கிழக்கு மாகாணம் அங்கு வாழும் தமிழ் ,சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களுக்கு சொந்தமான பிரதேசமாகும். இப்பிரதேசத்தில் எந்த விதமான குடியேற்றத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவதனை ஒருபோதும் அனுமதிக்கமுடியாது. இவ்வாறு சாய்ந்தமருது பிரதேசத்தில் சமகாலத்தில் இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி ஆராய்வதற்கான கலந்துரையாடலில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட சிறிலங்கா முஸ்ஸிம் காங்கிரஸ் இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான ஏ.எம். ஜெமீல் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; கிழக்கு மாகாணத்தில் அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ளஅசாதாரண சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி பெரும்பான்மை மக்களின் குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாக இப்பிரதேசத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்ச நிலைமை தோன்றியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவும் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் எந்தவொரு நடவடிக்கைக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் துணைபோகப்போவதில்லை. தற்போது புதிய குடியேற்றத்திட்டங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சந்தேகத்தை தீர்த்து வைக்க வேண்டிய பொறுப்பு இன்றைய அரசாங்கத்திற்கு உண்டு.
இன்றைய எமது இளைஞர்கள் தான் எதிர்காலத்தில் நாட்டின் தலைமையை ஏற்கவுள்ளனர். எனவே இளைஞர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவ்வப்போது தீர்த்து வைக்கவேண்டும். இன்று இளைஞர்கள் அதிகம் முகம் கொடுப்பது வேலை இல்லாப் பிரச்சினையாகும். எமது நாட்டில் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்றுவரும் யுத்தத்தினால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் இளைஞர்கள். அவர்கள் தங்கள் கல்வியைத் தொடரமுடியாமலும் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையில் வேறு பிரதேசங்களுக்கு செல்வதற்கும் பல தடைகள் காணப்பட்டன. அதேவேளை பல இளைஞர்கள் எமது நாட்டில் தொழில் கிடைக்காததினாலும் குடும்ப சுமையை தாங்க வேண்டி இருந்ததாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு குறைந்த சம்பளத்தில் வேலை செய்து வருகின்றனர். எதிர்காலத்தில் கிழக்கு மாகாணத்திலும் இளைஞர்களும் யுவதிகளும் சுதந்திரமாக வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.