செய்திகள்

செய்திகள்

செய்திகள்

உஷ்ணமான காலநிலை சில தினங்களுக்கு நீடிக்கும் – காலநிலை அவதான நிலையம் தகவல்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நிலவிவரும் உஷ்ணமான காலநிலை இன்னும் சில தினங்களுக்கு நீடிக்குமென காலநிலை அவதான நிலையம் தெரிவித்தது.

இலங்கைக்கு நேரே சூரியன் உச்சம் கொடுத்தனாலும் காற்றின் திசை மாறியதன் காரணமுமாகவே கடந்த சில திங்களாக நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உஷ்ணமான காலநிலை நிலவி வருகிறது.

இன்னும் ஓரிரு தினங்களில் மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் பிராந்தியங்களில் மாலை வேளைகளில் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் இதனோடு உஷ்ணமான காலநிலை குறைவடையும் எனவும் காலநிலை அவதான நிலையம் கூறியது. மே மாதத்திலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடைக்கிடை மழை பெய்யும் எனவும் அறிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு பாதுகாப்பு வலயத்தில் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு

mullaitheevu.jpgமுல்லைத் தீவில் பாதுகாப்பு வலயப் பகுதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக மாவட்ட மேலதிக அரச அதிபர் பா.பார்த்தீபன் தெரிவித்துள்ளதுடன்  நாளை கப்பல் மூலம் அனுப்பப்படவுள்ள உணவு மூலம் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியுமெனவும் அவர் தெரிவித்தார். முல்லைத்தீவு அரச கட்டுப்பாடற்ற பாதுகாப்பு வலயத்தினுள் உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதனால் இடம்பெயர்ந்துள்ள மக்கள் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளனர்.

இங்கு சீனி ஒரு கிலோ 2,500 ரூபாவாகவும் தேங்காய் ரூபா 1,400 க்கும் விற்கப்படுகின்றது. இதேவேளை ஒரு கிலோ செத்தல் மிளகாய் 12,000 ரூபாவாக விற்கப்படுகின்றது.

குறிப்பாக அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி ஒரு கிலோ 400 ரூபாவுக்கு விற்கப்படும் அதேநேரம் குழந்தைகளுக்கான பால்மா 2,200 ரூபாவுக்கு விற்கப்படுகின்றது. நாளை செவ்வாய்க்கிழமை இங்கு உணவு அனுப்புவதற்காக திருகோணமலையில் கப்பலில் உணவு ஏற்றப்படுகின்றது. இம்முறை 1,000 முதல் 1,100 மெற்றிக் தொன் உணவுப் பொருள் அனுப்பப்படுமென தெரியவருகின்றது.

இதன் மூலம் இங்குள்ள உணவுத் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளிக்கலாம். மண்ணெண்ணை இங்கு இல்லை. இங்குள்ள மக்கள் மலசலகூடம், நீர் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, வெள்ளிக்கிழமை கிறீன் ஓசன் கப்பல் மூலம் 466 பேர் மேலதிக சிகிச்சைக்காக புல்மோட்டைக்கு அழைத்துவரப்பட்ட நிலையில் சனிக்கிழமையும் சுமார் 500 பேர் மேலதிக சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

பாதுகாப்பு வலயமாக அறிவிக்கத்திட்டம்

sri-lanka-army.jpg மேல் கொத்மலை நீர்மின் திட்டத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு தலவாக்கலை லிந்துலை நகர சபைக்கு உட்பட்ட பகுதியும் அதிகூடிய பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தக் கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

150 மெகாவோட்ஸ் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்காக அமுல்படுத்தப்பட்டு வருகின்ற மேல்கொத்மலைத் திட்டப் பிரதேசம் ஏற்கனவே முக்கிய பாதுகாப்பு பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தூதரக உறவை சோனியா காந்தி துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் அறிவிக்காவிட்டால் கண்டன போராட்டம் நடத்தப்படும் : பாரதிராஜா

bharathi-raja.jpgஇலங்கை தூதரக உறவை துண்டிப்பதாக 20-ந் தேதிக்குள் சோனியா காந்தி அறிவிக்காவிட்டால், 23-ந் தேதி முதல் தொடர் கண்டன போராட்டங்கள் நடத்தப்படும் என்று டைரக்டர் பாரதிராஜா அறிவித்துள்ளார்.
 
தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவர் பாரதிராஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். உலக நாடுகள் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகிறது. போரை நிறுத்த வேண்டும் என்று தமிழக அரசு கேட்டது, அனைத்து கட்சிகள் கேட்டன, பல்வேறு சங்கங்கள், அமைப்புகள், வக்கீல்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் போராடினார்கள். பலர் தீக்குளித்து மாண்டனர்.

ஆனால் மத்திய அரசு நினைத்திருந்தால் உடனடியாக போரை நிறுத்த முடியும். அதனால் திரையுலகின் பல சங்கங்கள் இணைந்து ஒரு கோரிக்கையை சோனியா காந்திக்கு வேண்டுகோளாக வைக்கிறோம். அவர் முயற்சித்தால் இலங்கையில் செத்து மடியும் உயிர்களை காப்பாற்ற முடியும். திரையுலக தமிழ் ஈழ ஆதரவு இயக்கம் மற்றும் தமிழ் இன உணர்வுள்ள பல்வேறு அமைப்புகள் எங்கள் இயக்கத்தில் அங்கம் வகிப்பார்கள்.

சோனியா காந்தி, தமிழ்நாட்டுக்கு வாருங்கள், வாருங்கள் என்று இருகரம் கூப்பி வரவேற்கிறோம். எங்கள் சொந்தங்கள் இன்னலில் இருந்து விடுபட, உயிர்கள் காப்பாற்றப்பட உத்தரவிட்டுவிட்டு வாருங்கள். இல்லை என்றால் உங்களை எதிர்த்து எதிர்ப்பு குரல் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவோம்.

எவ்வளவோ போராடி விட்டோம், நெருக்கடி நேரத்தில் தான் விடிவு பிறக்கும் என்பதால் தான் தேர்தல் நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுகிறோம். இனி மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் தமிழன் இனத்தால் ஒன்றுபடுவான், சாதிப்பான் என்பதை புரிந்து கொள்ளும் விதத்தில் எங்கள் போராட்டம் இருக்கும். வரப்போகிற மத்திய அரசு தமிழன் சொன்னால் செவி சாய்க்கும். இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானம்: “ரிவிர” பத்திரிகை தகவல்

army-wanni.jpgதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகத்தை மலேசியாவிற்கு இடம் மாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரபல சிங்கள பத்திரிகையான ரிவிர பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னை அருகே விடுதலைப்புலி கைது: விசாரனையில் திடுக்கிடும் தகவல்கள்

images-army.jpg இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் உச்சக்கட்ட போர் நடந்து வருகிறது. இதனால் விடுதலைப்புலிகள் தமிழகத்திற்குள் ஊடுருவ வாய்ப்பு உள்ளதாகவும், எந்த நேரத்திலும் அவர்கள் ஊடுருவலாம் என்றும் மத்திய உளவுப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் போலீசாரும், கடலோர காவல்படையினரும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த 3-ந் தேதி அன்று திருவான்மியூரில் சயந்தன் என்ற விடுதலைப்புலியும், அவரது கூட்டாளிகளான குகன், பாபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சயந்தன் லண்டனில் இருந்து சென்னை வந்திருந்தார். இங்கிருந்து விடுதலைப்புலிகளுக்காக இலங்கைக்கு பொருட்களை கடத்தி செல்ல திட்டமிட்டிருந்தார். இந்த தகவல் தெரிந்து கியூ பிரிவு போலீசார் அவரை கைது செய்தனர். சயந்தனை கியூ பிரிவு போலீசார் காவலில் எடுத்து விசாரித்தார்கள். அப்போது, இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகளுக்காக பொருட்களை கடத்துவதற்கு மூர்த்தி என்ற முத்தண்ணா (வயது 39) என்ற நபர் ஒருவர் சென்னைக்கு வந்துள்ளதாக தகவல் கிடைத்தது. முத்தண்ணா கைது செய்யப்பட்டார். உடனடியாக அவரை சென்னையில் உள்ள கியூ பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அவரிடமிருந்து ஜி.பி.எஸ். தகவல் தொடர்பு கருவி ஒன்றும், 2 செயற்கைகோள் செல்போன்களும், 4 சாதாரண செல்போன்களும், இந்தியா-இலங்கை இடையிலான கடல்வழி வரைபடமும் கைப்பற்றப்பட்டது. ரூ.30 ஆயிரம் ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

முத்தண்ணாவிடம் விசாரித்தபோது, அவர் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். தனது 26-வது வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்ததாகவும், விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் பல்வேறு பிரிவுகளில் பணிபுரிந்ததாகவும், தற்போது விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக மருந்து போன்ற பொருட்களை கடத்தி செல்வதற்காக தமிழகம் வந்ததாகவும் முத்தண்ணா தெரிவித்தார். அவர், இலங்கையில் உள்ள விசுவமடு என்ற இடத்தை சேர்ந்தவர். தீவிர விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் முத்தண்ணா சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இலங்கை விவகாரம் குறித்து 29இல் ஐ.நா.பாதுகாப்பு சபையில் ஆராய்வு

hller.jpgஐ.நா. பாதுகாப்புச் சபையில் எதிர்வரும் 29 ஆம் திகதி இலங்øகப் பிரச்சினை குறித்து ஆராயப்படவுள்ளது. ஆயுத மோதல்களில் ஈடுபட்டுள்ள சிறுவர்கள் விவகாரங்களுக்கான ஐ.நா. பாதுகாப்புச் சபையின் செயற் குழு எதிர்வரும் 29 ஆம் திகதி சந்திக்கும்போது இலங்கை, மியன்மார் விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்படும் என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவரும் பாதுகாப்புச் சபையின் ஏப்ரல் மாதத்திற்கான தலைவருமான குளோட் ஹெல்லர் தெரிவித்துள்ளதாக இணையத் தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பாதுகாப்புச் சபையின் நிகழ்ச்சி நிரலில் இலங்கை விவகாரம் இடம்பெறுவதை அனுமதிக்கும் எண்ணம் எதுவும் மெக்ஸிகோவிடம் இல்லை என மெக்ஸிகோவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் கொமஸ் ரொபெல்டோ தன்னிடம் கூறியதாக இலங்கை வெளிவிவகார செயலாளர் கலாநிதி பாலித கொஹென அண்மையில் தெரிவித்திருந்தார். எனினும் அது சரியான தகவல் அல்ல என ஐ.நா.வுக்கான மெக்ஸிகோ தூதுவர் ஹெல்லர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை விடயத்தில் பொதுமக்களை பாதுகாப்பதற்கான கடப்பாடு தொடர்பான கரிசனை உள்ளது என நாம் மிகத் தெளிவாக உள்ளோம். எந்தவொரு நாடும் தனது மக்களை பாதுகாக்க முடியாவிட்டால் அல்லது பாதுகாக்காவிட்டால் அதை செய்தவற்கு சர்வதேச சமூகம் தலையிட முடியும் என்ற “பாதுகாப்பதற்கான கடப்பாடு’ (R2P) எனும் கோட்பாடு ஐ.நா. பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என ஹெல்லர் கூறியுள்ளார்.

இரானிய அமெரிக்க செய்தியாளருக்கு 8 ஆண்டுகள் சிறை

rokchana.jpgஉளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் இரானிய அமெரிக்க செய்தியாளரான ரோக்ஸானா சபரிக்கு இரானிய நீதிமன்றம் ஒன்று 8 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளதாக, அவரது சட்டத்தரணி கூறியுள்ளார்.

இந்த வழக்கு தனியறையில் நடத்தப்பட்டது. வழக்கின் ஆதாரங்கள் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இந்த தண்டனையை மிகவும் கடுமையான தண்டனை என்று பிபிசி கூறியிருக்கின்றது. சபரி முன்னர் பிபிசிக்காக செய்திகளை வழங்கியிருந்தார்.இந்த வழக்கின் முடிவுகள் குறித்து இரானிய நீதியமைச்சில் இருந்து எந்தவிதமான தகவலும் வரவில்லை.

கடந்த ஜனவரியில் கைது செய்யப்பட்ட சபரி அவர்கள், முதலில் சட்டவிரோதமாக பணியாற்றுவதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார். இந்த வழக்கு அமெரிக்காவுடனான உறவுகளில் கடுமையான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று இரானில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறியுள்ளார்.

மோதல் பகுதியிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முயற்சியில் சிறிய முன்னேற்றம்

vijaynambiar.jpgஐ.நா.  செயலாளர் நாயகத்தின் விசேட தூதுவர் விஜே நம்பியார் கொழும்பில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக மோதல் பகுதியில் சிக்கியுள்ள பொதுமக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றும் முயற்சிகளில் சில முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக ஐ.நா.அமைப்பு தெரிவித்துள்ளது.

“அரச அதிகாரிகளுடன் அவர் (நம்பியார்) மேற்கொண்ட கலந்துரையாடல்களின் பெறுபேறாக மோதல் பகுதியில் தற்போது சிக்கியுள்ள பொதுமக்களை விடுவிப்பதற்கான முயற்சிகளில் சிறிதளவு முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக நாம் உணருகின்றோம்’ என்று பான் கீ மூனின் இணைப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

“ஆனால் அந்த முயற்சிகள் மேலும் தொடரவேண்டிய தேவை இருப்பதாகவும் வெள்ளிக்கிழமை எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில் பர்ஹான் ஹக் கூறியுள்ளார்.

இரு வேறுபட்ட மட்டங்களில் ஐ.நா. வின் முயற்சி சம்பந்தப்பட்டது. கனரக ஆயுதங்களையும் மற்றும் ஆட்லறிகளையும் பிரயோகிக்க வேண்டாம் என்று இலங்கை அரசை மீண்டும் மீண்டும் நாம் வலியுறுத்திக் கேட்டுவருகிறோம். அப்பாவிப் பொதுமக்கள் வெளியேறுவதற்கான முயற்சிகளில் ஓரங்கமாக இதனை நாம் மேற்கொண்டுள்ளோம்’ என்று ஹக் கூறியுள்ளார்.

“முயற்சியின் மற்றொரு பகுதியாக, பொதுமக்களை வெளியேற விடுதலைப் புலிகள் இடமளிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறோம். இரு தரப்புடனும் இது தொடர்பாக பகிரங்கமான அறிக்கைகள் மூலம் நாம் முயற்சிகளை மேற்கொண்டுளோம் என்றும் ஹக் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடன் நம்பியார் தொடர்பு கொண்டுள்ளாரா என்று கேட்கப்பட்ட போது, “இந்தத் தருணத்தில் என்னால் சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை’ என்று ஹக் கூறியதாக பி.ரி.ஐ.செய்திச் சேவை தெரிவித்தது.

மோதல் வலயத்தில் சிக்கியுள்ள பொதுமக்களின் நிலைமை தொடர்பாக ஐ.நா.ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வருவோரின் மனிதாபிமான நிலைவரம் தொடர்பாகவும் மோதல் வலயப் பகுதிக்குள் இருப்போரின் நிலைமையைப் போன்றே கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் ஹக் கூறியுள்ளார்.

மேல் மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு

election.jpgகடந்த மாகாண சபைத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகத் தேர்தலை கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் அவ்வமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில்;

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்த போதும் எம்மால் 47 சம்பவங்களையே உறுதிசெய்ய முடிந்துள்ளது. இதில் 37 சம்பவங்கள் பெரியளவானதாகும்.

அதாவது கம்பஹாவில் ஜே.வி.பி. உறுப்பினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆதரவாளர் பலியாகி மற்றொருவர் காயமடைந்த சம்பவத்துடன் மேலும் 16 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை கட்சிகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களையும் நாம் பதிவுசெய்துள்ளோம்.

நாம் சிறிய சம்பவங்களாக 10 முறைபாடுகளை பதிவு செய்துள்ளோம். இது சட்டவிரோத முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் என்பன அடங்குகின்றன.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மொத்தமாக நாம் 47 முறைப்பாடுகளைப்பெற்ற நிலையில் மேல்மாகாண சபையில் தேர்தல் நடைபெற 6 தினங்கள் இருக்கையில் 47 முறைப்பாடுகளைப்பெற்றுள்ளோம். எனவே கடந்த மாகாண சபை தேர்தலுடன் இதுவரை இடம்பெற்ற சம்பவங்கள் சமனாக உள்ளபோதும் தேர்தல் நெருங்கும் போது சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.