எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

கேளரத்தில் புலிகள் ஊடுருவல்? பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

தமிழீழ விடுதலைப் புலிகள் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து கேரள மாநிலத்தின் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. கொச்சிக்கு அருகே உள்ள தைக்கல் கடற்கரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று சீருடை அணிந்த 15க்கும் மேற்பட்டோர் படகுகளில் வந்திறங்கியதாக மீனவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பாதுகாப்புத் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிகரமாக முறியடிப்பு : அமைச்சர் மஹிந்த சமரசிங்க

mahinda-samara.jpgஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கைக்கு எதிராக முன்னெடுக்கப்படவிருந்த திட்டங்களை இலங்கை அரசாங்கம் வெற்றிகரமாக முறியடித்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். ஜெனீவா ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பு வானிலை அவதானிப்பு மையத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்ககையில், “இலங்கையின் உண்மையான நிலவரம் குறித்தும், அரசாங்கம் மேற்கொள்ளும் மனிதாபிமான நடடிக்கைகள் குறித்தும் ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் ஆணையகத்தில் விளக்கமளித்தோம். வழமையாக ஒரு வாரகாலம் இடம்பெறும் இக்கூட்டம், இம்முறை உயர் மட்ட அமர்வுகள் காரணமாக ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது. ஜெனீவா விஜயத்தின் போது அங்கு வருகை தந்த பிராந்திய, ஏனைய நாட்டு வெளிவிவகார அமைச்சர்கள், மனித உரிமை அமைச்சர்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினேன். மேற்கு பிராந்திய அமைச்சர்களைச் சந்தித்து கலந்துரையாடுவதற்கு நாம் அழைப்பு விடுத்த போதும்,அதற்கான வாய்ப்பினை அவர்கள் தரவில்லை.எனினும் டென்மார்க், சுவீடன், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களுடன் நாம் கலந்துரையாடினோம். இலங்கையின் உண்மை நிலவரம் குறித்து இலங்கை அரசாங்கம் தெளிவுபடுத்தத் தயாராக இருப்பதாக அவர்களுக்கு தெரிவித்துள்ளோம்.அத்துடன் ஐ.நா. செயலாளர், மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோரையும் சந்தித்துக் கலந்துரையாடினோம்” என அமைச்சர் தெரிவித்தார்.

“இலங்கைக்கு எதிராகத் தீர்மானங்கள், விவாதங்கள் மேற்கொள்ள பல அமைப்புக்கள் போராட்டங்களை நடத்தின. அத்துடன் இலங்கை விடயம்குறித்து மனித உரிமைகள் ஆணையகத்தில் விவாதத்திற்கு எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் எமது தோழமை நாடுகள் எனக்கு ஆதரவாக இருந்தன. அந்நாடுகள் ஆணையக தலைவருக்கு ‘இது இலங்கையின் உள்விவகாரம். இலங்கை அரசாங்கம் இது குறித்து விளக்கமளிக்கத் தயாராக உள்ளது’ என தெரிவித்து விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள இடமளிக்கவில்லை” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, இடம்பெயந்து நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களின் நலன் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த மனித உரிமைகள் அமைச்சர், “தற்போது நலன்புரி நிலையங்கள் மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை மீள்குடியேற்ற அமைச்சும், அரசாங்க அதிபரும் மேற்கொண்டு வருகின்றனர். இடம்பெயர்ந்த மக்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்காக அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படவுள்ளன.இது வழங்கப்பட்டதும் இம்மக்கள் சுதந்திரமாக நடமாடலாம்.அத்துடன் இடம்பெயர்ந்து வந்த மக்களுள் ஆதரவற்ற முதியோர்கள் மன்னாரிலுள்ள முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படவுள்ளனர்” என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

மேலும் வன்னியிலுள்ள மக்கள் நலன்கருதி அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “தற்போது முல்லைத்தீவிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு 56,000 பேர் வெளியேறி வருகின்றனர். புதுமாத்தளன் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகளை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. எனினும் அனுப்பப்படும் பொருட்களுள் 50 சதவீதமானவற்றை விடுதலைப் புலிகள் எடுக்கின்றனர். எனினும் புதுமாத்தளன் பகுதியில் உள்ள மக்களும் இலங்கை மக்களே. அவர்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை அரசாங்கம் தொடர்ந்து அனுப்பி வைக்கும்” என அமைச்சர் பதிலளித்தார்.

தனியார் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு; இன்று முதல் ஆர்ப்பாட்டம்

sri-lanka-universities.jpgஇலவசக் கல்வித் திட்டத்தை ஒழிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக செயற்பட்டு வருவதாக குற்றச்சாட்டு சுமத்தியிருக்கும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அதன் ஒரு நடவடிக்கையே தனியார் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியெனவும் சுட்டிக் காட்டியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது அறிமுகப்படுத்தப்பட்ட மீண்டெழும் இலங்கை வேலைத்திட்டத்தின் மூலமாக முன்னெடுக்கப்பட்ட கல்வித்துறையை தனியார் மயமாக்கும் செயற்பாட்டை இன்றைய அரசாங்கம் முன்னெடுத்துச் செல்ல முனைகிறது. இதனடிப்படையில் பிலியந்தல மாலபே எனுமிடத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அமைப்பாளர் உந்துல் பிரேமரத்ன நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டாக்டர் நெவில் பெர்னாண்டோ கொழும்பு ஆசிரி வைத்தியசாலையில் தமக்கிருந்த பங்குகளை விற்று அந்தப் பணத்தை முதலீடு செய்து இந்த தனியார் மருத்துவக் கல்லூரியை தொடங்கவிருப்பதாகவும், அதற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களையும் ஒன்று திரட்டிப் போராடத் தயாராகி வருவதாகவும் பிரேமரத்ன செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார். முதற்கட்டமாக தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிக்க அனுமதியளித்துவிட்டு படிப்படியாக நாட்டில் தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்களுக்கும் அங்கீகாரமளிப்பதற்கு அரசாங்கம் மறைமுகமாக திட்டமிட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கமும், பிரதான எதிர்க் கட்சியும் புத்திஜீவிகள் எனத் தம்மைக் காட்டிக் கொள்ளும் சிலரும் திட்டமிட்டு இதனைச் சாதிக்க முயற்சிப்பதாக கண்டனம் தெரிவித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சில காலத்துக்கு முன்னர் இதனை முன்னெடுக்கத் தயாரான போது ஒன்றியம் எதிர்ப்பை வெளியிட்ட வேளையில் அவ்வாறு நடக்காது எனக் கூறி விவகாரத்தை கிடப்பில் போட்டு காலம் தாழ்த்தி மீண்டும் அதனைக் கொண்டு வர அரசு தயாராகி வருவதாகவும் தெரிவித்தது.

அமைச்சர்கள் பேராசிரியர் விஸ்வ வர்ணபால, பந்துல குணவர்தன போன்றோரும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல உட்பட ஐக்கிய தேசியக் கட்சியினரும் இந்த விடயத்தில் ஒரே நிலைப்பாட்டில் காணப்படுகின்றனர்.  இலவசக் கல்வித் திட்டத்தை பாதுகாப்பதாகவும், காணப்படும் குறைபாடுகளை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமெனவும், கூறிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பதவிக்கு வந்து மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும் கல்விக்குறைபாடுகளுக்கு எந்த விதமான தீர்வையும் மேற்கொள்ளவில்லை.

இந்த தனியார் மருத்துவக் கல்லூரி திட்டமானது மக்களின் நலன் கருதி மேற்கொள்வதல்ல. முற்று முழுதாக வர்த்தக நோக்கம் கொண்டதாகும். ஒரு மாணவர் தனியார் மருத்துவகல்லூரியில் படித்து பட்டம்பெறுவதற்கு 60 இலட்சம் ரூபாவை செலவிடவேண்டும். இது இந்த நாட்டின் கஷ்டப்படும் மக்களை சுரண்டும் ஒரு முறைகேடான வர்த்தக நடவடிக்கையாகும். இதனை எந்தவிதத்திலும் அனுமதிக்க முடியாது. எனவே நாம் இத்திட்டத்திற்கு எதிராக நாட்டிலுள்ள அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் எதிர்ப்புப் போராட்டங்களை உடனடியாக ஆரம்பிக்கவிருக்கின்றோம். முதலாவது ஆர்ப்பாட்டப்பேரணி இன்று செவ்வாய்க்கிழமை ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நடத்தப்படும்.

நாளை முதலாம் திகதி புதன்கிழமை றுகுணு பல்கலைக்கழகத்திலும் இரண்டாம் திகதி வியாழக்கிழமை பேராதனைப் பல்கலைக்கழகம் ,கொழும்பு பல்கலைக்கழகம் அழகியல் பீடத்துக்கு முன்பாகவும் நடத்தப்படும். இதற்கு சாதகமான பதில்கிட்டாது போனால் அடுத்த கட்டப்போராட்டம் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்படும். இலவசக் கல்வித்திட்டத்தை தொடர்ந்து பாதுகாப்பதற்கான அனைவரதும் ஒத்துழைப்பை நாம் கோருகின்றோம் எனவும் உந்துல பிரேமரத்ன தெரிவித்தார்.

கிறீன் ஓசியனில் மேலுமோர் பிரவசம்

green-ocean.jpgகடந்த 28 ம் திகதி புதுமாத்தளன் யுத்த சூனியப்பிரதேசத்தில் இருந்து புறப்பட்ட எம்வி கிறீன் ஓசியன் கப்பலில் மேலுமோர் பிரசவம் இடம்பெற்றுள்ளது. புலிகளின் பிடியில் இருந்து வெளியேறிய யோகராசா மகேஸ்வரி என்ற பெண்ணே ஆண் குழந்தை ஒன்றை கப்பலில் பிரசவித்துள்ளார். இவரது பிரசவத்திற்கு கப்பலின் கப்டன் , பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் மற்றும் அங்கிருந்த அனுபவம் மிக்க வயோதிபப் பெண்கள் உதவி புரிந்தாகவும் கப்பல் கரையை அடைந்ததும் தாயும் சேயும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏ9 வீதியில் புளியங்குளத்தில் இரண்டாவது பொலிஸ் நிலையம்

sri-lanka-police.jpg“ஏ9′ வீதியில் விரைவில் இரண்டாவது பொலிஸ் நிலையம் திறக்கப்படவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. கண்டி யாழ்ப்பாணம் (ஏ9) வீதியில் ஏற்கனவே ஓமந்தையில் பொலிஸ் நிலையம் திறக்கப்பட்ட நிலையில், தற்போது புளியங்குளம் பகுதியில் 2 ஆவது பொலிஸ் நிலையத்தை திறக்கவுள்ளதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், புளியங்குளத்திற்கு வடக்கே கனகராயன் குளம் பகுதியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் (எஸ்.எஸ்.பி.) காரியாலயம் திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் “ஏ9′ வீதியூடாகச் செல்லும் இராணுவ வாகனங்களின் பாதுகாப்பு கருதி அந்த வீதியின் இரு மருங்கிலும் படையினர் பாதுகாப்பு அரண்களையும் பதுங்குக்குழிகளை அமைத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வீதியை அண்டிய பகுதிகளில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் முடிவடைந்ததும் வெகு விரைவில் இந்த வீதி ஊடாக பொது மக்கள் போக்குவரத்துக்காக அனுமதிக்கப்படுவரெனவும் அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரணிலை விரட்டும் நோக்கம் ஐ.தே.க.வில் எவருக்கும் இல்லை – லக்ஷ்மன் செனவிரட்ண

ranil-and-unp.jpgபொரு ளாதார ரீதியில் நாட்டை அதலபாதாளத்துக்குள் தள்ளிவிட்டிருக்கும் அரசாங்கம், தனது இயலாமையை மூடி மறைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியை துண்டாடமுனைந்து இன்று மூக்குடைபட்டுப்போயுள்ளது எனத் தெரிவித்திருக்கும் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ண, ராஜபக்ஷ குடும்பமல்ல, எந்தச் சக்தியாலும் ஐக்கிய தேசியக்கட்சியை அழிக்கமுடியாதென வலியுறுத்திக்கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை விரட்டும் நோக்கம் கட்சியில் எவருக்குமே கிடையாதெனவும் ஜனநாயக ரீதியில் செயற்பட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்று திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத்தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரத்ன மேற்கண்டவாறு தெவித்தார்.

அவர் செய்தியாளர்கள் மத்தியில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;

கட்சிக்குள் உள்வீட்டுப்பிரச்சினை பூதாகரமாகியுள்ளதாக அரசாங்கம் சில ஊடகங்களைப் பயன்படுத்தி பிரசாரங்களை செய்து வருகின்றது. இந்த ஊடகங்கள் அரசிடம் இலாபம் பெற்றுக்கொள்வதற்காக அரசுக்கு வக்காளத்துவாங்கும் விதத்தில் செயற்படுகின்றன. நாம் யாருக்கும் வக்காளத்து வாங்கமாட்டோம்.

எமது உடலில் ஓடுவது கூட பச்சை இரத்தம்தான். ஐக்கிய தேசியக்கட்சியை பிளவுபடுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டது இது முதற்தடவையல்ல. சுதந்திரக்கட்சி ஆட்சிகள் நடந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஆட்சிஆட்டம் காணும் போது அதனை மூடி மறைப்பதற்காக ஐக்கிய தேசியக்கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக பிரசாரங்களை முன்னெடுத்து வந்துள்ளது.

அதேவழியில்தான் இன்று மகிந்த ராஜபக்ஷவும் சென்று கொண்டிருக்கின்றார். கட்சி பிளவுபடக்கூடியதான எந்த விடயமும் தலைதூக்கவில்லை. கட்சியை பலப்படுத்தி மக்கள் சக்தியை திரட்டியெடுப்பதற்கான அணுகுமுறைகளையும் வியூகங்களையும் கையாள்வதற்கான நடைமுறைகளையே நாம் மேற்கொண்டோம். அதன்போது வாதப்பிரதிவாதம் ஏற்பட்டால் அதனை பிளவு ஏற்பட்டதாக கூறமுடியுமா?

அப்படிப் பார்த்தால் சுதந்திரக் கட்சிக்குள் இன்று மகிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்துக்கு எதிராக உயர்மட்டத்தைச் சேர்ந்தவர்களே குமுறிக்கொண்டிருக்கின்றனர். நாளை பொதுத் தேர்தலொன்று நடக்குமானால் அதிலிருந்து வெளியேறுவதற்கு பெரும் எண்ணிக்கையினர் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். கட்சியில் முக்கிய பதவிகளை வகிப்போர் கூட அதிருப்தி கொண்ட நிலையில் காணப்படுகின்றனர் எனவும் லக்ஷ்மன் செனவிரட்ண தெரிவித்தார்.

வவுனியாவில் பாடசாலைமீது மரக்கிளை முறிந்து விழுந்து ஆசிரியையும் மாணவரும் பலி -15 மாணவர்கள் காயம்

fallen-tree-branch.jpgவவுனியா மகா றம்பைக்குளம் சிறிராமபுரம் அரசினர் பாடசாலை மைதனாத்தில் மர நிழலில் மாணவர்களுக்கு வகுப்பு நடைபெற்றபோது அந்த மரத்தின் கிளையொன்று முறிந்து வீழ்ந்ததில் ஆசிரியை ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளார்கள். இந்தச் சம்பவத்தில் 15 மாணவர்கள் காயமடைந்துள்ளார்கள்.

காயமடைந்த மாணவர்கள் உடனடியாக வவுனியா வைத்தியசாலைக்குக் கொண்டு வரப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. இவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.

இறந்தவர்கள் இருவரது உடல்களும் வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று காலை 11 மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த ஆசிரியை செல்வி கே.ராகினி (29) யாழ்ப்பாணம் பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து. வவுனியா தெற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அந்தப் பாடசாலைக்குச் சென்று நேரடியாகப் பார்வையிட்டுள்ளார். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது காற்று எதுவும் வீசாத பொதிலும், அந்தப் பெரிய மரத்தின் பெரிய கிளையொன்று திடீரென முறிந்து விழுந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவி்த்துள்ளனர்.

வழமையாக இந்த மரத்தடியில் ஆசிரியர்கள் வகுப்புக்கள் நடத்துவதென்றும் வழமைபோல இன்றும் அவ்வாறு வகுப்பு நடைபெற்ற போது இந்த அனரத்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

யாழ்ப்பாணத்தில் உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை!

jaffna_a9.jpgயாழ்ப் பாணத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களையும், ஏனைய பொருட்களையும் சாதாரண விலை மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.

இதற்கமைய கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினர் யாழ்ப்பாணத்திற்குத் தாராளமாகச் சென்று வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான அமைதியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி கொழும்பிலுள்ள தனியார் வர்த்தகத் துறையினரை விசேட பேச்சுவார்த்தையொன்றுக்கு வருமாறு அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அழைப்பு விடுத்துள்ளார்.  இந்தச் சந்திப்பு செவ்வாய்க்கிழமை கொழும்பு உலக வர்த்தக மையக் கட்டடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்து உற்பத்தி பொருட்களும் தட்டுப்பாடின்றி குடாநாட்டில் கிடைப்பதற்கு வழி செய்யும் வகையில் தனியார் வர்த்தகருடனான இந்தச் சந்திப்பை அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் தனது அலுவலகத்தில் நடத்தவுள்ளார்.

யாழ். குடாநாட்டு மக்கள் சித்திரைப் புதுவருட கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அடுத்த புதன் கிழமையன்று ஏ-9 பாதையூடாக பொருட்களை அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். புத்தாண்டையிட்டு 100 லொறிகளில் பொருட்கள் எடுத்துச் செல்லப்படவுள்ளன. ஏ-9 ஊடாக பொருட்களை எடுத்துச்செல்ல தனியாருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 23 ஆம் திகதி முதல் யாழ்தேவி தாண்டிக்குளம் வரையில் சேவையிலீடுபடும்.-அமைச்சர் டளஸ் அழகப்பெரும தகவல்

bati-trnco.jpgயாழ்தேவி ரயில் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி முதல் வவுனியாவுக்கும் அப்பால் தாண்டிக்குளம் வரையில் சேவையிலீடுபடுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். யாழ் தேவி ரயில் பாதை அமைப்புக்கு நிதியுதவி வழங்குவதற்காக கொழும்பு பல்கலைக்கழக மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு அமைச்சர் மேலும் உரையாற்றுகையில்,

யாழ். ரயில் பாதையை அமைக்கும் பணியில் ரயில்வே திணைக்கள ஊழியர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். இத்திட்டத்தை நிறைவேற்ற பொது மக்களின் நிதி உதவியும் ஒத்துழைப்பும் மிகவும் அவசியம்.

ஒருபோதும் நிறைவேற்ற முடியாது எனக்கூறப்பட்ட திட்டங்களை எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறார் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும் ஒரு இந்திய வைத்தியக்குழு இலங்கை வர ஏற்பாடு

pullmottaiindiadoctors1.jpgதிருகோணமலை புல்மேட்டைப் பிரதேசத்தில் செயற்படும் நடமாடும் இந்திய ஆஸ்பத்திரிக்கு மேலும் ஒரு வைத்தியக் குழுவை அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கையின் வடக்கில் இடம்பெயர்ந்துள்ள பொது மக்களுக்குத் தேவையான சகல மருந்துப் பொருட்களும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.