தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக அரசானது அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனைகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்படவிருக்கும் மெகா சிட்டி எனப்படும் இந்தியாவின் தலையீட்டுடனான அபிவிருத்தி திட்டம் குறித்த கலந்துரையாடல் நேற்று (19) இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் மாவட்ட செயலாளர் ஶ்ரீபிரசாத் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், “சமூக ஊடகங்கள் முடக்கம், பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்பு சட்டம் எனும் போர்வையில் இலங்கை அரசானது அடக்குமுறைச் சட்டங்களை படிப்படியாக கட்டவிழ்த்து விடுகிறது.
அடுத்தபடியாக ஒட்டுமொத்த இலங்கையில் பரவலாக மூன்றில் இரண்டு பகுதி வருமானத்தினை ஈட்டும் கடற்றொழிலில் அரசு கைவைக்கப்போகிறது. கடற்றொழில் எல்லைகள் குறித்த புதியதொரு சட்டத்தினை நடைமுறையாக்குவது குறித்து அரசு கவனம் செலுத்துகிறது.
இது தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் இருக்கும் எமக்கே போதிய தெளிவில்லாது காணப்படுகிறது. ஒரு கல்லில் இரு மாங்காய்களை அடிக்கும் செயற்திட்டத்தினை அரசு முன்னெடுக்கிறது.
தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக அரசானது தமிழர் பகுதியில் அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினையும் இந்திய தமிழர் உறவுக்கும் இடையிலான முரண்பாட்டையும் ஏற்படுத்த முனைகிறது.
இதன் அடுத்த நிலையாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள பொதுமக்களை வெளியேற்றி அதன் மூலமாக அபிவிருத்தி திட்டத்தினை முன்னெடுக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக பரவலான கருத்துக்கள் காணப்படுகின்றன. இதற்கு பின்னணியில் இந்தியா நின்று செயற்படுவதாக பரவலான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இது தொடர்பில் இந்தியப் பிரதிநிதிகளை சந்தித்து தாம் கலந்துரையாடியதாகவும் அதன்போது பொதுமக்களைக் குறிவைத்து அவர்களது காணிகளை அபகரிப்பது இந்தியாவின் திட்டமல்ல.
இருப்பினும் இலங்கை அரசு பொதுமக்கள் தற்போது வசிக்கும் காணிகளை அபகரித்து அதிலிருக்கும் பொதுமக்களை நிர்கதியாக்குமாயின் அது குறித்து இந்திய அரசுக்கு தெரிய வர வாய்ப்புக்கள் குறைவாகவே காணப்படுவதாகவும் அது தொடர்பில் இந்தியா கருத்து தெரிவிக்க மறுக்கின்றது” என அவர் குறிப்பிட்டார்.