நாம் எல்லோரும் ஒன்றுபட்டு இந்த சுதந்திர நாட்டைக் கட்டி எழுப்புவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு அறைகூவல் விடுத்தார். புலிகளிகள் ஆக்கிரமித்த பிரதேசங்கள் அனைத்தையும் படையினர் மீட்டெடுத்தை முன்னிட்டு பாராளுமன்றத்தில் இன்று காலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்காக தமிழ் மொழி மூலமான விசேட உரையொன்றை ஆற்றிய போதே இவ்வாறு அழைப்பு விடுத்தார். அவர் தொடர்ந்து கூறியதாவது.
சபாநாயகர் அவர்களே இது எமது நாடு. நாம் பிறந்த நாடு. நாம் ஒரு தாய் மக்களாக இங்கு வாழ வேண்டும். இங்கு இன மத குல பேதம் எதுவும் இருக்க முடியாது. கடந்த முப்பது வருட காலமாக எல்.ரீ.ரீ.ஈ கொலை செய்த மக்கள் தொகை ஏராளம். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் பலர் கொல்லப்பட்டனர். எல்.ரீ.ரீ.ஈ உடன் செய்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் அல்ல.
எல்.ரீ.ரீ.ஈ யின் பிடியில் இருந்து எமது சகோதர தமிழ் மக்களைப் பாதுகாப்பதே எமது நோக்கமாகும். அப்பாவித் தமிழ் மக்களைப் பாதுகாக்க எமது படை வீரர்கள் உயிர் தியாகம் செய்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ யைத் தோல்வியுறச் செய்து நாம்பெற்ற வெற்றி இந்த தேசத்தின் வெற்றியாகும். எமது தாய் நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் வெற்றியாகும்.
இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களைப் பாதுகாப்பதும் எமது பொறுப்பாகும். அது எனது கடமை. இந்த நாட்டில் வாழும் எல்லா மக்களும் அச்சமின்றி சந்தேகமின்றி பாதுகாப்பாகவும் சம உரிமையோடும் வாழ வேண்டும். இதுவே எனது நோக்கமாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மொழியையடுத்து சிங்கள மொழியில் உரை நிகழ்த்தினார்.அதன்போது அவர் தெரிவித்ததாவது.
பயங்கரவாதப் பிடியிலிருந்து நாட்டை முற்றாக மீட்டுள்ளோம். இதன் பின்னர் நாட்டின் ஒவ்வொரு அங்குள நிலப் பரப்பிலும் மக்கள் அதிகாரம் பெற்ற பாராளுமன்றத்தால் நிறை வேற்றப்பட்ட சட்டம் மட்டுமே அமுல்படுத்தப்படும். சுமார் மூன்று தசாப்தங்களாக நாட்டின் மூன்றில் ஒரு பங்கிலான நிலப்பகுதியில் இவ்வாறான சட்டத்தை செலுத்த முடியாத நிலை தோன்றியிருந்தது. 2005 ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெற்ற வேளையில் வடக்கு கிழக்கில் புலிகளின் பொலிஸ் வங்கி மற்றும் நீதிமன்றங்களும் இருந்தன. புலிகளின் பாராளுமன்றம் ஒன்று மட்டுமே இல்லாதிருந்தது. நாம் தற்போது அவை அனைத்தையும் நிறந்தரமாகவே இல்லாமல் செய்துள்ளோம்.
நாட்டின் ஒவ்வொரு அங்குள நிலப்பரப்பிலும் அதாவது 65332 சதுரக் கிலோமீடடர் பரப்பளவிலும் நாட்டின் அரசியலமைப்பு வியாபிக்கும் வகையிலேயே இன்றைய பாராளுமன்ற அமர்வை இன்று நாம் கூட்டியுள்ளோம். இந்த மகிழ்ச்சியை சபா நாயகருக்கு இங்கு கூடியுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதித் தேர்தலில் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் மற்றும் அதன்பின்னரான அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் இன்று அனுபவிக்க முடியும்,