செய்திகள்

செய்திகள்

செய்திகள்

“அமெரிக்கா மற்றும் அதன் அடிமைப் படைகளின் பொறுப்பற்ற செயலால் கொரிய தீபகற்ப நிலை சிவப்புக்கோட்டை எட்டியுள்ளது.” – வடகொரியா

“அமெரிக்கா மற்றும் அதன் அடிமைப் படைகளின் பொறுப்பற்ற செயலால் கொரிய தீபகற்ப நிலை சிவப்புக்கோட்டை எட்டியுள்ளது.” என வட கொரியா குற்றஞ்சாட்டியுள்ளது.

இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்ட வட கொரிய அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘நட்பு நாடுகளின் பயிற்சிகளின் விரிவாக்கம் கொரிய தீபகற்பத்தை பெரிய போர் ஆயுதக் களஞ்சியமாகவும் மிகவும் முக்கியமான போர் மண்டலமாகவும் மாற்ற அச்சுறுத்துகிறது.

மிகப்பெரும் அணுசக்தியுடன் நட்பு நாடுகளின் எந்தவொரு குறுகிய கால அல்லது நீண்ட கால இராணுவ சவாலையும் எதிர்கொள்ள வடகொரியா தயாராகவுள்ளது.

அமெரிக்கா மற்றும் அதன் அடிமைப் படைகளின் பொறுப்பற்ற இராணுவ மோதல் சூழ்ச்சிகள் மற்றும் விரோதச் செயல்கள் காரணமாக கொரிய தீபகற்பம் மற்றும் பிராந்தியத்தில் இராணுவ மற்றும் அரசியல் நிலைமை தீவிர சிவப்புக் கோட்டை எட்டியுள்ளது.

அணுவாயுதத்திற்கான அணுகுண்டு மற்றும் ஒரு முழுமையான மோதலுக்கு ஒரு முழுமையான மோதல் என்ற கொள்கையின் அடிப்படையில், அமெரிக்காவின் எந்தவொரு இராணுவ முயற்சிக்கும் வடகொரியா கடுமையான எதிர்வினையை எடுக்கும்.

கொரிய தீபகற்பம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் அமெரிக்கா தொடர்ந்து மூலோபாய சொத்துக்களை அறிமுகப்படுத்தினால், வடகொரியா அதன் இயல்புக்கு ஏற்ப அதன் தடுப்பு நடவடிக்கைகளை தவறாமல் தெளிவுபடுத்தும்’ என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

வட கொரியா பல தசாப்தங்களாக தென் கொரியாவுடன் அமெரிக்காவின் ஒருங்கிணைந்த இராணுவ பயிற்சிகளை ஒரு சாத்தியமான படையெடுப்பிற்கான ஒத்திகை என்று விபரித்துள்ளது, இருப்பினும் நட்பு நாடுகள் அந்த பயிற்சிகளை தற்காப்பு என்று விபரித்துள்ளன.

பல ஆண்டுகளாக குறைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான பயிற்சியை நேச நாடுகள் மீண்டும் தொடங்கியதால் வடகொரியா கடந்த ஆண்டு தனது சொந்த ஆயுத இருப்புகளை அதிகரித்தது.

வட கொரியாவின் நடவடிக்கைகள் ஏவுகணை மற்றும் பீரங்கி ஏவுகணைகளை உள்ளடக்கியது, இது தென் கொரியா மற்றும் அமெரிக்க இலக்குகள் மீது உருவகப்படுத்தப்பட்ட அணு ஆயுத தாக்குதல்கள் என்று விபரிக்கப்பட்டது.

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் – இலங்கைக்கு குறைவான நிதி ஒதுக்கீடு !

இந்திய மத்திய அரசின் 2023 -24 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தில் இலங்கைக்கு கடந்த ஆண்டைவிட குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தில் பூடான், மாலத்தீவுகளுக்கான ஒதுக்கீடுகள் அதிகரித்த போதும் இலங்கைக்கு 150 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர நேபாளம், மியன்மார், மங்கோலியா, மொரிஷியஸ், சீஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு இவ்வாறு குறைந்தளவில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதில் இருந்து தொடர்ச்சியாக 2 வது தடவையாக 200 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதுவதை நீக்க வேண்டும் – உலகளாவிய கால ஆய்வு (UPR) செயற்குழுவில் பிரித்தானியா கோரிக்கை!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு (PTA) பதிலாக உண்மையைக் கண்டறியும் பொறிமுறையையும் புதிய பாதுகாப்புச் சட்டத்தையும் உருவாக்குவது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் என்றும், ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதுவதை நீக்க வேண்டும் என்றும் பிரித்தானியா மற்றும் அமெரிக்கா செய்த வேண்டுகோளுக்கு பதிலளிக்கும் வகையில் சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெற்ற 42வது அமர்வின் போது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உலகளாவிய கால ஆய்வு (UPR) செயற்குழுவில் பிரித்தானியா மற்றும் அமெரிக்காவின் பிரதிநிதிகளால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

அதன்படி, உலகளாவிய கால ஆய்வு செயல்முறையின் கீழ் அடுத்த கட்ட கடப்பாடுகளை மேற்கொள்ள இலங்கை தயாராகி வரும் நிலையில், PTA ஐ மாற்றுவது உட்பட பல கொள்கை நடவடிக்கைகள் கவனிக்கப்பட உள்ளதாக சப்ரி உறுதியளித்தார்.

“புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க முடியாது. தனித்து போராடுவேன்.”- அட்மிரல் சரத் வீரசேகர

13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

30 வருட கால யுத்தத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியாதவற்றை பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பெற்றுக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முயற்சிக்கிறார்கள். நாட்டு மீது உண்மையான பற்று காணப்படுமாயின் கூட்டமைப்பினர் புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளை தாராளமாக பெற்றுக்கொடுக்கலாம். புலம்பெயர் அமைப்புக்களின் முதலீடுகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்க ஒருபோதும் இடமளிக்க முடியாது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,புலம்பெயர் தமிழ் அமைப்பினரும் ஜனாதிபதிக்கு கடும் அழுத்தம் பிரயோகிக்கின்றனர்.

எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இடமளிக்க முடியாது என ஜனாதிபதி தலைமையில் அண்மையில் இடம்பெற்ற சர்வக்கட்சி கூட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளோம்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை கிடையாது.காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் மாகாணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

மாகாண சபை தேர்தல் உரிமையை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பாதுகாக்கவில்லை.மாகாண சபை தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அரசியல் இலாபத்திற்காக மாகாண சபை தேர்தலை பிற்போட நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் கருத்துரைக்கும் கூட்டமைப்பினர் உண்மை நோக்கத்துடன் செயற்பட வேண்டும்.அரசியல் தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு இவர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் மக்களின் வாழ்க்கை தரத்தை இல்லாதொழித்துள்ளார்கள்.  அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால்; அரசியல் தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை வலுவற்றதாகி விடும் என குறிப்பிடும் கூட்டமைப்பினர் கொழும்பில் இருந்துக் கொண்டு அரச வரபிரசாதங்களை முழுமையாக அனுபவிக்கிறார்கள்.தமிழ் மக்கள் உண்மையை விளங்கிக்கொள்ள வேண்டும்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு தடையாக இருக்கபோவதில்லை. ஆனால் நாட்டின் ஒருமைப்பாட்டையும்,இன நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில் 13 ஆவது திருத்தத்ததை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்க முடியாது.நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்கும் போது அரசியல் காரணிகளுக்கு முன்னுரிமை வழங்க முடியாது,13 ஆவது திருத்தத்திற்கு எதிராக தனித்தேனும் போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார்.

அன்பே சிவம் எல்லாம் குடுமி மயம்: பாரிஸில் சிவன் கோவில் வருமானத்தில், நல்லூரில் ‘காம’ விடுதி, யாழ் ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் – பின்னுகிறார் சாதிமான் குடுமி ஜெயா!

இலங்கையில் ஆட்சி அமைக்கக் கூடிய வாய்ப்புள்ள சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளர் வெற்றிவேலு ஜெயந்திரன் ஒரு பெரும் ஆள்மாறாட்டம் செய்துள்ளதுடன் இளம்பெண்களை ஆசைகாட்டி மோசம் செய்யும் மோசடியாளார் என்பதும் பிரான்ஸில் குற்றவாளியாகத் தண்டனை அனுபவித்துள்ளார் என்பதும் தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரியவந்துள்ளது. ஒரு தேசியக் கட்சி, தேசிய சிறுபான்மை இனத்தின் பிரதான அமைப்பாளரை நியமிக்கின்ற போது, அந்நபர் பற்றி எவ்விதமான விசாரணைகளும் ஆய்வுகளும் இல்லாமல் அச்சமூகத்தில் உள்ள ஒரு அயோக்கியரை கலாச்சாரத் தலைநகர் என்று சொல்லப்படுகின்ற யாழ் மாவட்டத்தின் அமைப்பாளராக நியமித்திருப்பது யாழ் மாவட்டத் தமிழர்களை அவமானப்படுத்துகின்ற செயல் என யாழ் கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வெற்றிவேலு ஜயந்திரனை யாழ் மாவட்ட அமைப்பாளராக நியமித்து சஜித் பிரேமதாஸ, அயோக்கியர் ஒருவரை தங்கள் மாவட்டத்திற்கு பிரதிநிதியாக நியமித்தால் எவ்வாறு தமிழ் மக்களின் வாக்குகளை வெற்றி பெறமுடியும் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஆள்மாறாட்ட மோசடி:
கொழும்பில் அரச உத்தியோகஸ்தர்கள் வெற்றிவேலு ஜெயந்திஜரன் ஆள்மாறாட்டம் செய்வதற்கு உடந்தையாக இருந்து அவருக்கு போலிப்பெயரில் அடையாள அட்டையைப் பெற்றுக்கொடுத்துள்ளனர். ஜெயந்திரன் வெற்றிவேலு என்பதே இவருடைய இயற்பெயர். இவர் பிறந்தது 1958 .07. 29. பிறந்த இடம் யாழ்ப்பாணம். அவருடைய முதல் அடையாள அட்டையில் இவ்விபரங்களைக் காணலாம். இவரது கடவுச் சீட்டிலும் இதே விபரங்களே உள்ளது.

ஆனால் பிரான்ஸில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு களவாக தப்பி 2003இல் இலங்கைக்குச் சென்ற வெற்றிவேலு ஜெயந்திரன் அதன்பின்; ஆள்மாறாட்டம் செய்து தன் பிறந்த திகதியை பத்து ஆண்டுகள் குறைத்துள்ளார். எழுத்துக்களை மாற்றி பெயரையும் மாற்றி அமைத்துள்ளார். கொழும்பில் பெற்ற புதிய அடையாள அட்டையில் பிறந்தது 1969 .07. 29 என்றும் பிறந்த இடம் நல்லூர் என்றும் பெயர் ‘வெற்றிவேலு யஜந்திரன்’ என்றும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. தேசம்நெற் இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணைகளில் இவர் தன்னுடைய சொந்தப் பெயரில் ஐரோப்பிய நாட்டு விமானநிலையங்களுடாக பயணிக்க முடியாது என்பதாலும் இளம்பெண்களைக் கவர்ந்திழுப்பதற்காகவும் பத்துவயதைக் குறைத்து களவாக தனக்கு இன்னுமொரு அடையாளத்தை உருவாக்கி உள்ளார் எனத் தெரியவருகின்றது.

அன்பே சிவம் எல்லாம் குடுமி மயம்:
எண்பதுக்களின் நடுப்பகுதியில் பாரிஸின் புறநகர்ப் பகுதியில் வாழ்ந்த வெற்றிவேலு ஜெயந்திரன் அங்கு அலுவலகத் துப்பரவு (பியூரோ க்ளீனிங் கொன்ராக்) ஒப்பந்தம் ஒன்றை ஆரம்பித்து நடத்தி வந்தார். அந்நிறுவனத்தைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டவர். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, இவர் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு தண்டனையும் அனுபவித்தார்.

இதற்கிடையே லாகுர்னே யில் சிவன் கோவில் ஒன்றை அமைத்தார். தமிழர்கள் ஜரோப்பிய நாடுகள் எங்கும் தாங்கள் வாழ்கின்ற பகுதிகளில் கடைகள் அமைத்துக்கொள்வார்கள். கோயில்கள் பெரும்பாலும் பொதுக் கோயில்களாகவோ தனியார் கோயில்களாகவோ இருக்கும். ஜெயந்திரன் கோயிலை கடை நடத்துவது போல் தனியார் கோயிலாகவே நடத்தி வருகின்றார். அதன் வருமானத்தை அவரே பெற்றுக்கொள்கின்றார். இதனை தற்போது ஆலயத்தின் பரிபாலனத்தை மேற்கொள்ளும் ஒருவர் ஜனவரி 26 அன்று தேசம்நெற்க்கு உறுதிப்படுத்தினார். ஆலயத்தின் தொலைபேசி இலக்கத்தோடு தேசம்நெற் தொடர்புகொண்ட போது ‘குடுமி ஜெயா’வுக்கே ஆலயத்தின் வருமானம் அனுப்பப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பிரான்ஸில் ரவுடிக் கும்பலை வைத்திருந்த ஜெயந்திரனை, ‘குடுமி ஜெயா’ என்றாலேயே ஆட்களுக்கு தெரியும் என்கிறார், தனது குடும்பத்தினருக்காக அவ்வாலயத்திற்குச் சென்று வரும் குமார் என்று அழைக்கப்படும் நவரத்தினம் தவக்குமார்.

இந்தக் கோயிலின் வருமானத்தில் இருந்தே நல்லூர் ‘காம’ விடுதி லக்ஸ் ஹொட்டவாங்கப்பட்டு கட்டப்பட்டது. இதன் உரிமையாளர் என்ற பந்தாவிலேயே இவர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ் மாவட்ட பிரதான அமைப்பாளராக நியமிக்க்பட்டார். இவ்வாறான சமூகவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக கனடாவில் சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் முத்து பொன்னம்பலம் இது பற்றி தேசம்நெற்குக்குத் தெரிவிக்கையில், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக மக்களை ஏமாற்றி உழைக்கும் பணம் தாயகத்தில் இது போன்ற சீரழிவை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது எனத் தெரிவித்தார். பணத்தை வைத்து யாரையும் வாங்லாம் எதனையும் செய்யலாம் என்ற மனநிலை பணத்தை எந்தவழியிலும் பிரட்டலாம் என்று நம்பும் மோசடியாளர்களிடம் மிக அதிகமாகவே காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

முத்து பொன்னம்பலம் குறிப்பிட்டது போல் ‘அன்பே சிவம்’ என்பதை ‘எல்லாம் குடுமி மயம்’ ஆக்கிவிட்டார் குடுமி ஜெயா. பிரான்ஸில் இருந்து யாழ்ப்பாணம் வரை அடியாட்களை வைத்திருக்கும் குடுமி ஜெயா சிவன் கோவில் வருமானத்தில் போதைவஸ்து, மது, மாது என்று தன் கூலிப்படைக்கு இறைத்துக்கொண்டுள்ளார்.

யார் இந்தக் குடுமி ஜெயா:
பிரபல சட்டத்தரணி பொன்னையா வெற்றிவேலுவின் முதல் மனைவியுடைய மூன்றாவது மகன் தான் வெற்றிவேலு ஜெயந்திரன். காலம்சென்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மதிப்புக்குரிய பாராளுமன்ற உறுப்பினராக இருந்த யோகேஸ்வரன் ஜெயந்திரனுக்கு ஒருவகையில் மாமா முறையானவர். ஜெயந்திரனின் தாயார் விவாகரத்துப் பெற்றதைத் தொடர்ந்து பொன்னையா வெற்றிவேலுவுக்கு ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இன்னொரு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அவரது சந்தேகம் காரணமாக அப்பெண் தன்னை எரித்துக்கொண்டு உயிரிழந்தார். அதன் பின்னர் பொன்னையா வெற்றிவேலு இன்னுமொரு பெண்ணைத் திருமணம் செய்திருந்தார்.

இப்பொன்னையா வெற்றிவேலுவே ஈபிடிபியின் அற்புதன் கொலை வழக்கில் ஈபிடிபிக்காக வாதிட்டு வழக்கை வென்றவர். ஆனாலும் சாதிமானான ஜெயந்திரன், ஈபிடிபியோடு இணையவில்லை. அதற்கு காரணம் ஈபிடிபி என்பது ‘கீழ்ச்சாதி’ கட்சி என்ற ஜெயந்திரனின் எண்ணத்தினால் தான்.

அண்மையில் ஒரு விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட ஜெயந்திரன் தனது தந்தையின் அந்தக்கால கழியாட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பெருமைப்பட்டுக்கொண்டார். அந்தக் காலத்தில் தங்களிடம் வேலைக்கு வரும் ‘கீழ்சாதி’யைச் சேர்ந்த முத்தையா, கந்தன் எல்லாரையும் அங்க போய் காணியை துப்பரவாக்குங்கோ என்று அவர்களை கிளிநொச்சிக்கு அனுப்பிவிட்டு, அவர்களின் வீடுகளுக்கு சென்று, அங்குள்ள பெண்களை அனுபவித்துவிட்டு வருவது தன் தந்தையின் பொழுதுபோக்கு என்று ஜெயந்திரன் அங்கு பெருமைபடக் கூறியுள்ளார்.

அப்போது அருகில் இருந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில் “எழும்பி அறைந்துவிட வேண்டும் என்ற கொதி வந்தது. ஆனாலும் எதுவும் செய்ய முடியவில்லை” என்று தன் இயலாமையையிட்டு மனம் வருந்தினார். இவ்வாறான இழிசெயல்களை பெருமையாகக் கூறவும் அதனைக் கேட்டு ரசிக்கவும் எம் சமூகம் தயாராக இருப்பது என்பது மிகவும் அருவருப்பாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இளம்பெண்களுக்கு வலைவிரிக்கும் குடுமி ஜெயா:
‘தன் தந்தைக்கு தப்பாமல் பிறந்த தனயன்’ என்பது போல் ஜெயந்திரன் பல விளிம்புநிலையில் உள்ள இளம்பெண்களை தன் பணத்தைக்காட்டி போதையூட்டி அவர்களது வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றார். தற்போது தனது எழுபதாவது வயதையெட்டும் ஜெயந்திரன் தன்னுடைய பேரப்பிள்ளையின் வயதையொத்த இன்னும் சில தினங்களில் 23 வயதையெட்டும் இளம்பெண்ணை வசீகரித்து வைத்துள்ளார். 2021 இல் தந்தையை விபத்தில் இழந்து வறுமையில் வாடிய குடும்பத்தை அரவணைக்கும் பாணியில் அக்குடும்பத்தில் நுழைந்த ஜெயந்திரன். ஒரு வகையில் இறந்தவருக்கு தமையன். ‘பெரியப்பா’ என்ற பெயரில் நுழைந்து, அந்த இளம்பெண்ணை தன்பக்கம் வசீகரித்துக்கொண்டார்.

அதற்கு முன் அவர் அப்பெண்ணின் தாயையும் முயற்சித்துள்ளார். அதன் ஓடியோ பதிவு தேசம்நெற்றிடம் சிக்கியுள்ளது. “நான் உங்களை அன்பாக வைத்திருப்பேன். நீங்கள் சின்ன வயதில் வாழ்க்கையை இழந்துவிட்டீங்கள். நீங்கள் வாழவேண்டும். நான் காசுகளையெல்லாம் மாத்திவிடுகிறன்” என்று குழைந்துள்ளார். அதன் பின் அத்தாய் ஜெயந்திரனின் தொடர்புகளைத் துண்டிக்க ஜெயந்திரன் தாயில் கரிசனை கொள்வது போல் பாசாங்கு பண்ணி மகளை சுவீகரித்துக்கொண்டார். தன் மகளை விடுவிக்க தாயார் ஜெயந்திரனோடு தொடர்பு கொண்டால் “நீர் ஒருக்கால் ஹொட்டலுக்கு வந்துவிட்டு போம். எல்லாம் சரியாகிவிடும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து குடும்பத்தார் தங்கள் பிள்ளையை மறைத்து வைத்திருக்கும் வீட்டை திருமணமாகாமல் அவரோடு பத்து வருடமாக வாழும் குடும்பத்தாரோடு சென்று வீட்டை உடைத்தனர். அப்பெண் தங்கியிருந்த வீடு முழவதும் 8 சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது. பெருமளவு வாசணைக் குப்பிகள் (சென்ற்), மதுபானப் போத்தல்கள், ஆணுறைகள் என்பன காணப்பட்டது. அவ்வீட்டில் இருந்த பொருட்களை படத்தில் பார்க்கலாம்.

அதனைத் தொடர்ந்து இப்பிரச்சினை பொலீஸ்வரை சென்றது. ஆனால் சட்டப்படி அப்பெண் மேஜர் என்பதாலும் அப்பெண்ணே தான் ஜெயந்திரனோடு செல்ல முடிவெடுத்ததாலும் சட்டத்தால் இது விடயத்தில் அப்பெண்ணின் பெற்றோருக்கு எதுவும் செய்ய முடியவில்லை. சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இரண்டு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட அடியாட்களோடு ஜெயந்திரன் அப்பெண்ணை அழைத்து வந்து மீண்டும் கூட்டிச் சென்றார். இச்சம்பவம் சில தினங்களுக்கு முன் ஜனவரி 22இல் நடந்தது. தற்போது கவர்ந்து சென்ற பெண்ணுக்கு பதினாறு வயதில் ஒரு தங்கையுண்டு. அதுபற்றி ஜெயந்திரன் குறிப்பிடுகையில், ‘அந்தக் குட்டியும் நல்லாத்தான் இருக்கிறாள்’ என்று அக்குழந்தையின் தாய்க்கு ஜெயந்திரன் நளினமாகத் தெரிவித்து இருக்கின்றார். தன்னுடைய மற்றைய பிள்ளைகளை எப்படிக் காப்பாற்றுவது என்று கணவனை விபத்தில் பலிகொடுத்த அத்தாய் பரிதவிக்கின்றார்.

குடுமி ஜெயாவின் அந்தப்புரம்: மூன்று குடும்பம் நான்கு குழந்தை எண்ணற்ற உறவுகள்
பிரான்ஸில் ஒரு மொரிஸியஸ் பெண்ணை திருமணம் செய்திருந்த ஜெயந்திரன் அவரை விவாகரத்துச் செய்திருந்தார். அப்பெண்ணுக்கு ஜெயந்தின் மூலமாக ஒரு குழந்தையுண்டு. அதன் பின் இருபது வயதுடைய ஒரு இளம்பெண்ணைத் திருமணம் செய்து அவருக்கு இரு குழந்தைகள் உள்ளது.

அப்பண்ணுடைய விவாகரத்து வழக்கு வரும் மார்ச் மாதம் யாழ் மாவட்ட நீதிமன்றுக்கு வருகின்றது. அவ்வழக்கில் அப்பெண் சார்பில் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன் வாதிடுகிறார்.

இந்த விவாகரத்து விடயங்களுக்கு முன்னதாகவே கடந்த பத்து வருடங்களுக்கு மோலாக தனது இருபதுக்களில் இருந்த ஒரு இளம் பெண்ணோடு ஜெயந்திரன் வாழ்ந்து வருகின்றார். இப்போது முப்பதுக்களின் நடுப்பகுதியில் உள்ள அப்பெண்ணுக்கு ஒரு பெண் குழந்தையும் உண்டு. ஆனால் ஜெயந்திரன் அவரை சட்டப்படி திருமணம் செய்யவில்லை. மற்றைய பெண்ணின் விவாகரத்து முடிந்ததும் இவரைத் திருமணம் செய்வதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் அதற்குள் தன் பெறாமகளான பேர்த்தியின் வயதுடைய பெண்ணை கவர்ந்துகொண்டு அது பொலிஸ்நிலையம் வரை வந்துள்ளது.

இந்த நான்கு பெண்கள், நான்கு குழந்தைகள் மட்டுமல்ல இதைவிடவும் இன்னும் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உடுவில் தேவலயத்தோடு நெருக்கமாக இருந்த இளம் பெண்ணொருவரையும் ஜெயந்திரன் நம்ப வைத்து துரோகம் இழைத்திருந்தார். அவர் இன்னமும் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்கின்றார். இப்பெண்ணுடைய இளைய சகோதரியோடும் ஜெயந்திரன் உறவுகொள்ள முற்பட்டுள்ளார். இதனால் கோபமடைந்த ஜெயந்திரனின் சகோதரி (வெற்றிவேலுவின் இரண்டாவது மனைவியின் மகள்) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அந்நேரம் ஆதரவாகச் செயற்ப்பட்டவர், தன்னுடைய சகோதரனின் காம லீலைகள் பற்றி புலிகளிடம் முறையிட்டுள்ளார். ஜெயந்திரனை அழைத்து விசாரித்த புலிகள், ஜெயந்திரன் புலிகளுக்கு நிதிப்பங்களிப்புச் செய்ய உடன்பட்டதை அடுத்து அவரை விட்டுவிட்டனர். அன்று ஜெயந்திரனை அழைத்து விசாரித்த புலிகளின் உறுப்பினர் தென்னவன் தற்போது பாரிஸில் வாழ்கின்றார். தாங்கள் ஜெயந்திரனை விசாரித்து தண்டனை வழங்காமல் விட்டது உண்மைதான் ஆனால் இயக்கம் அவரிடம் பணம் வாங்கவில்லை எனத் தெரிவித்தார்.

மேற்குறிப்பிடப்பட்ட பெண்கள் எல்லோரிடமுமே ஜெயந்திரன் ஒரே விதமான கதை சொல்லியே அவர்களை வசீகரித்துள்ளார். “தன்னிடம் பணம் இருந்க்கின்றது. ஆனால் அன்பு காட்ட யாரும் இல்லை. வருபவர்கள் பணத்துக்காகவே வருகின்றார்கள். நான் அன்புக்காக ஏங்குகிறேன்” எற்றெல்லாம் கதைசொல்லியே இவ்விளம் பெண்களை ஜெயந்திரன் கவர்ந்துள்ளார். பின் நாட்கள் கடந்து செல்ல குடித்துவிட்டு தன் சுயரூபத்தை காட்டியுள்ளார். அப்பெண்களை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். அவர்களது முகத்திலும் உடலிலும் காயங்களை ஏற்படுத்தியதுடன் உள்ளத்திலும் என்றும் ஆறாத ரணத்தை ஏற்படுத்தி உள்ளார். தற்போது ஜெயந்திரனின் பாதிக்கப்பட்டோர் பட்டியலில் இன்னொமொரு பெண்ணும் இணைந்துள்ளார்.

இப்பெண்கள் பெரும்பாலும் அனைவருமே, ஜெயந்திரனின் மொழியில் ‘கீழ்சாதி’யைச் சேர்ந்தவர்கள். சாதி விட்டு சாதி மாறி திருமணம் செய்ததால் ஓரங்கட்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்லது ஜெயந்திரனின் தந்தையான பொன்னையா வெற்றிவேலு போன்ற சாதிமான்களால் தாய்மையடைந்தவர்களின் பெண் பிள்ளைகள். அக்குடும்பங்களில் உறுதியான ஆண் ஆளுமைகள் இல்லை. இந்தக் குடும்பங்களின் விழிம்புநிலை, அவர்களின் வறுமை, தட்டிக்கேட்க யாரும் இல்லை என்ற தைரியம் இவற்றை முதலீடாக்கி தன் காமப் பசிக்கு இளம் பெண்களை சூறையாடி வருகின்றார். இது தமிழ் சமூகத்தின் மிகப்பெரும் அவலம்.

குடுமி ஜெயா பற்றிய ஆதாரங்கள்:


ஜெயந்திரனினால் பாதிக்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட பெண்களின் படங்கள் மற்றும் ஆவணங்களை தேசம்நெற் பல்வேறு மூலங்களில் இருந்தும் பெற்றுக்கொண்டது. ஆனால் அப்பெண்களுடைய படங்களையோ ஜெயந்திரனின் பிள்ளைகளின் படங்களையோ வெளியிடப்போவதில்லை. ஜெயந்திரனின் தாய் இருசகோதரிகள் கனடாவில் வாழ்கின்றனர். ஒரு சகோதரன் பிரான்ஸில் வாழ்கின்றார். அவர்களை வெளிநாட்டுக்கு அழைத்தது மற்றும் உதவிகளையும் ஜெயந்திரன் மேற்கொண்டதால் அவர்கள் ஜெயந்திரனுக்கு விசுவாசமாகவும் ஜெயந்திரனுடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாகவும் இருப்பதாக தெரியவருகின்றது. ஆனால் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. அவர்களுடைய படங்களையும் வெளியிடுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

குடுமி ஜெயாவின் அரசியல் பிரவேசம்

“ஆம், தமிழ் ஒரு பொது உடமை, உலகத்தில் முதல் முதலாக தோன்றிய மொழி தமிழ்” என்ற வாக்கியத்தோடு முகநூலில் வரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிச்செயலாளரான உமாசந்திரா பிரகாஷ் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளராகவும் உள்ளார். ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டு வந்ததில் இவருக்குள்ள பங்கை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால் தான் ஜெயந்திரனை அரசியலுக்குள் கொண்டுவரவில்லை என்றும் ஆனால் ஜெயந்திரனுடைய உறவுகள் பற்றித் தனக்குத் தெரியும் என்றும் அவருடைய சினேகிதிக்குத் தெரிவித்துள்ளார். ஜெயந்திரனுடைய தனிப்பட்ட வாழ்க்கை வேறு அரசியல் வேறு அதனால் தான் அவருடன் சேர்ந்து அரசியலில் பயணிக்க தான் முன்வந்தாக இவர் தன்னுடைய சினேகிதிக்கு விளக்கமளித்துள்ளார். தன்னை பெண்ணியவாதியாகவும் காட்டிக்கொள்ளும் உமாசந்திர பிரகாஷ் ஜெயந்திரனின் தாய்வழி உறவுக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

உமாசந்திர பிரகாஷ் தற்போது பாதிக்கப்பட்டுள்ள மூன்று பெண்களின்: ஜெயந்திரனின் கொடுமை தாங்காமல் விவாகரத்துக்குக் கோரி நிற்கும் இரு பிள்ளைகளின் தாய், திருமணமாகாமலேயே குழந்தையுடன் தற்போது ஜெயந்திரனின் கீழ் அடி உதை வாங்கி வாழும் ஒரு பெண் குழந்தையின் தாய், குழந்தை முகம் கலையாத தற்போது வசீகரிக்கப்பட்ட பெண் – என அனைவரின் அவலத்தையும் நன்கு அறிந்தவர். ஆனாலும் ஜெயந்திரனின் பணத்துக்காக லக்ஸ் ஹொட்டலுக்காக இவற்றை சகித்துக்கொண்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அலுவலகம் லக்ஸ் ஹொட்டலிலியே இயங்குகிறது.

ஆன்மீகம் – அரசியல் – அதிகாரம்
ஜெயந்திரன் ஒரு பொறுக்கியாகவோ ரவுடியாகவோ மட்டும் இருந்திருந்தால் அது இவ்வளவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்காது. ஆனால் ஜெயந்திரன் ஒரு சிவன் ஆலயத்தின் தர்மகர்த்தா, ஒரு தேசியக் கட்சியின் பிரதான மாவட்ட அமைப்பாளர். இந்த லட்சணத்தில் தான் ஆலயங்களும் அரசியல் கட்சிகளும் மக்களை வழிநடத்துகின்றன? எதிர்கால சந்ததிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கின்றன?

அன்று புலிகளில் இருந்து இன்று சிங்கங்கள் வரை ஜெயந்திரன் போன்றவர்களின் அயோக்கியத்தனத்தை யாரும் கண்டுகொள்வில்லை. இதனால் இவ்வாறான இளம்பெண்கள் ஜெயந்திரன் போன்ற பணமும் செல்வாக்கும் கொண்ட ஆசாமிகளின் முன் விட்டில் பூச்சிகளாக மடிந்து வீழ்கின்றனர். பாரிஸில் இளைத்த குற்றங்களுக்காக சிறைசென்ற ‘செம்மல்’ ‘கம்பிகள் ஊடாக’ என்று தன்னுடைய திருகு தாளங்களை எழுதி வெளியிட்டார். அதில் தன்னுடைய அழகையும் கவர்ச்சியையும் கண்டு இளம்பெண்கள் வீழ்வதாகவும் தன்னுடைய நண்பர்களின் மனைவியருக்கே தன்னில் நட்புப்பொங்கியதாகவும் அந்நூலில் அளந்துள்ளார் ஜெயந்திரன். இனி ‘அந்தப்புரக் கம்பிகள் ஊடாக’ என்று ஒரு புத்தகம் எழுதினாலும் ஆச்சரியம் இல்லை.

மீற்றர் வட்டி கட்டாத அப்பாவிகளை அடித்து அதை விடியோ எடுத்து போடும் துணிவு யாழில் உள்ள பொறுக்கிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் வந்திருக்கின்றது. அதைக் தட்டிக் கேட்க அதிகாரம் உள்ளவர்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் தயாரில்லை. இன்னும் பல பத்து ஜெயந்திரன்கள், இந்த விளிம்புநிலை தமிழ் பெண்குழந்தைகளை வேட்டையாட தொடர்ந்தும் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இதில் பெண்ணியம் பேசும் பெண்ணிய புலிகள் சிங்கங்கள் தங்களுக்கு தாங்களே முதுகுசொறிவதோடு நிறுத்திக்கொண்டு விடுகின்றன. இல்லாவிட்டால் தங்களோடு ஒத்தூதா ஒருவரை முகநூலில் இழுத்து கையெழுத்துவேட்டை நடத்துவதோடு சரி.

பணம் அரசியல் செய்வதற்கு அவசியமாகிறது. அதனால் ஜெயந்திரன் போன்ற அயோக்கியர்கள் அரசியலுக்குள் உள்வாங்கப்படுகின்றனர். ஜெயந்திரன் போன்றவர்களுக்கு அரசியல் அந்தஸ்தும் கிடைத்த பின் அவர்கள் தங்களிடம் உள்ள பணம், அரசியல், அதிகாரத்தை பயன்படுத்தி இன்னும் இன்னும் அவற்றைப் பெருக்கிக் கொண்டு அதிகார மையங்களாக மாறுகின்றனர். இவர்கள் முன் விட்டில் பூச்சிகளாக வீழும்; இளம்பெண்களைக் காப்பாற்ற வேண்டுமானால் பிரான்ஸ் லாகுர்னே சிவன் கோவிலில் உண்டியலுக்குள்ளும் அரிச்சினை என்ற பெயரிலும் விழும் ஈரோக்கள் நிறுத்தப்பட வேண்டும், மக்கள் லக்ஸ் ஹொட்டலைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அயோக்கியர்களை பொறுப்பான பதவிகளுக்கு பணத்துக்காக மதுவுக்காக மாதுவுக்காக நியமிப்பதை நிறுத்த வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியும் தங்கள் கட்சிகளில் இருக்கும் அயோக்கியர்களைக் களை எடுக்க வேண்டும். இதற்கு இவர்கள் தயாரா?

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தலிபான் அமைப்பு தற்கொலை தாக்குதல் – 46 பேர் பலி !

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பலத்த பாதுகாப்பு மிக்க பகுதியில் உள்ள மசூதியில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

பிற்பகல் தொழுகையின்போது தற்கொலைப்படை தீவிரவாதி இந்த தாக்குதலை நிகழ்த்தி உள்ளான். இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர். மசூதியின் ஒரு பகுதி கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக 17 பேர் உயிரிழந்த நிலையில், நேரம் செல்லச் செல்ல உயிரிழப்பு அதிகரித்தது. இரவு நிலவரப்படி பலி எண்ணிக்கை 46 ஆக உயர்ந்தது. சுமார் 150 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் போலீஸ்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் அந்த அமைப்பின் முக்கிய கமாண்டர் உமர் காலித் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அவனது சகோதரன் கூறியிருக்கிறான்.

50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியண்டதால் மனிதர்கள் கண்ட பச்சை வால் நட்சத்திரம் மீண்டும் காணும் வாய்ப்பு 2023ல் – எப்போது வானில் தென்படும்..?

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே காணக்கூடிய அரிய பச்சை வால் நட்சத்திரம் நாளை மறுதினம் (01) பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது.

C2022E3, அல்லது ZTF என்ற இந்த வால் நட்சத்திரம் இறுதியாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நியண்டதால் மனிதனின் இறுதி காலத்தில் அவதானிக்கப்பட்டது.

இந்த பிரகாசமான பச்சை நிற வால் நட்சத்திரம் நாளைமறுதினம் மற்றும் பெப்ரவரி 2 ஆம் திகதி பூமியில் இருந்து 45 மில்லியன் கிலோமீற்றர் தொலைவில் இருக்கும் என்றும், தென் திசையாக தொலைநோக்கியின் உதவியுடன் இதை பார்க்க முடியும் என்றும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வால் நட்சத்திரம் தற்போது நமது சூரிய மண்டலத்தின் வழியாக வேகமாக நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் 50,000 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தோன்றாது என்று பிரிட்டனின் கிரீன்விச் ரோயல் ஒப்சர்வேட்டரியின் வானியலாளர் கலாநிதி கிரெக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கலிபோர்னியாவின் செண்டியோனில் உள்ள ஆய்வகத்தில் வைட் ஃபீல்ட் சர்வே கெமராக்களைப் பயன்படுத்தி இந்த வால் நட்சத்திரம் கண்டறியப்பட்டது.

பெருவில் ஜனாதிபதிக்கு எதிரான போராட்டம் – 60 பேர் வரை பலி !

தென் அமெரிக்க நாடான பெருவில் கடந்த சில ஆண்டுகளாகவே அரசியலில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.

2020-ம் ஆண்டில் அந்த நாடு 5 நாளில் 3 ஜனாதிபதிகளைக் கண்டது. இந்தநிலையில் பெரு ஜனாதிபதி டீனா பொலுவார்டே பதவி விலகக் கோரி தலைநகர் லிமாவில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி காஸ்டில்லோ பதவி நீக்கம் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போதே போராட்டங்கள் துவங்கின.

போலீசாரின் அடக்குமுறையால் ஏராளமான போராட்டக்காரர்களால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், போலீசார் நடத்திய தாக்குதலில் லிமாவில் போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து இருதரப்பு மோதலில் பலியானோர் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது. இதில் காவல்துறை அதிகாரி ஒருவரும் அடங்குவார். லிமாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது போராட்டக்காரர்கள், போலீசார் இடையே பெரும் மோதல் வெடித்தது. காவல் துறையினர் கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க முற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவிப்பு !

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.

ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்ததாக கூறி தோல்வியை ஏற்க மறுத்தார். இதனால் டிரம்பின் ஆதரவாளர்கள் 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் பாராளுமன்றத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து வன்முறையை தூண்டும் விதமாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாக கூறி டிரம்பின் டுவிட்டர், பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டது. இதற்கிடையே கடந்த ஆண்டு டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு டிரம்ப் டுவிட்டர் கணக்கு மீதான தடையை டுவிட்டர் நிறுவனம் நீக்கியது.

இந்த நிலையில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீதான தடையை நீக்குவதாக மெட்டா நிறுவனம் அறிவித்து உள்ளது. இது தொடர்பாக மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களின் தலைவர் நிக் திளெக் கூறும் போது, வரும் வாரங்களில் டிரம்பின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை நாங்கள் மீட்டெடுப்போம்.

குற்றங்களை தடுக்க புதிய பாதுகாப்பு தடுப்புகளுடன் மீண்டும் நிலை நிறுத்தப்படும். நிறுவனத்தின் கொள்கைகளின் ஒவ்வொரு மீறலுக்கும் 2 ஆண்டுகள் வரை இடைநீக்கம் செய்யப்படலாம் என்றார். 2 ஆண்டுகளுக்கு பிறகு டிரம்பின் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் கணக்குகள் மீண்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் மின்வெட்டு இல்லை !

நாட்டில் இன்று (புதன்கிழமை) முதல் க.பொ.த உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின் வெட்டினை மேற்கொள்ளாமல் இருக்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னரே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று முதல் க.பொ.த உயர்தரப்பரீட்சைகள் நிறைவடையும் பெப்ரவரி 17ஆம் திகதி வரையில் நாட்டில் மின்வெட்டு முன்னெடுக்கப்படாது என மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.