செய்திகள்

செய்திகள்

செய்திகள்

பாடசாலை மாணவர்களிடையே ஊடகத்துறையை மேம்படுத்த நடவடிக்கை – அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா

yappa.jpgபாடசாலை மாணவர்களிடையே ஊடகத்துறை கல்வியை விருத்தி செய்யவும் ஊடகத்துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஊடகத்துறை அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக பாடசாலை மட்டத்தில் கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருவதாக ஊடகத்துறை மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை அமைச்சர் அநுர பிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார்.

ஊடகத்துறை அமைச்சு, தகவல் திணைக்களத்துடன் இணைந்து குளியாப்பிட்டிய கல்வி வலய பம்மன்ன அல்கமர் மத்திய கல்லூரியில் நடாத்திய மாணவர்களுக்கான கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் யாப்பா மேற்கண்டவாறு தெரிவித்தார். ‘சிறந்த ஊடக கலாசாரத்திற்கான எமது மாணவர்கள்’ எனும் தலைப்பில் இடம்பெற்ற இக்கருத்தரங்கை ஆரம்பித்து வைத்துள்ளது. மேலும் உரைநிகழ்ச்சிய அமைச்சர், மாணவர்களிடைய ஊடகத்துறை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன் அவர்களுக்கு இத்துறையில் பயிற்சிகளை வழங்குவது ஊடக எதிர்காலத்தில் சிறந்த ஊடகவியலாளர்களை உருவாக்க முடிவதுடன், சிறந்த ஊடக கலாசாரமொன்றை மேலும் வலுப்படுத்திக் கொள்ள முடியும்.

இத்துறையை பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கு கல்வி அமைச்சு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. பல்கலைக் கழகங்களில் ஒரு பாடமாக கற்பிக்கப்படுவதுடன் ஆய்வுத் துறையாகவும் ஊடகத்துறை விளங்குகின்றது. சர்வதேச மட்டத்தில் சிறந்து விளங்கும் ஊடக வியலாளர்கள் பலர் இந்நாட்டில் எதிர்காலத்தில் மேலும் உருவாக்கப்பட வேண்டும்.  இதற்கு தேவையான மொழி விருத்தியும் மாணவர்களிடையே உருவாக்கப்பட வேண்டும் என்பதில் அமைச்சு உறுதியாக உள்ளது.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ சிந்தனை தவறு; பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் கருத்து

flag_uk.jpg“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ சிந்தனை தவறானதெனத் தெரிவித்துள்ள பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் மிலிபாண்ட், இதன் மூலம் இராணுவத்தினர் மிகக் கூடுதலான அழுத்தங்களை எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதத்திற்கெதிரான போருக்கான யோசனை வெவ்வேறு நோக்கங்களைக் கொண்ட பயங்கரவாதக் குழுக்கள் அனைத்தையும் மேற்குலகிற்கெதிராக ஒன்று திரட்டியுள்ளதாக “கார்டியன்’ பத்திரிகையில் எழுதிய கட்டுரையொன்றில் மிலிபாண்ட் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவ் அச்சுறுத்தலுக்கு சட்டம் மற்றும் மனித உரிமைகளினூடாக பதிலளித்திருக்கவேண்டுமெனவும் மிலிபாண்ட் தெரிவித்துள்ளார்.

மும்பைத் தாக்குதலுக்குப் பின்னரும் மிலிபாண்ட் இக் கருத்தை வலியுறுத்தியிருந்தார். பயங்கரவாதத்திற்கெதிரான போரை வழிநடத்திய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிவடைவதற்கு இன்னும் 5 தினங்கள் உள்ள நிலையில் மிலிபாண்டின் இவ் எச்சரிக்கை வெளிவந்துள்ளது. உலகளாவிய ரீதியிலான பயங்கரவாத நடவடிக்கைகளுக்கெதிரான போராட்டத்தை வரையறுக்கும் முகமாக பயங்கரவாதத்திற்கெதிரான போர் என்ற சொற்பதத்தின் கீழான நடவடிக்கைகள் செப்டெம்பர் 11(9/11) இலிருந்து ஆரம்பிக்கப்பட்ட போதும் இதற்கான யோசனை தவறானதும் தவறாக வழிநடத்தப்பட்டதுமாகும்.

நியூயோர்க், வாஷிங்டன் நகரங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து 2001 செப்டெம்பர் 20 இல் நடைபெற்ற காங்கிரஸின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே “பயங்கரவாதத்திற்கெதிரான போர்’ என்ற சொற்பதம் முதன் முதலாக ஜனாதிபதி புஷ்ஷினால் பயன்படுத்தப்பட்டது. மிலிபாண்ட் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது; பயங்கரவாதம் மீதான போர் என்ற சொற்பதம் உலகின் அனைத்து குழுக்களையும் ஒசாமா பின்லேடன் மற்றும் அல்ஹைடா என்ற அமைப்பின் கீழ் உள்ளடக்கியுள்ளது.

ஆனால், வெவ்வேறுபட்ட நோக்கங்களைக் குழுக்கள் தனித்தனியாக அணுகப்பட வேண்டும். மிதவாதிகள் தீவிரவாதிகள், நல்லவைகள் கெட்டவைகள் என்ற வரையறைகளை இப்பதம் கொண்டிருக்கவில்லை. அனைத்துக் குழுக்களும் ஒரே மாதிரி அணுகப்பட்டமை அவற்றில் ஒரு தவறாகும். பயங்கரவாதம் மீதான போர் என்ற சொற்பதம் நன்மைகளையா தீமைகளையா அதிகம் ஏற்படுத்தியுள்ளது என்பதை வரலாற்று ஆய்வாளர்கள் தீர்மானிப்பார்கள்.

குவான்டனாமோ தடுப்புக் காவல் நிலையத்தை மூடும் பராக் ஒபாமாவின் உறுதிமொழிகள் வரவேற்கத்தக்கவை. ஒரே சொற்பதத்தின் கீழ் எதிரிகள் அனைவரும் நோக்கப்படுவதை வெவ்வேறுபட்ட அமைப்புக்கள் தமக்கு அனுகூலமாக எடுத்துக்கொண்டுள்ளன. பயங்கரவாதம் என்பது மரணத்தை விளைவிக்கும் ஒரு தந்திரோபாயம். இது ஒரு நிறுவனமோ அல்லது கொள்கைகளைக் கொண்டதோ அல்ல எனத் தெரிவித்துள்ளார். மேலும், பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற சொற் பிரயோகத்தை பயன்படுத்துவதை பிரிட்டிஷ் அரசாங்கம் பல வருடங்களுக்கு முன்னரே உத்தியோகப்பற்ற முறையில் கைவிட்டுள்ளதாகவும் மிலிபாண்ட் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதியான மருந்து உற்பத்தி பொருட்கள் பழுதடைந்துள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை

மருந்துகளை உற்பத்தி செய்யவென கொள்வனவு செய்யப்பட்ட 160 மில்லியன் ரூபா பெறுமதியான மூலப் பொருட்கள் அரச மருத்துகள் உற்பத்தி நிறுவனத்தில் உபயோகிக்க முடியாத நிலையில் பழுதடைந்துள்ளதாக அகில இலங்கை சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 4,000 கிலோ நிறையுள்ள மருந்து உற்பத்திக்கான இந்த மூலப் பொருட்கள் கடந்த வருடம் மே மாதம் இறக்குமதி செய்யப்பட்டபோதும், இவற்றை உரிய காலத்துக்குள் உற்பத்திக்கு பயன்படுத்தாமையால் இம்மூலப் பொருட்கள் காலாவதியாகியுள்ளதாக சுகாதார சேவைகள் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதற்காக விநியோகிக்கப்படும் “எரித்ரோமைசீ’ மருந்தை உற்பத்தி செய்வதற்கே இம்மூலப் பொருட்கள் உபயோகிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான கேள்விப் பத்திரங்களை மதிப்பீடு செய்யும் குழுவில் அரச மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து அதன் தலைவர் மாத்திரம் பிரதிநிதித்துவம் செய்யப்பட்டமை காரணமாக இந்த மூலப் பொருட்கள் இறக்குமதி விடயத்தில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அச்சங்கத்தின் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சுமார் 50 வகையான மருந்துகள் பாவனைக்குட்படுத்த முடியாத நிலையில் உள்ளன எனவும் இவை வைத்தியசாலைகளுக்கும் ஒசுசல மருந்தாக்கற் கூட்டுத்தாபனத்துக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன எனவும் அரசியல் அழுத்தங்கள் காரணமாகவும் தற்போதுள்ள சுகாதார அமைச்சின் நிர்வாகத்தின் கீழும் அரச மருந்துகள் உற்பத்தி நிறுவனத்தின் செயற்பாடுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பிரபாகரன் பதுங்கு குழியை கைப்பற்றியது ராணுவம்

ltte-bangar.jpgமுல்லைத் தீவை கைப்பற்ற கடும் போரில் இறங்கியுள்ள இலங்கை ராணுவம், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் தங்கியிருந்ததாகக் கருதப்படும் சொகுசு பதுங்கு குழிகளில் ஒன்றை கைப்பற்றியதாக தெரிவித்துள்ளது. இலங்கையில் விடுதலைப் புலிகளின் வசமிருந்த பெரும்பாலான பகுதிகளை அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியுள்ளது. புலிகள் வசமிருக்கும் எஞ்சியிருக்கும் முல்லைத் தீவைக் கைப்பற்ற தற்போது கடும் போரில் அது இறங்கியுள்ளது.

இதற்காக, இதுவரையில்லாத அளவில் பெருமளவு ராணுவத்தைக் குவித்து, இறுதிக் கட்டத் தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டுள்ளது. மேலும், படிப்படியாக முல்லைத் தீவை நோக்கி அது முன்னேறி வருகிறது. இந்நிலையில், முல்லைத் தீவில் உள்ள தர்மாபுரம் வனப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகளை இலங்கை ராணுவம் கைப்பற்றியிருப்பதாக,ராணுவம் தெரிவித்துள்ளது. இதில் ஒரு பதுங்கு குழி குளிர்சாதன வசதி செய்யப்பட்டு, நவீன வசதிகள் கொண்டதாக இருந்ததாகவும், குண்டுகளால் பாதிப்பு ஏற்படாதவகையில் அது அமைக்கப்பட்டு இருந்ததாகவும் ராணுவ தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏழை மக்கள் குடியிருக்கும் பகுதியில் குடிசைப் பகுதியில் இந்த பதுங்கு குழி உள்ளது.இதன் நுழைவாயில் ஒரு குடிசை வீடு போல உள்ளது.

நுழைவாயில் அருகே ஒரு கன்டெய்னர் உள்ளது. அந்த கன்டெய்னரில் குளிர்சாதன வசதியும் உள்ளது. பதுங்கு குழியிலிருந்து வெளியே வரும்போது இந்த கன்டெய்னரில்தான் பிரபாகரன் தங்கியிருக்கக்கூடும்.உள்ளே செல்வதற்கு படிக்கட்டுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.அறைகளில் மின்வசதி செய்யப்பட்டுள்ளது என்று ராணுவம் கூறுகிறது.பதுங்கு குழியில் இருந்த பாதுகாப்பு அரண்கள் வலுவானதாகவும், தேக்குகளாலான கதவாலும், உட்புறம் வண்ணம் தீட்டப்பட்டும் இருந்ததாக, செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த பதுங்கு குழியில் இதற்கு முன் பிரபாகரன் தங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்கிடையே முல்லைத் தீவில் நடைபெற்று வரும் கடும் சண்டையில் புலிகள் தரப்பில் ஏராளமான உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகவும், ஆயுதங்களை ராணுவம் கைப்பற்றி உள்ளதாகவும் வேறு சில செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவில் போரை நிறுத்த சர்வதேசம் வலியுறுத்த வேண்டும் – கூட்டமைப்பு எம்.பி. வேண்டுகோள்

tna_3mps.jpgஸ்ரீலங்கா படையினரின் ஆக்கிரமிப்புப் போரினால் வன்னியில் சிக்குண்டுள்ள மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வழியில் விடுதலைப் புலிகளுடனான போரை நிறுத்தி உடனடிப் பேச்சு வார்த்தை ஒன்றை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்ற அழுத்தத்தை சர்வதேச  சமூகம் ஸ்ரீலங்கா அரசுக்குக் கொடுக்க வேண்டும் என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ளபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளதுடன் புலம்பெயர் மக்கள் இக் கோரிக்கைகளை முன்வைத்து தத்த மது நாடுகளின் அரசுகளுக்கு கடுமையான அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில் விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துள்ளதாக யாரும் கருதினால் விடுதலைப்புலிகளின் போரியல் தந்திரோபாயங்களை அறியாதவர்களாகவே அவர்கள் இருப்பர். புலிகள் தற்போது தம்மைப் பாதுகாத்துக் கொண்டு தக்க தருணத்திற்காக காத்திருக்கின்றனர். ஆனால் புலம்பெயர்ந்துள்ள மக்கள் வதந்திகளை நம்பாமல் தமக்கான பணிகளைச் செய்யவேண்டும். அதுவே தற்போழுது வன்னியில் சிக்குண்டுள்ள மக்களுக்கு ஏற்றதாக இருக்கும் – என்றும் ஜெயானந்த மூர்த்தி எம்.பி தெரிவித்தார்.

கிழக்கில் பெரும்பான்மையினக் குடியேற்றம் தொடர இனியொரு போதும் இடமளிக்க முடியாது

batti_.jpgகிழக்கு மாகாணம் அங்கு வாழும் தமிழ் ,சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் எந்த விதமான குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதனை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இவ்வாறு சாய்ந்தமருது பிரதேசத்தில் சமகாலத்தில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கான கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்; கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளஅசாதாரண சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி பெரும்பான்மை மக்களின் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இப்பிரதேசத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச நிலைமை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகப்போவதில்லை. தற்போது புதிய குடியேற்றத்திட்டங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு இன்றைய அரசாங்கத்திற்கு உண்டு.

இன்றைய எமது இளைஞர்கள் தான் எதிர்காலத்தில் நாட்டின் தலைமையை ஏற்கவுள்ளனர். எனவே இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவ்வப்போது தீர்த்து வைக்கவேண்டும். இன்று இளைஞர்கள் அதிகம் முகம் கொடுப்பது வேலை இல்லாப் பிரச்சினையாகும். எமது நாட்டில் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்றுவரும் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள். அவர்கள் தங்கள் கல்வியைத் தொடரமுடியாமலும் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையில் வேறு பிரதேசங்களுக்கு செல்வதற்கும் பல தடைகள் காணப்பட்டன. அதேவேளை பல இளைஞர்கள் எமது நாட்டில் தொழில் கிடைக்காததினாலும் குடும்ப சுமையை தாங்க வேண்டி இருந்ததாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலும் இளைஞர்களும் யுவதிகளும் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

ஊடக அடக்குமுறைக்கு எதிராக ஜே.வி.பி. கண்டனக் கூட்டம்

jvp.jpgஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல், ஊடகவியலாளர் படுகொலை போன்றவை உட்பட அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் மாபெரும் கண்டனக் கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை நுகேகொடையில் நடைபெறவிருக்கின்றது.  ஜே.வி.பி.யின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கண்டனக் கூட்டத்தில் பல்வேறு அமைப்புக்களின் தலைவர்களும், பிரமுகர்களும் உரையாற்றவிருப்பதாகவும் கூட்டம் மாலை 4 மணிக்கு நுகேகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள நகரசபை மைதானத்தில் நடைபெறுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிரச மீதான தாக்குதல் மூவர் பொலிஸில் சரண்

sirasa-02.jpgதெபானம பன்னிப்பிட்டியவிலுள்ள எம்.ரி.வி., எம்.பி.சி. ஊடக நிறுவனம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மூவர் பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித குணசேகர தெரிவித்தார். கடந்த 6 ஆம் திகதி அதிகாலை எம்.ரி.வி. நிறுவனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையிலேயே கோட்டே ஸ்ரீ ஜெயவர்த்தனபுர மாநகர சபையின் உறுப்பினர் ஒருவர் உட்பட மூவர் நேற்று இச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் சரணடைந்திருப்பதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் குணசேகர தெரிவித்திருக்கிறார்

நாளை இவர் ஜனாதிபதி

obama.jpgஅமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, மனைவி, மைகெலி மற்றும் உப ஜனாதிபதி ஜோன்பைடன், மனைவி ஜிலி ஆகியோர் குடும்ப சகிதம் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பிரவேசித்துள்ளனர். நாளை இவர்கள் ஜனாதிபதி, உப ஜனாதிபதிகளாக பதவியேற்கவுள்ளனர்.

obama.jpg

புலிகளின் 31 சடலங்கள் வைத்தியசாலையில் ஒப்படைப்பு

truck.jpgவன்னிப் போர் முனைத் தேடுதலில் கண்டெடுக்கப்பட்ட புலிகளின் 31 சடலங்கள் இராணுவத்தினரால் வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம், முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசங்களிலிருந்து இந்த சடலங்கள் படையினரால் கண்டுபிடிக்கப் பட்டிருந்தன.

இந்த சடலங்களை பொறுப்பேற்குமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் பொலிஸார் அறிவித்துள்ளனர். இதில் 15 யுவதிகளுடைய சடலங்களும் அடங்கியுள்ளதாக வைத்தியசாலை பொலிஸார் தெரிவித்தனர். நேற்றுக் காலை வவுனியா மாவட்ட நீதிவான் எம். ஜி. அலெக்ஸ்ராசா வைத்தியசாலைக்கு விஜயம் செய்து சடலங்கள் தொடர்பான விசாரணையினை நடத்தினார். சடலங்கள் எதுவுமே அடையாளம் காணப்படவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இந்த சடலங்களை பொறுப்பேற்காத பட்சத்தில் நீதிமன்றத்தின் அனுமதியுடன் அரச செலவில் அடக்கம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் மேலும் 28 புலிகளுடைய சடலங்கள் வன்னியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நீதிவானுக்கு பொலிஸாரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.