்த பத்து ஆளுமைகளும் அந்த அளுமைகளை ஆவணப்படுத்திய ஆளுமையும் தன் சிந்தனையில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவிட்டதாக நிவேதா தெரிவித்தார். ‘இவர்கள் எல்லோரும் எங்களைவிட ஒரு தலைமுறை கடந்தவர்கள். அவர்களுடைய சமூகம் பற்றிய பார்வை எங்களுக்கு ஒரு வழிகாட்டல். முன்ணுதாரணம். அதனையே இந்நூலைப் பதிப்பித்த தேசம் ஆசிரியர் த ஜெயபாலன் தன்னுடைய பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளார் என்பதைச் சுட்டிக்காட்டினார் நிவேதிதா.

‘தேசம் த ஜெயபாலன் குறிப்பிட்டது போல பெண்கள் இன்னமும் இரண்டாம் நிலையில் நோக்கப்படும் போக்கு காணப்படுகின்றது. அதனை மாற்றியமைக்க வேண்டும் என்ற கனவோடு தான் தேசம் ஜெயபாலன் இந்நூலை வெளியிட்டுள்ளார். அவருடைய அந்தக் கனவை நாங்களும் இன்று சுமக்கின்றோம்’ என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்த நிவேதிதா ‘தம்பிகாளா! தங்கைகளா!’ உங்களுடைய பொறுப்புக்களை நீங்கள் சுமக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

‘இந்நூலை வாசித்த பின்னரே கிளிநொச்சியில் இப்படியொரு பாடசாலை – விவேகானந்தா வித்தியாலயம் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ஆரம்பத்தில் வாசிக்கும் போது ஜெயா மிஸ் என்று தோண்றியது. வாசித்து முடிக்கையில் ஜெயா அம்மா என்று அழைக்கத் தோண்றியது. அவருடைய சமூகப் பங்களிப்பு என்னை சிலிர்க்க வைத்துவிட்டது. நாங்கள் மனிதம் அமைப்பினூடாக கல்விச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். எங்களுக்கு விவாகானத்தா வித்தியாலயத்தை பாரக்க வேண்டும் அதிலிருந்து நாங்கள் கற்க வேண்டும் என்ற ஆர்வம் பொங்கியுள்ளது’ என நிவேதிதா உணர்வுபூர்வமாக தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

‘எங்களை நாங்களே 90’ஸ் கிட்ஸ் 2கே கிட்ஸ் (ருகெ கிட்ஸ்) என்று சொல்கின்றோம் ஆனால் நடக்கவே சலித்துக் கொள்கிறோம். ஆனால் எழுபதுக்களையும் கடந்து ஒடிவிட்டு வந்திருக்கிறார் அகிலத்திருநாயகி அமையார். இந்த ஆளுமைகள் எல்லாமே இன்னும் இம்மண்ணில் சாதனையாளர்களாக வாழ்ந்து கொண்டுள்ளனர். ஆனால் நாங்கள் இன்னும் வெளிநாட்டு மோகத்தோடு தான் இருக்கின்றோம். இங்கு எங்கள் முன்னுள்ள வாய்ப்புகளைப் பார்க்காமல் தடைகளை மட்டுமே பார்க்கின்றோம்’ என்று குறிப்பிட்ட நிவேதா மீண்டும் ‘தம்பிகளா! தங்கைகளா!’ என்று விழித்தார்.

‘இவர்கள் எங்களுக்கு முன்னுதாரணமாக இருந்து விட்டார்கள். அவர்களுடைய பொறுப்பை சரிவரச் செய்துவிட்டார்கள். நாங்கள் எங்கள் அடுத்த தலைமுறைக்கு முன்ணுதாரணமாக வேண்டாமா?’ என்று கேள்வி எழுப்பியதுடன் ‘தங்கைகளா எங்களாலும் முடியும் என்பதைக் காட்டத் தயாராகுங்கள்’ என்று அழைப்பு அறைகூவல் விடுத்தார். ‘நாங்கள் இந்த பூமியில் இருந்துவிட்டு வாடகை செலுத்தாமல் சென்றுவிடக்கூடாது. எங்கள் வாடகையை நாங்கள் செலுத்த வேண்டும்’ என்ற பொறுப்பை அழுத்தம் திருத்தமாகக் குறிப்பிட்டு நிவேதா தன்னுரையை நிறைவு செய்தார்.

நிகழ்வின் இறுதியில் ஹம்சகௌரி சிவஜோதி நூலில் உள்ள ஆளுமைகளோடு தனக்கும் தன்னுடைய கணவருக்கும் இருந்த உறவுபற்றி கனத்த இதயத்தோடு சில அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். இறுதியாக சிவஜோதியின் தந்தையார் நன்றி தெரிவித்து நிகழ்வை முடிவுக்கு கொண்டு வந்தார்.

நவம்பர் 20இல் நடைபெற்ற இந்நிகழ்வில் இருநூறு பேருக்கு மேற்பட்ட சமூக செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் நிகழ்வைத் திறம்பட ஏற்பாடு செய்தவர்களும் இளையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.