செய்திகள்

செய்திகள்

செய்திகள்

லசித் மலிங்க தேடிய சிறுவன் இவர்தான் – அவுஸ்திரேலியாவில் இருந்து திரும்பியதும் சந்திப்பு !

சிறுவன் ஒருவன் போன்று பந்து வீசும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியிருந்தது. இதனை அவதானித்த லசித் மாலிங்க இந்த சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு தனது முகநூல் பதிவொன்றில் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில், குறித்த சிறுவன் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
May be an image of 1 person, child, smiling and tree
வீரவில பகுதியை சேர்ந்த தரம் ஐந்தில் கல்வி கற்கும் தினித் என்ற சிறுவனே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இருப்பினும், லசித் மாலிங்க தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ளமையினால் இலங்கைக்கு வருகை தந்த உடன், குறித்த சிறுவனை நேரில் சென்று பார்வையிடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், சிறுவனின் திறமையை பாராட்டி சிறந்த கிரிக்கெட் பயிற்சியாளரிடம் பயிற்சிகளை பெறுவதற்கான வாய்ப்புக்களை பெற்றுத்தரவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

“நீண்ட கால முயற்சிகளின் பின் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” – மனோ கணேசன்

“நீண்ட கால முயற்சிகளின் பின்னணியில் 15 இலட்சம் மலையக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றிய தெளிவு சர்வதேசத்துக்கு ஏற்பட்டுள்ளது.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாட்டுத் தூதுவர்களுடனும், அந்தந்த நாடுகளில் இருந்து இலங்கை வந்துபோகும் ஐ.நா., உலக வங்கி உட்பட பன்னாட்டு நிறுவன மற்றும் அரச பிரதிநிதிகளுடனும் தமிழ் முற்போக்கு கூட்டணி தொடர்ச்சியாக நடத்தி வரும் கலந்துரையாடல்கள் மற்றும் அவர்களுக்கு எம்மால் வழங்கப்பட்டுள்ள எழுத்து மூலமான ஆவணங்கள் காரணமாக இலங்கை இந்திய வம்சாவளி மலையக தமிழர் தொடர்பான போதிய தெளிவு தற்போது சர்வதேச சமூகத்துக்கு ஏற்பட்டு வருகின்றது. இன்னமும் பல நாட்டு தூதுவர்களுடனும், பன்னாட்டு நிறுவனங்களுடனும் நாம் எதிர்வரும் வாரங்களில் பேசவுள்ளோம்.

மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா, தென் மாகாணங்களில் வாழும் சுமார் 15 இலட்சம் மலையக தமிழர்களின் தேசிய அரசியல் அபிலாஷைகள் மற்றும் அவர்கள் மத்தியிலான பெருந்தோட்ட பிரிவினரின் மிகவும் பின்தங்கிய வாழ்வாதார நிலைமைகள் தொடர்பான எமது தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் இன்று பலனளிக்க ஆரம்பித்துள்ளன. இது மகிழ்ச்சியை தரும் ஒரு வளர்ச்சி மைல்கல்லாகும்.

நம்மை ஆளும், ஆண்ட அரசாங்கங்கள் எம்மை மாற்றாந்தாய் பிள்ளைகளாக நடத்தும்போது, நாம் அயலவரை நாடி எமது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்ள முயல்வது மிகவும் இயல்பானதாகும்.

இதில் தவறில்லை. இருந்தால், அரசாங்கத்திடமே தவறு இருக்கிறது. இதுபற்றிய தெளிவு என்னிடம் நிறையவே இருக்கிறது. ஆகவே, எந்த இனவாதிகளும் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை.

எந்தவொரு முயற்சியும் ஒரே இரவில் பலன் தரப்போவதில்லை. படிப்படியான இடைவிடாத முயற்சிகளின் பின்னரே பலன் கிடைக்கும் என்பது எமக்கு நன்கு தெரியும்.

எம்மை நோக்கிய இந்த சர்வதேச கவனத்தை எமது மக்களுக்கான ஆக்கபூர்வ நடவடிக்கைகளாக மாற்ற, நாம் நன்கு திட்டமிட்டுள்ளோம். அதன் விபரங்களை அடுத்துவரும் நாட்களில் நாடு அறிந்துகொள்ளும் என கூட்டணி தலைவர் என்ற முறையில் இப்போதே கூறிவைக்கிறேன்.

நாம் சர்வதேச அரசுமுறை பிரதிநிதிகள், தூதுவர்கள் ஆகியோருடனும், யூ.எஸ்.எய்ட், உலக வங்கி உட்பட்ட இலங்கையின் அபிவிருத்தி பங்காளி நிறுவனங்களுடனும் பேசுகிறோம்.

‘இலங்கைக்கு நீங்கள் தரும் நன்கொடைகள், உதவிகள், கடன்கள் இலங்கையில் மிகவும்  பின்தங்கிய எமது மக்கள் பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதி செய்யுங்கள்’ என நாம் வலிந்து வலியுறுத்துகிறோம்.

இன்று அரசு முன்னெடுக்கவுள்ள ‘அஸ்வெசும ஆறுதல்’ என்ற நாளாந்த பிரிவினருக்கான கொடுப்பனவுகள் தொடர்பிலும் நாம் எடுத்த முன்நகர் நடவடிக்கை இன்று உலக வங்கியினதும், அரசாங்கத்தினதும், சர்வதேச சமூகத்தினதும் கவனத்தை பெற்றுள்ளது.

‘அஸ்வெசும ஆறுதல்’ திட்டம் தொடர்பாக உலக வங்கியுடனான எமது அடுத்தகட்ட காத்திரமான பேச்சுகள் அடுத்துவரும் சில நாட்களில் நடைபெறும்.

நாம் அரசில் அங்கம் வகிக்கும் போதும் கணிசமாக பணி செய்தோம். இன்று அரசில் அங்கம் வகிக்கவில்லை என்பதற்காக நாம் அங்கம் வகிக்கும் எமது அரசு மீண்டும் உருவாகும் வரை சும்மாவே இருக்கவும் மாட்டோம்.

எதிரணியில் இருந்தபடி பணி செய்கிறோம். எமது இந்த கொள்கையை கவனத்தில் எடுக்க நமது மக்களையும், சமூக முன்னணியாளர்களையும் கூட்டணி தலைவர் என்ற முறையில் நான் வேண்டுகிறேன் என்றார்.

இளம் பாடகி யோஹானி டி சில்வாவுக்கு ‘கோல்டன் விசா’ !

இலங்கையின் இளம் பாடகி யோஹானி டி சில்வா துபாயில் ‘கோல்டன் விசா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.

கலை, கலாசாரம், பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பங்காற்றியவர்களுக்கு துபாய் அதிகாரிகள் வழங்கும் உயரிய விருது ‘கோல்டன் விசா’ என அழைக்கப்படுகிறது.

யோஹானி இலங்கையின் பாரம்பரிய நாட்டுப்புற இசை மற்றும் சமகால பாப் இசை ஆகியவற்றின் தனித்துவமான கலவையால் பார்வையாளர்களை கவர்ந்து வருகிறார், மேலும் ‘கோல்டன் விசா’ கலைச் சிறப்பிற்கான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் உலகளாவிய அளவில் கலாச்சார பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கிறது.

சுவீடனில் உண்மையில் செக்ஸ் சாம்பியன்ஷிப் நடைபெறுகிறதா..?

சுவீடனில் உடலுறவு என்பது ஒரு விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் செக்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுவதாகவும் செய்தி வேகமாக பரவி வருகிறது. ஜூன் 8ம் திகதி தொடங்கும் இப்போட்டியில் பங்கேற்க 20 பேர் பதிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த செய்திகளில் பெரும்பாலான செய்திகள் ட்வீட்களை ஆதாரங்களாக காட்டியுள்ளன.

இந்த தகவலைப் பார்த்த பலரும் முகம் சுளித்ததுடன், இதென்ன அபத்தமான போட்டி என விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர். ஆனால் சுவீடனில் இருந்து அறிக்கையோ அல்லது சர்வதேச அளவிலான அறிக்கையோ வெளியாகாத நிலையில், இந்த செய்தி போலியானது என தெரியவந்துள்ளது.

அதாவது, சுவீடன் செய்தி நிறுவனமான கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் தகவலின்படி, செக்ஸ் சாம்பியன்ஷிப் தொடர்பான விண்ணப்பம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது.

‘சுவீடன் நாட்டில் செக்ஸ் கூட்டமைப்பு உள்ளது. அதன் தலைவர் டிராகன் பிராக்டிக் ஒரு சாம்பியன்ஷிப் போட்டிக்காக அழைப்பு விடுத்தார். உடலுறவை விளையாட்டாக அங்கீகரிக்கக் கோரி தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்தார். உடலுறவானது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என அவர் தனது விண்ணப்பத்தில் கூறியிருந்தார். எனினும், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது’ என கோட்டர்பார்க்ஸ்-பாஸ்டன் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் பிஜோர்ன் எரிக்சன் உள்ளூர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

“ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது.” – அமெரிக்க தரப்பிடம் சீனா எச்சரிக்கை !

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இணைந்து நேட்டோ இராணுவ அமைப்பை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க முயற்சிக்கக் கூடாது என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆசியா-பசிபிக் பகுதியில் நேட்டோ போன்ற அமைப்பை உருவாக்க கூடாது: சீனா  எச்சரிக்கை | Tamil News China warns NATO-like alliances could lead to  conflict in Asia-Pacific

இது தொடர்பாக சிங்கப்பூரில் நடந்த பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்ற சீன பாதுகாப்பு மந்திரி லீ ஷங்பூ கூறும்போது,

ஆசிய-பசிபிக்கில் நேட்டோ போன்ற முயற்சிகள் பிராந்திய நாடுகளில் மோதல்களை பெரிதுப்படுத்துவதற்கான ஒரு வழியாகும்.

இது ஆசிய-பசிபிக்கை சர்ச்சைகள் மற்றும் மோதல்களின் சுழலில் மட்டுமே மூழ்கடிக்கும். இன்றைய ஆசிய-பசிபிக் பகுதிக்கு திறந்த மற்றும் உள்ளடக்கிய ஒத்துழைப்பு தேவை. அனைத்து நாடுகளின் மக்களும் இரண்டு உலக போர்கள் கொண்டு வந்த கடுமையான பேரழிவுகளை மறந்து விடக்கூடாது. இது போன்ற சோகமான வரலாறு மீண்டும் வருவதை நாம் அனுமதிக்கக் கூடாது என்றார். தென்சீன கடல் பகுதியில் சீன ஆதிக்கம் செலுத்த முயற்சித்து வருகிறது. தைவானை தனது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இதற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து தைவானுக்கு ஆதரவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

“தந்தையின் குடிப்பழக்கமே என் சாவுக்கு காரணம்.” – சிறுமி தற்கொலை !

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை அடுத்த சின்னராஜாகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. கூலித்தொழிலாளியான இவருக்கு குடிப் பழக்கம் இருந்துள்ளது. இவரது மகள் விஷ்ணு பிரியா (16) குடியாத்தம் நெல்லூர்பேட்டை பகுதியில் உள்ள அரசு நிதி உதவி பள்ளியில் 10ம் வகுப்பு படித்து, பொதுத்தேர்வில் 410 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

 

இந்நிலையில் அடிக்கடி மது அருந்திவிட்டு வரும் தந்தையால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக அவரது மகள் விஷ்ணு பிரியா மன நிம்மதியின்றி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விஷ்ணு பிரியா நேற்று மாலை கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அக்கடிதத்தில், “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது தந்தை குடிப்பழக்கத்தை நிறுத்தி விட வேண்டும். எனது குடும்பம் எப்பொழுது மகிழ்ச்சியாக இருக்கின்றதோ அப்போது தான் எனது ஆத்மா சாந்தி அடையும்” என உருக்கமாக எழுதி வைத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவின் ஒடிசாவில் ரயில் விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரிப்பு !

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் பாலசோரில் ஏற்பட்ட புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 233 ஆக அதிகரித்து இருக்கிறது என்று ஒடிசா தலைமை செயலாளர் பிகே ஜெனா தெரிவித்துள்ளார்.

 

கிட்டத்தட்ட 900-க்கும் அதிகமானோர் பலத்த காயங்களுடன் ​வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

 

ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி புறப்பட்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புகையிரதம் யஷ்வந்த்பூர்- ஹவுரா அதிவேக எக்ஸ்பிரஸ் புகையிரதத்துடன் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது.

 

இந்த விபத்தில் 18-க்கும் அதிகமான புகையிரதபெட்டிகள் கவிழ்ந்து இருப்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

 

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

எரிக்கப்பட்ட யாழ்.நூலகமும் – எரியூட்டப்பட்ட திகதி தெரியாத தமிழர்களும் !

மே 31 இல் அரச பேரினவாதம் நூலகத்தை அழித்தது! தமிழர்கள் நூலகச் சிந்தனையை அழித்தனர்:

 

ஆண்டுகள் உருண்டோடி யாழ்ப்பாணப் பொதுநூலகம் எரிக்கப்பட்டு நாற்பதாவது ஆண்டு ஆகிவிட்டது. ஆண்டுகளைக் கடந்து செல்வது போல் எமது வரலாறுகளையும் பதிவுகளையும் கூட நாம் மிக எளிதில் கடந்து அல்ல பாய்ந்தே சென்றுவிடுகின்றோம். வேகத்திற்கு அளித்த மதிப்பை விவேகத்திற்கு அளிகாததால் தமிழ் சமூகம் இன்று தனது இருத்தலுக்கான அடிப்படைகளையே இழந்துகொண்டிருக்கின்றது. ‘செய் அல்லது செத்துமடி’ என்ற விவேகமற்ற கோசங்கள் என்னத்தையாவது செய்ய வேண்டும் என்பதற்காக எதையாவது செய்து ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி’ என்ற நிலையில் நிற்கின்றோம்.

 

இலங்கையில் தமிழ் அறிவுப்புலத்தின் மையப்புள்ளியாக யாழ்ப்பாணப் பொதுநூலகம் அமைந்தது. யாழ்ப்பாண நூலகம் பற்றிய குறிப்பு ஏப்ரல் 10 1894 இல் தி ஓவர்லன்ட் சிலோன் ஓப்சேர்வர் என்ற பத்திரிகையில் வெளியாகி இருந்தது. இது யாழ்ப்பாண நூலகத்தின் தொன்மையயை வெளிப்படுத்தி நிற்கின்றது. நூறாண்டுகளைக் கடந்த யாழ்ப்பாண நூலகத்தின் எழுச்சியும் வீழ்ச்சியும் யாழ்ப்பாண அறிவுப்புலத்தின் எழுச்சியயையும் வீழ்ச்சியயையும் பிரதிபலிக்கpன்றது. இது யாழ்ப்பாண அறிவுப்புலத்தை மட்டுமல்ல அச்சமூகத்தின் சிந்தனையையும் பிரதிபலிக்கும் ஒரு நிறுவனமாகவும் இலங்கைத் தமிழரின் அரசியல் நிலையின் பிரதிபலிப்பாகவும் அமைந்தது என்றால் மிகையல்ல.

இக்கட்டுரையை வீடியோ வடிவில் காண கீழே உள்ள Link ஐ Click செய்யுங்கள்..;

 

 

மீண்டும் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ உதவிகளை உக்ரைனுக்கு வழங்கும் அமெரிக்கா!

உக்ரைன் மீது ரஷ்யா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ம் திகதி போர் தொடுத்தது.

இந்தப் போர் தொடங்கி ஓராண்டையும் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்கள், தளவாட உதவிகளைச் செய்து வருகின்றன.

இந்நிலையில், உக்ரைனுக்கு புதிதாக சுமார் 300 மில்லியன் டொலர் மதிப்பிலான ராணுவ உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள், பீரங்கிக்கான வெடிமருந்துகள் ஆகியவையும் இத்தொகுப்பில் அடக்கம். அதிபர் ஜோ பைடன் இதற்கு ஒப்புதல் அளிக்க முடிவு செய்துள்ளார்.

இதேவேளை அமெரிக்கா தொடர்ந்தும் வழங்கும் போர்த்தளபாட உதவிகளே உக்ரைன் மீதான போருக்கான காரணம் என ரஷ்யா குற்றச்சாட்டி வருவதும் குறிப்பிடத்தக்கது.

திருடப்படும் வங்கித் தகவல்கள் – அன்ரோயிட் பயனாளர்களுக்கு எச்சரிக்கை!

கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கக் கூடிய 101 அண்ட்ரோய்ட் செயலிகளில் ஸ்பின்ஓகே(sipnok) என்னும் உளவு மென்பொருள் பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம் உலகின் பல்வேறு நாடுகளில் பலரது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கித் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த 101 செயலிகளில் “Noizz, zapya, share, VFly, MVbit, Biugo, Cashzine, Fizzo, Novel, Cash Em, Tick, Watch to Ean, Crazy drop gaming ஆகிய 10 செயலிகளை மட்டும் 2 கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த செயலிகள் மூலம் பயனர்களுக்கு தெரியாமலேயே அவர்கள் தகவல்கள் திருட்டுப் போக வாய்ப்புள்ளதால் இவற்றை உடனே அழித்துவிட(uninstall) வேண்டும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் பிளே ஸ்டோரில் இருக்கும் செயலிகளை கண்காணிக்கும் பணியில் பல்வேறு உளவு மென்பொருள் நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட்டுவருவதாக கூறப்படுகிறது.