எழுத்தாளர்கள்

எழுத்தாளர்கள்

அது பிரபாகரனே அல்ல-பாரதிராஜா

bharathiraja.jpgபிரபாகரனின் உடல் என்று இலங்கை அரசு வெளியிட்டுள்ள வீடியோ நம்பும்படி இல்லை என்றும், அவர் நலமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

தனது அலுவலகத்தி் மீது நடந்த தாக்குதல் குறித்து சென்னை போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து புகார் தந்த பின் நிருபர்களிடம் பேசிய அவர்,

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டிருப்பதாக இலங்கை ராணுவம் வீடியோவை வெளியிட்டுள்ளது. ஆனால், அது பிரபாகரனின் படத்தை போல இல்லை. பிரபாகரன் சாகவில்லை. அவர் நலமோடு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அவரை நான் நேரில் பார்த்துள்ளேன். டிவியில் வெளியான படத்துக்கும், பிரபாகரனின் தோற்றத்துக்கும் சம்பந்தமே இல்லை என்றார்.

இலங்கை நிலைமையை அவதானிக்க விரைவில் இந்தியப் பிரதிநிதிகள் குழு

indo-lanka.jpgஇலங்கையின் நிலைமைகளை அவதானிக்க இந்தியா  வெளிவிவகார செயலாளர் சிவ்சங்கர் மேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை ஓரிரு தினங்களில் அங்கு  அனுப்பவுள்ளோம்  என்று இந்திய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

யுத்தம் காரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களின் மத்தியில் புனர்வாழ்வுக்காக இந்தியா 500 கோடி ரூபாவை இலங்கைக்கு வழங்கவுள்ளது. இடம்பெயர்ந்த மக்களுக்கு புனர்வாழ்வளிப்பதே தற்போதைய முக்கிய விடயமாகும்.அதேவேளை, தமிழர்கள் உட்பட சிறுபான்மையினரின் அபிலாகளை நிறைவேற்றும் அரசியல் தீர்வுகளை முன்வைக்க வேண்டும்  என்றார்.         

பிரபாகரனின் உடலைக் கண்ட செய்தியாளர் தெரிவித்த கருத்துக்கள்

karuna-daya.jpg
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்துக்கும் இடையே கடுமையான மோதல்கள் நடைபெற்ற முல்லைத்தீவின் கடற்கரைப் பிரதேசத்துக்குச் செல்ல செய்தியாளர்களை இலங்கை அரசு தொடர்ந்து அனுமதிக்காமல் இருந்தது. இருந்தும் சில செய்தியாளர்கள் இராணுவத்தினரால் அந்தப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர். கடந்த 6 நாட்களாக கிளிநொச்சியில் உள்ள 58 வது டிவிஷனின் தலைமையகத்தில் இருந்து களமுனைக்கு தினந்தோரும் சென்று வந்த ஹிந்து நாளிதழின் கொழும்பு செய்தியாளர் முரளீதர் ரெட்டி நேற்று செவ்வாய்கிழமை விடுதலைப் புலிகளின் தலைவரின் உடல் என்று அரசு கூறும் உடலையும் நேரில் பார்த்துள்ளார்.

பிரபாகரனின் உடலை நேற்று செவ்வாய் மாலை தான் பார்த்தாக கூறிய அவர், அந்த உடலை விடுதலைப் புலிகளின் முன்னாள் கிழக்குத் தளபதியும் தற்போதைய அரசாங்க அமைச்சருமான கருணாவும், படையினரிடம் சரணடைந்துள்ள தயா மாஸ்டரும், இராணவத்திடம் அடையாளம் காட்டியதாக குறிப்பிட்டார்.

பிரபாகரன் எப்படி இறந்தார் என்பது தெளிவாகாமல் உள்ளது என்றும், அந்த உடலில் சைனைட் அருந்தியதற்கான தடயங்கள் இல்லை என்று படையினர் தம்மிடம் கூறியதாகவும் ரெட்டி நம்மிடம் தெரிவித்தார். அவர் துப்பாக்கிச் சூட்டு காயம் காரணமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பிரபாகரனின் உடல் தவிர இராணுவ அதிகாரிகள், சார்ள்ஸ் அன்டனி உடலை காட்டியதாகக் குறிப்பட்ட அவர், பொட்டு அம்மானின் உடலை பார்க்கவில்லை என்றார். போர் பகுதியில் உள்ள உடல்களில் சில மிக மோசமான நிலையில் உள்ளதாகவும் அவர் கூறினார்

இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிபார்க்க வேண்டும்; ஜோன் ஹோம்ஸ்

john-holmes.jpg“ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை வென்று விட்டது என்ற வெற்றிக்களிப்பு கொள்ளாது, இந்த நேரத்தில் இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிபார்க்க வேண்டும். அத்துடன் அனைத்து சமுதாயத்தினரும் சம உரிமையுடன் வாழ வேண்டும்” என ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான துணை பொதுச்செயலர் ஜோன் ஹோம்ஸ் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான துணை பொதுச்செயலர் ஜோன் ஹோம்ஸ் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.

தமிழோசை: கொல்லப்பட்டவர்களின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படலாம் என்பது போன்ற அச்சங்கள் நிலவுகின்றனவே

ஜோன் ஹோம்ஸ்: “எப்படி செய்வது சரியான ஒன்றாக இருக்காது என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், இது தான் இலங்கை அரசாங்கத்திற்கும் நான் சொல்வது, ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை வென்று விட்டது என்ற வெற்றிக்களிப்பு வேண்டாம். இந்த நேரத்தில் இத்தனை ஆண்டுகாலமாக இருந்த ரணத்தை ஆற்றுவதற்கு வழிப்பார்க்க வேண்டும். அனைத்து சமுதாயத்தினரும் சம உரிமையுடன் வாழ வேண்டும்.”

தமிழோசை: அதே நேரம் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பலர் சரணடைந்துள்ளனர், சிலர் காயமடைந்த நிலையில் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள். எத்தனை பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சட்டபூர்வ வசதிகள் கிடைக்கின்றனவா என்பது குறித்து ஐநாவுக்கு எதாவது தெரியுமா

ஜோன் ஹோம்ஸ்: எத்தனை பேர் இருக்ககிறார்கள் என்பது எனக்கு தெரியாது. முதலில் விடுதலைப்புலிகளின் மூத்த தலைவர்கள் தவிர மற்றவர்கள் மீது நடவடிக்கை இருக்காது என இலங்கை அரசு கூறியது. முன்பு மக்கள் இடம்பெயர்ந்து முகாம்களுக்கு சென்ற போது ஏராளமான மக்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதில் விடுதலைப்புலிகளுடன் தொடர்பு கொண்டவர்களும் இருந்தனர். இவையெல்லம் முன்னர் நடந்தது. ஆகவே அனைவரும் முறையாக சட்டத்திற்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.”

தமிழோசை: அங்கே போர் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தபோது மருத்துவ சிகிச்சைகளை வழங்கி வந்த மூன்று மருத்துவர்கள் தற்போது அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.அவர்கள்தான் அங்குள்ள நிலைமை குறித்து சர்வதேச ஊடகங்களுக்கும் தகவல் வழங்கி வந்தனர். அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஐநா என்ன செய்கிறது ?

ஜோன் ஹோம்ஸ்: “எங்களுக்கு அவர்களிடம் இப்போது தொடர்பில்லை, ஒருவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டார் என்று அறிய வருகிறோம். நான் முன்பு கூறியது போல, போர்ப்பகுதியில் மிக மிக இக்கட்டான சூழ்நிலையில், மிகவும் சிறப்பாக பணியாற்றிய இவர்கள் முறையாக நடத்தப்பட வேண்டும் அவர்களை கைது செய்ய கூடாது என்பதை கூறுகிறேன்.”

தமிழோசை: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன், சமாதானச் செயலகத்தின் பொறுப்பாளர் புலித்தேவன் உள்ளிட்டோர் இராணுவத்திடம் சரணடையும் நோக்கில் வெள்ளைக் கொடியை ஏந்தியபடி வந்தபோது, அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சில செய்திகள் உலவுகின்றன. சரணடைவது தொடர்பாக விடுதலைப் புலிகளுக்கும் ஐ நா உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

ஜோன் ஹோம்ஸ்: “பல்வேறு இடங்களில் இது போன்ற தகவல் வந்துள்ளது என்பதை நான் அறிவேன். நாங்கள் அவற்றை பகிர்ந்து கொண்டோம். என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெளிவாக தெரியவில்லை. சரண் அடைவது என்பது அவர்களது கோட்பாட்டிற்கு மாறானது என்பதால், அவர்களது தரப்பே அவர்களை சுட்டு கொன்று விட்டது என்று கூறப்படுகிறது,  இதற்கு எதிர் மாறாகவும் கூறப்படுகிறது. எதையும் எங்களால் உறுதி செய்ய முடியாமல் இருக்கிறது, இவை அனைத்துமே கடைசி நேரத்தில் நடந்துள்ளதால் எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறது”

தமிழோசை:ஆனால் அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் என்ன செய்ய முன்வந்தார்கள் என்பது குறித்து உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா ?

ஜோன் ஹோம்ஸ்:”என்னால் விபரமாக கூற முடியாது. விடுதலைப்புலிகளிடம் இருந்து நேரடியாக நான் கேட்கவில்லை. ஆனால் அவர்கள் திங்கட்கிழமை மூன்றாம் தரப்பிடம் சரணடைய தயாராக இருப்பதாக ஒரு சிலர் சொன்னார்கள், கடைசி நேரத்தில் சொன்னார்கள். அது மிகவும் காலம் தாழ்ந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அதற்கு பின்னர் என்ன நடந்தது என்பதை என்னால் சொல்ல முடியாது.

” தமிழோசை: விடுதலைப்புலிகள் சரணடைய முன் வந்தது குறித்து ஐநா இலங்கை அரசு மற்றும் புலிகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதா?

ஜோன் ஹோம்ஸ்:” அப்படியான ஒரு பேச்சுவார்த்தை இடம்பெறவில்லை. அந்த கோணத்தில் பேச்சுவார்த்தை நடந்ததாக நாங்கள் அறியவில்லை. சரண் அடைந்தால் தீங்கு நேராது என்று பொதுவாக அரசாங்கம் சொல்லி இருந்ததாக நாங்கள் அறிகிறோம்.

“தமிழோசை: இது ஒரு புறம் இருக்க, கடந்த ஏப்ரல் மாதம் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களுக்கு வந்த நிலையில், அந்த முகாம்கள் மிகவும் ஜன நெருக்கடியுடன் காணப்படுவதாகவும், குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை என்றும் ஏற்கனவே ஐநா தெரிவித்திருந்தது. தற்போது மேலும் 70 ஆயிரம் பேர் வந்துள்ள நிலையில் அங்கே நிலைமை எப்படியுள்ளது?

ஹோம்ஸ்: “மனிக்பார்ம் பகுதியில் இருக்கும் பிரதான முகாமில் ஜனநெருக்கடி ஏற்பட்டு விடும் என்று கூறியுள்ளோம். புதியதாக இடங்கள் சுத்தம் செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன. இது கொஞ்சம் உதவியாக தான் இருக்கும். ஆனால் பொதுவாக எல்லா மக்களையும் ஒரே இடத்தில் வைத்திருப்பது நல்லதல்ல. அவர்களை யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார் போன்ற மற்ற இடங்களுக்கு கொண்டு செல்லலாம் என சொல்லி வருகிறோம். ஏனென்றால் ஒரே இடத்தில் இருந்தால் அடிப்படை வசதிகள் கிடைப்பதில் கூட சிரமம் இருக்கும்.

அத்தோடு முகாமில் இருக்கும் அனைவரும் சர்வதேச சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டும், அவர்களுக்கு உறவினர்கள் பற்றிய விபரங்கள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சிக்கீரம் தெரிய வேண்டும். பதிவு செய்தல் மற்றும் அடையாள அட்டைகள் சீக்கிரமாக கொடுக்கப்பட வேண்டும், அப்போது தான் அவர்கள் சுதந்திரமாக உலவ முடியும். இராணுவம் முகாமுக்குள் இருக்க கூடாது. முகாமுக்கு வெளியே இருக்கலாம். அத்தோடு மக்கள் விரைவாக வீடுகளுக்கு திரும்ப அனுமதிக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசாங்கத்திடம் கூறி வருகிறோம்.

கண்ணிவெடிகள், வெடிபொருட்களை அகற்ற வேண்டும் என்பதை ஒப்புகொள்கிறோம், இருந்தபோதிலும் மக்கள் விரைவாக வீடு திரும்ப அனுமதிக்க வேண்டும்” என்றார் ஜநாவின் மனிதாபிமான பணிகளுக்கான துணைப் பொதுச் செயலர் ஜோன் ஹோம்ஸ்.

இந்தோனேசியாவில் விமான விபத்து-78 பேர் பலி

indo.jpgஇந்தோ னேசியாவின் ஜாவா பகுதியில் உள்ள கிராமத்தில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியது. இதில் அதில் பயணம் செய்த 78 பேர் உயிரிழந்தனர்.

இந்த விமானம் இந்தோனேசிய ராணுவத்திற்குச் சொந்தமானதாகும். ஜகார்த்தாவிலிருந்து, ஜாவாவுக்குப் பறந்து கொண்டிருந்தபோது, மடியுன் என்ற இடத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது.

வயலில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு அருகில் இருந்த கட்டடங்களில் மோதி விமானம் கீழே விழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் விமானம் தீப்பிடித்து எரிந்தது.

விமானம் விபத்தில் சிக்கியதற்கான காரணம் தெரியவில்லை. விமானத்தில் 100 பேர் இருந்ததாகவும், இதுவரை 78 பேர் உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் உயிரிழப்பு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்த விமானம் சி-130 ரக ஹெர்குலிஸ் விமானம் ஆகும். வழக்கமான பயிற்சியில் அது ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியது

இடம்பெயர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டை ஊக்குவிக்க விசேட நடவடிக்கையெடுக்கப்படும் – பிரதிக்கல்வியமைச்சர்

shachi.jpgகொடூர யுத்தத்தால் பாதிக்கப்பட்டு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மாணவர்களைப் பார்வையிட்டு அவர்களுக்கு அவசர கல்வியை செயற்படுத்தும் வகையில் பிரதிக்கல்வியமைச்சர் எம்.சச்சிதானந்தன் தலைமையிலான கல்வி அமைச்சின் உயர்மட்டக் குழுவொன்று அடுத்த வாரம் வவுனியா செல்லவுள்ளது.

இது தொடர்பாக பிரதிக்கல்வியமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

அமைச்சர் சச்சிதானந்தனால் கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டாரவிற்கு வழங்கிய பணிப்புரைக்கமைய கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் ஏனைய நன்கொடைகள் மூலமும் சேகரிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள், உடைகள் மற்றும் மருந்துவகைகளுடன் இக்குழு செல்லவுள்ளது.

“”யுத்தத்தின் காரணமாக இதுவரை நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்வுக்குள்ளாகியுள்ளனர். அத்துடன் மோதல்கள் இடம்பெற்றுவரும் பகுதிகளிலுள்ள பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாகவும் சில பாடசாலைகளில் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சில பாடசாலைகள் இரண்டு அமர்வுகளாக நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக மாணவர்களின் கல்விநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆசிரியர் சமூகமும் இவ் இடம்பெயர்வினால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களின் கல்வியைத் தொடர உடனடிச் செயற்பாடுகள் அவசியம்.

இது தொடர்பில் ஜனாதிபதி, கல்வி அமைச்சர், கல்வியமைச்சின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடல்கள் நடத்தினோம். அதன் பயனாக கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் ஏனைய நன்கொடைகள் மூலமும் பாடசாலை உபகரணங்கள், புத்தகங்கள், உடைகள் மற்றும் மருந்துவகைகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இவற்றுடன் அடுத்த வாரமளவில் நாம் வன்னி செல்லத் தீர்மானித்துள்ளோம். இதன்போது மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க மறுப்பது அதன் அடிப்படை உரிமை மீறும் சம்பவம்

hands.jpgகுழந்தை ஒன்று பிறந்தவுடன் ஒரு தாயின் முதலாவது கடமையும் உரிமையும் தாய்ப்பால் கொடுப்பதாகும். அதேபோல குழந்தையின் முதலாவது உரிமையும் தாய்ப்பாலாகும். ஆனால், அந்த உரிமையும் கடமையும் தற்போது மறுக்கப்பட்டு வருவதைக் காண்கிறோம். இவ்வாறு கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ரமேஷ் தெரிவித்துள்ளார்.

சேனைக்குடியிருப்பு “சேவோ’ அமைப்பு ஏற்பாடு செய்த சிறுவர் ஊர்வலமும் குறைகேள் மன்றமும் கல்முனை கிறிஸ்தவ இல்லத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு கூறினார்.

சேவோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் க.சத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய டாக்டர் ரமேஸ்; சிறுவர் உரிமைகள் பற்றி பல நிறுவனங்கள் பலதரப்பட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்திவருகின்றன. ஆனால், ஒரு தாய் தனது பிள்ளைக்குத் தாய்ப்பால் கொடுக்க மறுப்பது அக்குழந்தையின் உரிமையை தாயே மீறும் போது இக்கருத்தரங்குகளும் விழிப்புணர்வுகளும் அர்த்தமற்றதாகிவிடும்.

தாய்ப்பால் இன்றி குழந்தைக்குப் போதிய போஷாக்குக் கிடைப்பதில்லை.அதனால், அக்குழந்தையின் எதிர்காலம் பாழடிக்கப்படுகிறது. ,மின்சாரம் இல்லாதது ஒரு தடையாக அமையாது. தன்னம்பிக்கை இருந்தால் எதிலும் வெற்றிபெறலாம். இதற்கு உதாரணமாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தெருவிளக்கில் கல்வி கற்று வாழ்க்கையில் உயர்ந்தார் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது என்றார்.

பிரிட்டன் நாடாளுமன்ற சபாநாயகர் மைக்கேல் மார்ட்டீன் ராஜினாமா

_michaelmartin.jpgபிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் செலவினங்கள் தொடர்பான சர்ச்சையில் நாடாளுமன்ற சபாநாயகர் மைக்கேல் மார்ட்டீன் ராஜினாமா செய்துள்ளார்.

பிரபாகரன் உயிரிழக்கவில்லையென்று சர்வதேச மட்டத்தில் சிலர் பிரசாரம்: அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும் – அமைச்சர் யாப்பா

yappa.jpgவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கவில்லையென இன்னும் சிலர் வெளிநாடுகளில் இருந்தவாறு கூறிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். அதாவது, இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக பேசபவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். இதனை மறந்து விடக்கூடாது என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளருடன் இணைந்து முப்படைகளை சிறப்பாக வழிநடத்தி முப்பது வருடங்கள் நாட்டுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய பயங்கரவாதத்தை இரண்டு வருடங்கள் இரண்டு மாதங்களில் முற்றாக ஒழித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் தொடர்பில் உலகத்தில் புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்கியவர்கள். முதன் முதலாக மனித வெடிகுண்டு என்ற அழிவு முன்மாதிரியை வெளிக்காட்டியவர்கள். எனது இளமைக் காலம் அரசியல் தலைவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் முக்கியமாக சிவிலியன்களை புலிகள் கொலை செய்தனர். மாற்றுக் கருத்துக்கு இடமளிக்கவில்லை. தமிழ் மக்களுக்கே துரோகம் இழைத்தனர்.

இலங்கையின் பொருளாதார மையங்களை அழித்தனர். புலிகளின் அழித்தல் தொடர்பான விடயங்களை கேள்வியுற்றவாறே எனது இளமை காலம் கழிந்தது. எப்போதும் நிம்மதியற்ற வகையிலேயே காலத்தை கழித்தோம். ஆனால், தற்போது எதிர்கால சந்ததியினருக்கு நாம் அதனை விட்டு வைக்கவில்லை. இன்னும் புலிகளுக்கு சிலர் வக்காளத்து வாங்குவதாகவே தெரிகிறது. பிரபாகரன் இன்னும் உயிரிழக்கவில்லையென சர்வதேச மட்டத்தில் சிலர் தெரிவித்துள்ளனர். இதற்குப் பின்னரும் புலிகளுக்கு ஆதரவாக யாராவது செயற்படின் அவர்களுக்கும் இதே கதிதான் ஏற்படும். 

ஊடகத்துறையே உலகிலுள்ள மிகவும் பயங்கரமான ஆயுதம் – அமைச்சர் கெஹெலிய

keheliya_rambukwella.jpgஊடகத்துறையே உலகிலுள்ள மிகவும் பயங்கரமான ஆயுதமாகும். இலங்கையில்  பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதில் இந்த ஊடகங்கள் அளப்பறிய பங்கை வகித்துள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அமைச்சர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட மனித நேய இராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் உறுதியுடன் முன்னெடுக்கப்படதால் இன்று இந்த அபார வெற்றி கிடைத்துள்ளது. எல்.ரீ.ரீ.ஈ. அமைப்புக்கு உதவியளித்துக்கொண்டு சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையை ஒரு விளையாட்டுத்திடலாகப் பயன்படுத்தினர். பிரபாகரனை ஒரு மாபெரும் வீரனாகவும் இலங்கை அரசாங்கத்தை மோசமாகவும் விமர்சித்த அந்த நிறுவனங்களுக்கு சரியான பதில் இன்று கிடைத்துள்ளது. ஆசியாவிலேயே இலங்கையை முதன்மை நாடாக உயர்த்த இலங்கையர் அனைவரும் திடசங்கட்பம் பூணவேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.