செய்திகள்

செய்திகள்

செய்திகள்

வட பகுதியில் இணக்கச் சபைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன

வட பகுதியில் இணக்கச் சபைகளை ஆரம்பிக்க நீதிமற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. முதற்கட்டமாக வவுனியா தெற்கு பிரதேச செயலாளர் பிரதேசத்துக்கு இணக்க சபையை அமைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கான பயிற்சி நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு ஆசிய மன்றத்தின் ஆணையாளர் அலு வலகம் அனுசரணை வழங்கியுள்ளது.

வட பகுதியில் இதுவரை காலம் இடம்பெற்று வந்த யுத்த சூழ்நிலை காரணமாக அங்கு இணக்க சபைகளை ஆரம்பிக்க முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

”சிவாஜிலிங்கம், சிறிகாந்தா அமைப்பில் இருந்து நீக்கப்பட்டது என வெளியான செய்தி மோசடியானது” ரெலோ தலைவர்

Selvam Adaikalanathan TNA_TELOஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் அண்மிக்க அண்மிக்க தேர்தல் பிரச்சாரங்கள் சேறடிப்புப் பிரச்சாரங்களாகவும் மாறி வருகின்றது. இரு பிரதான வேட்பாளர்களும் தங்கள் கொள்கையினதும் நன்மதிப்பின் அடிப்படையில் வாக்கு கேட்பதற்குப் பதிலாக மற்றவரின் பலவீனத்திலும் மற்றவரை குற்றம்சாட்டுவதன் மூலமும் தங்களைப் பலப்படுத்த முயல்கின்றனர். இந்த சேறடிப்புப் போட்டியில் தமிழ் ஊடகங்களும் தங்களை இணைத்துக் கொண்டுள்ளன. இதன் ஒரு வெளிப்பாடாக சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம் கெ சிவாஜிலிங்கம் அவர் அங்கம் வகித்த ரெலோ அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மோசடியான செய்தி பரவலாக வெளியிடப்பட்டுள்ளது.

‘தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் மற்றும் ஸ்ரீகாந்தா ஆகியோர் தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) அமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலளார் பிரசன்னா ஆகியோர் கையொப்பமிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்’ என அச்செய்திகள் தெரிவிக்கின்றன. ‘குறித்த இருவரும் கட்சியின் அனைத்து பதவி நிலைகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்’ என்றும் அச்செய்தி தெரிவிக்கின்றது. இச்செய்தி கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திரிகையொன்றிலும் அதனைத் தொடர்ந்து இணைய ஊடகங்களிலும் பிரித்தானியத் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிலும் வெளியிடப்பட்டு உள்ளது.

‘கட்சியின் நிலைப்பாட்டிற்கு முரணாக சிவாஜிலிங்கம் ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடத் தீர்மானித்தமை தொடர்பில் அவர் மீது கட்சி தலைமை நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவு வழங்கியமை காரணமாக ஸ்ரீகாந்தா கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்’ என்றும் அச்செயிதியில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

பெரும்பாலும் எதிர்க்கட்சி வேட்பாளர் சரத்பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் இந்த ஊடகங்கள் எம் கெ சிவாஜிலிங்கத்திற்கு கிடைக்கும் வாக்குகளைத் தடுப்பதற்காகவே இவ்வாறான பிரச்சாரங்களில் ஈடுபடுவதாக லண்டனில் உள்ள எம் கெ சிவாஜிலிங்கத்தின் ஆதரவாளர் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

இச்செய்தி தொடர்பாக ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்பு கொண்ட போது இச்செய்தி முற்றிலும் மோசடியானது எனத் தெரிவித்தார். இச்செய்தியை வெளியிட்ட ஊடகங்கள் அதனை வெளியிடுவதற்கு முன் தன்னுடன் அச்செய்தியின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த தவறி இருந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். இத்தவறான செய்தி தொடர்பான அறிக்கை விரைவில் ரெலோ அமைப்பினரால் வெளியிடப்படும் எனவும் அவர் கூறினார்.

ரெலோ இயக்கத்தினுள் பிளவை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான முயற்சிகளை வன்மையாகக் கண்டித்த அவர் ரெலோ அமைப்பின் பழமையான திருமலை மாவட்ட லெற்றர் ஹெட்டில் எழுதப்பட்டு தனது கையொப்பத்தை இட்டு அனுப்பப்பட்ட அறிக்கையை ஆதாரமாகக் காட்டியே இச்செய்தி வெளியிடப்பட்டதாகவும்  அக்கையொப்பம் தன்னுடையதல்ல அது மோசடியானது என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளிக்க முன்வந்த போதும் பெரும்பாலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யத் தயங்குகின்றனர். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு பிரவு சரத் பொன்சேகாவுக்கும் இன்னுமொரு பிரிவு மகிந்த ராஜபக்சவுக்கு மறைமுகமாகவும் மற்றுமொருபிரிவு சுயேட்சை வேட்பாளர் எம் கெ சிவாஜிலிங்கத்துக்கு ஆதரவாகவும் செயற்படுகின்றது.

இம்மோசடிச் செய்தி எம் கெ சிவாஜிலிங்கத்தின் மீதான ஒரு சேறடிப்பு முயற்சியாகவே அமைந்துள்ளது.

பிரதியமைச்சர் வீடு மீது கிரனேட் தாக்குதல் : சாரதி பலி.

இன்று மாலை 7.00 மணியளவில் குருநாகல், வேகெர பிரதேசத்திலுள்ள பிரதி அமைச்சர் ஜெயரத்தின ஹேரத்தின்  வீட்டுடன் இணைந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அலுவலகத்தின் மீது கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் அமைச்சரின் சாரதி டி.எம் சுரங்க இந்திரஜித் (27) உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.  நேற்றிரவு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவர் இரும்புக் கம்பிகளால் அடித்தும் துப்பாக்கியால் சுட்டும் கொல்லப்பட்டதன் எதிரொலியாகவே இச்சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகின்றது.

முஸம்மிலுக்கு பணம் வழங்கியமைக்கு எதிராக இன்று சட்ட நடவடிக்கை -ஒலிப்பதிவு ஆவணங்களும் ஊடகங்களுக்கு விநியோகம்

mohomad-muzzammil.gifசரத் பொன்சேக்காவை ஆதரித்து அவரது ஊழல் மோசடிகளை மூடிமறைக்கக் கோரியும் முஸம்மில் எம்.பி.க்கு மில்லியன் கணக்கில் பணத்தை வழங்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்  பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

உரிய சட்ட நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர்  இன்று முதல் இதற்கான நடவடிக்கை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேற்படி விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் விசேட செய்தியாளர் மாநாடு பத்தரமுல்லையிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்றது. இலஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் கைமாறியமை தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டதைப் போன்று சம்பவத்துடன் தொடர்புடைய பேச்சுக்கள் இடம்பெற்ற ஒலி நாடாக்கள் நேற்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒலிபரப்பிக் காண்பிக்கப்பட்டது.

சரத் பொன்சேகாவுக்கு முஸம்மில் எம்.பி.யின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான இடைத்தரகராக செயற்பட்ட மயோன் முஸ்தபா எம்.பி. முஸம்மில் எம். பி.யுடன் பேரம் பேசுவதை அதில் கேட்கக் கூடியதாக இருந்தது.

அதேபோன்று, கடந்த 14ம் திகதி இராஜகிரியவிலுள்ள ஐ. தே. க. அலுவலகம் ஒன்றில் வைத்து ஐ. தே. க. முக்கியஸ்தரான மலிக் சமரவிக்ரம முஸம்மில் எம்.பி.யுடன் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார்.

மயோன் முஸ்தபா ஹாபிஸ் நஸீர் அஹமட் (துஆ தலைவர்) மற்றும் சரத் என்று அழைக்கப்படும் ஐ. தே. க.வின் மற்றுமொரு முக்கியஸ்தர் ஆகியோர் இணைந்து நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையை முஸம்மில் எம்.பி. மிகவும் இரகசியமான முறையில் தனது உடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நவீன ஒலிப்பதிவு இயந்திரம் மூலம் பதிவுசெய்துள்ளார். இந்த உரையாடலையும் இங்கு அவர் ஒலிபரப்பிக் காண்பித்தார்.

சரத் பொன்சேகாவின் ஆயுத ஊழல் மோசடிகளை மூடிமறைக்கவும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்சவுக்கு எதிராகவும், சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதற்கான அறிவித்தலை முஸம்மில் எம்.பி. ஊடாக வெளியிடுவது தொடர்பாக இங்கு கலந்துரையாடியதை கேட்கக்கூடியதாக இருந்தது.

இதற்கான செய்தியாளர் மாநாட்டை நடத்தும் இடம் தொடர்பான முரண்பாடுகள் வந்ததையடுத்து அதனை எங்கு நடத்துவது என்பது தொடர்பாக ஐ. தே. க. முக்கியஸ்தர் மலிக் சமரவிக்ரம அந்த இடத்திலிருந்தவாறே ரவி கருணாநாயக்க எம்.பி.யுடன் தொலைபேசி மூலம் பேசுவதையும், மருதானை டீன்ஸ் வீதியிலுள்ள ஒரு இடத்தில் இந்த செய்தியாளர் மாநாட்டை நடத்த ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமையையும் அந்த ஒலி நடாவிலிருந்து கேட்கக் கூடியதாக இருந்தது. ஒலிபரப்பி காண்பிக்கப்பட்ட உரையாடல்கள் சி.டி.க்களில் பதிவு செய்யப்பட்டு ஊடகங்களுக்கு இந்த செய்தியாளர் மாநாட்டில் வழங்கப்பட்டது.

இந்த மாநாட்டில் விமல் வீரவன்ச எம்.பி. தகவல் தருகையில் :-

மிகவும் பொறுப்புடனும், ஆதாரபூர்வமாகவும் இந்த தகவல்களையும் இதனுடன் சம்பந்தப்பட்ட ஒளி, ஒலி நாடாக்களையும் நாங்கள் வெளியிடுகின்றோம். சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குமாறு தனக்கு தொடர்ந்து அழுத்தங்கள் தொலைபேசி அழைப்புக்கள் வருவதாக முஸம்மில் என்னிடம் தெரிவித்தார். அதனையடுத்து நாங்கள் திட்டமிட்ட சில செயற்பாடுகளை முன்னெடுத்தோம்.

இந்த நாட்டிலுள்ள மக்கள் பிரதிநிதிகளை வாங்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்குடன் எனது ஆலோசனைக்கமைய நாட்டுக்காக முஸம்மில் எம்.பி. மிகவும் போராட்டத்திற்கு மத்தியில் காட்சிகளையும் பேச்சுக்களையும் ஒளி, ஒலிப்பதிவுகளை செய்துள்ளார்.

இவற்றில் உண்மையில்லை என்று கூறும் எவரும் இதனை உறுதிப்படுத்த முடியும். நாங்கள் தயாராக உள்ளோம். உண்மையானதும், தகுந்த ஆதாரங்களும் இருப்பதால் எந்தவித தயக்கமும் இன்றி சட்டத்தின் முன் இதனை முன்வைக்கவுள்ளோம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இதற்கான சகல சட்ட நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம்.

பணம் தருவதாக பேரம் பேசப்பட்டுள்ள போதிலும் ஒரு தொகைப் பணத்தையே முற்பணமாக கொடுத்துள்ளனர். இதற்காக வெள்ளவத்தையிலுள்ள சபயார் ஹோட்டலில் இரண்டு அறைகள் எடுக்கப்பட்டுள்ளன. 105ம் இலக்க அறை முஸம்மில் எம்.பி.க்காகவும், 102ம் இலக்க அறை அவரது மெய்பாது காவலர்களுக்காகவும் எடுக்கப்பட்டுள்ளது. மயோன் முஸ்தபா, தனது பெயர், அடையான அட்டை இலக்கம் ஆகிய தகவல்களை வழங்கி இந்த இரு அறைகளை பதிவு செய்துள்ளமை ஹோட்டல் பதிவு மூலம் தெளிவாக உறுதியாகின்றது.

எம்.பி.க்களை பணம் கொடுத்து வாங்கும் விடயம் மிகவும் பாரதூரமான விடயமாகும். சரத் பொன்சேகா தான் ஊழல் அற்றவர் என்றும் தன்னுடன் இருப்பவர்களும் நேர்மையானவர்கள் என்றும் கூறித் திரிகின்றார். இலஞ்சம் கொடுத்து எம்.பி.க்களை வாங்குபவர்களிடமிருந்து எவ்வாறு நல்லாட்சியை எதிர்பார்க்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஏகாதிபத்தியவாதிகள் தங்களுக்குத் தேவையானதை இந்த நாட்டில் நிலைநாட்ட முயற்சிக்கின்றனர். மேற்கத்திய நாடுகளின் பணங்கள் மூலம் இந்த நாட்டு மக்களின் தீர்மானத்தை ஒருபோதும் மாற்ற முடியாது. எனவே, மக்கள் ஒருபோதும் இதனை அனுமதிக்கப் போவதில்லை என்றார்.

முஸம்மில் எம். பி.

சில ஊடகங்கள் கூறுவது போன்று பணத்தைப் பெறும் நோக்கம் இருந்தால் அந்த காட்சிகளையும், பேச்சுவார்த்தைகளையும் ஒளி, ஒலிப்பதிவு செய்ய வேண்டிய தேவையில்லை என்று முஸம்மில் எம்.பி. தெரிவித்தார்.  இது போன்ற இலஞ்சம் கொடுக்கும் திட்டங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே திட்டமிட்டுச் சென்றேன் என்று அவர் குறிப்பிட்டார்.

எமது திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்றுவதற்காக அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் நடிக்க வேண்டி ஏற்பட்டது.  இதற்காக பொன்சேகாவுக்கு ஆதரவாக சில பொய்களை சொல்ல நேர்ந்ததாக முஸம்மில் தெரிவித்தார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு; ‘கொமான்டோ படையினர் வேண்டுமா? அல்லது என்னிடம் பாதுகாப்பு ஆட்கள் உள்ளனர். எது வேண்டும் என்று ரவி கருணாநாயக்க எம்.பி. கேட்டுள்ளார்.

மயோன் முஸ்தபாவுடனான ஒலி நாடா உரையிலும் இதனை கேட்கக்கூடியதாக இருந்தது.

கடந்த 5ம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து இந்த பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்த முஸம்மில், உங்களைப் பற்றி தலைவரிடம் சொல்லியுள்ளேன். இன்னும் சில முக்கியஸ்தர்கள் வரவுள்ளனர். சகலருக்கும் பணம் கொடுக்க தயாராக உள்ளோம் என்றும் தெரிவித்தார். சரத் பொன்சேகா, ரணில், ஜே. வி. பி. மற்றும் முக்கியஸ்தருக்கு இந்த விடயங்கள் தொடர்பாக தெரியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டுக்கு எதிரான முதலாவது ஒப்பந்தத்தை நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து ஒழித்தேன் 2வது ஒப்பந்தத்தை ஒழிக்கும் பொறுப்பு மக்களுடையது – ஜனாதிபதி

mahinda.jpgதாய் நாட்டுக்கெதிரான முதலாவது ஒப்பந்தத்தை நான் நிறைவேற்று ஜனாதிபதியாகவிருந்து இல்லாதொழித்தேன். இரண்டாவது ஒப்பந்தத்தை இல்லாதொழிக்க வேண்டிய பொறுப்பு நாட்டு மக்களுடையதெனவும் அதனை எதிர்வரும் 26ம் திகதி மக்கள் நிறைவேற்றுவரெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வன்முறைக்கும் விரோத அரசியலுக்கும் இனி இந்த நாட்டில் இடமில்லையென தெரிவித்த ஜனாதிபதி, பயங்கரவாதத்திலிருந்து மீட்டு ஒன்றிணைந்துள்ள நாட்டைப் பாதுகாத்து ஜனநாயகத்தையும் பாதுகாப்பது மக்களின் பொறுப்பு எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று குருநாகல் நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.  ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

மதுரங்குழி பகுதியில் எமது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் ஐயர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். மீண்டும் வன்முறை யுகம் கட்ட விழ்க்கப்பட்டுள்ளது.

இதனை முடிவுக்குக் கொண்டுவரவும் இரகசிய ஒப்பந்தங்களுக்கு முடிவு கட்டவும் எதிர்வரும் 26ம் திகதி மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

கடந்த நான்கு வருடத்திற்கு முன்னர் இந்த நாட்டை மீட்டு ஐக்கியப்படு த்துவதற்காக மக்கள் இந்த நாட்டைப் பாரம்கொடுத்தார்கள். அதனை நான் முழுமையாக நிறைவேற்றியுள்ளேன்.

தனி நிர்வாக அதிகாரத்துடன் அடையாள அட்டையிலிருந்து சகலதையும் தமக்கென தனியாக வைத்திருந்த பயங்கரவாதியிடமிருந்து நாட்டை மீட்டு தற்போது ஒரு கொடியின் கீழ் அனைத்தையும் கொண்டுவர முடிந்துள்ளது. வெளிநாடுகளுக்கு அடிபணிந்து முதுகெலும்பில்லாமல் எம் தலைவர்கள் செயற்பட்ட யுகத்துக்கும் முடிவு காணப்பட்டுள்ளது.

நாம் யுத்தத்தை மாத்திரம் முன்னெடுக்கவில்லை. நாட்டில் அபிவிருத்தியையும் மேற்கொண்டோம். அத்துடன் அரச துறையை மேம்படுத்தும் வகையில் ஆறு இலட்சமாகவிருந்த அரச ஊழியர்களின் எண்ணிக்கையை 12 இலட்சமாக அதிகரிக்க எம்மால் முடிந்துள்ளது. நாம் இந்த நாட்டை ஆசிய பிராந்தியத்திலேயே பெறுமதிமிக்க நாடாக மாற்ற பின்புலத்தைக் கட்டியெழுப்பியுள்ளோம். வடக்கு கிழக்கு உட்பட சகல பிரதேசங்களையும் அபிவிரு த்தியில் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

எம்மைப் பற்றி பல அவதூறுகள், சேறு பூசுதல்கள் இடம்பெறுகின்றன. எம்முடனுள்ள விமல் வீரவன்ச, ஜோன்சன் பெர்னாண்டோ போன்றவர்களுக்கும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன. எந்தவித சவால்களையும் ஏற்க நாம் தயார். வைராக்கியமும் குரோதமும் நிறைந்த அரசியலுக்கு இந்த நாட்டில் இனி இடமில்லை. நாமும் நாட்டு மக்களும் அதற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

பணத்திற்கு விலைபோகும் அரசியல்வாதிகள் எம்மிடமில்லை.  முஸம்மிலை விலைபேசியுள்ள விடயம் அம்பலமாகியுள்ளது.

மாகாண சபை தேர்தல்களுக்கு விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்த முடியும்

election_box.jpgமாகாண சபைத் தேர்தல்களுக்காக விநியோகிக்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை மீள வழங்காது வைத்திருக்கும் வாக்காளர்கள் அவற்றை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் பயன்படுத்த முடி யும் எனத் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு ள்ளது.

2007 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைத் தேர்தல்களுக்காகத் தேர்தல்கள் தலைமையகம் தற்காலிக அடையாள அட்டைகளை வாக்காளர்களுக்கு விநியோகித்தது. எனினும் அந்த அடையாள அட்டைகளைத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம்

மீள ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான வாக்காளர்கள் அந்தத் தற்காலிக அட்டைகளை மீள ஒப்படைக்காது தம்மிடமே வைத்துள்ளனர்.

இந்நிலையில், கிழக்கு மாகாணத்தைத் தவிர்ந்த வாக்காளர்கள் மீள ஒப்படைக்காமல் வைத்திருக்கும் தற்காலிக அடையாள அட்டைகளை இந்த ஜனாதிபதித் தேர்தலில் பயன்படுத்த தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலதிக ஆணையாளர்கள் உதவி ஆணையாளர்கள் ஆகியோர் பங்குபற்றிய கூட்டத்தில் தேர்தல்கள் ஆணையாளர் இந்த முடிவை அறிவித்ததாக மேலதிக ஆணையாளர் டபிள்யூ. பீ. சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் தலைமையகம் விநியோகிக்கும் தற்காலிக அட்டைகளைப் பெற்றுக்கொள்வத ற்காக விண்ணப்பிக்கும் கால அவகாசம் கடந்த 15 ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. எனினும் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் வழங்கும் தற்காலிக அட்டைகளைப் பெறுவதற்கு எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விண்ணபிக்க முடியும் என்று மேலதிக ஆணையாளர் சுமணசிறி தெரிவித்தார்.

தேர்தல்கள் தலைமையகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதால் ஜனாதிபதித் தேர்தலில் அடையாள அட்டையின்றி வாக்களிக்க முடியாது என எந்த வாக்காளரும் ஆதங்கப்பட வேண்டியதில்லை என்றும் மேலதிக ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்கு வாக்காளர்கள் தமது ஆளடையாளத்தை நிரூபிப்பதற்காக தேசிய அடையாள அட்டையைத் தம்முடன் கொண்டு செல்ல வேண்டும். அது இல்லாதவர்கள், காலாவதியாகாத கடவுச் சீட்டு, காலாவதியாகாத சாரதி அனுமதிப்பத்திரம், ஓய்வூதிய அடையாள அட்டை, முதியோர் அடையாள அட்டை, ஆட்பதிவுத் திணைக்களம் வழங்கும் மத குருமார்களுக்கான அடையாள அட்டை, தற்காலிக அட்டை அல்லது தேர்தல்கள் தலைமையகம் வழங்கும் தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றைப் பயன்படுத்தி வாக்களிக்க முடியும் என்றும் தேர்தல்கள் தலைமையகம் அறிவித்துள்ளது.

த.தே.கூட்டமைப்பு நா. உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காயம்

chandrakanth-chandranehru.jpgதமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன், இன்று தமது துப்பாக்கி தவறுதலாக வெடித்ததன் காரணமாக காயமடைந்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் திருக்கோவிலில் உள்ள அவரது வீட்டில் இடம்பெற்றுள்ளது.
 
பாதுகாப்புக்காக அவர் தம்வசம் வைத்திருந்த கைத்துப்பாக்கி வெடித்தமையால் அவரது தொடையில் காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

கிங்ஸ் லெவன் அணியின் தலைவராக சங்கக்கார

kumar.jpgஐ.பி.எல்., அணிகளுள் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமைப் பொறுப்பிலிருந்து இந்தி யாவின் யுவராஜ் சிங் நீக்கப்பட்டார்.

புதிய தலைவராக இலங்கையின் சங்கக்கார தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்தியன் பிரிமியர் லீக் சார்பில் (ஐ.பி.எல்.) 3 வது “டுவென்டி-20” கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 12 முதல் ஏப். 25 ஆம் திகதி வரை இந்தியாவில் நடக்க உள்ளது.  இத்தொடரில் பங்கேற்கும் 8 அணிகளுள் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ஒன்று. கடந்த 2 தொடர்களில் இந்த அணியின் தலைவராக யுவராஜ் சிங் செயல்பட்டார்.

ஆனால் இந்த முறை தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியின் புதிய தலைவராக இலங்கை அணி வீரர் சங்கக்கார தெரிவு செய்யப் பட்டுள்ளார். இது குறித்து அணியின் தலைமை நிர்வாக அதிகாரி அனில் ஸ்ரீவத்சவா கூறுகையில்,

“யுவராஜ் சிங்கிற்கு பதில் 3 வது ஐ.பி.எல். தொடரில் சங்கக்கார அணியை வழிநடத்துவார். இதன் மூலம் அணியின் பலம் அதிகரிக்கும் என நம்புகிறோம். கடந்த இரண்டு தொடர்களில் அணியின் தலைவராக யுவராஜ் சிங் சிறப்பாக செயல்பட்டார். அவரது தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலாவது முறை அரையிறுதி வரை முன்னேறி அசத்தியது.

அணியின் தலைமைப் பதவியிலிருந்து அவரை நீக்குவதால், அவர் மீது நம்பிக்கை இல்லை என்று அர்த்தம் இல்லை. அணியில் அவருக்கு என தனி இடம் உண்டு” என்றார். இது குறித்து சங்கக்கார கூறியதாவது, கடந்த இரண்டு தொடர்களில் யுவராஜ் சிங்கின் தலைமையில் விளையாடியது மகிழ்ச்சி அளித்தது.

அவர் மிகச் சிறந்த தலைவர் தவிர எனது நல்ல நண்பர். அணி நிர்வாகத்தின் புதிய முடிவு குறித்து அவரிடம் பேசினேன். அதற்குப் பின் தான் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக முடிவு செய்தேன்.

இதனால் எந்தப் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முக்கிய வீரர் யுவராஜ். ஆட்டத்தின் போக்கை அவரால் எந்த சமயத் திலும் மாற்ற முடியும் இவ்வாறு சங்கக்கார கூறினார்.

தலைமைப் பொறுப்பிலிருந்து யுவராஜ் நீக்கப்பட்டது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளர் டாம் மூடி கூறுகையில்,

“யுவராஜ் துடுப்பாட்டத்தில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என அணி நிர்வாகம் விரும்புகிறது. தலைமைப் பொறுப்பு அவரது செயல்பாடுகளுக்குப் பாதிப்பாக அமைந்துவிடக் கூடாது.

வீரர்களுக்கும் அணி நிர்வாகத்துக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அனைவரும் இணைந்து சிறப்பாக தயாராகி வருகிறோம். அணி நிர்வாகத்தின் முடிவை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டுள்ளார் யுவராஜ்” என்றார்.

அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் இன்று

sania-mirza.jpgஅவுஸ் திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்று இந்தியாவின் சானியா மிர்சாவுக்கு சவாலானதாக அமைந்துள்ளது. ஆண்டின் முதல் கிராண்ஸ்லாம் தொடரான அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடர் இன்று மெல்போர்னில் நடக்கிறது. இதில் உலகின் முன்னணி வீரர்கள் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஸ்பெயினின் ராபெல் நடால் மற்றும் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், டினரா சபினா (ரஷ்யா), இவானோவிச் (செர்பியா) போன்ற வீராங்கனைகளும் பங்கேற்க உள்ளனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, கடந்த ஆண்டு இரண்டாம் சுற்று வரை முன்னேறினார்.

இம்முறை இவருக்கு முதல் சுற்று போட்டி, கடினமானதாக இருக்கும் என தெரிகிறது. தர வரிசையில் 56வது இடத்தில் இருக்கும் இவர், 26வது இடத்தில் உள்ள பிரான்சின் அரவானே ரேசாயை சந்திக்கிறார். இதற்கு முன் இருவரும் மூன்று முறை மோதியுள்ளனர். இதில் இருவரும் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளனர்.

அனுர பிரியதர்ஷன யாப்பா கட்சித்தாவல் ஒரு வதந்தியே

anu.jpgஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டோ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட்டோ ஒருபோதும் நான் விலகிச் செல்லப் போவதில்லை என அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.  ஊடகத்துறை அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா நேற்று முன்தினம் குளியாப்பிட் டியவில் செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினார். இச்செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ போன்ற ஜனநாயகத் தலைவர் ஒருவரை விட்டு ஏகாதிபத்திய தலைவரின் தலைமையின் கீழ் இயங்கும் ஒரு அரசியல் கட்சியின் நீரோட்டத்தில் கலந்து கொள்ளப்போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

கட்சியின் சிரேஷ்ட உபதலைவர்களுள் ஒருவராக கட்சிக்குள்ளும்,  கட்சியின் தலைவரிடம் வரவேற்கும் நன்மதிப்பும், இருக்கிறது என சுட்டிக்காட்டிய அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா தான் வேறு அரசியல் நீரோட்டத்தில் கலக்கப் போவ தாக பரவியுள்ள வதந்திகளில் உண்மை யில்லை என்றும் அவற்றை தான் வன்மை யாகக் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.