செய்திகள்

செய்திகள்

செய்திகள்

அமெரிக்க தளத்தை இலக்குவைத்து ஏவுகணை தாக்குதல் – ஈரான் சார்பு குழுவினர் மீது அமெரிக்கா சாடல் !

ஈராக்கின் மேற்கு பகுதியில் அமெரிக்க தளமொன்றை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதலில் பல அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர். ஆசாட் விமானபடைதளம் மீது ஈரான் சார்பு குழுவினர் தாக்குதலை மேற்கொண்டனர் என அமெரிக்க குற்றம்சாட்டியுள்ளது.

ஏவுகணைகளையும் ரொக்கட்களையும் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

குறிப்பிடபடாத எண்ணிக்கையிலான அமெரிக்க படையினர் மூளை காயங்களிற்கு உட்பட்டுள்ளனரா என்ற மதிப்பீடுகள் இடம்பெறுகின்றன. ஈராக் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஈராக்கில் உள்ள இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் என்ற அமைப்பே இந்த தாக்குதலை மேற்கொண்;டுள்ளது,2023 இல் உருவான இந்த குழு ஈராக்கில் உள்ள பல ஆயுதகுழுக்களை உள்ளடக்கியதாக காணப்படுகின்றது.

இந்த குழுவினரே ஈராக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் மீதான தாக்குதல்களிற்கு உரிமை கோரிவருகின்றனர்.

அல்ஆசாட் தளம் தொடர்ச்சியாக தாக்குதலிற்கு உட்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வித்தியா கொலை வழக்கு – மரண தண்டனை கைதிகளின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு !

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கடத்திச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகள் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, அச்சல வெங்கப்புலி மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் கடந்த 09 ஆம் திகதி அழைக்கப்பட்டது. அதன்போது, இந்த வழக்கு தொடர்பான சிங்கள மொழிபெயர்ப்பு பிரதிகளை சட்டமா அதிபரிடம் சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மனுதாரர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை நாளை எடுத்துக்கொள்வதற்கு நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டது. 2015 ஆம் ஆண்டில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற 18 வயது பாடசாலை மாணவி கடத்திச் சென்று கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த வழக்கு தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் மரண தண்டனை விதித்தது. தமக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ள விதம் சட்டத்துக்கு முரணானது என குறித்த பிரதிவாதிகள் தெரிவித்துள்ளனர். இதன்படி, குற்றச்சாட்டில் இருந்து தம்மை விடுவிக்குமாறு கோரி பிரதிவாதிகள் உயர் நீதிமன்றில் இந்த மேன்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் யுக்திய – போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் !

தற்போது நாடளாவிய ரீதியில் யுக்திய என்ற பெயரில் போதைப்பொருள் பயன்படுத்துபவர்களையும் அதனை விற்பனை செய்பவர்களையும் மையப்படுத்தி காவல்துறையினர் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக மாணவர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் இந்த வியாபாரத்தை முற்றாக அழிக்கும் நோக்கில் இந்த செயற்பாடு முழுவீச்சில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது போதைப்பொருள் அச்சுறுத்தல் தொடர்பாக பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பதில் காவல்துறை மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்த போதைப்பொருள் தடுப்பு வேலைத்திட்டத்திற்காக 200 வளவாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நிகழ்வில் நேற்று (20) கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தேசிய இளைஞர் சேவை மன்ற பயிலுனர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இத்திட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆபிரிக்க பயணத்தால் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பின்னணி உருவாகியுள்ளது – அமைச்சர் அலி சப்ரி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உகண்டாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினால் எதிர்காலத்தில் உலகில் துரிதமாக அபிவிருத்தியை எட்டுமென கருதப்படும் 1.3 பில்லியன் மக்கள் வசிக்கும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை பலப்படுத்திக்கொள்ள முடிந்துள்ளது என வௌிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

இந்த விடயம் இலங்கை வௌிவிவகார கொள்கைகளின்போது இதுவரையில் கருத்தில் கொள்ளப்படவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“ஆபிரிக்காவைப் பார்ப்போம்” (Look Africa) என்ற ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவான இலங்கையின் புதிய பொருளாதார பயணத்திற்காக ஆபிரிக்க நாடுகளின் முதலீடுகளை ஈர்ப்பதற்கான பின்னணி உருவாகியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அணிசேரா நாடுகளின் 19ஆவது அரச தலைவர்கள் மாநாடு மற்றும் சீனா மற்றும் தென் துருவத்தில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளின் மாநாட்டில் பங்கேற்பதற்காக உகண்டாவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொண்டுள்ள உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“அணிசேரா நாடுகளின் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உலகளாவிய பிரச்சினைகள், காசா பகுதியின் நிலவரம், இஸ்ரேல் – பாலஸ்தீன நிலவரம், அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய தீர்மானங்கள், கடன் சுமையில் முடங்கிக் கிடக்கும் தரப்பினரை மீட்பதற்கான முன்னெடுப்புகள், காலநிலை அனர்த்தம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் உரையாற்றினார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்த உரையை வெளிநாட்டு பிரதிநிதிகள் பாராட்டினர்.

அதற்கு இணையாக ஆபிரிக்க வலயத்தின் தென் துருவ நாடுகளின் தலைவர்களையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்து கலந்துரையாடினார். மாநாட்டினை நடத்திய உகண்டாவின் ஜனாதிபதி,  எத்தியோப்பிய பிரதமர், பெனின் குடியரசின் உப ஜனாதிபதி, பஹாமாஸ் பிரதமர், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க சந்தித்திருந்தார். மேலும் குறித்த நாடுகளுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திகொள்வது தொடர்பிலும் அவர் கலந்துரையாடினார்.

பெருமளவில் பேசப்படாத, 1.3 பில்லியன் மக்கள்தொகை கொண்ட, எதிர்காலத்தில் மிக வேகமாக வளர்ச்சியடையும் என்று உலகம் எதிர்பார்க்கும் ஆபிரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்த இந்தப் பயணம் வித்திட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இலங்கை அடைந்து வரும் பொருளாதார வளர்ச்சி மற்றும் அதற்கு ஜனாதிபதியின் பங்களிப்பு ஆகியன இதன்போது அனைவராலும் பாராட்டப்பட்டது.  ஜனாதிபதி நாட்டைப் பொறுப்பேற்பதற்கு முன்னர், இந்த நாடு இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை அனைவரும் பாராட்டினர்.

குறிப்பாக, உகண்டாவின் ஜனாதிபதி யொவேரி முசெவேனி, வீழ்ச்சி அடைந்த நாட்டை மீளக் கட்டியெழுப்ப அவர் ஆற்றிய பங்களிப்புக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், இம்முறை அணிசேரா நாடுகளின் மாநாட்டின் ஊடாக, இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த உண்மைகளை சர்வதேச சமூகத்திற்கு முன்வைக்கும் சந்தர்ப்பம் எமக்குக் கிடைத்தது. அத்துடன், ஆபிரிக்க பிராந்தியத்தில் உள்ள பல நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை வளர்த்துக்கொள்ள ஜனாதிபதியின் இந்த விஜயம் உதவியது என்றே கூற வேண்டும்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ‘ஆபிரிக்காவைப் பார்ப்போம்’ (Look Africa) என்ற எண்ணக்கருவின் கீழ் இலங்கைக்கான புதிய பொருளாதாரப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு ஆபிரிக்க நாடுகளில் முதலீடு செய்வதற்கு இதன்போது அடித்தளமிடப்பட்டது.

அதற்கமையவே, இரு நாடுகளும் பயனடையும் என்ற நோக்குடன் பெனின் குடியரசுடன் இராஜதந்திர, உத்தியோகபூர்வ மற்றும் சேவை கடவுச்சீட்டுகளை வைத்திருப்பவர்களுக்கு விசா விலக்கு அளிக்க தீர்மானிக்கப்பட்டது.

மேலும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் என்ற முறையில், பங்களாதேஷ், பஹ்ரைன், கானா, தன்சானியா, அஸர்பைஜான் போன்ற பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை  நடத்தும் வாய்ப்பும் எனக்கு கிடைத்ததோடு, அந்த நாடுகளுடன் நட்புறவை மேலும் பலப்படுத்திக்கொள்ளவும், பொருளாதார உறவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு கிட்டியது.

எனவே, இவ்வாறான மாநாடுகளின் மூலம் சர்வதேச நாடுகளுடன் இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்தி, நாட்டுக்கு நன்மைகளை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம்” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

சிறிதரனா ? சுமந்திரனா ? : நாளைய செய்தித் தலைப்பு: சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !” சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

 

 

நாளை ஜனவரி 21 தமிழரசக் கட்சியின் தலைவராக யார் தெரிவு செய்யப்படப் போகின்றார் என்பது பெரும்பாலும் தெரியவரும். இதற்கான தமிழரசுக் கட்சி அங்கத்தவர்களின் வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நாளை திருகோணமலையில் இடம்பெற இருக்கின்றது. அதற்கு கட்சியின் அங்கந்தவர்கள் 325 பேர்வரை வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து கிழக்கில் உள்ள திருகோணமலைக்குச் செல்கின்றனர். வாக்கெடுப்பு எண்ணிக்கை நிறைவில் வெற்றி தோல்வி அறிவிக்கப்படும் போது அசம்பாவிதங்களும் ஏற்படும் அளவுக்கு நிலைமை பதட்டமானதாக இருப்பதாக தேசம்நெற்க்கு கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைமைத்துவத்துக்கு போட்டியிடும் இருவருமே தேர்தல் முடிவுகளை ஏற்று மற்றையவருடன் கட்சியின் நன்மைகருதி இணைந்து பயணிப்போம் எனத் தெரிவித்து இருந்த போதும் தமிழரசுக் கட்சியின் நாளைய தேர்தல் தமிழரசுக்கட்சிக்குள் ஒரு பாரிய பிளவை ஏற்படுத்தும் என்று தேசம்நெற்க்குத் தெரியவருகின்றது.

இலங்கையில் உள்ள எந்தவொரு கட்சிக்காவது ஜனநாயகப் பாரம்பரியம் இருக்கின்றதா என்றால் எடுத்த எடுப்பிலேயே இல்லை என்று சொல்லி விடலாம். கட்சிக்குத் தலைவரானால் சாகும்வரை அவரே தலைவராக இருந்துவிடுவார். இதற்கு தமிழ் கட்சிகளும் தமிழரசுக் கட்சியும் விதிவிலக்கல்ல. தமிழரசுக்கட்சி வரலாற்றில் தேர்தல் மூலம் ஒருவரைத் தெரிவது இதுவே முதற்தடவை. ஏகமனதாக, ஏகோபித்த முடிவு, ஏக பிரதிநிதித்துவம் என்று இன்னொரு பக்கம் இருக்கின்றதை ஏற்றுக்கொள்ளாத சமூகமும் கட்சிகளுமாக நாம் எங்களை பன்மைத்துவத்தின் விரோதிகளாக பழக்கிக் கொண்டுவிட்டோம். அப்படிப் பார்க்கின்ற போது தமிழரசுக்கட்சியின் தலைமைக்கான தேர்தல் ஜனநாயகத்தின் பார்வையில் மிகப்பெரும் பாச்சல் என்றே சொல்லலாம். ஆனால் என்ன இந்தத் தேர்தலினால் தமிழ் மக்களுக்கு ஏதும் நன்மை ஏற்பட வாய்ப்பு இருக்கின்றதா என்பதே தற்போதுள்ள கேள்வி.

 

இலங்கைத் தமிழர்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமிழரசுக் கட்சி அது ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்றுவரை ஒரு இம்மியளவு முன்னேற்றத்தை நோக்கியும் நகரவில்லை. எழுபதுக்களில் தங்களுடைய வீழ்ந்துபோன வாக்கு வங்கியைத் தக்க வைக்க வே பிரபாகரன் போன்ற இளைஞர்களை உசுப்பேத்தி தமிழீழக் கோரிகையை வைத்து, அந்த இளைஞர்களாலேயே மரணத்தையும் தழுவினர். அந்த இளைஞர்களும் ஆளுக்கு ஆள் சகோதரப்படுகொலை செய்து தங்களைத் தாங்களே அழித்தனர். அன்று தப்பித்த இரா சம்பந்தன் ஒருவாறு இறுதியில் வே பிரபாகரனை பொறியில் வீழ்த்தி மீண்டும் தமிழ் தேசியத்தின் ஒற்றைத் தலைவரானார். அன்று மரணத்தில் இருந்து தப்பிய இன்னும் சிலரும் குட்டிக் குட்டித் தலைவர்களாகினர். இப்போது ஒரு காலத்தில் தமிழ் மக்களின் ஏகபோக பிரதிநிதியான தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு ஒரு போட்டி வந்துவிட்டது.

 

இத்தேர்தல் முடிவுகளில் இலங்கைத் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுகின்றதோ இல்லையோ புலம்பெயர் தமிழ் – புலித் தேசியவாதிகளின் அரசியல் நலன்கள் பேணப்பட வேண்டும், இலங்கை அரசியலில் தங்களுடைய ஆதிக்கம் இருக்க வேண்டும் என்பதில் புலம்பெயர் சக்திகள் மிகத் தீவிரமாகச் செயற்படுகின்றனர். புலம்பெயர் புலித் தேசியவாதிகளைப் பொறுத்தவரை ஏ சுமந்திரன் தீண்டத்தகாத ஒரு மனிதர். அதற்கு சுமந்திரனுடைய அரசியல் நிலைப்பாடு மட்டுமல்ல சுமந்திரனுடைய அறிவும் ஆளுமையும் அவர்களுக்கு மிகுந்த அச்சத்தை கொடுக்கின்றது. தமிழரசுக் கட்சிக்கு சுமந்திரன் தலைவரானால் தமிழ் தேசிய அரசியலில் புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளின் குரல்களுக்கு இடமிருக்காது. மிகத் தீவிர புலித்தேசியத்தின் குரல்களுக்கு தமிழரசுக் கட்சியில் இடமிருக்காது.

 

அதனால் என்ன விதப்பட்டும் எஸ் சிறீதரனை வெல்ல வைப்பதில் அவர்கள் மிகத் தீவிரமாக உள்ளனர். எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சிக்கு தலைவரானால் புலத்தில் உள்ள விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் அவருக்கு அரசியல் வகுப்பும் ஆங்கில வகுப்பும் எடுப்பார்கள். தன்னுடைய வங்கிக் கணக்கை அவர்களிடம் கொடுத்துவிட்டு அவர்கள் சொல்வதை எல்லாம் கிளிப்பிள்ளை மாதிரி எஸ் சிறிதரன் கேட்பார் என்ற நம்பிக்கை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகளிடம் நிறையவே உள்ளது. அவ்வாறு லண்டனுக்கு மகனையும் அனுப்பி வைத்துள்ளார் எஸ் சிறிதரன்.

 

ஏ சுமந்திரனும் எஸ் சிறிதரனும் 2010இல் ஒரே காலகட்டத்தில் அரசியலுக்குச் சென்றவர்கள். இன்றுவரை பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். கல்வி, கேள்வி ஞானம், அரசியல் அறிவு, உள்ளுர் சர்வதேச தொடர்புகள் என்று பார்க்கின்ற போது ஏ சுமந்திரன் பலமானவராக உள்ளார். மக்கள் மட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் எஸ் சிறிதரன் பலமாக உள்ளார். இலங்கைத் தமிழ் மக்களைப் பொறுத்தவரை குறிப்பாக வடக்கு – கிழக்கில் வாழும் தமிழர்களைப் பொறுத்தவரை இவர்களில் யாரும் இதுவரை அவர்களுக்காக எதனையும் குறிப்பாக சாதித்துவிடவில்லை. ஏ சுமந்திரன் சில அரசியல் கைதிகளை தனது தொழில் ரீதியில் விடுதலைபெறக் காரணமாக இருந்ததைத் தவிர.

 

ஆனால் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு எஸ் சிறிதரன் தெரிவு செய்யப்பட்டால் அந்தக் கட்சியில் தொடர்ந்து செயற்பட ஏ சுமந்திரன் அனுமதிக்கப்பட மாட்டார். அதனை புலம்பெயர் விசிலடிச்சான் குஞ்சுகள் அனுமதிக்காது. மேலும் ஆளுமையுள்ள சுமந்திரன் தொடர்ந்தும் கட்சியில் இருப்பது எஸ் சிறிதரனின் தலைமைத்துவத்தை எப்போதும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். அடுத்த ஆண்டு நாடு பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்கின்ற போது விரும்பு வாக்குகளுக்காக இருவரும் கடுமையாக மோத வேண்டிவரும். அது ஏ சுமந்திரனுக்கு மிக நெருக்கடியாக அமையும். அதனால் ஏ சுமந்திரன் தமிழரசுக்கட்சித் தேர்தலில் தோல்வியடைந்தால் பிரிந்துசெல்வதற்கான வாய்ப்பே அதிகம் உள்ளது.

 

மாறாக, எஸ் சிறிதரன் தோற்கடிக்கப்பட்டால் அவர் தொடர்ந்தும் தமிழரசுக் கட்சியில் இருப்பாரா அல்லது பிரிந்து செல்வாரா அல்லது கட்சி தாவுவாரா என்பது அவருக்கு கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கையிலும் புலம்பெயர் புலித் தேசியவாதிகளின் நிலைப்பாட்டிலும் தங்கியுள்ளது. சிறிதரன் தேர்தலில் தோற்றுப் போனாலும் தமிழரசுக்கட்சியில் தொடர்ந்தும் இருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. கிளிநொச்சியில் உள்ள பலமான அந்த வாக்கு வங்கியை அவர் இழப்பதற்கு துணிய வாய்புகள் குறைவு. ஏற்கனவே எம் சந்திரகுமாருடைய சமத்துவக் கட்சி அவருடைய வாக்கு வங்கியை உடைத்து வளர்ந்து வருகின்ற நிலையில் எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியை உடைத்து வெளியேறினால் அடுத்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் அவருடைய வெற்றிவாய்ப்பை உறுதிப்படுத்துவது கடினமானதாக அமையும்.

 

தேசம்நெற்க்கு கிடைக்கின்ற தகவல்களின்படி புலம்பெயர் நாடுகளிலும் தாயகத்திலும் தங்களை உயர்சாதியினராகக் கருதுபவர்கள் மத்தியில்; எஸ் சிறிதரனுக்கு செல்வாக்கு உள்ள போதிலும் ஒடுக்கப்பட்ட வன்னியில் வாழும் மலையக மக்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க செல்வாக்கு இல்லை. அதைவிடவும் சாணக்கியன் உட்பட தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவைத் தெரிவித்துள்ளனர். 325 வரையான கட்சி உறுப்பினர்கள் மத்தியிலும் ஏ சுமந்திரனுக்கே ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகின்றது. எஸ் சிறிதரன் செல்வாக்கு ஆனையிறவுக்கும் கிளிநொச்சிக்கும் அப்பால் உள்ளதா என்பதும் கேள்விக்குறியே.

 

இன்னும் சில மணி நேரங்களில் தேர்தல் முடிவுகள் வெளிவரும்.

நாளைய செய்தித் தலைப்பு:

சிறிதரன் வென்றால் “தமிழ் தேசியம் வென்றுவிட்டது !”

சுமந்திரன் வென்றால் “துரோகத்தால் துரோகிகளால் தமிழ் தேசியம் தோற்கடிக்கப்பட்டது !”

“Pekoe trail” திட்டம் – இலங்கையின் தேயிலை தொழில்துறையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் !

இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் செயற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள “Pekoe trail” திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று (19) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

“Pekoe trail” திட்டத்தின் கீழ், சுமார் 300 கிலோமீற்றர் தூரத்திற்கு சுற்றுலாப் பாதை உருவாக்க எதிர்பார்க்கப்படுவதாகவும், இத்திட்டம் உலகளவில் பெரும் புகழைப் பெற்றுள்ளதாகவும், இலங்கையின் தேயிலை தொழில்துறையின் வளர்ச்சிக்கு இது பெரும் உறுதுணையாக அமையும் எனவும் இந்நிகழ்வில் கலந்து கொண்ட Pekoe trail குழு விளக்கமளித்தது.

இலங்கையை இதுவரை சுற்றுலாத் தலமாகக் கருதாத சுற்றுலாப் பயணிகளைக் கவர்வதற்கு இத்திட்டம் உதவும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இத்திட்டத்தை அமுல்படுத்தும் போது ஏற்பட்டுள்ள சட்ட மற்றும் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி தீர்வு காண வேண்டும் எனவும் இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமானது.

இத்திட்டம் தொடர்பில் பிரதேச தோட்டக் கம்பனிகள் மற்றும் ஏனைய துறைசார் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி விரைவான தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சாகல ரத்நாயக்க உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்திய முதலீட்டுக்கள் மூலமாக அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பு – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக அரசானது அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனைகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் மெகா சிட்டி எனப்படும் இந்தியாவின் தலையீட்டுடனான அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் மாவட்ட செயலாளர் ஶ்ரீபிரசாத் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சமூக ஊடகங்கள் முடக்கம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் எனும் போர்வையில் இலங்கை அரசானது அடக்குமுறைச் சட்டங்களை படிப்படியாக கட்டவிழ்த்து விடுகிறது.

அடுத்தபடியாக ஒட்டுமொத்த இலங்கையில் பரவலாக மூன்றில் இரண்டு பகுதி வருமானத்தினை ஈட்டும் கடற்றொழிலில் அரசு கைவைக்கப்போகிறது. கடற்றொழில் எல்லைகள் குறித்த புதியதொரு சட்டத்தினை நடைமுறையாக்குவது குறித்து அரசு கவனம் செலுத்துகிறது.

இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் இருக்கும் எமக்கே போதிய தெளிவில்லாது காணப்படுகிறது. ஒரு கல்லில் இரு மாங்காய்களை அடிக்கும் செயற்திட்டத்தினை அரசு முன்னெடுக்கிறது.

தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக அரசானது தமிழர் பகுதியில் அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினையும் இந்திய தமிழர் உறவுக்கும் இடையிலான முரண்பாட்டையும் ஏற்படுத்த முனைகிறது.

இதன் அடுத்த நிலையாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பொதுமக்களை வெளியேற்றி அதன் மூலமாக அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பரவலான கருத்துக்கள் காணப்படுகின்றன. இதற்கு பின்னணியில் இந்தியா நின்று செயற்படுவதாக பரவலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் இது தொடர்பில் இந்தியப் பிரதிநிதிகளை சந்தித்து தாம் கலந்துரையாடியதாகவும் அதன்போது பொதுமக்களைக் குறிவைத்து அவர்களது காணிகளை அபகரிப்பது இந்தியாவின் திட்டமல்ல.

இருப்பினும் இலங்கை அரசு பொதுமக்கள் தற்போது வசிக்கும் காணிகளை அபகரித்து அதிலிருக்கும் பொதுமக்களை நிர்கதியாக்குமாயின் அது குறித்து இந்திய அரசுக்கு தெரிய வர வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுவதாகவும் அது தொடர்பில் இந்தியா கருத்து தெரிவிக்க மறுக்கின்றது” என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை தென் கடற்பரப்பில் விசேட சுற்றிவளைப்பு – 60 கிலோ போதைப்பொருட்கள் மீட்பு !

தேவேந்திர முனையிலிருந்து 100 கடல் மைல் தொலைவில் தெற்கு கடற்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் 60 கிலோ போதைப்பொருட்கள் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த போதைப்பொருள் தொகையை சூட்சுமமாக மறைத்துக்கொண்டு சென்ற இலங்கையின் நீண்ட நாள் மீன்பிடி படகொன்றும், அதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாக சந்தேகிக்கப்படும் பிரிதொரு படகும் சுற்றிவளைக்கப்பட்டு அதிலிருந்த 11 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டிலிருந்து இல்லாதொழிக்கும் தேசிய இலட்சியத்தை அடைவதற்காக, நாட்டின் கடற்பரப்பை உள்ளடக்கிய ஊடுருவல் நடவடிக்கைகளை மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டுவரும் கடற்படையினர், நாட்டின் சட்டத்தை அமுல்படுத்தும் நிறுவனங்களுடன் இணைந்து வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, கடற்படையின் சுரனிமில என்ற கப்பலின் ஊடாக நேற்று வெள்ளிக்கிழமை (19) குறித்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இன்று சனிக்கிழமை (20) காலி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 28 – 52 வயதுக்குட்பட்ட மாத்தறை, கந்தரை மற்றும் தேவேந்திரமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை கடற்படை புலனாய்வு பிரிவு முன்னெடுத்து வருவதாக கடற்படை ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் – ஊரெழு கிராமத்தில் கசிப்பு உற்பத்தி குகையை முற்றுகையிட்ட இளைஞர்கள் – முன்மாதிரியான செயலுக்கு குவியும் பாராட்டுக்கள் !

யாழ்ப்பாணம் – ஊரெழு கிராமத்தில் கசிப்பு குகையொன்று இளைஞர்களால் இன்று சனிக்கிழமை (20) முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்கள் தப்பிச் சென்ற நிலையில், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்திய பொருட்களும் ஒரு தொகுதி கசிப்பும் இளைஞர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது :

ஊரெழு கிராமத்தில் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கிராம இளைஞர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய சிவில் பாதுகாப்பு குழுவொன்று கோப்பாய் பொலிஸாரின் ஒழுங்கமைப்பில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இதன் தலைவர் சின்னத்துரை முகுந்தன் தலைமையிலான குழுவினர், இன்று ஊரெழு கிராமத்தில் அதிரடியாக சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு தேடுதலை மேற்கொண்டனர்.

இதன்போது கைவிடப்பட்ட தோட்டம் ஒன்றிலிருந்து கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் பொருட்களும் தென்னை மரத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகுதி கசிப்பும் சிவில் பாதுகாப்பு குழுவால் கைப்பற்றப்பட்டன.

இந்நிலையில், சம்பவ இடத்துக்கு கோப்பாய்  பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் கைப்பற்றப்பட்ட கசிப்பு உற்பத்திப் பொருட்கள் கையளிக்கப்பட்டன.

மேலும், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணம் ஊரெழு பகுதி இளைஞர்களின் இந்த செயலை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டி வருவதுடன் ஊடகங்கள் பலவும் பாராட்டு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியத்திலிருந்து இருபது லட்சம் ரூபா ஒப்பந்தம் – யாழில் ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது !

யாழ்ப்பாண நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில்,  நேற்று வெள்ளிக்கிழமை (19) மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடமிருந்து இரண்டு மோட்டார்சைக்கிள்கள், ஒரு வாள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிக்கப்பட்டதுடன்  2 கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் கார் ஒன்றும் எரிக்கப்பட்டது.

இவை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட போது  பொலிஸார் நேற்று மூன்று பிரதான சந்தேகநபர்களைக் கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெல்ஜியத்தில் உள்ள நபர் ஒருவரின்  உத்தரவுக்கு அமையவே இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர் .

கடைகளை எரிப்பதற்காக 12 லட்சம் ரூபா பணமும், வாகனங்களை எரிப்பதற்காக 7 லட்சம் ரூபா பணமும் பெல்ஜியத்தில் இருக்கும் நபரிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுவதற்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக ஒன்றரை இலட்சம் ரூபா பணம் அவர்களுடைய வங்கிக் கணக்குக்குச் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது .

இதையடுத்து குற்றச்செயல்களின் சூத்திரதாரியான பெல்ஜியம் வாழ் நபரை இன்டர்போலின் உதவியுடன் கைதுசெய்ய பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.