செய்திகள்

செய்திகள்

செய்திகள்

இலங்கையின் தொழில் முயற்சியாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 30 பில்லியன் ரூபா நிதி !

தற்கால தலைமுறையை புதிய உலகிற்கு பொருத்தமான தொழில் முயற்சியாளர்களாக உருவாக்குவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தெரிவித்தார்.

வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து தொழில் முயற்சியாளர்களுக்காக 30 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்திருப்பதாகவும், தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சிறு மற்றும் மத்திய தர தொழில் முயற்சிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

நாட்டின் 2.8% தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் பொறுப்பு எம்மைச் சார்ந்துள்ளது. 2024 – 2028 வரையான காலப்பகுதியில் தொழில் முயற்சியாளர்களின் அளவை 10% ஆக உயர்த்துவதே எமது இலக்காகும். ஒவ்வொரு துறைகளின் கீழும் காணப்படும் சிறு மற்றும் மத்திய தரத்திலான துறைகளைப் பலப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம். அதற்காக அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்ளை ஒன்றிணைத்து பல வேலைத்திட்டங்களையும் ஆரம்பித்துள்ளோம்.

அதேபோல் சாதாரண தர பரீட்சையின் பின்னர் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமானோர் தொழில் சந்தைக்குள் நுழைகிறார்கள். இருப்பின் அவர்களுக்கான வாய்ப்பு தொழில் சந்தையில் கிடைப்பதில்லை. அதனால் அவர்களையும் தொழில் முயற்சியாளர்களாக மாற்றுவதே எமது நோக்கமாகும். முச்சக்கர வண்டியுடன் வீதியிலிறங்கும் சமுதாயத்தை அதிலிருந்து மீட்டெடுத்து உரிய தெரிவையும் பயிற்சிகளையும் வழங்குவதே எமது நோக்கமாகும்.

வரலாற்றில் முதன் முறையாக ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் இணைந்து சிறிய கடன் முன்மொழிவுகளின் கீழ் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கு அவசியமான மூலதனத்தை 2% சலுகை வட்டியின் கீழ் பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதோடு, அவர்களை புதிய உலகிற்கு பொருத்தமான தலைமுறையாக மாற்றுவதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினதும் எம்முடையதும் நோக்கமாகும்.

அதேபோல், உலகச் சந்தையில் 2024-2025 ஆண்டுக்காக விடுவிக்கப்படவுள்ள 789 பில்லியனிலிருந்து 1% பெற்றுக்கொள்ள முடியும் என்றாலும் அது நாட்டுக்கு கிடைக்கும் மிகப்பெரிய வெற்றியாகும்” என்று தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் – அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் மொத்தமாக 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சுகளுக்கான செலவீனத் தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது, மரண தண்டனை, ஆயுள் தண்டனை கைதிகள் தொடர்பில் அமைச்சர் சுட்டிக்காட்டியதாவது;

தங்களுடைய மரண தண்டனை தொடர்பில் 454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். அதில் 07 பேர் வெளிநாட்டுப் பிரஜைகள் ஆவர்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் 1206 மரண தண்டனை கைதிகள் உள்ளார்கள். இவர்களில் 744 பேருக்கான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

454 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள். 07 வெளிநாட்டு பிரஜைகள் மரண தண்டனை கைதிகளாக உள்ளனர். சிறைச்சாலைகளில் 346 ஆயுள் தண்டனை கைதிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் மேன்முறையீடு செய்துள்ளார்கள்.

அத்துடன், சிறைச்சாலைகளில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள 10784 கைதிகளில் 61.3 சதவீதமானோர் போதைப்பொருள் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாலஸ்தீன மக்களை கைது செய்யும் இஸ்ரேலிய படைகள் !

இஸ்ரேலிய படைகள் இன்றையதினம் 12 பாலஸ்தீன மக்களை அவர்களது வீடுகளிலும், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள சோதனைச் சாவடிகளிலும் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளதாக காசா தகவல்கள் தெரவிக்கின்றன.

ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்த பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 3415 ஆக உயர்வடைந்துள்ளதாக பாலஸ்தீனிய சிறைச்சாலைகள் திணைக்களம் மற்றும் பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

ஜோர்டானுக்கு சுற்றுப்பயணம் செய்து திரும்பிய ஒரு யுவதியையும் சோதனைச் சாவடியில் படைகள் தடுத்து வைத்ததாக அவர்கள் கூறினர்.

Nablus, Tubas, Jenin, Hebron மற்றும் Qalqilya ஆகிய பகுதிகளிலும் கைது நடவடிக்கை தொடர்ந்ததாக இரு அமைப்புகளும் தெரிவித்துள்ளன. அத்துடன் சோதனையிட்ட வீடுகளையும் படைகள் சூறையாடியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழுமையாக நீக்கப்படுகிறது இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை !

சர்வதேச கிரிக்கட் சபையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தற்போது சர்வதேச கிரிக்கெட் சபையுடன் தடையை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

சபையுடனான பேச்சுவார்த்தைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிறைவேற்று சபைக்கும் இலங்கைக்கு வருமாறு புதிய விளையாட்டுத்துறை அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மத்யூஸ் மற்றும் ஹசரங்க ஆகியோர் ஐ.பி.எல் ஏலத்தில் !

இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டி தொடர்பிலான வீரர்கள் ஏலத்தில், இலங்கை அணியின் சகலதுறை வீரர் ஏஞ்சலோ மத்யூஸ் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்க இருவரும் பெயரிடப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் இந்திய மதிப்பில் ரூபா இரண்டு கோடிக்கு ஏஞ்சலோ மத்யூஸ் பெயரிடப்பட்டுள்ளார்.

அதேபோன்று இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க, ஒன்றரை கோடி இந்திய ரூபா அடிப்படை ஏலத்துடன் இரண்டாவது பிரிவில் இடம்பிடித்துள்ளார்.

முடிவுக்கு வந்த போர் நிறுத்தம் – இஸ்ரேலிய தாக்குதலால் காசா பகுதியில் 178 பேர் பலி !

ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவமோ ஹமாஸ் பதுங்கிடம் என அடையாளம் காணப்பட்ட 200 இடங்களை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.

தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியை ஒட்டிய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு சாத்தியப்படாமல் போனதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாஸ் தெரிவித்துள்ளது. பிணைக் கைதிகளில் மேலும் சிலரை விடுவிப்பதாகவும், காசாவில் இறந்துபோன இஸ்ரேலியர்களின் உடல்களை ஒப்படைக்கவும் தாங்கள் முன்வந்தும் இஸ்ரேல் அதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

வயதானவர்களையும், போரில் இறந்த பிணைக் கைதிகளின் உடல்களையும் விடுவிக்கிறோம் என்றோம். இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய பிணைக்கைதி யார்டன் பிபாஸின் மனைவி, இரு சிறு குழந்தைகளின் சடலங்களையும், பிபாஸையும் விடுவிக்கிறோம் என்றும் கூறினோம். ஆனால் அவர்கள் திடீரென தாக்குதலைத் தொடங்கிவிட்டனர் என்று ஹமாஸ் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

ஆனால் ஹமாஸ் தாக்குதல்களால்தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. துபாயில் COP28 மாநாட்டுக்கு வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளின்கன் கூறுகையில், ”வியாழக்கிழமை ஜெருசலேமில் ஒரு பேருந்து நிலையத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டுள்ளது. அந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு ஹமாஸ் பொறுப்பேற்றது. வெள்ளிக்கிழமை இஸ்ரேல் எல்லையோர பகுதிகளைக் குறிவைத்து ஹமாஸ் 50 ராக்கெட்டுகளை ஏவியது. இதனால் தான் போர் நிறுத்த நீட்டிப்பு தடைபட்டது” என்று தெரிவித்தார்.

 

கடந்த மாதம் 7-ம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை அடுத்து இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இஸ்ரேல் தரப்பில் 1,200 பேர் உயிரிழந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாக காசாவில் இருந்தனர். இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் 15,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து நடந்து வந்த போர், கடந்த மாதம் 24-ம் தேதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் தொடர் முயற்சி காரணமாக ஒரு வார காலத்துக்கு போர் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டது. இந்த ஒரு வார காலத்தில், இஸ்ரேல் தரப்பில் இருந்து கைதிகள் சிலர் விடுவிக்கப்பட, பதிலுக்கு ஹமாஸ் தன்னிடம் இருந்த பிணையக் கைதிகளில் சிலரை விடுவித்தது. இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தாக்குதல் தொடங்கியது.

பிலிப்பைன்ஸில் தங்கம் வென்ற அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம் !

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி 2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார்.

இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

 

யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இத்தாலியில் மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் உறுப்புக்கள் தானமாக வழங்கப்பட்டன !

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மூளைச்சாவடைந்த இலங்கையர் ஒருவரின் இரண்டு சிறுநீரகங்கள், இதயம், கல்லீரல், நுரையீரல் மற்றும் இரண்டு கண்கள் ஆகியன  அந்நாட்டில் உள்ள நோயாளிகளுக்கு தானமாக வழங்கப்பட்டுள்ளன.

image

அவரது மனைவி, தாய் மற்றும் இரு சகோதரர்களின் இணக்கத்துடனேயே  அவரது உடலுறுப்புகள் தானமாக  வழங்கப்பட்டன.

ஷமில பெர்னாண்டோ என்ற 35 வயதுடைய நபரின்  உடல் உறுப்புகளே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளனர்.

இவரது  மனைவி கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நாடு திரும்பியதாகவும், இரண்டு சகோதரர்கள் பல வருடங்களாக இத்தாலியில் பணிபுரிவதாகவும்  தெரிய வருகிறது.

 

உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில் காலநிலை எதிர்ப்பு போராட்டம் – 109 பேர் பொலிஸாரால் கைது !

உலகின் மிகப்பெரிய நிலக்கரி துறைமுகத்தில், இரண்டு நாட்கள் காலநிலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு அப்பகுதியை முற்றுகையிட்ட 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் நியூகேஸில் துறைமுகத்தின் கப்பல் பாதையை ஆக்கிரமித்து, போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான ஆர்வலர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

அரை மில்லியன் டன் நிலக்கரி நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடை செய்ததாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அவுஸ்ரேலியா முழுவதிலும் இருந்து சுமார் 3,000 பேர் அதன் கப்பல் பாதையின் 30 மணி நேர வார இறுதி முற்றுகையில் பங்கேற்றனர், இந்தப் போராட்டம் பொலிஸாரால் அங்கீகரிக்கப்பட்டிருந்த போதும், டசன் கணக்கான எதிர்ப்பாளர்கள் போராட்ட எல்லையை மீறி தண்ணீரில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இதனால், 109 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைதுசெய்யப்பட்ட ஐந்து சிறார்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

திங்களன்று, நியூ சவுத் வேல்ஸ் பொலிஸாரின் அறிக்கையின்படி, துறைமுக கால்வாயை விட்டு வெளியேற மறுத்ததற்காக 104 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவுஸ்ரேலியா உலகின் இரண்டாவது பெரிய நிலக்கரி ஏற்றுமதியாளராக உள்ளது மற்றும் அதன் சொந்த மின்சார தேவைகளுக்கு புதைபடிவ எரிபொருளை நம்பியுள்ளது.

சிட்னியிலிருந்து சுமார் 170 கிமீ (105 மைல்) தொலைவில் அமைந்துள்ள நியூகேஸில் துறைமுகம் நிலக்கரி ஏற்றுமதிக்கான நாட்டின் மிக முக்கியமான முனையமாகும்.

 

அமெரிக்காவில் மூன்று பாலஸ்தீனிய மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் !

அமெரிக்காவின் வேர்மன்டில் உள்ள பல்கலைகழகமொன்றிற்கு அருகில் மூன்று பாலஸ்தீனிய மாணவர்களை இலக்குவைத்து துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

வேர்மன்ட் பல்கலைகழக வளாகத்தில் நபர் ஒருவர் பாலஸ்தீன மாணவர்கள் மூவர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அராபிமொழியில் உரையாடிக்கொண்டிருந்தவேளை அராபிய ஸ்கார்வ் அணிந்திருந்தவேளை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது ஒருவர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளார் சந்தேகநபரை தேடிவருகின்றோம் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெறுப்புணர்வின் காரணமாக இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என குடும்பத்தவர்கள் வேண்டுகோள் விடுத்ள்ளனர்.