எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

விரல் அடையாளப் பதிவுமுறையை நடைமுறைப்படுத்த விசேட நடவடிக்கை

அமைச்சுக்கள் அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களில் தற்போதுள்ள நேரப்பதிவு முறைக்குப் பதிலாக விரல் அடையாளப் பதிவு முறையைத் துரிதமாக அமுல்படுத்தும் நடவடிக்கைகளை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப் பட்டுள்ளதுடன் விரல் அடையாளப் பதிவு இயந்திரங்களைப் பொருத்தும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக அமைச்சு தெரிவித்தது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில துறைகளில் எதிர்ப்புகள் கிளம்பிய போதிலும் உத்தியோகபூர்வமாக இதனை நடைமுறைப்படுத்தும் வகையிலேயே மேற்படி சுற்றறிக்கை பொதுநிர்வாக அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட் டுள்ளதாக அமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். இதன்படி குறிப்பிட்ட 09/2009ம் இலக்க சுற்றுநிருபம் நாடளாவிய சகல அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இயந்திரங்கள் பொருத்தப்படும் நடவடிக்கைகள் முடிவடைந்ததும் சகல அரச நிறுவனங்களிலும் இச் செயற்திட்டம் நடைமுறைக்கு வருமென தெரிவித்த அவர், சகல அரச அதிகாரிகள் ஊழியர்களும் தமது உள்வருகை மற்றும் வெளிச்செல்கையை விரல் அடையாளப் பதிவு செய்தல் மூலமே உறுதிப்படுத்த வேண்டுமெனவும் மேலும் தெரிவித்தார்.

பன்றிக் காய்ச்சல்: சர்வதேச கவலைகள் அதிகரித்துவருகின்றன

mexico_flu_.jpgபன்றிக் காய்ச்சல் மெக்ஸிகோவிலிருந்து மற்ற நாடுகளுக்கு வேகமாக பரவிவருகிறது

மெக்ஸிகோவில் பெருமளவில் பரவியுள்ள பன்றிக் காய்ச்சலின் காரணமாக நூற்றுக்கும் அதிகமானவர்கள் பலியானது குறித்த சர்வதேச கவலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில், இந்தத் தொற்றின் மூலம் ஐரோபபாவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  மெக்ஸிகோ நாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த ஒரு ஆடவருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளதாக ஸ்பெயின் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ நாட்டில் பன்றிக் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்தத் தொற்று பரவியுள்ள பகுதிகளுக்கு பயணிகள் செல்ல வேண்டாம் என தனிப்பட்ட முறையில் தான் அறிவுறுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் சுகாதார ஆணையர் ஆண்ட்ரௌலா வாஸிலோவ் கூறியுள்ளார்.

இது ஒரு அறிவுரை மட்டுமேயன்றி பயணத்தடை அல்ல என்றும் அவர் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார். இந்தத் தொற்று கவலையளிக்கக் கூடிய ஒரு விடயம் என்றாலும் இதன் காரணமாக கலக்கமடைய வேண்டியதில்லை என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளளார்.

நிர்ணய விலைக்கட்டுப்பாட்டை மீறிய வர்த்தகர்களுக்கெதிராக சட்டநடவடிக்கை

தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் அரசாங்கத்தின் நிர்ணய விலைக்கட்டுப்பாட்டை மீறி செயற்பட்ட 600 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவர் ரூமி மர்சூக் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அடுத்த வாரம் இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். அரிசி உட்பட அரசாங்கத்தால் விலை நிர்ணயம் செய்யப்பட்ட பொருட்களை அதிகரித்த விலையில் விற்பனை செய்த குற்றங்களுக்காகவே பெருமளவானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலங்களில் பொதுமக்கள் குறைந்த விலையில் தமக்கான அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் வகையில் அரசாங்கம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டிருந்தது. இதன் ஒரு அம்சமாக விசேட குழுக்கள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

அரசாங்கம் ஏற்கனவே வரிச்சலுகை உட்பட பல்வேறு சலுகைகளை வர்த்தகர்களுக்கு வழங்கியிருந்தது. எனினும் நிர்ணய விலையை மீறி சில வர்த்தகர்கள் அதிகரித்த விலையில் பொருட்களை விற்பனை செய்துள்ளனர். இத்தகையோரே கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரவுள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் கடந்த ஆறு வருடங்களில் பாரிய அபிவிருத்தி அடைந்துள்ளது – உபவேந்தர் ஹுசைன்

eastern-university.gif கடந்த 6 வருடங்களில் தென்கிழக்குப் பல்கலைக்கழகம் குறிப்பிடத்தக்க அளவில் அபிவிருத்தி கண்டுள்ளதுடன் தென்கிழக்குப் பிராந்திய மக்களின் கல்வியிலும் பெரும் செல்வாக்குச் செலுத்தியிருக்கிறதென தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் தெரிவித்தார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழக “சீடா’ மீளமைப்புத் திட்டத்தினால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு “அனர்த்த முகாமைத்துவம்’ எனும் தலைப்பிலான பயிற்சிச் செயலமர்வொன்று அண்மையில் இடம்பெற்ற போது இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே கலாநிதி ஹுசைன் இஸ்மாயில் இவ்வாறு தெரிவித்தார்.

சீடா மீளமைப்புத் திட்ட அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் கலாநிதி என்.டபிள்யூ.பி. பாலசூரிய தலைமையில் சம்மாந்துறை பிரயோக விஞ்ஞான பீடத்தில் இடம்பெற்ற இப்பயிற்சிச் செயலமர்வில் உபவேந்தர் ஹுசைன் இஸ்மாயில் மேலும் தெரிவிக்கையில்; கல்வி நடவடிக்கைகளில் மாத்திரமன்றி மக்களின் அடிப்படை வாழ்வியல் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் நோக்கில் இந்த “சீடா’ திட்டத்தை தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முன்னெடுத்து வந்துள்ளது.

ஊடகவியலாளர்கள் இங்கு பெற்றுக் கொண்ட தமது பயிற்சிகளை சமூகம் பயன்பெறக் கூடியவாறு மீள வழங்க வேண்டும். அத்தோடு, அனர்த்த அபாயத்திற்குள் அமைந்திருக்கும் அம்பாறை மாவட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான அறிவுறுத்தல்களை நாம் வழங்க வேண்டியது அவசியமானதாகும்.

இதேவேளை, சொற்ப காலத்தில் எனது உபவேந்தர் கடமையை நிறைவு செய்ய வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன். எனது பணிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு ஊடகவியலாளர்கள் பெரும் பங்களிப்புச் செய்திருக்கிறார்கள் என்பதை நன்றியுணர்வுடன் நினைவு கூருகிறேன்.

எனக்கு ஒத்துழைப்பு வழங்கியதைப் போன்று வருகின்ற புதிய உபவேந்தருக்கும் ஊடகவியலாளர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்குவதுடன் இப்பிராந்தியத்தின் கல்வி, பொருளாதார, சமூக ஈடேற்றத்திற்கு பெறுமதியான பங்களிப்புகளை நல்க வேண்டுமெனத் தெரிவித்தார்.

தெங்கு உற்பத்தியில் 21 வீதம் அதிகரிப்பு

இவ்வருடத்தில் 2859 மில்லியன் தேங்காய் உற்பத்தி இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த உற்பத்தியில் 2000 மில்லியன் தேங்காய் உள்ளூர் பாவனைக்காகப் பயன்படுத்தப்படுமென்றும் தெங்கு உற்பத்திச் சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை தெங்கு, தெங்குசார் உற்பத்தி ஏற்றுமதி மூலம் 2007 ஆம் ஆண்டில் 11270 மில்லியன் ரூபா வருமானம் கிடைத்துள்ளது. இந்த ஏற்றுமதி வருமானம் இம்முறை 21 வீத அதிகரிப்பைக் காட்டி இருப்பதாகவும் தெங்கு உற்பத்தி சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2008 ஆம் ஆண்டில் ஏற்றுமதி மூலம் 13667 மில்லியன் ரூபாவை வருமானமாகப் பெற முடிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பாவனைக்கு எடுக்கப்பட்ட பின்னர் எஞ்சியுள்ள 859 மில்லியன் தேங்காய்களையும் தெங்குசார் உற்பத்தித் துறைக்குப் பயன்படுத்துமாறு அமைச்சர் டீ. எம். ஜயரத்ன உத்தரவிட்டுள்ளார்.

ஐ.நா. பணியாளர்கள் யுத்தப் பிரதேசத்திற்குள் செல்ல அனுமதி கிடைக்கவில்லை: ஜான் ஹோம்ஸ்

john_holmes.jpgமோதல் பிரதேசத்திற்கு மனிதாபிமான பணியாளர்கள் செல்வதற்கான ஒப்புதலை அரசிடம் இருந்து பெறுவதற்கு தம்மால் இயலவில்லை என்று இலங்கையில் பயணம் செய்துவரும் ஐ.நா. மன்றத்தின் தூதரான ஜான் ஹோம்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயமாக இலங்கை வந்துள்ள ஐ.நாவின் மனிதாபிமான விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி சர் ஜோன் ஹோம்ஸ் கொழும்பில் ஜனாதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடிய பின்னர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

இலங்கை நிவாரணத்திற்கு 100 கோடி: இந்தியபிரதமர்

manmohan1.jpg இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி தமிழர்களுக்கு உதவி செய்ய இந்தியா 100 கோடியை நிவாரணமாக வழங்குகிறது.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு பாதுகாப்பான இடம் தேடி அப்பாவி மக்கள் வெளியேறி வருகின்றனர். மேலும் உண்ண உணவு, தங்க இடவசதியின்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் ரூ.100 கோடி நிவாரணமாக வழங்க பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரவித்துள்ளார்.

மெனிக்பார்ம் முகாமுக்கு ஜோன் ஹோல்ம்ஸ் விஜயம்!

john_holmes.jpgஇலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின், மனிதாபிமான பணிகளுக்கான துணைத் தலைமைச் செயலாளர்  ஜோன் ஹோல்ம்ஸ் இன்று வவுனியாவில் இடம்பெயந்தோர் தங்க வைக்கப்பட்டுள்ள மெனிக்பாம் முகாமுக்கு விஜயம் செய்த்hர்.

இடம்பெயர்ந்தோருக்கு அரசாங்கம் வழங்கியுள்ள வசதிகள் குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர் இடம் பெயர்ந்தோர் நலன் பேண 10 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.

மீள் குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டார்.

ஒபாமாவின் சரியான முன்னெடுப்பை எதிர்பார்க்கிறேன்: 20 நாட்களாக உண்ணாவிரதம் இருக்கும் பரமேஸ்வரன்

parames.jpgஇலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் சரியான முன்னெடுப்பினை எதிர்பார்த்திருப்பதாக லண்டனில் தொடர்ந்து 20 நாட்களாக உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 28 வயதான பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

20 நாட்களாக தொடர்ந்து உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர், தொடர்ந்து கருத்து வெளியிடும் போது, “இலங்கை அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்பை நிறுத்தி, மோதல் தவிர்ப்பை அறிவிக்குமாறு வெள்ளை மாளிகை வலியுறுத்திய போது, இலங்கை அரசாங்கம் அதனை ஏற்காது தொடர்ந்து கொடும் தாக்குதலை மேற்கொண்டு வருகிறது.

கடந்த மூன்று மாத காலப்பகுதியில் மாத்திரம் 10,000 பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், அரசாங்கத்தின் இராணுவ முன்னெடுப்பினால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுமுள்ளனர். இடம்பெயர்ந்த நிலையில் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள பொது மக்களும், சர்வதேச கண்காணிப்பு இன்றி அல்லற்படுகின்றனர். இந்த நிலையிலேனும் அமெரிக்கா ஒரு சரியான, காத்திரமான முன்னெடுப்பினை மேற்கொள்ள வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.

தமக்குச் சரியான தீர்வு ஒன்று கிடைக்கும் வரை தமது போராட்டத்தினை எவராலும் தடுக்க முடியாது என பரமேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார். 

யுத்த நிறுத்தத்திற்கு இணக்கம் தெரிவித்துள்ளதான ஊடக செய்திக்கு அரசு மறுப்பு

sri-lanka-flags.jpgயுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது.

இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது